Showing posts with label சில குறிப்புகள். Show all posts
Showing posts with label சில குறிப்புகள். Show all posts

24.9.09

சில குறிப்புகள் - 12





மீபத்தில் ஒரு பிரயாணத்தின்போது நான் படித்தப் புத்தகம் மகேஷ்பட் எழுதிய A Taste of லைப். இப்புத்தகம் யூ ஜி கிருஷ்ணமூர்த்தியின் கடைசி தினங்களைப் பற்றி விவரிக்கிறது. மகேஷ்பட், லாறி, சூசைன் மூவர்தான் கடைசிவரை யூ ஜி யைப் பார்த்துக்கொள்கிறார்கள். யூஜிக்கு அவர் மரணம் பற்றி நிச்சயம் தெரிந்து விடுகிறது. அவர் பார்க்க விரும்புகிற நண்பர்கள் அனைவரையும் அழைத்துப் பார்க்கிறார்கள். எல்லோரையும் உடனே உடனே போகவும் சொல்லி விடுகிறார். இதாலியில் உள்ள வலேக்ராஸியா என்ற இடத்தில் அவர் மரணம் நிகழ்கிறது.

அவருடைய மரணம் குறித்து அவரிடமே உரையாடுகிறார்கள்.

"நீங்கள் இறந்தபிறகு உங்கள் உடலை என்ன செய்வது?" என்று கேட்கிறார்கள்.

"தூக்கி குப்பைத் தொட்டியில் போடுங்கள்,"என்கிறார் யூஜி.

தன்னை ஒரு அவதார புருஷராக யாரும் கருதக் கூடாது என்பதில் யூஜி கறாராக இருப்பவர். மரணத்திற்குப் பிறகு யாரும் கொண்டாடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்.

மகேஷ்பட்டால் யூஜியின் மரணத்தைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவருக்கு யூஜியின் மரணம் பல பாடங்களைக் கற்றுத் தருகிறது.

இப் புத்தகம் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, முதல் பகுதியில் யூஜியின் வாழ்க்கை வரலாறாகவும், இரண்டாவது பகுதி அவருடைய இறுதி நாட்களை விவரிப்பதாக உள்ளது. ஒரு கதைப் புத்தகம் படிப்பதைவிட மிக சுவாரசியமாக இப் புத்தகம் படிக்க சுவாரியசத்தைக் கூட்டிக்கொண்டு போகிறது.

பல நிகழ்ச்சிகளை இப் புத்தகம் விவரித்தக் கொண்டே போகிறது. ஞாபகத்திலிருந்தும் மகேஷ்பட் யூஜியைப் பற்றி அவ்வப்போது எழுதிக்கொண்டே போகிறார்.

"உன்னால் எனக்கு புகழ் கிடைத்ததா? அல்லது என்னால் உனக்குப் புகழ் கிடைத்ததா?" என்று மகேஷ்பட்டைப் பார்த்து யூஜி கேட்டதாக ஒரு தகவல் வருகிறது.

பர்வீன் பாபியால் ஏற்பட்ட உறவால் மகேஷ்பட் அவதிக்கு உள்ளாகிறார். அப்போது ஒரு கேள்வி எழுகிறது. யூஜி மகேஷ்பட்டை பர்வீன் பாபியிடமிருந்து காப்பாற்றினாரா அல்லது பர்வீன் பாபியை மகேஷ்பட்டிடமிருந்து காப்பாற்றினாரா என்ற சுவாரசியமான கேள்வி எழுகிறது.

மகேஷ்பட்டை யூஜி ரஜினீஷிடமிருந்து காப்பாற்றுகிறார். யூஜியிடம் கோபம்கொண்டு மகேஷ்பட் கொலைவெறியுடன் ஒருமுறை இரவு யூஜி தங்கியிருக்கும் இடத்திற்கு வந்து கதவைத் தட்டுகிறார். "நாம் எங்கே போகப்போகிறோம்..உன் திட்டத்தை காலையில் வைத்துக்கொள்ளலாம்," என்கிறார் யூஜி.

பங்களுரில் யூஜி ஒரு இடத்தில் வாடகைக் கொடுத்து வருகிறார். யூஜிக்குப் பிறகு அந்த இடத்தை என்ன செய்வது என்று அங்குள்ளவர் கேட்கிறார். யூஜியோ அதை விபாச்சார விடுதியாக மாற்றி விடலாம் என்கிறார் ரொம்ப சாதாரணமாக.

ஜே கிருஷ்ணமூர்த்தி, ரமணர் என்று எல்லோரையும் வம்புக்கு இழுப்புவர் யூஜி. தான் சொல்வதை யார் வேண்டுமானாலும் திருத்தலாம். புத்தகமாகக் கொண்டு வரலாம். இதற்கு ராயல்டி எதுவும் கிடையாது என்று கூறியவல் யூஜி.

யூஜியின் நாட்கள் எண்ணப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் அவர் படுகிற அவதியை துல்லியமாக மகேஷ்பட் விவரித்துக் கொண்டே போகிறார். கண்ணீர் மல்க. படிக்க வேண்டிய புத்தகம்


23.3.09

சில குறிப்புகள் - 11




கோவில்பட்டியைச் சேர்ந்த கவிஞர் அப்பாஸ் 49வது வயதில் வெள்ளிக்கிழமை காலை (20.03.2009) இறந்த செய்தியை என் நண்பரும் கவிஞருமான சிபிச்செல்வன் மூலம் அன்றே அறிந்தேன். நான் கவிஞர் அப்பாஸ் அவர்களைப் பார்த்ததாக ஞாபகமில்லை. ஆனால் அவர் கவிதைகளை அறிவேன். 'வரைபடம் மீறி' என்ற அவர் கவிதைத் தொகுதிக்கு விருட்சத்தில் விமர்சனம் எழுதியதாகக் கூட ஞாபகமிருக்கிறது. அவருடைய மரணத்தைப் பற்றிய செய்தி தினமணி நாளிதழில் ஒரு மூலையில் வெளியிட்டிருந்தார்கள். மற்ற பத்திரிகைகள் அதைக்கூட கண்டுகொள்ளவில்லை. அவ்வளவுதான் அப்பாஸ் வாழ்க்கை முடிந்துவிட்டது. பல எழுத்தாளர்களுடைய மரணம்கூட இப்படித்தான் யார் கவனத்தையும் கவராமல் போய்விடுகிறது. மிகச் சிறிய வட்டத்தில்தான் அப்பாஸ் மரணமடைந்துவிட்டார் என்பது தெரியும். சமீபத்தில் இப்படி மறைந்த இன்னொரு கவிஞர் சுகந்தி சுப்பிரமணியன். அப்பாஸ் நினைவாக அவருடைய கவிதைகளைச் சமர்ப்பிக்கிறேன்.


உன் முகம்


உன்னைப் பற்றிய என் பிரக்ஞை


கடிகார முட்களை தாண்டிய


பூமியின் இருப்பு.


நடக்கும் கால்களில் தெரியும்


உன் முகம், ஒரு பாதி.


இருப்பை அறியாது உள்வளரும் மரம்


நானும், நீயும் காணாத காற்று


அறிந்ததில் தெரிந்தது


அறிந்ததை தாண்டி


எப்போதும் விரியும் பூ.



இடைவெளி


வெளியில் இருந்து அறை திரும்பிய நான்


லுங்கி மாற்றி,


ஃபேனை தட்டிவிட்டு


மல்லாந்து சாய்ந்தேன்காற்று பரவ


தன் இடைவெளிகளில் விடுதலை கண்டது


மின் விசிறி.



மலையும் வீடும்


வீட்டிலிருந்து மலைகளை


சுதந்திரமாய் பார்த்தேன்


பின்


பாதை பற்றி மலை ஏறி


இறங்கும் நீர்வீழ்ச்சி என


வீடுகளை சுதந்திரமாய் பார்த்தேன்


பார்த்தது விழித்துக்கொள்ள


இப்பொழுது


என் குழந்தையோடு விளையாடிக்


கொண்டிருக்கிறேன்.




ரோஜா


சொல்லிக்கொள்ளாமலே போ


கேட்டு வருவதில்லை காற்று


சொல்வதில் நீள்கிறது


யாருமற்ற ஒற்றையடிப் பாதை


யாருக்கும் தெரிவதில்லை


நீரற்ற கண்ணாடி தம்ளர்


எப்போதும் காலிய்க்கிவிடு


வார்த்தைகளை கவனமாய்


இருப்பது ஆபத்து


முடிந்தால் ஒரு ரோஜா பதியம்


நட்டு வை


எப்படி, எதுவென்று


யாரிடமும் சொல்லாதே


நீ சொல்லிய எதையும்


கொண்டதில்லை ரோஜா


19.12.08

சில குறிப்புகள் - 10




ஸ்டெல்லாபுரூஸ் காப்பாற்றி விட்டார்


இந்த மாதம் 7ஆம் தேதி எனக்கு விஜய் டிவியிலிருந்து போன் வந்தது ஸ்டெல்லாபுரூஸ் பற்றி விஜாரித்தார்கள். அவர் இருக்குமிடம் பற்றியெல்லாம் கேட்டார்கள். சொன்னேன். பின் நீங்கள் அவரைப் பற்றி எதாவது சொல்ல வேண்டும் என்று கேட்டார்கள். டிவியில் அவரைப் பற்றி சொல்ல சொல்கிறார்கள். சரி என்றேன்.


டிவி மோகம் யாரையும் விடுவதாயில்லை. பலர் டிவியை வைத்துக்கொண்டுதான் பொழுதைக் கழிக்கிறார்கள். நான் 200க்கும் மேற்பட்ட கவிதைகள் எழுதியிருக்கிறேன் என்றாலோ 50 சிறுகதைகளுக்குமேல் எழுதியிருக்கிறேன் என்றாலோ என் வீட்டில் உள்ள யாருக்கும் ஒரு பொருட்டல்ல.


ஒரு பத்திரிகையை விடாப்பிடியாக 21 ஆண்டுகள் நடத்தி வருகிறேன் என்றாலும் ஒரு அலட்சியம். டிவியிலும் இத்தனை சேனல்கள் இருந்தாலும் இலக்கியவாதிகளுக்கு பெரிய முக்கியத்துவம் கிடையாது. சினிமா நடிகர்கள் நடிகைகள்தான் அவர்களுக்கும் முக்கியம். நான் டிவி சேனல் அதிபதியாக இருந்தால் கவிதை வாசிப்பதை தினமும் வைத்திருப்பேன். குறிப்பிட்ட நேரத்தில் தமிழ் நாட்டில் உள்ள எல்லா கவிஞர்களும் தினம் தினம் கவிதை வாசிக்க வேண்டும் என்று ஏற்பாடு செய்திருப்பேன். ஆனால் டிவியிலோ சீரியல்தான் ஓடும். விதம் விதமான மனதைக் கெடுக்கும்படி இந்த சீரியலை எல்லோரும் விழுந்து விழுந்து பார்க்கிறார்கள். சீரியலைப் போல பல நிகழ்ச்சிகள். உலகம் முழுக்க பல பாதகமான நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்தவண்ணம் உள்ளன. இந்தப் பாதகமான நிகழ்ச்சிகளிலிருந்து ஒவ்வொரு நாளும் நாம் தப்பித்துக்கொண்டு வர வேண்டும்.
சில ஆண்டுகளுக்கு முன் இலக்கிய நண்பர்கள் டிவியில் வர ஆரம்பித்தபோது, அவர்கள் அவ்வப்போது எனக்கு செய்திகள் அனுப்பிக்கொண்டிருப்பார்கள். சிலர் sms அனுப்புவார்கள். உண்மையில் அந்த நேரத்தில் அவர்களை டிவியில் பார்க்கமுடியாமல் அவசரமாக அலுவலகத்தை நோக்கி ஓடிக்கொண்டிருப்பேன். அப்படியும் சிலவற்றைப் பார்ப்பேன். பின் எனக்கும் இதுமாதிரி சந்தர்ப்பம் வராதா என்று என் மனதில் தோன்றாமலில்லை. ஆனால் அதுமாதிரியான சந்தர்ப்பம் எளிதில் எனக்குக் கிட்டவே இல்லை. என் இலக்கிய நண்பர் ஒருவர் ஒவ்வொரு இலக்கிய நண்பராகக் கூப்பிட்டு ஒரு நிகழ்ச்சியை தினசரி காலை நேரத்தில் நடத்திக்கொண்டு வந்தார். போனால் போகிறதென்று எனக்கும் ஒரு சந்தர்ப்பத்தை அந்த இலக்கிய நண்பர் ஏற்படுத்திக்கொடுத்தார். எனக்கோ பரபரப்பு அதிகமாகிவிட்டது. அந்த டிவி ஸ்டேஷனுக்கு குறிப்பிட்ட நேரத்தில் போய்ச் சேர்ந்தேன். நிகழ்ச்சியைத் தயாரிப்பவர்கள் மெதுவாக வந்தார்கள். என்னைப் பேட்டி காண்பவர்கள் அட்டகாசமாக மேக்கப் செய்து வந்தார்கள். யாருக்கும் நான் எதுமாதிரி எழுத்தாளன் என்பது தெரியவில்லை. என்னைப் பார்த்தாலே நான் எழுதுபவனா என்ற சந்தேகம் கூட வந்திருக்கும். அவர்கள் என்னுடன் பேச ஆரம்பித்த பிறகு அந்த சந்தேகம் உறுதி ஆகியிருக்கும். அவர்கள் என்னிடம் நான் என்ன எழுதியிருக்கிறேன் என்று கேட்டுக்கொண்டார்கள்.


நான் எல்லாவற்றையும் சொன்னேன். அதை வைத்துக்கொண்டு அதிகம் மேக்கப் இல்லாமல் இருந்த என்னிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டார்கள். நானோ டிவியில் தோன்ற போகிறேன் என்ற பதட்டத்துடன் காத்திருந்தேன். ஒரே இடத்தைப் பார்க்கச் சொன்னார்கள். சிறிது குரலை உயர்த்திப் பேசச் சொன்னார்கள். தலையை அப்படியும் இப்படியும் அசைக்க வேண்டாம் என்றார்கள். கைகள் மூலம் சைகை செய்ய சொன்னார்கள். என் கால்களில் மாட்டியிருந்த செருப்பு தெரியாமல் பார்த்துக்கொண்டார்கள். அவர்கள் சொல்ல சொல்ல எதுவும் எனக்கு சரியாக வரவில்லை. ஆனால் என்னைக் கேள்வி கேட்டவர்கள் அட்டகாசமாக இருந்தார்கள். ஒரு பெண்மணியும் பார்க்க நன்றாக இருந்தார். அவர்கள் சிரித்து சிரித்து கேள்விகள் கேட்டார்கள். ஒவ்வொரு முறை அவர்கள் கேள்வி கேட்கும்போது படம் எடுக்கும் இடத்தை நோக்கி ஒரு சிரிப்பு சிரிப்பார்கள். படம் பிடிக்க வந்திருப்பவர் வேறு மொழியைச் சேர்ந்தவர். அவர் அவர்களுக்கு ஏதோ ஒரு சிக்னல் கொடுப்பார். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் போராட்டத்திற்குப் பிறகு அதிலிருந்து தப்பித்தேன். பின் எப்படி வந்திருக்கிறது என்று கேட்டேன். நன்றாக வந்திருக்கிறது என்றார்கள். எப்போது டிவியில் வரும் என்று கேட்டேன். ஏதோ ஒரு தேதியை நேரத்தைச் சொன்னார்கள். குறித்துக்கொண்டேன்.


பின் வீட்டிற்கு வந்து எல்லோரிடமும் சொன்னேன். அலுவலக, இலக்கிய நண்பர்களிடம் சொன்னேன். ஒருவரை ஏற்பாடு செய்து டிவியில் வருவதை சீடியில் பதிவு செய்ய சொன்னேன். அதற்கு இவ்வளவு செலவாகும் என்றார்கள். சரி என்றேன்.


எனக்கு சிபிச்செல்வன் என்ற இலக்கிய நண்பர் உண்டு. அவருடன் காலை நேரத்தில் நான் வாக் செல்வேன்.


''என்ன ஒரு மைசூர் பாக் பாக்ஸ் கொடுத்தார்களா?'' என்று அவர் கேட்டார்.


''ஆமாம்,'' என்றேன். பின் அவரைப் பார்த்து, ''நீங்களும் அடுத்த முறை அந்த நிகழ்ச்சிக்கு வருவீர்கள்,'' என்றேன்.


''எங்களைப் பற்றியெல்லாம் சொன்னீர்களா?'' ''சொன்னேன். சொன்னேன். உங்கள் பெயரைப்பற்றி குறிப்பிட்டிருக்கிறேன். ''எனக்கே ஆச்சரியம் எப்படி தைரியத்தோடு இவ்வளவும் சொன்னேன் என்று...முதலில் ஒரு மாதிரி இருந்தது. அப்புறம் ஒன்றுமில்லை..'' என்றேன்.


என் நிகழ்ச்சியைப் பலர் பார்த்தார்கள்.


குறிப்பாக என் உறவினர்களைச் சொல்ல வேண்டும். நான் டிவியில் வருவதால் அவர்கள் மத்தியில்தான் நான் முக்கியமான ஆளாக இருந்தேன். நான் பேசியதைக் கேட்டு அவர்கள் போன் செய்து மகிழ்ச்சியைத் தெரிவித்தார்கள். நான் கவிதை கதை எழுதி என்ன பிரயோசனம்? யாரும் படிக்கக்கூட மாட்டார்கள். ஆனால் நான் டிவியில் பேசியதைப் பார்த்து என் குடும்பத்தினர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள். ஒரு சில தினங்களுக்கு அவர்கள் மதிப்பில் உயர்ந்து இருந்தேன். அலுவலகத்திலும் இவர் டிவியில் வந்தார் என்று எல்லோரும் சொல்ல ஆரம்பித்தார்கள். சிடியில் வந்தபிறகு நான் அடிக்கடி போட்டு போட்டு பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரு தப்பை கண்டு பிடித்தேன்.


நான் தைரியமாகத்தான் அவர்கள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதில் சொன்னேன். ஆனால் 'வந்து..' என்ற சொல்லை அடிக்கடி உபயோகித்திருந்தேன். கேட்கும்போதெல்லாம் இந்த 'வந்து' ரொம்ப தொந்தரவு செய்வதுபோல் தோன்றியது. எனக்கு டிவியில் வருவதைப் பற்றி மறந்தும் போய்விட்டது.


இந்த ஆண்டு மார்ச்சு மாதம் ஸ்டெல்லாபுரூஸ் தற்கொலை செய்து கொண்ட நிகழ்ச்சி பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த சமயத்தில் அவருடைய நண்பர் என்ற முறையில் என்னை சன் டிவியில் பேட்டி கண்டார்கள். சந்தோஷமில்லாமல் அவர் தற்கொலையை துக்கத்துடன் சொல்லும்படி ஆயிற்று. டிவியில் வருவதை யாரிடமும் நான் குறிப்பிடவில்லை. சந்தோஷமில்லாத நிகழ்ச்சி அது. ஆனால் பலர் என்னை டிவியில் பார்த்ததாகச் சொன்னார்கள்.


மார்ச்சு, ஏப்ரல் என்று அந்த நிகழ்ச்சியும் பறந்து போய்விட்டது. ஸ்டெல்லாபுரூஸ் என் நினைவிலேயே இருந்து கொண்டிருந்தார்.


நான் எதிர்பார்க்காத எதிர்பாரத மனிதரிடமிருந்து ஏற்பட்ட மரணம் இது. எனக்கு அவர் மீது கோபம் கூட ஏற்பட்டது. கோழை தற்கொலை செய்துகொண்டார் என்று சொல்லிக் கொண்டிருந்தேன். ஆனால் என் இன்னொரு இலக்கிய பெண்மணி, 'அவர் தற்கொலை செய்து கொண்டதுபோல ஒரு தைரியம் யாருக்கும் வராது என்றார். அவர் கோழை இல்லை. அவர் தெரிந்துதான் தன் முடிவை ஏற்றுக்கொண்டிருக்கிறார். அதற்குப் பயங்கர துணிச்சல் வேண்டும்,' என்றார் அந்த இலக்கிய பெண்மணி.


எனக்கு அவர் சொன்னதைக் கேட்டவுடன் ஆச்சரியமாக இருந்தது. ஏன்எனில் புத்திக் கூர்மையுள்ள இலக்கிய பெண்மணி அவர். ஆனாலும் ஸ்டெல்லாபுரூஸ் தற்கொலையை என்னால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. அவர் நடந்துபோகும் போது விபத்தில் இறந்தாலும் எதாவது நியாயம் இருக்குமென்று நினைத்தேன்.


இதெல்லாம் நடந்து முடிந்தபின், இந்த டிசம்பர் மாதம்தான் எனக்கு விஜய் டிவியிலிருந்து நிகழ்ச்சி தயாரிப்பாளர் சிலர் பேசினார்கள். 'ஸ்டெல்லாபுரூஸ் பற்றி நீங்கள் சொல்ல வேண்டும்' என்றார்கள். என் பெயரை வேறு ஒரு இலக்கிய நண்பர் பிரபல பத்திரிகையில் இருப்பவர் சிபாரிசு செய்திருந்தார். அந்த நிகழ்ச்சி என்னவென்று தெரியாமல் சரி என்று சொல்லிவிட்டேன். எப்படியும் என்னை பேட்டி எடுப்பது என்ற தீர்மானத்தில் அவர்கள் இருந்தார்கள். வீடு தேடி மூன்று பேர்கள் வந்தார்கள். அதிக மேக்கப் இல்லாமல் என்னை ஒரு கோணத்தில் பார்த்தபடியே அமர்ந்து இருக்கச் சொன்னார்கள். பிறகு ஸ்டெல்லாபுரூஸ் பற்றி பேசுங்கள் என்றார்கள். ஏன் அவர் தற்கொலை செய்துகொண்டார்கள் என்று சொல்ல சொன்னார்கள். நானும் ஸ்டெல்லாபுரூஸ் பற்றி பேச ஆரம்பித்தேன். திரும்பத் திரும்ப நான் சொன்னதையே சொல்வதுபோல் பட்டது. ஒரு இடத்தில் ருத்திரன் என்று உச்சரித்தேன். பின் ஸ்டெல்லாபுரூஸ் போட்டோ எதாவது இருக்குமா என்று கேட்டார்கள்.


'அவர் தற்கொலை செய்துகொள்ளுமுன் எடுத்த போட்டோ உள்ளது,' என்று கம்ப்யூட்டரில் காட்டினேன். நான் சமீபத்தில் டிஜிட்டல் காமெரா ஒன்று வாங்கியிருந்தேன். அதில் பலரை போட்டோ எடுத்துக்கொண்டிருந்தேன். ஸ்டெல்லாபுரூஸையும் ஒரு சந்தர்ப்பத்தில் படம் பிடித்திருந்தேன். என்னைப் பேட்டி எடுத்தவர்கள்,


'திங்கள் இரவு பத்துமணிக்குப் பாருங்கள்,' என்றார்கள். அதுவும் நான் கேட்டபிறகுதான் அவர்கள் சொன்னார்கள். உடனே எல்லோருக்கும் இந்தச் செய்தியைத் தெரியப்படுத்தினேன். அலுவலகத்தில் பலருக்குச் சொன்னேன். எனக்கு உள்ளுக்குள் ஒரு வருத்தம் இருந்தது. ஸ்டெல்லாபுரூஸ் தற்கொலையைப் பற்றி ஏன் சொல்ல வேண்டும் என்று. மரணத்தை அவர் ஏற்றுக்கொண்ட விதம் சரியில்லை. ஆனால் அவர் மரணத்திற்கு மரியாதைத் தர வேண்டுமென்று நினைத்தேன். பொதுவாக எந்த நிகழ்ச்சியையும் நான் விரும்பி டிவியில் பார்க்க மாட்டேன். டிவியில்லாமல் என்னால் இருக்க முடியும். ஆனால் புத்தகமும், கம்ப்யூட்டரும் இல்லாமல் இருக்க முடியாது. எதாவது எழுதுவது என்று நினைத்தால் கம்ப்யூட்டரில்தான் என்னால் முடியும். திங்கள் அன்று பத்து மணிக்கு விஜய் டிவி முன் அமர்ந்தேன். 'நடந்தது என்ன?' என்ற அந்த நிகழ்ச்சியைப் பார்த்தபோது, சகிக்க முடியவில்லை. மனைவி இறந்துபோனதைத் தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்ட கணவனைப் பற்றி, கணவன் இறந்துபோன துக்கம் தாங்க முடியாத மனைவியின் தற்கொலை..இதை விவரிக்க பலருடைய பேட்டி. ஸ்டெல்லாபுரூஸ் பேர் வந்தவுடன் நான் வருகிறேனா என்று பார்த்தேன். நான் வரவே இல்லை. என்னைப் பேட்டி எடுத்துச் சென்றவர் என்னை கட் செய்து விட்டார். ஆனால் நான் குறிப்பிட்ட ருத்ரன் வந்திருந்தார். அதே நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக சாருநிவேதிதா வந்திருந்தார். எனக்கோ ஒரு மாதிரியாக இருந்தது. அடுத்த நாள் அலுவலகத்தில் சில நண்பர்கள் கிண்டல் செய்தார்கள். என் உறவினர்களெல்லாம் இரவு பத்துமணிக்குமேல் விழித்திருந்து பார்த்து ஏமாந்து விட்டார்கள். விஜய் டிவிகாரர்களுக்கு என்னிடம் நான் வரவில்லை என்பதைச் சொல்ல வேண்டுமென்ற நாகரீகம் கூட இல்லை. ஸ்டெல்லாபுரூஸுற்கே நான் அவரைப் பற்றி பேசுவது பிடிக்கவில்லை என்று நினைத்தேன். அதனால்தான் வர விடாமல் செய்து விட்டார். எனக்கோ நிம்மதியாக இருந்தது. அந்த நிகழ்ச்சியில் நான் வராமல் இருந்தது ரொம்ப நல்லது என்று நினைத்துக்கொண்டேன். ஸ்டெல்லாபுரூஸ் என்னைக் காப்பாற்றி விட்டார்.

12.12.08

சில குறிப்புகள் - 9

மேடைப் பேச்சும் நானும் / 1

எனக்கு மேடையில் பேச வேண்டுமென்ற ஆசை என் பள்ளிக்கூட நாட்களிலேயே தொடங்கி விட்டது. ஆனால் ஆசை மட்டும்தான் உண்டு. தைரியமாக சொல்ல வேண்டியதை மேடையில் ஏறி பிறர் முன் சொல்ல முடியுமா என்பதில்தான் சிக்கல். அந்தக் காலத்தில் பள்ளிகளில் மேடையில் பேசும் திறனுக்கு பரிசு கொடுப்பார்கள். நான் படித்த ஒரு ஆரம்பப் பள்ளியில் பேசும் போட்டி வைத்திருந்தார்கள். நானும் துணிச்சலாகப் பேச பெயர் கொடுத்துவிட்டேன். பேர் கொடுத்துவிட்டேனே தவிர அவர்கள் கொடுத்தத் தலைப்பில் பேசுவதற்கு பெரிய போராட்டமே நடத்த ஆரம்பித்தேன். என்ன பேசப் போகிறேன் என்பதை ஒரு தாளில் எழுதி வைத்துக்கொண்டேன். பள்ளியில் ஒவ்வொரு வகுப்பிலும் கலந்துகொண்டு பேசுபவரின் பெயர்களை வாசித்து வந்தார்கள். கூடவே ஒரு கட்டளையும் இட்டார்கள். 2 நிமிடத்திற்குமேல் பேசக் கூடாது என்பதுதான் அந்தக் கட்டளை.

நான் பேசுவதற்கான தருணம் வந்தது. அதற்குள் என் மனம் படபடவென்று அடித்துக்கொண்டது. நான் பேசி எல்லோரும் கேட்டு எல்லோரும் என் பேச்சில் மயங்க வேண்டும் என்றெல்லாம் தோன்றியது. என் பெயரைக் கூப்பிட்டார்கள். எனக்கோ உதறல். கையில் எழுதியிருந்ததைப் பார்த்துப் படித்தேன். படிக்கும்போது ஒரு தப்பு செய்துவிட்டேன். மாணவ மாணவிகளே என்று குறிப்பிடுவதற்குப் பதில் மாணவ மனைவிகளே என்று சொல்லிவிட்டேன். அவ்வளவுதான் ஒரே சிரிப்பு. ஏன் சிரிக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளவே பல நிமிடங்கள் ஆயிற்று. வேகமாக மீதி எழுதியிருப்பதையும் படித்துவிட்டு ஓடி வந்துவிட்டேன். இந்த நிகழ்ச்சியை என்னால் மறக்கவே முடியவில்லை.

தேர்தல்போது பல அரசியல்வாதிகள் பேசுவதைக் கேட்டிருக்கிறேன். அவர்களெல்லாம் ஒரே மாதிரியான விஷயத்தை ஒரு மேடையில் பேசியதை எல்லா மேடைகளிலும் பேசுவார்கள். ஒப்பிப்பதுபோல் எல்லோரும் திறமையாகப் பேசுவார்கள்.

மேடையில் திறமையாகப் பேசும் படைப்பாளிகள் பலர் என் நண்பர்கள். க.நா.சுப்பிரமணியம் மேடையில் பேசும்போது எந்தத் தலைப்பிலும் பேசுவார். ஆங்கிலத்திலும் தமிழிலும் பேசக்கூடிய திறமையானவர். எந்தத் தலைப்பு குறித்தும் எந்தத் தயாரிப்பும் இல்லாமல் பல மணிநேரம் பேசக்கூடிய திறமையானவர். சென்னையில் அவர் இருந்தபோது என்னை இலக்கியக் கூட்டம் ஒன்றை மாதம் மாதம் நடத்துங்கள் என்று தூண்டியவர். முதன்முதலில் மாதம் ஒருமுறை அவரை வைத்தக்கொண்டு கூட்டம் நடத்த வேண்டுமென்று எனக்குத் தோன்றிகொண்டே இருக்கும். அப்போது எப்படி ஒரு கூட்டம் நடத்துவது அதற்கு எத்தனைப் பேர்கள் வருவார்கள் என்றெல்லாம் குழம்பிக்கொண்டிருந்தேன். க.நா.சு பேசுவதைப் போல் எழுதுவும் செய்வார். அதேபோல் படிக்கவும் செய்வார். படித்துக்கொண்டும் எழுதிக்கொண்டும் ஒருநாள் பொழுதைக் கழிப்பார். படிக்க ஆரம்பித்தால் கையில் எது கிடைத்தாலும் படிக்காமல் இருக்க மாட்டார். நான் முதன் முதலாக நவீன விருட்சம் இதழிற்கு எதாவது எழுதுங்கள் என்று க.நா.சுவிடம் போய் கேட்டேன். உடனே எழுதிய ஒரு கட்டுரையை என்னிடம் கொடுத்தார். எனக்கு ரொம்ப ஆச்சரியம். கேட்டவுடன் கொடுத்துவிட்டார் என்பது. அவரை வைத்துக்கொண்டு மேடையில் பேச ஏற்பாடு செய்ய வேண்டும் என்று நினைத்த எனக்கு பெரிய ஏமாற்றம். அவர் தில்லிக்குச் சென்றவுடன் இறந்தும் விட்டார்.

நான் கூட்ட நடத்தவேண்டுமென்ற விதி என்னை விடவில்லை என்று தோன்றியது. லையன் சீனிவாசன் என்ற நண்பர் ஒருவர். அவர் சபீனா போன்ற ஒரு பொருளை செய்து காயின் என்ற பெயரில் விற்க ஆரம்பித்திருந்த தருணம். அப்போது ஹிந்துவில் Engagement என்ற பகுதியில் வரும் விளம்பரத்திற்கு என்னை இலக்கியக்கூட்டம் நடத்தும்படி தூண்டினார். எல்லா செலவையும் அவரே பார்த்துக்கொள்வதாக வேறு குறிப்பிட்டார். முயற்சி செய்தால் என்ன என்று ஆரம்பித்ததுதான் விருட்சம் இலக்கியக் கூட்டம். முதன்முதலில் காசியபன் என்ற படைப்பாளியை வைத்துக்கொண்டு நடத்தினேன். கூட்டம் நடத்தத் தொடங்கியபோதுதான் தெரிந்தது. எனக்கு மேடையில் சரியாகப் பேச வரவில்லை என்பது.

நான் கூட்டத்தில் பேச ஆரம்பித்தபோது, இப்படி ஆரம்பித்தேன், 'எல்லோருக்கும் வணக்கம்....இப்போது காசியபன் பேசுவார்,' என்று கூறிவிட்டு போய் உட்கார்ந்து கொண்டேன். காசியபன் யார்? அவர் என்னன்ன எழுதியிருக்கிறார் போன்ற பல விபரங்களைப் பற்றி பேசவில்லை. கூட்டத்தில் செய்ய வேண்டிய ஜாலவித்தையும் எனக்குத் தெரியவில்லை. ஆனால் காசியபனோ அவருக்கே உரித்தான பாணியில் பல விஷயங்களைப் பற்றி பேசினார். முதல் கூட்டம் நிறைவாகவே நடந்தது. சொற்பமானவர்கள் கூட்டத்திற்கு வந்திருந்தார்கள். அவர்களுடைய பெயர்களையும் முகவரிகளையும் ஒரு நோட்டில் குறித்துக் கொண்டேன்.

(இன்னும் வளரும்)

1.12.08

சில குறிப்புகள் - 8

நண்பர்களே,
நவீன விருட்சம் இதழுக்கு பலர் கடிதங்கள் எழுதிக்கொண்டே இருப்பார்கள். பெரும்பாலும் இதழ் ஆரம்பித்த சமயத்தில். தனிப்பட்ட முறையிலும் சிலர் எழுதுவார்கள். அக் கடிதங்களைப் படிக்க சுவாரசியமாக இருக்கும். கடந்த 80வது இதழ் நவீன விருட்சத்தில் அப்படி சில கடிதங்களைப் பிரசுரம் செய்தேன். இங்கேயும் தர விரும்புகிறேன். சும்மா சும்மா கவிதையே போரடிக்கிறது.
விருதுநகர் - ஜூலை 3 1991
அன்புள்ள அழகியசிங்கர்,
விருட்சம் இதழ் இங்கு கிடைத்தது. ஏன் இத்தனை பக்கங்கள். இத்தனை எழுத்துத் திணிப்புகள்? அறிமுக எழுத்தாளர் என்ற விவரிப்பெல்லாம் தேவையற்ற முகாந்திரங்கள். விருட்சம் பக்கங்கள் குறைத்து வெளியிடலாம். பக்க அதிகரிப்பு மட்டுமே இதழை 'கனமானதாக' ஆக்கி விடாது. பிரமிள் எழுதிய கவிதை 'அமெச்சூர்' தனமாக தொனிக்கிறது. சா. அரங்கநாதன் கவிதை 'தச்சூர்' போனேன் பரவாயில்லை. ஞானக்கூத்தனின் 'மதிப்புக் கூறுதல்' கட்டுரை மிக எளிமையாக நல்ல உண்மை ஒன்றை சொல்லிக் காட்டி உள்ளது. அங்கீகாரம் வேண்டியிருப்பதில் சிறு பத்திரிகையில் எழுதும் இலக்கிய கொம்பர்களும் உட்பட்டவர்கள்தான். 'சிறு பத்திரிகை' என்ற பிரமைக்கு இமேஜ்க்கு இறுதிவரை உட்படாமல் 'ழ' வெளிவந்தது. விருட்சம் படிப்படியாய் அத்தகைய இமேஜ்க்கு உள்ளாகி ஒரு
typical Tamil Little Magazineன் பரிபூர்ண லட்சணங்களின் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது...'வீடு திரும்புதல்' கவிதையின் அற்புத கவித்வம் மொழி பெயர்ப்பில் காணாமல் போயிருக்கலாமோ எனத் தோன்றுகிறது. விரைவில் சென்னை திரும்ப இருக்கிறோம்

அன்புடன்
ஸ்டெல்லா புரூஸ்

ச இராகவன் யாழ்ப்பாணம்

பெருமதிப்பிற்கும் வணக்கத்திற்குரிய அழகியசிங்கர் அவர்கட்கு,

நீங்கள் வெளியிட்டு வரும் நவீன விருட்சம் இதழ்கள் சில தொடர்ச்சியாக வாங்கிக் கிடைத்ததில் மெய்சிலிர்த்து இக்குறிப்பை எழுதுகிறேன். ஆர்ப்பாட்டமில்லாமல் கைக்கடக்கமாக ஒரு கனதியான சிற்றிதழாக நவீன விருட்சம் வெளிவருவதை கண்டு, உங்கள் மீது பெருமதிப்புக் கொண்டுள்ளேன். தவிரவும் உங்களது சிறுகதைகள் ஒருசிலவற்றை வாசித்ததில் பெருமகிழ்வுற்றேன். எளிமையான முறையில் அலாதியான நடையில் நவீனத்துவத்தைப் பிரதிபலிக்கும் சமூகப் பார்வையுள்ள உங்களது சிறுகதைகள் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கவை. மேலும் ஜெகன், மோகினி, அழகியசிங்கர் ஆகியோருக்கிடையிலான உரையாடல் சலிப்பினைத்தராத வரவேற்புக்குரிய உத்தி. அசோகமித்திரன் எழுதிவரும் பத்தி பல்வேறு விடயங்களை அறிமுகப்படுத்துவதில் முதன்மை வகிக்கிறது. அண்மைக்காலமாக கொம்பன் எழுதிவரும் பத்தியும் சுவாரசியமாகத்தானிருக்கிறது. ராஜேஸ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர் போன்று ஒரு பாக்கெட் நாவல் எழுத்தாளராக இதுவரை நான் எண்ணியிருந்த ஸ்டெல்லா புரூஸ் ஒரு தீவிரமான சிற்றிதழ் எழுத்தாளன் என்பதை நவீன விருட்சம் மூலமாகத் தெரிந்து கொண்டேன். இங்கு யாழ்ப்பாணத்தில் நவீன விருட்சம் அளவுக்கு எளிமையானதும் நேர்த்தியானதும் கனதியானதுமான சிற்றிதழ் இதுவரை வெளியானதில்லை என்பதையும் பதிவு செய்துகொள்ள விரும்புகிறேன்.


My Dear Mouli, (Azhagiyasingar), Card I Monday

Jaundice relapsed. Recovering. I need ¸கிழானல்லி Please get this from High Court grounds. In front of ‘Laxmy Narain’, on the Telephone Bill Office side, near the footwear repairs, there is Palmist by name subramanian.


Mention my name. He will help you find the herp.
Subbu was here twice regarding his job within 7 days. He must come again.


No news from Amirtharaj. Perhaps he does not want to call without bringing some money or other. This is absurd. Tell him to come. I need people to talk to. It helps.


I have a poem for you. But this must be published only
under the pen name I have given for it.
Am sending a friend who called at this point in writing this letter. He is sure to do the work.
With love,


T Ajithram Premil



7.11.08

சில குறிப்புகள் - 7





நவீன விருட்சம் 81-82 வது இதழ் அச்சாகிவிட்டது. அக்டோபர் மாதத்திற்குள் கொண்டு வர வேண்டுமென்ற என் பரபரப்பு இதழ் உருவாக்கத்தில் சில குறைபாடுகளை ஏற்படுத்தாமலில்லை. navinavirutcham.blogspot மூலம் பல புதியவர்கள் நவீன விருட்சத்திற்குக் கிடைத்துள்ளார்கள். வேண்டியமட்டும் படைப்புகளும் கிடைத்துள்ளன. எல்லாவற்றையும் நவீன விருட்சம் இதழில் கொண்டு வந்துள்ளேன்.


கவிஞர் எஸ் வைதீஸ்வரன் முகப்போவியம் பிரமாதமாக வந்துள்ளது.




இனி நவீன விருட்சத்தை எல்லோருக்கும் அனுப்ப வேண்டும். முழுவதும் அனுப்ப எனக்கு குறைந்தபட்சம் 15 நாட்களாவது பிடிக்கும். கனத்த ஜோல்னா பையை தோளில் சுமந்துகொண்டு அலுவலக சாப்பிடும் நேரத்தில் வண்டியில் க்ரோம்பேட்டை தபால் அலுவலகத்தில் எல்லாவற்றையும் சேர்த்துவிடுவேன்.



முன்பெல்லாம் சந்தா அனுப்பச் சொல்லி எல்லோருக்கும் கார்டு எழுதுவது வழக்கம். இப்போது அதெல்லாம் முடிவதில்லை. சந்தா அனுப்பிவிடுவார்கள் என்று எண்ணி பத்திரிகை அனுப்பிக்கொண்டிருக்கிறேன்.



இந்த இதழில் புதியவர்களாக நிலாரசிகன், அனுஜன்யா, மைக்கேல், இராகவன், ச முத்துவேல், சைதை செல்வராஜ், செல்வராஜன் ஜெகதீசன் முதலியவர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். அவர்களுக்கு என் வாழ்த்துகள். (இவர்கள் முகவரிகள் தேவை. பத்திரிகை பிரதிகள் அனுப்ப.)



அடுத்த இதழ் ஜனவரி மாதம் வருகிறது. தொடர்ந்து படைப்புகளை அனுப்பும்படிக் கேட்டுக்கொள்கிறேன்.முதலில் navinavirutcham.blogspot லும் பின், நவீன விருட்சம் இதழிலும் பிரசுரம் செய்கிறேன்.


இப்போது அனுப்பி உள்ள கவிதை ஒன்றை இங்கு பிரசுரம் செய்கிறேன்.


ச.முத்துவேல்


நம்ப மறுத்த கணங்களை
மீண்டும் மீண்டும்
நிகழ்த்திப் பார்க்கிறது மனம்.

கடந்துபோன ஆற்று நீர்போல்
ஏற்கனவே பெய்த வெயில்போல்
இழந்த கணங்கள் என்றபோதிலும்

பரவசமான கணங்களை
முன்பைவிடத் தேய்ந்துபோன
பரவசத்தோடும்

வலிமிகுந்தத் தருணங்களை
முன்பைவிடத் தேய்ந்துபோன
வருத்தத்தோடும்.

அக்கணங்களின்
அதிர்வலைகள் இன்னமும்
ஓய்ந்தபாடில்லை



30.10.08

சில குறிப்புகள் - 6

வணக்கம்.

ஒரு வழியாக நவீன விருட்சம் 81-82 வது இதழ் முடிந்தது. இரண்டு மூன்று தினங்களில் அச்சு அடிக்கும் இடத்திலிருந்து வெளியே கிளம்பிவிடும் விருட்சம்.

ழ பத்திரிகையின் இணை ஆசிரியர் இராஜகோபாலனின் திருமணம் இப்போதுதான் நடந்த மாதிரி தோன்றியது. இன்று அவர் புதல்வரின் திருமணம். வழக்கம்போல் அவருக்கு நெருங்கிய .இலக்கிய நண்பர்களின் கூட்டம்.


ஒவ்வொரு முகத்திலும் வயது தனது பதிவை ஏற்படுத்தாமலில்லை. வயதான அசோகமித்திரன், வயதான ஞானக்கூத்தன், வயதான விட்டல்ராவ், வயதான கந்தசாமி, வயதான முத்துசாமி, வயதான ஆன்ந்த் என்று பலரை வயதான நானும் பார்த்தேன்.


ராஜகோபாலன் எளிமையான மனிதர். அவர் கவிதைகளும் அவரைப் போல எளிமையானவை.


இந்த திருமண வைபவத்திற்கு வந்திருந்த ஆனந்த் அவருடைய கவிதைத் தொகுதியான அளவில்லாத மலர் என்ற புத்தகத்தை கையெழுத்திட்டு அளித்தார். எனக்கு உடனே பல ஆண்டுகளுக்குமுன் ஆத்மாநாமுடன் அவரைப் பார்க்கச் சென்றபோது, எனக்கு கையெழுத்திட்டு அவர் அளித்த 'அவரவர் கைமணல்' என்ற புத்தகம் ஞாபகம் வந்தது.


ஆனந்த் கவிதைகள் சற்று வித்தியாசமானவை. சாதாரண மனிதத் தோற்றங்கள் சற்று குறைந்து மனத் தோற்றத்திற்கு அதிக முக்கியத்துவம் தரக்கூடியவர்.

'அளவில்லாத மலர்' என்ற கவிதைத் தொகுதியைப் புரட்டியவுடன் தோன்றிய கவிதையை உங்களுக்கு அளிக்க விரும்புகிறேன்.


மாடிப்படி


மாடிப்படியில்

ஏறிக் கொண்டும்

இறங்கிக் கொண்டும்

இருக்கிறார்கள் அனைவரும்

ஏறிக்கொண்டும்

இறங்கிக்கொண்டும்

இருக்கிறது மாடிப்படி

பிறகு

படுக்கையான பிறகு

தூக்கம் நன்றாக வருகிறது

ஜன்னலான பிறகு

நல்ல காற்றும் வெளிச்சமும்

இருக்கிறது

மரமான பிறகு

வேர்களும்

பார்க்கக் கிடைக்கிறது

மேகங்களான பிறகு

கண்கள் திறந்து

மழை

பொழிகிறேன்

இப்படி அளவில்லாத பல கவிதைகள் அளவில்லாத மலர் என்ற புத்தகத்தில் உள்ளன. காலச்சுவடு பதிப்பகமாக வந்துள்ள இப் புத்தகத்தின் விலை ரூ.65 தான்.

19.9.08

சில குறிப்புகள் - 5


ழ கவிதைகள்


மே மாதம் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த என்ற பத்திரிகைக்கும் எனக்கும் தொடர்பு உண்டு. ழ பத்திரிகையைப் பார்த்துதான் நான் நவீன விருட்சம் பத்திரிகையைத் தொடர்ந்தேன். ழ பத்திரிகை கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் தொடர்ந்து வெளிவந்தது. அப் பத்திரிகையைப் பற்றி ஞானக்கூத்தன் பேசும்போது அம்மணப் பத்திரிகை என்பார். பத்திரிகைக்கு என்று தனியாகப் பளபள அட்டை இருக்காது. நியூஸ் பிரிண்டில் 16 பக்கம்தான் இருக்கும். இந்த எளிமையெல்லாம் ஆத்மாநாம் ஆசிரியராக இருந்து கொண்டு வந்தபோது. ழ பத்திரிகையில் ஈடுபட்ட பலர் எதாவது ஒரு பணியில் இருந்துகொண்டு, ஒழிந்த நேரத்தில் இலக்கியம் பேசிக்கொண்டு பத்திரிகையை நடத்திக்கொண்டிருந்தார். கவிதைகளைப் பற்றி பேசுவது, கவிதையை இயற்றுவது என்று ஒரு சிறிய கூட்டமே இருந்தது.


ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சென்னை கடற்கரையில் உள்ள திருவள்ளூவர் சிலை பக்கத்தில் அமர்ந்து இலக்கிய உரையாடலைத் தொடர்ந்து நடத்திக்கொண்டே இருப்பார்கள். அவர்கள் பேச்சு பல விஷயங்களைக் குறித்து இருக்கும். அங்கு ஆத்மாநாமை நான் பார்க்கவில்லை. ஆத்மாநாமின் தற்கொலை அந்த எளிமையான கூட்டத்திற்குப் பெரிய அதிர்ச்சியே ஏற்படுத்தியது. ஆத்மாநாம் தற்கொலை செய்து கொண்டு விடுவார் என்பதை யாரும் எதிர்பார்க்கவில்லை.

சாத்வீகமான கவிஞர்களாக ஒவ்வொருவரும் இருந்தாலும், ழ கூட்டத்தில் இருக்கும் மற்ற கவிஞர்களுக்கு இருந்த மனத்துணிவு ஏன் ஆத்மாநாமிற்கு இல்லாமல் போய்விட்டது என்பது தெரியவில்லை. நான் ஆத்மாநாமை மூன்றுமுறை சந்தித்து இருக்கிறேன்.

ஒருமுறை ஞாநி இருந்த பீட்டர்ஸ் சாலையில் உள்ள காலனி வீட்டில் நடந்த கூட்டத்தில். அப்போது ஆத்மாநாம் கையில் ழ பத்திரிகையின் பிரதிகளை வைத்துக்கொண்டிருந்தார். ழ பத்திரிகையுடன் அவரைப் பார்க்கும்போது பரிதாபமாக இருந்தது.

இன்னொரு முறை நான், வைத்தியநாதன், ஆத்மாநாம் சந்தித்துக் கொண்டபோது. கவிஞர் ஆனந்த் வீட்டிற்கு நாங்கள் பயணம் செய்தோம். அப்போது வெளியீடாக வந்திருந்த நகுலனின் 'கோட் ஸ்டாண்ட் கவிதைகள்' ஆத்மாநாமின், 'காகிதத்தில் ஒரு கோடு' ஆனந்த் - தேவதச்சனின் 'அவரவர் கை மணல்' ஞானக்கூத்தனின், 'சூரியனுக்குப் பின்பக்கம்' என்ற புத்தகங்களை விலைக் கொடுத்து வாங்கினேன். ஆத்மாநாம் அவர் புத்தகத்தில் என் பெயரை எழுதி கையெழுத்துப் போட்டு கொடுத்தார்.

மூன்றாவது முறையாக நான் ஆத்மாநாமைச் சந்தித்தது. ஞாநியின் திருமண அறிவிப்புப் போது. ஞாநி பத்மாவுடன் சேர்ந்து வாழப்போவதாக அறிவிப்பு செய்து, நாடகம் ஒன்றை சென்னை மியூசியம் தியேட்டரில் நடத்தினார். எல்லோருக்கும் டீ வரவழைத்துக் கொடுத்தார். நான் ஆத்மாநாமைப் பார்த்து அவர் சீட் பக்கத்தில் போய் அமர்ந்தேன். நகுலனைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம். திடீரென்று விமலாதித்த மாமல்லனைப் பார்த்து ஆத்மாநாம் எழுந்து போய்விட்டார். அப்புறம் ஆத்மாநாம் வரவேயில்லை.

ஆத்மாநாமின் முடிவு சோகமானது. யாரும் எதிர்பார்க்காதது. குறைந்த வயதே வாழ்ந்தாலும், ஆத்மாநாம் தமிழ் கவிதையில் பல புதிய முயற்சிகளை உருவாக்கத் தவறவில்லை. ழ வின் முதல் இதழில் ஆத்மாநாமின் கவிதை எதுவும் பிரசுரமாகவில்லை. ஆனால் ஜூன் 1978 ஆம் ஆண்டு ஆத்மாநாமின் இரண்டு கவிதைகள் பிரசுரமாகியிருந்தன.

தூரத் தெருவிளக்குகள்

இரவில் இரும்பு மனிதர்கள் ஆகின்றன

கையில் நிழற்சுமையுடன்

இரவைக் காவல் காக்கின்றன

பகலிடமிருந்து

காலை மெல்லப் புலர்கிறது

கொஞ்சம் கொஞ்சமாய்

தெரு விளக்குகள் இறந்து விடுகின்றன

கண்ணுக்கே தெரியாத் தொலைவு சென்றுவிடுகின்றன

மீண்டும் இரவு

மெல்ல மெல்ல வருகிறது

வெளிச்சத்தை விரட்டிக்கொண்டு

மீண்டும் எங்கிருந்தோ

வந்து குதிக்கின்றன

தெரு விளக்குகள் இரவைப் பாதுகாக்க

கவிதை இரண்டு


ஒரு புளியமரம் சமீபத்தில் என் நண்பனாயிற்று

தற்செயலாய் அப்புறம் நான் சென்றபோது

நிழலிலிருந்து ஒரு குரல் என்னைத் தெரிகிறதா

திடுக்கிட்டேன் அப்புளிய மரம் கண்டு

நினைவிருக்கிறதா அன்றொரு நாள்

நீ புளியம் பழங்கள் பொறுக்க வந்தபோது

என் தமக்கையின் மடியில் அயர்ந்துபோனாய்

அப்பொழுது குளிர்ந்த காற்றை வீசினேனே

உன் முகத்தில் உடலில் எங்கும்

வா எப்படியும் என் மடிக்கு

இங்கு தொடர்ந்து ழ பத்திரிகையிலிருந்து சில கவிதைகளை உங்களுக்கு வாசிக்க அளிக்கலாம் என்று நினைக்கிறேன். ழ வந்த சமயம் கவிதைக்குப் பொற்காலம் என்று சொல்லத் தோன்றுகிறது. கவிதைக்கு மரியாதையை ஏற்படுத்தித் தந்த சமயமும் அதுதான் என்று சொல்லத் தோன்றுகிறது. இன்னும் என்னவெல்லாமோ சொல்லத் தோன்றுகிறது. ஆனால் சொல்லத் தெரியவில்லை.

6.9.08

சில குறிப்புகள் - 4

நான் சில குறிப்புகள் என்ற தலைப்பில் எனக்குத் தோன்றுவதை எழுதிக்கொண்டே போகிறேன். பெரும்பாலும் கவிதைக் குறித்து என் கருத்துக்களைப் பதிவுப் செய்கிறேன். நம்மால் புரிந்துகொள்ள முடியாத விஷயம் கவிதை. ஒரு கவிதையைச் சிறந்த கவிதை என்று சொல்வது நம்மில் உள்ள பலருக்கு மனது வராது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாய் கவிதையை அணுகிறார்கள். கவிதைப் பிடிக்கவில்லை என்று சொல்வதற்கு பலர் காத்துக்கொண்டிருக்கிறார்கள். எனக்குத் தெரிந்து ஒருநண்பர் அவருடைய கவிதைத் தொகுதியை பணம் செலவழித்துக் கொண்டு வந்தார். அந்தத் தொகுதியை இன்னொரு நண்பருக்கு கொடுத்துவிட்டு அவருடைய அபிப்பிராயத்தை எதிர்பார்த்தார். புத்தகத்தை வாங்கிய நண்பரோ கவிதை எழுதிய நண்பருக்கு ஏற்ற மாதிரி எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. இதனால் ஏமாற்றமடைந்த கவிதை நண்பர் புத்தகம் கொடுத்த நண்பரைத் திட்ட ஆரம்பித்துவிட்டார். கவிதைத் தொகுதி மட்டும் வெளியிடாமல் இருந்திருந்தால், இதுமாதிரியான வசுவுகளுக்கு ஆளாகமலிருந்திருக்கலாம்.

சரி எப்படி ஒரு நல்ல கவிதையை அடையாளம் காண்பது. கவிதையைப் படித்த மாத்திரத்திலேயே பல சிந்தனைகளை மனதில் ஏற்படுத்தும். அதாவது கிணற்றில் கூழாங் கற்கள் ஒவ்வொன்றாய் விழ ஏற்படும் அதிர்ச்சி தண்ணீரில் தெரிவதுபோல். நம் ஞாபகத்தில் ஒரு சிறந்த கவிதை பலநாட்கள் தங்கிவிட வேண்டும். ஏன் வருடக் கணக்கில். அப்படித் தங்கி விடுகிற கவிதையை நாம் எப்போது வேண்டுமானாலும் எடுத்து எடுத்துப் படித்துக்கொண்டிருப்போம்.

எனக்கு இப்படித்தான் க.நா.சு வின் கவிதை ஒன்று மனதில் நிழலாடிக் கொண்டிருக்கும். 'நல்லவர்களும் வீரர்களும்' என்ற கவிதையைப் பார்ப்போம்.

கடவுளுக்குக் கண் உண்டு; அவனுக்கு

வீரர்களையும் நல்லவர்களையும் ரொம்ப

ரொம்பப் பிடிக்கும். சண்டையில் வீரர்களையும்

சமாதானத்தில் நல்லவர்களையும்

அதிகநாள் உழலவிடாமல் சீக்கிரமே

அழைத்துக் கொண்டுவிடுவான்

கடவுளுக்கு உண்மையிலேயே கண் உண்டு

நிச்சயமாக நம்பலாம்.

இந்தக் கவிதையைப் படிக்க படிக்க எனக்கு க.நா.சுவின் பெயர் எப்போதும் ஞாபகத்தில் இருந்துகொண்டேயிருக்கும். இக் கவிதையை மறக்க முடியாது என்ற எண்ணத்தில் யாருக்கும் கருத்துவேறுபாடு ஏற்படாது.

30.8.08

சில குறிப்புகள் 3

எஸ் வைத்தியநாதன் என்ற என் நண்பரைப் பற்றி சொல்ல விருப்பப்படுகிறேன். எனக்கு சில இலக்கிய நண்பர்களை அறிமுகப்படுத்தியதற்கு வைத்தியநாதன் ஒரு முக்கிய காரணம். ஒரு இலக்கியச்சிந்தனைக் கூட்டத்தில்தான் வைத்தியநாதனை சந்தித்தேன். இந்தச் சந்திப்பை ஏற்படுத்தியவர் நடராஜ் என்ற நண்பர். வைத்தியநாதன் மூலம் என்ற பத்திரிகை பற்றியும், அதில் அப்போது எழுதிக் கொண்டிருக்கும் சில நண்பர்களையும் அறிமுகப்படுத்தினார். பெரும்பாலும் கவிதைகளை எழுதிக் கொண்டிருக்கும் அந்த இலக்கிய நண்பர்கள் கவிஞர்கள் என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ள விரும்ப மாட்டார்கள்.எல்லோரும் கவிதைகள் எழுதுபவர்கள். கவிதைகளைப் பற்றி பேசுபவர்கள். வைத்தியநாதன் ஒரு கவிஞர். பத்திரிகை நினைத்தபோது வரக்கூடிய பத்திரிகை. பத்திரிகை ஆசிரியர் ஆத்மாநாம் தற்கொலை செய்து கொண்டபோது, பெரிய அதிர்ச்சி அதில் ஈடுபட்ட நண்பர்களுக்கு ஏற்பட்டது. ஆத்மாநாமிற்காக நடந்த இரங்கல் கூட்டத்தில் அவருடைய நண்பர்கள் பெரிய வருத்தத்துடன் இருந்தார்கள். எனக்கு ஆத்மாநாம் அவ்வளவு நெருக்கம் கிடையாதென்றாலும், ஒன்றிரண்டு முறை சந்தித்திருக்கிறேன். அவருடைய புத்தகமான காகிதத்தில் ஒரு கோடில் அவருடைய கையெழுத்தை வாங்கியிருக்கிறேன். எளிமையான வரிகள் கொண்ட ஆத்மாநாம் கவிதைகள் கவிதை உலகத்தில் புதிய மாற்றத்தை உருவாக்கி உள்ளன. ஆத்மாநாம் போலவே ழ பத்திரிகையில் அறிமுகமானவர்கள் விதம் விதமாய் புதிய கவிதைகளை உருவாக்கியவர்கள். ஆத்மாநாம் குறித்து வைத்தியநாதன் எழுதிய கவிதையைத்தான் நான் உங்களுக்கு அறிமுகப்படுத்த விழைகிறேன். இக் கவிதை விருட்சம் தொகுதியில் வெளிவந்துள்ளது.


உறுதிமொழி 82

இன்றோடு

நழுவிய பதக்கங்கள் எவரையும்

நினைவூட்டப் போவதில்லை -

வளைந்த மீசை கொண்ட

பயணியை மீண்டும்

சந்திக்கப் போவதில்லை -

நந்தவனமெனக் கண்டதில்

பழுதில்லை

உலாவ முயன்றதில்தான் தவறு -

தொடைகள் நடுவில் புதைந்த தலையணை

இன்று உலகோடு கொள்ளும் நட்பு.


உறுதிமொழி 84

மெல்ல

தன்னையே எடுத்து நிறுத்திக் கண்டார்

மெல்ல

உள்ளதை எடுத்து நிறுத்திக் கண்டார்

மெல்ல

அற்றதை எடுத்துக் நிறுத்திக் கண்டார்.

உள்ளதும் அற்றதும் கண்டவர் மெல்லத் தன்னையே

எடுத்து நிறுத்திக் கண்டார்

உள்ளதும் அற்றதும் கண்டவர் மெல்லத் தன்னையே

எடுத்து நிறுத்திக் கொண்டார்

மெல்லத் தன்னையே எடுத்து நிறுத்திக் கொண்டார்

உறுதிமொழி 88


புதிய தேவதைகளை முத்தங்களிட வேண்டும்.

புதிய தேவதைகளை முத்தங்களிட வேண்டும்.


மேலே உள்ள உறுதி மொழி 82 கவிதை ஆத்மாநாம் நினைவாக எழுதப்பட்ட கவிதை. விருட்சம் கவிதைகள் தொகுதி 1 ல் வந்த கவிதையில் இதுவும் ஒன்று. இன்னும் சுவாரசியமான கவிதைகளை உங்களுக்கு அறிமுகப்படுத்த விரும்புகிறேன். இக் கவிதைகள் குறித்து உங்கள் கருத்துக்களையும் அறிய ஆவலாக உள்ளேன்.


29.8.08

சில குறிப்புகள் - 2

நவீன விருட்சம் என்ற இதழ் கடந்த 20 ஆண்டுகளாக வருவது இலகிய அபிமானிகளுக்குத் தெரியும் என்பது என் அபிப்பிராயம். பெரும்பாலும் கவிதைகளுக்கு முக்கியத்துவம் கொண்ட இதழ் நவீன விருட்சம். அந்த இதழில் வெளிவந்த முதல் ஐந்தாண்டுகளில் உள்ள கவிதைகளை கவிஞர்களின் பெயர்களை விடாமல் அவர்கள் எழுதிய ஒன்றுக்கும் மேற்பட்ட கவிதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து ஒரு தொகுப்பாகக் கொண்டு வந்தேன். அத் தொகுதியை விருட்சம் கவிதைகள் ஒன்று என்று பெயரிட்டு பிரசுரம் செய்துள்ளேன். 1988 ஆம் ஆண்டிலிருந்து 1992 ஆம் வரை உள்ள 94 கவிஞர்களின் 163 கவிதைகள் கொண்ட தொகுப்பு. இன்று கவிதை எழுத வேண்டுமென்று ஆசை படுபவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம் இது. ஒரு பல்கலைக் கழகத்தில் பாடத் திட்டத்தில் வைக்க வேண்டிய புத்தகம். கவிதைக்கு முக்கியத்துவம் தரக்கூடிய இப் புத்தகத்தை யாரும் கண்டுகொள்ளவில்லை. எல்லாவற்றுக்கும் சிபாரிசு வேண்டி உள்ளது. அல்லது உரிய அதிகாரமுள்ளவர்கள் தகுதியான இடத்தில் சொன்னால் எல்லாம் நடக்கும். விருட்சம் கவிதைகள் தொகுதி 1 க்கு அதுமாதிரியான கொடுப்பினை இதுவரை கிடைக்கவில்லை.


இப்போது அடுத்த 5 ஆண்டுகளுக்கான (1993/1998) வரை உள்ள கவிதைகளைத் தொகுதி விருட்சம் கவிதைகள் 2 கொண்டு வந்துள்ளேன். 93 கவிஞர்கள்கொண்ட 152 கவிதைகள். பொதுவாக விருட்சம் தொகுதியில் கவிஞர் பெயர்களைக் கட்டாயம் சேர்த்துவிடுவோம். ஒரு கவிஞர் விருட்சம் இதழில் ஒரு கவிதை எழுதினாலும் அவருடைய பெயர் விருட்சத்தில் இடம் பெறாமல் இருக்காது.


உங்களுக்கு விருட்சம் முதல் தொகுதியில் வெளிவந்த கவிதைகளை அறிமுகப்படுத்த விரும்புகிறேன். முதல் இதழில் ரா ஸ்ரீனிவாஸனின் முதல் பக்கத்தில் வெளிவந்த கவிதையைப் படிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.


சூரியனைத் தவிர


சூரியனே, நீ உதயமாகும் பொழுது

உன்னைத் தவிர

நான் வேண்டுவது

வேறு எவருமில்லை.

நான் உன்னுடன் உதிக்கிறேன்

இரவு வந்து கவிழ்கிற வரை

உன்னுடனே இருக்கின்றேன்

வீழ்கின்றபோது

நீ எழுதுகின்ற

வண்ண வண்ண ஓவியத்தை

நானும் எழுதியபடி

நீ மறைகின்றாய்

மலைகளுக்கும்

கட்டிடங்களுக்கும்

ஒவ்வொன்றிற்கும் அப்பால்

நீ எழுதிய ஓவியமும்

மெல்ல அழிகின்றது

இருள் சூழ்ந்து

பின்பு அதிகாலையினில்

நீ உதிக்கின்றாய்

உன்னுடன் நானும்

மாலைக்கான ஓர் புதிய ஓவியமெழுத

12.8.08

சில குறிப்புகள் - 1


ஒரு புத்தகத்தை ஆழமாகப் படிப்பது என்பது இல்லாமல் போய்விடும்போல் தோன்றுகிறது. அதற்கு முக்கிய காரணம் நேரம் கிடைக்காமல் போவது. தற்போது புத்தகங்களைப் புரட்டிப் பார்க்கும் நேரமே கிடைக்கிறது. அப்படிப் புரட்டிப் பார்க்கும்போது அந்தப் புத்தகத்தைப் பற்றி சிலவற்றை மட்டுமே குறிப்பிட வேண்டும்போல் தோன்றுகிறது. மேலும் புத்தகம் படிக்கும்போது இன்னார் எழுதியுள்ளார் என்பதைப் பார்க்கக் கூடாது. அப்படிப் பார்க்க ஆரம்பித்தால், புத்தகத்தை விட புத்தகம் எழுதியவர்க்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும்படி ஆகிவிடும். தமிழைப் பொறுத்தவரை எழுத்தாளர்களை உபதேசிப்பவர்களாக மாற்றி விடுகிறோம். பின் அவர்கள் எழுதுவது, பேசுவதெல்லாம் பிரமிப்பு கலந்த மரியாதையுடன் வரவேற்கிறோம். இந்த பிரமிப்பை முதலில் உடைக்க வேண்டும்.
ஒரு புத்தகக் கண்காட்சியின்போது, சமீபத்தில் அதிகமாக எழுதி புகழ்பெற்ற ஒரு எழுத்தாளர் பின்னால் ஒருவர் வால் மாதிரி தொடர்ந்து சென்றதைப் பார்த்தேன். என் பக்கத்தில் இருந்தவர், அது அவருடைய வாசகர் என்றார். என்னைப் பொறுத்தவரை ஒரு வாசகன் என்பவன் எழுத்தாளனை விட மேலானவன். அல்லது அவனுக்குச் சமமானவன். சினிமாவைப் பொறுத்தவரை நடிகர்கள், நடிகைகளுக்கு ரசிகர்கள் இருப்பார்கள். அவர்களெல்லாம் அபிமானிகள். எனக்குத் தெரிந்து இந்த அபிமானிகள் ஒரு குறிப்பிட்ட நடிகரின் சினிமாவை மட்டும் பார்த்து சிலாகிப்பார்கள். அதேபோல் அரசியல் தலைவர்களுக்கும் இதுமாதிரி அபிமானிகள் உண்டு. இந்த அபிமானிகள் சினிமாவில் அதிகமாக இருந்தால், சினிமா கெட்டுப்போய்விடும். அரசியலில் அதிகமாக இருந்தால், அரசியல் கெட்டுப்போய்விடும்.
ஆனால் ஒரு வாசகன் என்பவன் அபிமானியாக மாறக்கூடாது. ஒரு எழுத்தைப் படிக்கும்போது அந்த எழுத்துமீது அபிமானம் ஏற்படுவதைத் தடுக்க முடியாது. ஆனால் அதுவே அந்த எழுத்தாளன் மீது அன்பு செலுத்தும் வெறியாக மாறிவிடக்கூடாது. அந்த எழுத்தாளன் புத்தகத்தை மட்டும் படித்துவிட்டு, மற்ற எழுத்தாளர்களை புறம் தள்ளுவது, அல்லது கேவலமாகப் பார்ப்பது போன்ற விஷயங்களை நாம் ஒதுக்க வேண்டும்.
ஒரு வாசகனாக இருப்பவன் எல்லாவற்றையும் சமஅளவில் பார்ப்பதை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
ஆர்.வி சுப்பிரமணியன் என்கிற என் நண்பர் ஒருவர், பி எப் அலுவலகத்தில் பணிபுரிந்து பதவி ஓய்வு பெற்றவர். திருமணம் செய்து கொள்ளாதவர். புத்தகம் படிப்பதில் ஆர்வம் கொண்டவர். 1979 வாக்கில் சில கவிதைகளை எழுதியவர். ஆனால் தான் எழுதிய கவிதைகளை அவர் எப்போதும் சிலாகித்துப் பேசாதவர்.
ஆதிநாதன் என்ற பெயரில் அவர் எழுதிய கவிதை ஒன்றை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். பிப்ரவரி - மே 1979 ஆம் ஆண்டு அவர் எழுதிய கவிதை ஒன்று என்ற சிற்றேட்டில் பிரசுரம் ஆனது. அதை இங்கு குறிப்பிடுகிறேன்.

தோட்டம் வெறுமையாய்க் கிடந்தது.
வேலிக்கான முட்புதரில் கொள்ளையாய் பூக்கள்
பட்டாளத்துச் சிப்பாய்க்கு வருவாயுயர்ந்தது
கூட்டான குடும்பம் குந்தித் தின்கிறது.
ஏடுகள் நிறைந்த கல்வியால்
குழந்தைகளின் சிந்தனை மழுங்கிப் போயிற்று
உழைப்பில்லை காசில்லை கனவுகள் நிறைந்தன
கருணையில்லை ஊரெல்லாம் கடவுள்கள்
திருடர் வளர்க்கும் நாய்களின் குரைப்பில்
பயப்படும் பிச்சைக்காரர்கள்
சந்துத் திருப்பங்களில் காந்தி சிலைகள்
வீட்டு விருந்தில் மதுக்குப்பிகள்
மிகவும் எண்ணிய நல்லவர்கள்
ஊர் கெட்டது போகட்டும் என்று
உவமைக்கான
அரிச்சந்திரன் கெடாதிருக்க
இடுகாட்டில் குடிவைத்தார்கள்.