28.3.09

வைரமுத்துவும் சம்பத்தும்






யோசித்துப் பார்த்தால் வைரமுத்துதான் தமிழில் அதிகமாக விருதுகளைப் பெறுபவர் என்று தோன்றுகிறது. சமீபத்தில் அவருக்கு 'சாதனா சம்மான்' விருது கிடைத்துள்ளது. இச் செய்தியை வெளியிட்ட பத்திரிகை 'மேலும் ஒரு விருது' என்று குறிப்பிட்டிருந்தது. இப்படியெல்லாம் விருதுபெற அவர் பெரிய சாதனை செய்திருக்க வேண்டும். ஆரம்பத்தில் அவர் சினிமாப் பாடலாசிரியராக அறிமுகமாகிறார், பின் அவர் கவிஞராக தன்னை தெரியப்படுத்திக் கொள்கிறார். பின் நாவலாசிரியராக பவனி வருகிறார். அவர் எழுதினால் போதும் எல்லோரும் வரவேற்று பிரசுரம் செய்ய தயாராக இருக்கிறார்கள். அவருடைய நாவல் தொடர் கதையாக பெரிய பத்திரிகைகளில் வெளி வருகிறது. ஒரு பத்திரிகையில் அவர் கேள்வி பதில் எழுதுகிறார். இன்னொரு பக்கம் அவர் சினிமாவிற்கு பாடல்களை எழுதித் தள்ளுகிறார்.



அவருடைய முக ராசி அவர் எதை எழுதினாலும் அவருக்கு விருது தேடிக்கொண்டு வருகிறது. அரசாங்கம் விருது கொடுக்கிறது. தனியார் நிறுவனம் விருது கொடுக்கிறது. சிறந்த பாடலாசிரியருக்கான விருது வாங்குகிறார். சிறந்த கவிதைக்கான விருது வாங்குகிறார். சிறந்த நாவலுக்கான விருதையும் பெறுகிறார். இப்படி சகலகலா வல்லவனாக இருக்கிறார்.



அதேசமயத்தில் சம்பத் என்ற எழுத்தாளரைப் பற்றி இங்கே குறிப்பிட விரும்புகிறேன். அவர் இப்போது உயிரோடு இல்லை. அவர் எழுத்து முதன் முதலாக கணையாழியில் வெளிவந்தபோது, சுஜாதாவையும் சம்பத்தையும் இணைத்து தமிழில் முக்கியமான படைப்பாளிகள் என்று எழுதியிருந்தார்கள். ஆனால் குமுதம் மூலமாக சுஜாதாவிற்குக் கிடைத்த வெற்றி சம்பத்திற்குக் கிட்டவில்லை. எதிலும் வெற்றி சுஜாதாவிற்கு. ஆனால் அவருக்கும் முக்கியமான விருதெல்லாம் கிடைக்க வில்லை.



சம்பத்திற்கோ பெரும் பத்திரிகைகளில் படைப்பு வெளிவர வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது. ஒருமுறை ஒரு நாவல் எழுதிக்கொண்டு போய் இந்திரா பார்த்தசாரதியிடம் சம்பத் காட்ட, இந்திரா பார்த்தசாரதி அந் நாவலைப் படித்து திருப்தியாக வரவில்லை என்று கூற, சிறிது நேரத்தில் சமையல் அறையில் ஏதோ பொசுங்குவதுபோல் தோன்ற, இ.பா உடனே ஓடிப் போய்ப் பார்த்திருக்கிறார். சம்பத் படிக்கக் கொடுத்த நாவல் சாம்பலாகிக் கொண்டிருந்தது. இந்தச் சம்பவத்தை இ.பாவே என்னிடம் தெரிவித்திருக்கிறார். சம்பத்திற்கு அவர் வாழ்க்கையே பிரச்சினையாகப் போய்விட்டது. அவர் பார்த்த வேலை போய்விட்டது. சம்பாதிப்பதே பெரியபாடாகப் போய்விட்டது. அவர் எழுத்துகளை சிறுபத்திரிகைகள்தான் பிரசுரம் செய்தன. 1000 பிரதிகளைக் கூட தாண்டாத சிறுபத்திரிகையில் அவர் எழுதியதால் அவரைத் தெரிந்திருக்க வாய்ப்பு மிகக் குறைவு. சம்பத் 'பிரிவு, மரணம்' என்ற அடிப்படையில் உழன்று அவற்றுக்கு விடை தெரியாமல் போய்விட்டார். அந்த சம்பத்தின் சிறந்த நாவலான 'இடைவெளி' க்ரியா மூலம் புத்தகமாக தயார் ஆகிக்கொண்டிருக்கும்போது சம்பத் அவர் கதைகளில் எழுதியவாறே மூளையில் ரத்த நாளங்கள் வெடித்து இறந்து விட்டார்.



இதே தமிழ் சமுதாயம்தான் வைரமுத்து என்ற படைப்பாளிக்கு கேட்காமலே விருதுகளை அள்ளி அள்ளித் தருகிறது. அப்படி விருதுகளை அள்ளித் தருவதே வைரமுத்துவிற்கு வழங்கும் தண்டனையா என்பது தெரியவில்லை. அப்படி விருது மழை கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது.

23.3.09

சில குறிப்புகள் - 11




கோவில்பட்டியைச் சேர்ந்த கவிஞர் அப்பாஸ் 49வது வயதில் வெள்ளிக்கிழமை காலை (20.03.2009) இறந்த செய்தியை என் நண்பரும் கவிஞருமான சிபிச்செல்வன் மூலம் அன்றே அறிந்தேன். நான் கவிஞர் அப்பாஸ் அவர்களைப் பார்த்ததாக ஞாபகமில்லை. ஆனால் அவர் கவிதைகளை அறிவேன். 'வரைபடம் மீறி' என்ற அவர் கவிதைத் தொகுதிக்கு விருட்சத்தில் விமர்சனம் எழுதியதாகக் கூட ஞாபகமிருக்கிறது. அவருடைய மரணத்தைப் பற்றிய செய்தி தினமணி நாளிதழில் ஒரு மூலையில் வெளியிட்டிருந்தார்கள். மற்ற பத்திரிகைகள் அதைக்கூட கண்டுகொள்ளவில்லை. அவ்வளவுதான் அப்பாஸ் வாழ்க்கை முடிந்துவிட்டது. பல எழுத்தாளர்களுடைய மரணம்கூட இப்படித்தான் யார் கவனத்தையும் கவராமல் போய்விடுகிறது. மிகச் சிறிய வட்டத்தில்தான் அப்பாஸ் மரணமடைந்துவிட்டார் என்பது தெரியும். சமீபத்தில் இப்படி மறைந்த இன்னொரு கவிஞர் சுகந்தி சுப்பிரமணியன். அப்பாஸ் நினைவாக அவருடைய கவிதைகளைச் சமர்ப்பிக்கிறேன்.


உன் முகம்


உன்னைப் பற்றிய என் பிரக்ஞை


கடிகார முட்களை தாண்டிய


பூமியின் இருப்பு.


நடக்கும் கால்களில் தெரியும்


உன் முகம், ஒரு பாதி.


இருப்பை அறியாது உள்வளரும் மரம்


நானும், நீயும் காணாத காற்று


அறிந்ததில் தெரிந்தது


அறிந்ததை தாண்டி


எப்போதும் விரியும் பூ.



இடைவெளி


வெளியில் இருந்து அறை திரும்பிய நான்


லுங்கி மாற்றி,


ஃபேனை தட்டிவிட்டு


மல்லாந்து சாய்ந்தேன்காற்று பரவ


தன் இடைவெளிகளில் விடுதலை கண்டது


மின் விசிறி.



மலையும் வீடும்


வீட்டிலிருந்து மலைகளை


சுதந்திரமாய் பார்த்தேன்


பின்


பாதை பற்றி மலை ஏறி


இறங்கும் நீர்வீழ்ச்சி என


வீடுகளை சுதந்திரமாய் பார்த்தேன்


பார்த்தது விழித்துக்கொள்ள


இப்பொழுது


என் குழந்தையோடு விளையாடிக்


கொண்டிருக்கிறேன்.




ரோஜா


சொல்லிக்கொள்ளாமலே போ


கேட்டு வருவதில்லை காற்று


சொல்வதில் நீள்கிறது


யாருமற்ற ஒற்றையடிப் பாதை


யாருக்கும் தெரிவதில்லை


நீரற்ற கண்ணாடி தம்ளர்


எப்போதும் காலிய்க்கிவிடு


வார்த்தைகளை கவனமாய்


இருப்பது ஆபத்து


முடிந்தால் ஒரு ரோஜா பதியம்


நட்டு வை


எப்படி, எதுவென்று


யாரிடமும் சொல்லாதே


நீ சொல்லிய எதையும்


கொண்டதில்லை ரோஜா


20.3.09

வைதீஸ்வரனின் இரண்டு கவிதைகள்


மிழில் மூத்த கவிஞர் வைதீஸ்வரன். கவிதைகள் மட்டுமல்லாமல், ஓவியத்திலும் நாட்டமுடையவர். சமீபத்தில் அவர் வரைந்த ஓவியங்கள் சிலவற்றை நவீன விருட்சம் இதழுக்காகப் பெற வேண்டுமென்று நினைத்தேன். அப்படி நினைத்தபடி என்னால் போக முடியவில்லை. காரணம் 7.30 மணியிலிருந்து மாலை 7.30 மணிவரை உள்ள அலுவலக நிர்ப்பந்தம். மேலும் நான் அலுவலகத்திலிருந்து வீட்டிற்குச் சென்றுவிட்டால் வேறு எங்கும் என்னால் செல்ல முடியவில்லை.


அதனால் ஒருநாள் அலுவலகத்திலிருந்து அவர் வீட்டிற்குச் சென்றேன். அவர் வீட்டிலுள்ள எல்லோரையும் எனக்குத் தெரியும். குறிப்பாக வைதீஸ்வரனின் தாயாரை. அவருக்கு வயது 90க்கு மேல் இருக்கும். வைதீஸ்வரனும் நானும் சந்திக்கும்போது (அதுவே ரொம்ப ரொம்ப அதிசயமாக நடக்கக் கூடியது) அவர் வீட்டு வராந்தாவில் அமர்ந்து சில நிமிடங்கள் அவருடைய படைப்புகளை வாங்கிக்கொண்டு சென்று விடுவேன். அவர்கள் வீட்டிலுள்ளவர்களைப் பொதுவாகப் பார்க்க மாட்டேன். இந்த முறை வைதீஸ்வரனுக்குப் போன் செய்தபோது, அம்மா பாத்ரூம் போகும்போது கீழே விழுந்துவிட்டார் என்று குறிப்பிட்டார். எனக்கு கேட்க என்னவோ போல் இருந்தது. வயதானவர்கள் கீழே விழும்போது உயிருக்கு ஆபத்து நெருங்கி விட்டதாக அர்த்தம். கீழே விழுந்தாலும் அம்மாவைப் பார்த்துக் கொள்வது என்பது அவர்கள் வீட்டில் சிரமம். வைதீஸ்வரனுக்கு 70 + வயது இருக்கும். அவர் மனைவிக்கு 65 + வயதிருக்கும். மேலும் அவர் மனைவிக்கு இயல்பாக நடமாட முடியாத துன்பம்.

வைதீஸ்வரனைப் பார்க்க வந்தபோது, அவர் அம்மாவைப் பார்க்க வேண்டுமென்று தோன்றியது. அவரும் அம்மா இருக்குமிடத்திற்கு அழைத்துப் போனார். அவர் அம்மா நாற்காலி ஒன்றில் அமர்ந்துகொண்டு, கண்ணாடி மாட்டிக்கொண்டு ஏதோ பத்திரிகையைப் பார்த்துக்கொண்ட மாதிரி தெரிந்தது. ''என்னைத் தெரியறதா?'' என்று கேட்டேன். ''விஸ்வநாதனா?'' என்று கேட்டார். ''இல்லை..இல்லை..மெளலி (புனைபெயர் அழகியசிங்கர்),'' என்றேன். அவர் தாயாரைப் பார்த்து பல ஆண்டுகளுக்குமேல் இருக்கும்.''ஏன் இளைத்துப் போயிட்டே?'' என்று கேட்டபோதே என்னை அடையாளம் கொண்டுவிட்டார் என்று தோன்றியது. விஸ்வநாதன் என்ற டாக்டர் ஒருவர் என்னை மாதிரிதான் இருப்பார் என்று வைதீஸ்வரன் கூறினார். அன்று சற்று வித்தியாசமான வைதீஸ்வரனின் ஓவியங்களை வாங்கிக்கொண்டு வந்தேன். இது நடந்து 2 நாள் கழித்து வைதீஸ்வரனிடமிருந்து போன் வந்தது. அவர் தாயார் இறந்து விட்டாரென்று. கேட்க வருத்தமாக இருந்தது. 90 வயதில் ஒருவர் உயிரோடு இருப்பதே சிரமம். மரணம் விடுதலையாகத்தான் இருக்கும். இருந்தாலும் வைதீஸ்வரனைத் திரும்பவும் பார்க்கும்போது அவர் துக்கமாகத்தான் தென்பட்டார். அவருடைய தாயாரை இழந்து நிற்கும் அவருக்கும், அவருடைய குடும்பத்தாருக்கும் விருட்சம் சார்பில் இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இத் தருணத்தில் விருட்சத்திற்கு சமீபத்தில் அவர் அனுப்பிய கவிதைகள் இரண்டை சமர்ப்பிக்கிறேன்.

குழுக்கள்

இரண்டையுமே

ஒன்றுபோல நேசித்து வந்தேன்

ஏதோ.....

ஒரு மனிதனுக்கு அது தான்

உயர்ந்த பக்குவம் போல


இரண்டுமே என்னை

ஏகமாகப் பாராட்டின

ஏதோ....

தங்களை மட்டும் நேசிப்பதாக

தவறாக எண்ணிக்கொண்டு

உண்மை ஒருநாள்

பொதுவாக விடிந்தவுடன்

இரண்டுமே என்னை

தூக்கி எறிந்தன தெருவில்

ஒற்றுமையாக!

ஏதோ.........

தங்கள் நேசத்துக்கு நான்

தகுதியற்றவன் என்பது போல

தெருமண் ஒட்டிய உடம்போடு

ஊன்றி எழுந்தபோது தான்

நியாயம் எனக்கும் உறைத்தது

ஊரோடு இனி ஒட்டி வாழவேண்டுமென்று

ஒரு ஆரம்பமாக

அருகில் நின்ற நண்பனை

அந்தரங்கமாக வெறுக்கத் தொடங்கினேன்

முகத்தின் புன்சிரிப்பு மாறாமல்.

தமிழ் பாடம்

வீரமாக தமிழ் நடத்த வேணுமென்று

வாத்தியார் விரும்பினார்

அந்த நாளில் அது பரவலமான மோகம்

நான் ஆறாம் வகுப்பென்று ஞாபகம்

வீரம் விளங்காத வயது

பயம் அறியாத கன்று

அரையடி உயர மேடையில் வாத்தியார்

சிகை பறக்கும் வேகமும்

நாற்றிசையும் தெறிக்கும் ஈர வசனமும்

கரகரத்த குரலும் விரிந்த நாசியும்.....

எனக்கு 'பக்கென்று' சிரிப்பு

பொத்துக்கொண்டது

அவர் அதட்டினாலும்அடங்கவில்லை

மறுகணம்

மேடைவீரம் தமிழ்ப்புயலாய்

கோலோடு குதித்தது என்மேல்

நய்யப் புடைத்தார் நாச்சிமுத்து வாத்தியார்

அடியோ பலம்

ஆனால் ஏனோ 'அய்யோ அய்யோ'வென்று கத்தவில்லை

பேச்சைப்போல் கோபம்

பாசாங்காக இல்லை போலும்!

ஒழுங்கைத்தான்

உதைத்து சொல்லியது








17.3.09

இலக்கியக் கூட்டம்


ந்த ஞாயிற்றுக்கிழமை (15.03.2009) எங்கே போவது என்று யோசித்தேன். அய்யப்பமாதவனின் நிசி அகவல் விமர்சனக் கூட்டத்திற்குச் செல்லலாம் என்று தோன்றியது. மாலை 5.30க்குக் கூட்டம். ஆனால் இலக்கியக் கூட்டம் குறித்த நேரத்தில் தொடங்குவது இல்லை. அதுதான் வழக்கம். அதனால் நான் 5.30 மணிக்கு அங்கு செல்லவில்லை. தனியாகப் போகப் பிடிக்கவில்லை. கூட ஸ்ரீனிவாஸனைக் கூப்பிட்டேன். நண்பர் ஸ்ரீனிவாஸன் வர ஒப்புக்கொண்டார். பொதுவாக என்னால் ஒரு வகுப்பில், இலக்கியக் கூட்டத்தில் தொடர்ந்து பேசுவதைக் கேட்டுக்கொண்டே உட்கார சிரமமாக உள்ளது. அலுமினிய கிளப், போட் கிளப் அருகில் என்ற இடம் என் மனதை மிகவும் கவர்ந்தது. முன்பே ஒருமுறை அலுவலக நண்பர் ஒருவரின் குழந்தையின் பிறந்த தினக் கொண்டாட்டத்திற்கு அங்கு சென்றிருக்கிறேன்.

அய்யப்பமாதவனின் கூட்டத்திற்கு நானும் ஸ்ரீனிவாஸனும் சற்று தாமதமாக வந்து சேர்ந்தோம். ஞானக்கூத்தன் பேசிக்கொண்டிருந்தார். அவருடைய பேச்சை முடிக்கும் தறுவாயில்தான் நுழைந்தோம். அவர் பேசி முடித்தவுடன் ஒவ்வொருவராகப் பேச ஆரம்பித்தார்கள். நேசன் பேச ஆரம்பித்தார். மிகவும் நிதானமாக ஒவ்வொரு வரியாக யோசித்து யோசித்துப் பேசுவதாகத் தோன்றியது. அய்யப்பமாதவன் தன்னடக்கமாக அமர்ந்திருந்தார். கூட்டத்தைப் பார்க்கும்போது ஜாலியாக இருந்தது. அய்யப்ப மாதவன் வயதையொத்த நண்பர்கள் பலர் இருந்தார்கள். அதில் பலர் கவிதைகள் எழுதுவார்கள். அக்கூட்டத்தில் ஒருவரை ஒருவர் கட்டி முத்தமிட்டுக்கொண்டிருந்தார்கள். ''என்ன நேசன், இதுமாதிரியெல்லாம் நடக்கிறதே?''என்று கேட்டேன். நேசன் சிரித்துக்கொண்டே சொன்னார். ''இன்னும் ஒருவர் வந்தால் உதட்டிலே முத்தம் கொடுப்பார்,'' என்றார்.

யவனிகா ஸ்ரீராம் அய்யப்பமாதவனைப் பற்றி ஒருமையில் நட்புடன் பேசினார். எல்லோரும் ரசித்தோம். நிசி அகவல் என்ற தலைப்பு வசீகரமாக இருந்தது. புத்தக விலை 60 ரூபாய் என்று போட்டிருந்தது. நல்ல தாளில் பிரமாதமான அட்டைத் தாளில் புத்தகம் அச்சிடப்பட்டிருந்தது. விமர்சனக் கூட்டத்தில் உள்ள பிரச்சினை யாரும் புத்தகம் படிக்காமல் வந்து உட்கார்ந்திருப்பார்கள். இக் கூட்டம் ஒவ்வொன்றும் அரசியல் கட்சி கூட்டம் போடுவதுபோல் தோன்றுகிறது. ஒவ்வொருக்கும் ஒரு கூட்டம் சேர்ந்துவிடும். அய்யப்பன் மாதவனுக்கு கிட்டத்தட்ட 50 பேர்களாவது வந்திருப்பார்கள். இது வரவேற்க வேண்டிய கூட்டமாக எனக்குத் தோன்றுகிறது.

நான் பல ஆண்டுகளுக்கு முன் விருட்சம் சார்பில் சுந்தர ராமசாமியை வைத்து ஒரு கூட்டம் நடத்தினேன். காலச்சுவடிலிருந்து யாரும் வரவில்லை. ஏன் வரவில்லை என்று யோசித்தேன்? நான் விருட்சம். கூட்டம் நடத்துகிறேன். அதனால் காலச்சுவடிலிருந்து யாரும் வந்திருக்க மாட்டார்கள் என்று தோன்றியது. சுந்தர ராமசாமியை வைத்து கூட்டம் நடத்தினாலும் அப்படித்தான். அதாவது கூட்டம் போடுவது ஒரு compartment கூட்டம் மாதிரி ஆகிவிட்டது. காலச்சுவடுன்னு ஒரு compartment, உயிர்மைன்னு ஒரு compartment, ஆழின்னு ஒரு compartment..... பொதுவா எழுதறவர்களுக்கான கூட்டமாக மாற்ற வேண்டும்.

அய்யப்பமாதவன் கூட்டத்தில் அதிகம் பேர்கள் பேசிக்கொண்டே போய்க்கொண்டிருந்ததால், என்னால் அதிக நேரம் அங்கு இருக்க முடியவில்லை. கூட்டத்திற்கு வந்திருந்தவர்கள் ஜாலியாக இருந்தார்கள். ஆனால் கூட்டத்தில் பேசியவர்கள் அந்த மூடை கொண்டு வர முடியவில்லை. என் நண்பர் ஸ்ரீனிவாஸனும் இந்தக் கருத்தை வெளிப்படுத்தினார். ஒருவர் அல்லது இருவர் பேச வேண்டும். அய்யப்பமாதவன் அவருடைய கவிதைகள் சிலவற்றை வாசிக்க வேண்டும். வாசிக்க அய்யப்பமாதவன் கவிதைகள் சில வந்தவர்களுக்குக் கிடைக்க வேண்டும். கூட்டம் சீக்கிரம் முடிந்துவிட வேண்டும்.

9.3.09

நான் கடவுள் படம் பற்றி சில வார்த்தைகள்...





சமீபத்தில் நான் பார்த்த படம் 'நான் கடவுள்'. முதலில் நான் சாதாரணமாக எல்லோரையும் போல் சினிமா பார்க்கிறவன். சினிமாவைப் பற்றிய நுணுக்கங்கள் தெரிந்தவன் இல்லை. ஆனால் நான் பார்த்த சில படங்களில் கூட கிணறு செட் போட்டிருந்தால், கதாநாயகனோ யாராவது வசனம் பேசிக்கொண்டிருந்தால் கிணறு செட் ஆடும். கோபாலகிருஷ்ணன் டைரக்ட் செய்த ஒரு படம் என்று நினைக்கிறேன். அதேபோல் ஜெயகாந்தனின் ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் என்ற படம் நினைக்கிறேன். அதில் வரும் கதாபாத்திரங்கள் வசனம் பேசிக்கொண்டே இருப்பார்கள். அந்தப் படத்தைப் பார்த்துக்கொண்டிருந்தவன் பாதியில் எழுந்து வந்துவிட்டேன். தமிழ் படங்கள் பார்ப்பதுபோல், சினிமா சங்கம் மூலம் பல நாட்டு படங்களையும் பார்த்து ரசித்திருக்கிறேன். ஆனால் எனக்கு எந்தப் படம் சிறந்த படம், எந்தப் படத்தின் டைரக்டர் சிறந்த டைரக்டர் என்ற அறிவு இல்லை. அந்த அறிவு மட்டும் இருந்திருந்தால் நானும் சினிமாவைப் பற்றி ஒரு புத்தகம் எழுதியிருப்பேன்.
இப்போது வரும் தமிழ் சினிமாவில் ஏற்படும் மாற்றங்களைப் பற்றி புரிந்துகொள்வது அவசியம். ஒரே மாதிரியாக தயாரிக்கப்பட்ட பார்மூலா கதைகளை ஒழித்துவிட்டு வேறுவிதமான படங்கள் இப்போது வரத் துவங்கி உள்ளன. இது நல்ல மாற்றம் என்று தோன்றுகிறது. பார்வையாளர்களை புத்திசாலிகளாக மாற்றும் முயற்சியை பாலா போன்ற சில இயக்குனர்கள் உருவாக்குகிறார்கள். தமிழில்தான் இதுமாதிரியான படங்கள் வருகின்றனவா என்ற ஆச்சரியம் எழாமல் இல்லை. ஆனால் இப்படிப்பட்ட படங்களைத் தயாரிக்கும் இயக்குனர்கள் ஜாக்கிரதையாகவும் இருக்க வேண்டியுள்ளது. ஒரு படம் தயாரிப்பது என்பது கோடிக்கான பணம் முதலீடு செய்யப்படும் தொழில். அத் தொழிலில் பார்வையாளர்களைத் திருப்தி பண்ணுவதுடன் அல்லாமல், முதலீடு செய்த பணத்தையும் எடுக்க வேண்டும். பாலா போன்ற இயக்குனர்கள் இந்த டெக்னிக்கை தெரிந்தவர்களாக தோன்றுகிறார்கள்.


இந்தப் படத்தில் அகோரி உலகத்தையும், பிச்சைக்காரர்களின் உலகத்தையும் கொண்டு வருகிறார். அது வெற்றிகரமாக கைவந்த மாதிரிதான் தெரிகிறது. மேலும் பலவித உடல் ஊனமுற்ற பிச்சைக்காரர்களைப் பார்க்கும்போது மனதுக்கு பெரிதும் சங்கடமாகத் தெரிகிறது. உண்மையான பிச்சைக்காரர்களா? அல்லது அப்படி நடிக்கிறார்களா என்று தெரியவில்லை. என் நண்பரும் கவிஞருமான விக்கிரமாதித்யன் இதில் நடித்திருக்கிறார். தாடியுடன் எப்போதும் காட்சி அளிக்கும் விக்கிரமாதித்யன் ஆசான் பாத்திரத்தில் இயல்பாக பொருந்திவிடுகிறார். வசனம் சில இடங்களில் ரசிக்கும்படி இருக்கிறது. சில இடங்களில் ரசிக்க முடியவில்லை. ஜட்ஜ் போலீஸ்காரரிடம் பேசும் வசனம்.


எனக்குத் தெரிந்து குருதத்தின் ஒரு படத்தை இலக்கிய நண்பர் ஒருவருடன் பார்க்கும்போது, ஒரு கட்டத்தில் அவர் அழ ஆரம்பித்துவிட்டார். படத்தைப் பார்க்கும்போது படத்துடன் ஒன்றிப்போகாமல் பார்க்கிற தன்மை வேண்டுமென்று எனக்குத் தோன்றுகிறது. அதேபோல் பாலாவின் இந்தப் படம் எல்லோருடைய மனதையும் கலக்கும். என் பெண் இந்தப் படத்தைப் பார்க்கச் சென்றபோது, பெண்ணின் பக்கத்தில் அமர்ந்திருந்த ஒரு பெண்மணி, 'பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன், ஐயனே, என் ஐயனே' என்ற பாடலைக் கேட்டவுடன் அழ ஆரம்பித்துவிட்டாராம். பூஜாவும், ஆர்யாவும் படத்தில் நடிப்பின் எல்லைக்கே சென்றுவிட்டதாக தோன்றுகிறது. 3 ஆண்டுகளாக ஆர்யா இப் படத்திற்காக நடித்திருக்கிறார் என்று தோன்றுகிறது.ஆனால் நிச்சயமாக எல்லோருடைய மனதிலும் நிற்கும் படமாக இது இருக்குமென்று தோன்றுகிறது.


பாலா அடுத்தப்படம் எடுக்கும்போது, பிச்சைக்காரர்கள், மன நிலை சரியில்லாதவர்கள், பார்வையற்றவர்கள் பற்றியெல்லாம் இனிமேல் எடுக்கக் கூடாது. வேறு விதமான முயற்சியை அவர் மேற்கொள்ள வேண்டும்.