17.6.09

மூன்று கவிதைகள்






கவிதை : ஒன்று


சிலருடன் பேச விரும்புகிறோம்

ஆனால்பேச முடிவதில்லை


சிலரைப் பார்க்கவே விரும்புவதில்லை


சிலரைத் தேடிப் போகிறோம்


அகப்படுவதில்லை


சிலர்முன்னால்


தேவைப்படாமல் தட்டுப் படுகிறோம்


வானத்தில் கோலம் போடுவதுபோல்


பறவைகள் பறந்து கொண்டிருக்கின்றன


தினமும் அப்படி எதிர்பார்க்க முடியுமா?


ஒருநாள் மகிழ்ச்சியாக இருக்கிறோம்


ஒருநாள் துக்கமாக இருக்கிறோம்


காரணம் புரிவதில்லை


உருண்டோடிப் போகும் காலப் பந்து


புரியாத புதிராக எட்டி


உதைக்கப் படுகிறது





கவிதை : இரண்டு



ஹஸ்தினாபுரத்தின் கிளை அலுவலகத்தில்


காலை வைத்ததும் ஒரே இருட்டு


ஜெனரேட்டர் இன்னும் பிக்அப் பண்ணவில்லை


பல்லைக் கடித்தபடி சீட்டில் அமர்ந்திருந்தேன்


கணினியில் எண்களைத் தடவி தடவி தட்டினேன்


விழுந்தனதப்புத் தப்பாய் எண்கள்


வாடிக்கையாளர் முன்னாள்


தலையில் அடித்துக்கொண்டேன்
வாசலில் போய்தனியாக வெயிலின்


புழுக்கத்தைப் போக்கிக்கொள்ள நின்று கொண்டிருந்தேன்


புழுக்கமில்லாத வெளி இதமாய் இருந்தது


இப்போதெல்லாம்


ஏனோ எனக்கு சிரிப்பே வருவதில்லை




கவிதை : மூன்று



கூட்டங்களில் நான்


தூங்குவது வழக்கம்


இலக்கியக் கூட்டங்களில்


நன்றாய் தூக்கம் வருகிறது


வகுப்புகளில் மாட்டிக்கொண்டால்


தூக்கம் தவிர்க்க


வகுப்பு வாசலில் நிற்பேன்


அலுவலகத்தில் நடக்கும்


கூட்டத்தில்தூங்கும்போது


யார் பேசுகிறார்கள்


என்பதை கவனமாய் கவனிப்பேன்


தூக்கத்தில் தலை ஆடுகிறதா என்றும்


ஆடும் தலையை யாராவது கவனிக்கிறார்களா என்றும்


பார்ப்பேன்


அப்படியும்


சற்று தூக்கம் என்னைக் கவர்ந்துவிடும்


தூக்கம் வரும்போது


பேசுபவர்கள் என்னை அத்திரத்தோடு
முறைத்துப் பார்ப்பதாக தோன்றுகிறது


முஷ்டியை மடக்கிக்கொண்டு முகத்தில்


ஓங்கி குத்த வேண்டுமென்று


பேசுபவருக்குத் தோன்றுகிறதோ...
ஆனால்


இரவில் குறைவாக தூங்குவது


என் வழக்கமாயிற்று






8.6.09

எதிர்பாராத மரணம்...


சனிக்கிழமை தேவிபாரதி ஒரு SMS அனுப்பியிருந்தார். ஒரு விபத்தில் ராஜமார்த்தாண்டன் மரணம் அடைந்துவிட்டதை. அறிந்தபோது வருத்தமாக இருந்தது. இந்த எழுத்தாளர்களுக்கெல்லாம் போறாத காலம் போல் தோன்றுகிறது. குறிப்பாக கவிஞர்களுக்கு..வரிசையாக சுகந்தி சுப்பிரமணியன், அப்பாஸ், சி மணி, இப்போது ராஜமார்த்தாண்டன். அவர் தினமணியில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது அடிக்கடி சந்திப்பேன். கொல்லிப்பாவையில் அவர் ஒவ்வொரு கவிஞராக எடுத்து அவர்களுடைய தொகுதியைப் படித்து அது குறித்து விமர்சனம் எழுதுவார். அதே பாணியில் நவீன விருட்சத்தில் எழுதும்படி கேட்டுக்கொண்டேன். அதன்படி உமாபதி, வைதீஸ்வரனுக்கு கட்டுரைகள் எழுதிக் கொடுத்தார். கவிதையைக் குறித்து கட்டுரைகள் எழுதுபவராகத்தான் எனக்கு அவரை முதலில் தெரியும். நவீன விருட்சத்திற்கு அவர் கவிதைகள் அனுப்பிய பிறகுதான் அவர் கவிதைகளும் எழுதுவார் என்பதைத் தெரிந்துகொண்டேன். ஆனால் மிகக் குறைவாகவே அவர் கவிதைகள் எழுதி உள்ளார்.



தினமணி அலுவலகத்திற்கு அவரைப் பார்க்கச் செல்லும்போது, சிரித்த முகத்துடன் வரவேற்று பேசத் தொடங்குவார். நான் அங்குப் போனால், ராஜமார்த்தாண்டனைத்தான் தேடிப் போவேன். பின் இருவரும் அலுவலக வாசலில் வீற்றிருக்கும் டீ கடையில் டீ சாப்பிடுவோம். நவீன விருட்சம் இதழ் மீது அவருக்கு அன்பும் மரியாதையும் உண்டு. பிரமிளை சிலாகித்துப் பேசினாலும், அவர் சுந்தர ராமசாமியின் பக்கம். சு.ராவை விட்டுக்கொடுக்க மாட்டார்.



பிரமிள் கரடிக்குடி என்ற இடத்தில் மரணம் அடைந்துவிட்டார் என்ற செய்தியை உடனடியாக அவரிடம் சொல்லவில்லை என்ற கோபம் என்னிடத்திலும், வெளி ரங்கராஜனிடமும் உண்டு. ஆனால் பிரமிள் நோய்வாய்ப்பட்டிருந்தபோது, பலர் அவரைப் பார்க்கவே வரவில்லை. விரும்பவும் இல்லை.



விபத்தில் மரணமடைவதுபோல கொடுமை வேறு எதுவுமில்லை. பெரும்பாலும் இதுமாதிரியான விபத்துகளில் வண்டியில் செல்பவர்கள்தான் இறப்பதுண்டு. சமீபத்தில் என் அலுவலக நண்பரின் மகன் டூ வீலர் விபத்தில் மரணமடைந்த நிகழ்ச்சி அதிர்ச்சியைத் தந்தது. விபத்து ஒரு சுழற்சி மாதிரி. சுழலில் மாட்டிக்கொண்டால், பலருக்கு தொடர்ச்சியான விபத்துக்கள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். பல ஆண்டுகளுக்கு முன் கார்விபத்தில் காஞ்சிபுரம் அருகில் மாட்டிக்கொண்ட நண்பர் ஒருவரின் குடும்பத்தில் பலர் பலவிதமான பாதிப்புகளுக்கு ஆளானார்கள். நண்பருக்கு முதுகு தண்டுவடத்தில் ஏற்பட்ட எலும்பு முறிவு. இன்னும்கூட அவரால் முழுதாக திரும்ப முடியவில்லை.



சில அண்டுகளுக்கு முன், என் அப்பா, நான், என் மகள் என்று மூவரும் தனித்தனியாக விபத்தில் சிக்கினோம். நினைத்துப்பார்த்தால் ஆபத்தான விபத்துக்கள்தான். ஒரு நாய் குறுக்கே வந்து நான் அடிப்பட்டு விழுந்தபோது, விபத்து எனக்குத்தான் ஏற்பட்டதா என்பதைப் புரிந்துகொள்ள சில மணி நேரம் ஆனது. விபத்து நடந்த சில தினங்கள் நான் படுக்கையிலிருந்து எழும்போது தலை சுற்றோ சுற்றென்று சுற்றும். இன்னும் கூட என் வலதுபக்கம் மூக்கு மரத்துப்போனதுபோல் தோன்றும்.



இந்த ஆரியகவுடர் ரோடில் என் தந்தை (87வயது) தள்ளாடி தள்ளாடி சாயிபாபா கோயிலுக்குப் போவதை அறியும்போது எனக்கு பக் பக்கென்று அடித்துக்கொள்ளும். ராட்சத உருமலுடன் சீறிக்கொண்டு பாயும் வாகனங்களைப் பற்றி அவர் கவலைகொள்ளாமல் ரோடை கடந்துசெல்வார்.
ஒரு டூ வீலர் இடித்துத் தள்ளி ராஜமார்த்தாண்டன் மரணம் அடைந்து விட்டார் என்பதை அறியும்போது வருத்தமாக இருக்கிறது. அவரை இழந்து நிற்கும் அவர் குடும்பத்திற்கு விருட்சம் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

15.5.09

வாக்காளர் பட்டியலில் என் பெயரும் இல்லை, கமலஹாசன் பெயரும் இல்லை...










நான் இந்த முறை ஓட்டுப் போடலாமென்றிருந்தேன். யாருக்கு என்பதிலும் தீர்மானமாக இருந்தேன். என் பெயர் பட்டியலில் இல்லை என்பது இன்று 4 மணிக்குத்தான் தெரிந்தது. என் குடும்பத்தில் அப்பாவிற்கு (87 வயது), மனைவிக்கு, என் புதல்வனுக்கு, மாமியாருக்கு என்று எல்லோருக்கும் ஓட்டுப்போட பெயர்கள் வாக்காளர் பட்டியில் இருந்தன. ஆனால் என் பெயர் மாத்திரம் இல்லை. ஆனால் வாக்காளர் அடையாள அட்டை இருந்தது. இதற்கு முன் பல முறைகள் நான் ஓட்டுப் போட்டிருக்கிறேன். காலையில் தினத்தந்தி பேப்பரைப் படித்தப்பின்தான் தெரிந்தது கமலஹாசன் பெயரும் வாக்காளர் பட்டியலில் இல்லை என்பது. எனக்கு இது ரொம்ப ஆச்சரியத்தைத் தந்தது. நான் சாதாரண நபர். ஆனால் கமலஹாசன் உலகம் புகழும் நடிகர். ஆனால் அவர் தன்னை சாதாரணன், பாமரன் என்று குறிப்பிட்டுள்ளார். ஓட்டு போடுவதற்காக ஐதாரபாத்தில் நடந்து கொண்டிருக்கும் ஒருநாள் படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு வந்திருக்கிறார். இதனால் அவருக்கு 10 லட்ச ரூபாய் நஷ்டம்.

கமலஹாசனும் என் வயதை ஒத்தவர்தான். ஆனால் சிறந்த நடிகர். நடித்தே புகழ் பெற்றவர். அவருக்கு பிறந்தநாள் கொண்டாட என்றெல்லாம் ரசிகர் மன்றம் உண்டு. அவர் பெயர் எப்படி வாக்காளர் பட்டியலில் இல்லாமல் போய்விட்டது. தேர்தல் ஊழியர்கள் எதற்காக அவரைத் தேடி வீட்டிற்கு வர வேண்டும். கமலஹாசன் பெயர் பத்திரிகைகளில் வந்துகொண்டிருக்கிறது. அவர் படங்கள் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றன. அப்படிப்பட்டவரை வீட்டில் இருக்கின்றாரா என்று ஏன் தேர்தல் ஊழியர்கள் போய்ப் பார்க்க வேண்டும்.

உண்மையில் கமலஹாசன் போன்ற ஒரு நடிகரை வீட்டில் போய்ப் பார்ப்பது என்பது சுலபமான விஷயமுமில்லை. அவர் யாரைப் பார்க்க வேண்டுமென்று நினைக்கிறாரோ அவர்கள் அவரைப் பார்க்க அனுமதிக்கப்படுவார்கள். மற்றவர்கள் சுலபமாக அவரைப் போய் பார்த்துவிட முடியாது. என் இலக்கிய நண்பர் ஒருவர் கமலஹாசனைப் பார்க்க போய்விட்டு, பார்க்க முடியாமல் வெறுத்துப் போய்விட்டார். என்னிடம் இதைச் சொல்லி குமைந்தபோது, 'நீங்கள் ஏன் அவரைப் போய்ப் பார்க்கப் போகிறீர்?' என்றேன். அவரைப் போய்ப் பார்த்து அவர் மூலம் சினிமாவிற்குள் பாட்டு எழுத நுழைந்து விடலாமென்று அவர் நினைத்திருப்பார். இப்படித்தான் கவிதை எழுதும் என் நண்பர்கள் பலர் அவஸ்தைப் படுவதை எண்ணி வருத்தமாக இருக்கிறது. எல்லோருக்கும் எல்லா வெற்றியும் கிடைத்துவிடாது. கவிதை எழுதுவதில் வெற்றி, சினிமா பாடல்கள் எழுதுவதில் வெற்றி என்றெல்லாம் கிடைத்து விடாது.

தேர்தல் ஊழியர்கள் கமலஹாசனை அவர் வீடு தேடி வந்து, கமலஹாசனைப் பார்க்காமல் போனதால் வாக்காளர் பட்டியலில் பெயரை எடுத்திருப்பார்கள்.

என் பெயரும் வாக்காளர் பட்டியலில் இல்லை. அதற்குக் காரணம் நான் காலையில் 7.30 மணிக்கு வீட்டை விட்டுக் கிளம்பினால் திரும்பவும் அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வர இரவு 8 மணி ஆகிவிடும். என்னை தேர்தல் ஊழியர்கள் பார்க்க வாய்ப்பே இல்லை. மேலும் நான் முன்பு இருந்த வீட்டிலிருந்து வேறு வீட்டிற்குக் குடிப்போய்விட்டதால், முன்பு இருந்த வீட்டில் உள்ளவர்கள், 'நான் இல்லை' என்று சொல்லியிருப்பார்கள். உண்மையில் தேர்தல் ஊழியர்கள் பாடு திண்டாட்டம். எப்படி என் குடும்பத்தில் மற்றவர்கள் பெயர்கள் தப்பித்தது என்பது தெரியவில்லை. என் அப்பா பெயர் நிச்சயம் இடம் பெற்றிருக்கும் ஏன்எனில் அவர் வீட்டில்தான் சதாசர்வகாலமும் இருக்கக் கூடியவர். வாக்காளர் பட்டியலில் விடுபடாமல் தப்பித்து சேர்ந்தது என் மனைவியின் பெயரும், புதல்வனின் பெயரும்தான்.

சரி, ஓட்டுப் போடவில்லை என்பதில் வருத்தமா? அதெல்லாம் ஒன்றுமில்லை. கமலஹாசன் மாதிரி நான் ஒருநாளைக்கு 10 லட்சம் இழக்கவில்லை. உண்மையில் எனக்கு சந்தோஷம் தரக்கூடிய நாள் இந்தத் தேர்தல் தினம்தான். தேர்தல் தினத்தன்று அலுவலகம் விடுமுறை விட்டதால், அப்பாடா என்றிருந்தது. ஞாயிற்றுக்கிழமையைத் தவிர extra லீவ். வீட்டில் எல்லோரிடனும் ஒருநாள் முழுவதும் இருந்தேன். காலை 7.30 மணியிலிருந்து அவசரம் அவசரமாக அலுவலகம் ஓடவில்லை. நிம்மதியாக இருந்தேன். காலையில் நிதானமாக எழுந்து சலூன் போய் தலை முடித் திருத்தி, கம்ப்யூட்டரில் (கணினி என்று சொல்ல தோன்றவில்லை) அமர்ந்து 160 பக்கம் நவீன விருட்சம் தயாரித்துக்கொண்டிருந்தேன். காலையில் ஒரு போன் வந்தது. என் எழுத்தாள நண்பர். 'என் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை' என்றார். 'என் பெயரும் இல்லை,' என்றேன். மாலையில் சேலத்திலிருந்து இன்னொரு இலக்கிய நண்பரிடமிருந்து போன் வந்தது. 'என் குடும்பப் பெயர்களே வாக்காளப் பட்டியலில் இல்லை,' என்றார். 'மகிழ்ச்சி' என்றேன்.

8.5.09

எஸ். வைதீஸ்வரனும் மெளனி கதைகளும்....




நேற்று என்று நினைக்கிறேன். இல்லை இல்லை முந்தாநாள் இரவு (06.04.2009) வைதீஸ்வரனிடமிருந்து ஒரு போன் மெளனி கதைகள் புத்தகம் கேட்டு. வைதீஸ்வரன் என்னிடம் புத்தகம் கேட்டு எப்போதும் போன் செய்ததில்லை. அதுவும் மெளனி புத்தகம் ஏன் கேட்கிறார் என்ற ஆச்சரியம் எனக்கு. என்னைப் போன்ற பல படைப்பாளிகளுக்கு மெளனி, புதுமைப்பித்தன், அசோகமித்திரன் போன்ற படைப்பாளிகள் கைடு மாதிரி. வைதீஸ்வரன் இல்லாமல் வேறு யாராவது அந்தப் புத்தகத்தை கேட்டிருந்தால், இல்லை என்று சொல்லியிருப்பேன். கேட்டது வைதீஸ்வரன் என்பதால் என் புத்தக அலமாரியில் போய்த் தேடினேன். மெளனி புத்தகம் கிடைத்ததோடல்லாமல் வேறு ஒருபுத்தகம் ஒன்றை புரட்டிப் பார்க்கும்போது இரு கடிதங்கள் கீழே விழுந்தன. எடுத்துப் புரட்டிப் பார்த்தால் சுந்தர ராமசாமி எழுதிய கடிதங்கள். எனக்கு ஆச்சரியம். அக்டோபர் மாதம் 2001ஆம் ஆண்டு எழுதிய அக் கடிதத்தை ஏன் விருட்சத்தில் பிரசுரம் செய்யவில்லை என்று யோசித்துக் கொண்டிருந்தேன். எந்தக் கடிதம் எழுதினாலும் சுந்தர ராமசாமி பதில் எழுதி விடுவார். அழகாக டைப் செய்து கீழே சுரா என்று கையெழுத்திடுவார். விருட்சம் வெளியீடாக நான் சில புத்தகங்களை அவருக்கு அனுப்பி இருந்தேன். அதற்குத்தான் அவர் பதில் எழுதியிருந்தார். தொடர்ந்து அவருக்கு நான் பதில் எழுத, எனக்கு அவர் இன்னொரு கடிதமும் எழுதியிருந்தார்.



திரும்பவும் அக் கடிதங்களைப் படித்த எனக்கு உடனே விருட்சம் இதழில்வெளியிட வேண்டுமென்ற பரபரப்பு கூடியது. அதற்குமுன் பிளாகில் அக் கடிதங்களைப் பிரசுரம் செய்யலாமென்று தோன்றியதால் இங்கு அவற்றைப் பிரசுரம் செய்கிறேன்.



முதல் கடிதம் 20.10.2001


அன்புள்ள அழகியசிங்கர் அவர்களுக்கு,


உங்கள் 04.10.2001 கடிதமும் நீங்கள் அனுப்பியிருந்த நான்கு கவிதைத் தொகுதிகளும் கிடைத்தன.



பா.வெங்கடேசன் தொகுப்பை அவர் அனுப்பி வைத்திருக்கிறார். அதைத்தான் இப்போது படித்துக் கொண்டிருக்கிறேன். அத்தொகுப்பைப்பற்றி ஒரு மதிப்புரை எழுதலாம் என்ற எண்ணம் இருக்கிறது.



நீங்கள் அனுப்பிய தொகுப்புகளைப் படித்துவிட்டு என் அபிப்பிராயத்தைத் தெரிவிக்கிறேன். திட்டம் போட்டு வேலை செய்ய முடியவில்லை. தேதியில் முடித்துத் தரவேண்டிய வேலைக்கு முன்னுரிமை போய்விடுகிறது.



இப்போது நீங்கள் அனுப்பித் தந்திருக்கும் தொகுப்புகளை நான் இலவசமாகப் பெற்றுக்கொள்ள விரும்பவில்லை. உங்கள் வெளியீடுகளுக்கு நான் உரிய விலை தந்து வாங்குவதே நியாயமானது. அனுப்பித் தரவேண்டிய தொகையை கணக்கிட்டு எழுதுங்கள். தபால் செலவையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
எதிர்காலத்தில் நீங்கள் காலச்சுவடு மதிப்புரைக்கு அனுப்பும் புத்தகங்களை தனியாக எனக்கு அனுப்ப வேண்டியதில்லை.



விருட்சத்தில் நீங்கள் வெளியிடும் அசோகமித்திரனின் வரைபடத்தை என்னால் சகிக்க முடியவில்லை. சமீபத்தில் அவர் சைக்கிளிலிருந்து கீழே விழுந்த நிமிஷத்தில் வேண்டுமென்றால் அவர் முகம் உங்கள் வரைபடம்போல் இருந்திருக்கலாம். இப்போது நல்ல குணம் பெற்றுவிட்டார். நீங்கள் விரும்பினால் நான் ஒரு வரைபடத்தை வரைந்து அனுப்புகிறேன். நீங்கள் வெளியிடுவதைவிட அது நன்றாக இருக்கும்.



என் அன்பார்ந்த வாழ்த்துக்களுடன்,



சுரா


பின் குறிப்பு : உங்கள் 16.10.2001 கடிதம் இப்போது கிடைத்தது. நீங்கள் புத்தக விலையைத் தெரிவித்ததும் அதனுடன் சந்தா நாற்பது ரூபாய் சேர்த்து அனுப்பிவிடுகிறேன்.



(சுரா அசோகமித்திரன் வரைபடத்தைப் பற்றி குறிப்பிடுகிறார். ஓவியர் விஸ்வம் வரைந்த ஓவியம் அது. எனக்குப் பிடித்த அசோகமித்தரன் படம் அது. எப்போதும் விருட்சத்தில் அவருடைய அந்த ஓவியத்தையே வெளியிடுவேன். அசோகமித்திரனுக்கும் அந்த ஓவியம் பிடிக்கும் - அழகியசிங்கர்)



இரண்டாவது கடிதம் 15.11.2001

அன்புள்ள அழகியசிங்கர்,


வணக்கம். உங்கள் 06.11.2001 கடிதம் கிடைத்தது. வேலை நெருக்கடியால் உடனடியாகப் பதில்போட இயலவில்லை. மன்னியுங்கள்.



அசோகமித்திரன் வரைபடத்தைப்** பற்றி நான் எழுதியிருந்த விமர்சனத்திற்கு அழுத்தம் தருவதற்காகவே 'நான் வரைந்தால்கூட இதைவிட நன்றாக இருக்கும்' என்ற அர்த்தத்தில் எழுதினேன். நான் எழுதிய முறை யதார்த்தமாக நீங்கள் எடுத்துக்கொள்ளும்படி இருந்ததோ என்னவோ.



யோகா* வகுப்புக்கு வந்தவர்களுக்க என் பெயர் தெரியாமல் இருப்பதில் என்ன அதிசயம்? என் பக்கத்து வீட்டு டாக்டருக்குத் தெரியாதே! நேற்று தொலைபேசியில் அழைத்து தினமணி தீபாவளி மலரில் கமலஹாசன் சுந்தர ராமசாமி என்று ஒரு பெயரைக் குறிப்பிடுகிறார். தமிழ்நாட்டில் இன்னொரு சுந்தர ராமசாமி யார் என்று கேட்டார். கமலஹாசன் என் பெயரைச் சொல்லியிருக்க முடியாது என்பதில்தான் அவருக்கு என்ன தீர்மானம்! இதற்குத்தான் பெரிய பத்திரிகைகளில் எழுதவேண்டுமென்று புத்திசாலிகள் சொல்கிறார்கள். உண்மைதானே அவர்கள் சொல்வது?



இன்று ரூ.155 திரு என் சுப்பிரமணியன் பெயருக்கு அனுப்பி வைக்க இருக்கிறேன்.



என் அன்பார்ந்த வாழ்த்துக்களுடன்,



சுரா



*வெள்ளியங்கிரி நடைப்பெற்ற ஈசா யோகா வகுப்பில் கலந்துகொண்ட நாகர்கோவிலைச் சேர்ந்த சிலரிடம் சுந்தர ராமசாமியைப் பற்றி விஜாரித்தேன். அவர்கள் யாருக்கும் அவருடைய பெயர் தெரியவில்லை. சுந்தர ராமசாமியிடம் ஏன் உங்கள் பெயர் தெரியவில்லை என்று எழுதிக் கேட்டிருந்தேன். அதற்கான பதில்தான் மேலே வந்துள்ளது.


** சுந்தர ராமசாமி பிடிக்கவில்லை என்று கூறிய அசோகமித்திரன் வரைபடத்தை திரும்பவும் இங்கு பிரசுரம் செய்துள்ளேன்.

6.5.09

புத்தக விமர்சனங்கள்

நவீன விருட்சம் ஆரம்பித்த (1988ஆம் ஆண்டு) ஆண்டிலிருந்து அதில் புத்தக விமர்சனங்கள் பல எழுதியுள்ளேன். நினைத்துப் பார்த்தால் இப்போது என்னால் அதுமாதிரி புத்தக விமர்சனங்கள் எழுத முடியவில்லை. இருந்தும் நான் எழுதிய புத்தக விமர்சனங்களைத் தொகுத்து உங்களுக்கு அளிக்க விரும்புகிறேன்.

த பழமலயின் 'சனங்களின் கதை'


த பழமலயின் 'சனங்களின் கதை' என்கிற கவிதைத் தொகுதியில் இரண்டு விஷயங்களை முக்கியமாக கவனிக்கலாம்.


மிக எளிமையான வார்த்தைகள் மூலம் ஊரையும் சுற்றத்தையும் வெளிப்படுத்துவது.


உள்ளது உள்ளபடியே கூறுவது.


எடுத்தவுடன் எதிர்படும் 'அம்மா' என்கிற கவிதையில் 'முற்றத்துப் பவழமல்லி நீ மறந்தும் நினைத்தும் அழும் என்கிறபோது, மிகைப்படுத்தப்பட்ட உணர்வு நிலையில் கவிதை வெளிப்பட்டிருப்பதுபோல் தோன்றினாலும், கூடவே நயம் செறிந்த வார்த்தைகளையும் எந்தவித பகட்டுமின்றி வெளிப்படுத்துகிறது.


அப்பா என்கிற கவிதை

'கடாவை வெட்டுகையில் கண்ணீரும் வடிப்பார்? கருப்பனார் சாமிக்குப் பன்றியும் வளர்ப்பார்? படைக்காமல் உண்பது 'பழையது' மட்டும்

என்கிற தொடக்க வரிகளுடன் அபாரமாக ஆரம்பமாகிறது. இக் கவிதையில் அறிமுகமாகும் ந. தங்கவேல் படையாச்சி எந்தவித ஒளிவு மறைவுமில்லாமல், அவருடைய தற்பெருமையுடன் சேர்த்தே அறிமுகப் படுத்தப்படுகிறார்.

'அப்பாவின் கொடுவாள்' என்கிற கவிதையில் கொடுவாள் இறுதியில்
ஒனக்கு எனக்குன்னு ஒடம் பிரிக்கிற ஒன்னு இருக்கு அத எதுத்துத்தான் நீ என்ன எடுக்கணும்'என்று புத்தி புகட்டுவது புதுமாதிரியாகத் தோன்றுகிறது.

'உழுதவன் கணக்கில்' துண்டை தொலைத்துவிட்டு எதையோ சுற்றிக்கொண்டு, பள்ளிக்கு ஓடுவதிலிருந்து ஆரம்பிக்கிற கவதை ஒரு கசப்பான அனுபவத்தை அங்கதத் தொனியுடன் விளக்குகிறது.

'முருங்கை மரம்' என்கிற கவிதையில் உறவு முறைகளில் நமக்கிருக்கும் நம்பிக்கையை ஆழப்படுத்துகிறார்.

'இனி எனக்குக் கொல்லை வெளிக்குறுக்கு வழிகள் திருகு கள்ளிகளின் செவிகளில் என்வரவு சொல்லும் ஓணான்கள்


என்கிற வரிகள் மூலம் 'த பழமலை 'புத்தரை மறந்த ஊர்' கவிதையில் ஒரு ஊரை நயத்துடன் அறிமுகப்படுத்துகிறார். ஊரிலுள்ள ஏரிக்கரைப் பிள்ளையார் நாத்திகனையும் நலம் விசாரிப்பார்.


..................................... இடாத முத்தத்திற்கு எப்படியெல்லாம் வருணனை


'தப்புக் கணக்கு' என்கிற கவிதையில், சிறுவயது முதற்கொண்டு உறவுகொண்ட ஒரு பெண்ணின் நினைவுகள், அவளுக்குத் திருமணம் ஆகி, இடுப்புக் குழந்தையுடன் பார்க்க வந்தும் ஞாபகத்திலிருந்து அகலாமலிருப்பதைக் குறிப்பிடுகிறார்.

'சனங்களின் கதை' என்கிற இந்தத் தொகுதியில் உள்ள பல கவிதைகள் படிக்கிற உணர்வை ஏற்படுத்துகின்றன என்பதைக் குறிப்பிட்டுச் சொல்வது அவசியமாகப் படுகிறது.

மீண்டும் வாசிக்கிறேன் 1




நிமல விஸ்வநாதனின் மூன்று கவிதைகள்


1. நட்பு


நானுன்னை வெறுக்கவில்லை


நானுன்னோடு சண்டை போட


விரும்புகிறேன் - நன்றாக கவனி நண்பா,


விரும்புகிறேன் உன்னோடு சண்டை போட.


எனினும் இதிலிருந்து இன்னொன்றும்


நீ சுலபமாய் புரிந்து கொள்ளலாம் -


நான் சண்டை போடாத எல்லோரையும்


நான் விரும்புகிறேன் என்றர்த்தமில்லை.


2. நிலை


மத்தியானம் தூங்கினால் மாலையில் என் மனம் குற்றமுணரும்


தெரிந்தும் வேலைதேடும் நான் எப்படியோ


இன்று மத்தியானம் தூங்கிவிட்டிருக்கிறேன்....


திடீரென காறிக் கமறிய காகங்களின் ஒப்பாரி.


கிழித்தெறிந்து விட்டது அதையும் இப்போது...


கனவுக்கு வேலி கட்டிய கைசலிப்பில்


மளாரென எழுந்திருக்க முடியவில்லை என்னால்


வாசலுக்கு வருகிறேன் தெரிகிறது -


இன்றேனோ கருணை காட்டாத மின் கம்பிகள் -


விழுந்து கிடக்குமொரு கறுப்பைச் சுற்றும்


கறுப்பு நிறங்களின் தாறுமாறில்


பல்லிளிக்கும் மேலை வானின் வெள்ளைச் சூரியன்.


அங்கே நிற்கின்ற நிலையில்


எனக் கொன்றும் புரிகிறது -


நடுத் தெருவில் அப்போது தான்


புணர்ந்திறங்குகிற ஆண் கழுதையின்


கண்ணில் கசியும் சோகம்.



3. விடுதலை


மாசு மறுவின்றி வெம்பரப்பாய் விரிந்து கிடக்கும்


மத்தியான வெளியில்


படபடத்துப் போகும்


வசீகரமாயொரு வண்ணத்துப் பூச்சி.


திடீரெனப் பாய்ந்தறையும் காற்று, கூடவே


திடீரெனத் துடிக்கும் ஒரு எண்ணம் -


வண்ணத்துப் பூச்சியைப் பிடித்து 'விட'லாம்.


ஆனால் ஏனோ நல்ல வேளை


காற்று போய் எங்கோ மீண்டும்


பழையபடி பதுங்குவதற்குள்


வண்ணத்துப் பூச்சி பிடிக்கும் எண்ணத்தை நான்


காற்றில் விட்டு விட்டேன்.........................



(ழ அக்டோபர் 1980 / 11வது இதழ்)

21.4.09

கவிதை புரிய வேண்டுமா வேண்டாமா







இரண்டு வாரங்களுக்கு முன் திரிசூலம் ரயில்வே நிலையத்தில் அமர்ந்திருந்தபோது எங்களுடைய முதல் கேள்வி கவிதை புரிய வேண்டுமா வேண்டாமா என்பதுதான். எங்களிடையே பலத்த சர்ச்சையை இந்தக் கேள்வி ஏற்படுத்தியது. என்னைப் பொறுத்தவரை கவிதை புரிய வேண்டும் என்ற கட்சியைச் சேர்ந்தவன். ஆனால் கவிதை மனதிலிருந்து எழுதுவதால் புரியாமல் போக வாய்ப்புண்டு. கவிதையை எழுதுகிற மனமும், கவிதையை வாசிக்கிற மனமும் வேறு வேறு தளங்களில் இயங்குபவை. அதனால் கவிதை புரியவில்லை என்று ஒரு வாசிப்பவன் சொல்லி கவிதையைத் தூக்கிப் போட்டுவிட முடியும். என் நண்பர்கள் சிலர் கவிதை புரியவில்லை என்றே சொல்லாதே என்று அறிவுரை கூறுவார்கள். ஏனெனில் கவிதை புரியவில்லை என்று சொன்னால் எழுதுபவர்களுக்குப் பெரிய கித்தாப்பு ஏற்பட்டுவிடும். ஆனால் கவிதை எளிதாகப் புரியவேண்டும் என்று பாரதியார் கூறியபடி எளிதாக பல கவிதைகளைப் படைத்திருக்கிறார்.



சிலசமயம் கவிதை புரியும் ஆனால் கவிஞர் என்ன சொல்ல வருகிறார் என்பது தெரியாது. அதனால் கவிதையைப் பொருத்தவரை இரண்டுவிதமான அபிப்பிராயங்கள் தோன்றாமல் இருப்பதில்லை. ஒன்று கவிஞரின் அபிப்பிராயம். இரண்டாவது வாசகனின் அபிப்பிராயம். எனக்குத் தெரிந்து நகுலன் ஆனந்த் கவிதை ஒன்றைப் படித்துவிட்டு, என்ன எழுதியிருக்கிறார், புரியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.




ஷாஅ என்பவரின் ஒரு கவிதையைப் பார்ப்போம்.




எனது



வீணையின் நரம்புகளுக்கு



பாடத்



தெரியாது



நடனம்தான்



தெரியும்.



அவை



ஆடினால்



பார்க்கமுடியாது



கேட்கத்தான்



முடியும்



மேலே குறிப்பிடப்பட்ட கவிதை படிப்பதற்கு எளிதாக தோன்றினாலும், என்ன சொல்ல வருகிறார் என்பதை வாசகர்கள் மூளையைக் கசக்கிக்கொண்டுதான் இருக்க வேண்டும். கவிதை மூலம் எளிமையாகச் சொல்லுதல் வேறு. அப்படி எளிதாக சொல்வதன் மூலம் புரிந்துகொண்டு விட முடியும் என்று சொல்ல முடியாது. ஜே கிருஷ்ணமூர்த்தி சொல்லுவது எளிதாகப் புரிவதுபோல் இருக்கும். ஆனால் ஆழமாக யோசித்தால் ஒன்றும் புரிபடாது. நம் வாழ்க்கைக்கு ஜே கே தத்துவம் உதவாது. என் நண்பர் ஒருவர் ஜே கே பேசுவதைக் கேட்டு எக்ஸ்பிரஸ் காஃபி குடிப்பதுபோல் இருக்கிறது என்பார். இன்னும் பல நண்பர்கள் ஜேகே படித்துவிட்டு இயல்பு நிலையிலிருந்து மாறி விட்டதாக தோன்றும். நான் ஜே கேயைத் தீவிரமாகப் படித்தபிறகு, எனக்கு கோபமே இல்லாமல் போய்விட்டது. யாராவது திட்டினால்கூட கேட்டுக்கெண்டிருப்பேன் சும்மா. நாராணோ ஜெயராமன் என்ற ஒரு கவிஞர். 'வேலி மீறிய கிளைகள்' என்ற தொகுதி க்ரியா பதிப்பகம் மூலம் வெளி வந்திருக்கிறது. இத் தொகுப்பு வந்தவுடன் அவர் எழுதுவதையே நிறுத்திவிட்டார். காரணம் ஜே கே. ஜே கே மாதிரி ஒருவரைப் பார்த்தபிறகு எழுதுவதில் ஒரு அர்த்தமுமில்லை என்பார் அவர். எனக்கு ஜே கே மீது கோபம் வரும்.




அதேபோல் கவிதை எழுதுவதிலும், கவிதையை வாசிப்பதிலும் நம்மைப் பெரிதும் தொடர்பு படுத்திக்கொள்ள முடியும். நாம் கவிதை எழுதுகிறோம். கவிதை வாசிக்கிறோம். எதை வாசிக்கிறோமோ அதை வேறு மாதிரி எழுத முயற்சிக்கிறோம். நாம் வாசிக்கும்போதே நம்முடைய உலகத்தை கவிதை பிடித்து விடுகிறது. அதேபோல் கவிதை எழுதுபவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஏனெனில் கவிதை எழுதுபவனை கவிதை காட்டிக் கொடுத்துவிடுகிறது. இது கவிதை எழுதுபவனுக்கே தெரியாது.




'கொல்லும் முகம்' என்ற சம்பத்தின் கவிதையைப் பார்ப்போம்.




சுழலும் விழிகளில் நீர் ஏனோ?



கழநிகளில் பாய்ந்ததுதான் போதாதோ




மறையும் மாலையில் ஒளிர்ந்திடும் -



உன் முகம்தான் என் வாழ்வின் விதிப்பயனோ?




தெரிந்ததில்லை பயணம் தொடர்ந்தக்கால்



தெரிந்ததில்லை - பருவமதில் - மாற்றத்தில் -



தெரிந்ததுதான் யாருக்கு எப்போது?



இயம்புமோ உன் முகம்தான் அதைப்பற்றி?



என் உறக்க, விழிப்பில், ஊர்ந்தவளே



என் சிந்தையில் படர்ந்த கொடிப் பூவே



என் மூளையில் பூத்த வெண் மலரே



உன் முகம்தான் என்னைக் கொன்றதடி.



மூளையில் வெண் மலர் பூத்தால் எப்படி இருக்கும்? எதிர்பாராதவிதமாக சம்பத் மூளை வெடித்து இறந்துவிட்டார். இந்தக் கவிதை மூலம் அவர் இது மாதிரி ஒரு முடிவு அவருக்கு ஏற்படுமென்று தெரியாமல் தெரிவித்து விட்டதாக எனக்குத் தோன்றும்.



அதேபோல் ஆத்மாநாம் கவிதை ஒன்றை பார்க்கலாம்.




நான் ஒரு ஞானியுமில்லை



நான் ஒரு சித்தனுமில்லை



பித்தம் பிடித்தும் பிடிக்காத மேதை நான்



படித்தும் படிக்காத புலவன் நான்



வைத்தியம் தெரிந்தும் செய்து கொள்ளா நோயாளி நான்



உண்மையைத் தொட்ட ஒரு பேதை நான்



உத்தமனில்லை ஆனால் பொய் சொல்லத் தெரியாது



சத்தியவான் இல்லை ஆனால் உண்மையே பேசுபவன்



இவற்றையும் மீறி இருக்கிற கொஞ்சம் மட்டுமே நான்



இந்தக் கவிதை தெளிவாகவே ஆத்மாநாமின் மனநிலையைக் காட்டுகிறது. நான் என்ன சொல்ல வருகிறேனென்றால் இக் கவிதை எழுதுபவனுக்கு மட்டுமல்ல வாசிப்பவனையும் வசப்படுத்துகிறது. வாசிப்பவன் இந்தக் கவிதையைப் படித்து மயங்கிவிட்டால் தொலைந்தான். அவனையும் இந்தக் கவிதைப் பிடித்துக் கொண்டு விடும். கவிஞனின் பிரக்ஞையை வாசகனைத் தெட்டுவிடும்.



இது கவிஞனின் பிரச்சினையாக மட்டுமல்லாமல், வாசிப்பவனின் பிரச்சினையாகக் கூட மாறிவிடத் தொடங்கும். இதைப் பற்றி இன்னும் யோசித்து எதாவது எழுத முடியுமாவென்று பார்க்கிறேன். இதை வாசிப்பவர்களும் தங்களுடைய கருத்துக்களைத் தெரிவிக்கலாம். (இன்னும் வரும்)