வணக்கம்.
ஒரு வழியாக நவீன விருட்சம் 81-82 வது இதழ் முடிந்தது. இரண்டு மூன்று தினங்களில் அச்சு அடிக்கும் இடத்திலிருந்து வெளியே கிளம்பிவிடும் விருட்சம்.
ழ பத்திரிகையின் இணை ஆசிரியர் இராஜகோபாலனின் திருமணம் இப்போதுதான் நடந்த மாதிரி தோன்றியது. இன்று அவர் புதல்வரின் திருமணம். வழக்கம்போல் அவருக்கு நெருங்கிய .இலக்கிய நண்பர்களின் கூட்டம்.
ஒவ்வொரு முகத்திலும் வயது தனது பதிவை ஏற்படுத்தாமலில்லை. வயதான அசோகமித்திரன், வயதான ஞானக்கூத்தன், வயதான விட்டல்ராவ், வயதான கந்தசாமி, வயதான முத்துசாமி, வயதான ஆன்ந்த் என்று பலரை வயதான நானும் பார்த்தேன்.
ராஜகோபாலன் எளிமையான மனிதர். அவர் கவிதைகளும் அவரைப் போல எளிமையானவை.
இந்த திருமண வைபவத்திற்கு வந்திருந்த ஆனந்த் அவருடைய கவிதைத் தொகுதியான அளவில்லாத மலர் என்ற புத்தகத்தை கையெழுத்திட்டு அளித்தார். எனக்கு உடனே பல ஆண்டுகளுக்குமுன் ஆத்மாநாமுடன் அவரைப் பார்க்கச் சென்றபோது, எனக்கு கையெழுத்திட்டு அவர் அளித்த 'அவரவர் கைமணல்' என்ற புத்தகம் ஞாபகம் வந்தது.
ஆனந்த் கவிதைகள் சற்று வித்தியாசமானவை. சாதாரண மனிதத் தோற்றங்கள் சற்று குறைந்து மனத் தோற்றத்திற்கு அதிக முக்கியத்துவம் தரக்கூடியவர்.
'அளவில்லாத மலர்' என்ற கவிதைத் தொகுதியைப் புரட்டியவுடன் தோன்றிய கவிதையை உங்களுக்கு அளிக்க விரும்புகிறேன்.
மாடிப்படி
மாடிப்படியில்
ஏறிக் கொண்டும்
இறங்கிக் கொண்டும்
இருக்கிறார்கள் அனைவரும்
ஏறிக்கொண்டும்
இறங்கிக்கொண்டும்
இருக்கிறது மாடிப்படி
பிறகு
படுக்கையான பிறகு
தூக்கம் நன்றாக வருகிறது
ஜன்னலான பிறகு
நல்ல காற்றும் வெளிச்சமும்
இருக்கிறது
மரமான பிறகு
வேர்களும்
பார்க்கக் கிடைக்கிறது
மேகங்களான பிறகு
கண்கள் திறந்து
மழை
பொழிகிறேன்
இப்படி அளவில்லாத பல கவிதைகள் அளவில்லாத மலர் என்ற புத்தகத்தில் உள்ளன. காலச்சுவடு பதிப்பகமாக வந்துள்ள இப் புத்தகத்தின் விலை ரூ.65 தான்.
படுக்கையான பிறகு
ReplyDeleteதூக்கம் நன்றாக வருகிறது
ஜன்னலான பிறகு
நல்ல காற்றும் வெளிச்சமும்
இருக்கிறது
மரமான பிறகு
வேர்களும்
பார்க்கக் கிடைக்கிறது
மேகங்களான பிறகு
கண்கள் திறந்து
மழை
பொழிகிறேன்
puthukavithai vairamuthu :)
Anonymous என்ற பெயரில் ஒளிந்துகொண்டு தோன்றுவதை எழுதுவதை எழுதாமலிருக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் யார் என்பதை வெளிப்படுத்துங்கள். வைரமுத்து சினிமா பாடலாசிரியர். அவர் சினிமா பாடல்கள் எழுதுவதில் வல்லவர். ஆனந்த் கவிதை மட்டும் எழுதுபவர். குறைவாகவே எழுதுபவர். அதிகமாக சிந்திப்பவர். நீங்கள் வைரமுத்து என்று குறப்பிட்டது. ஆனந்த் கவிதை வைரமுத்து மாதிரி உள்ளது என்ற அர்த்தத்திலா?
ReplyDeleteஅழகியசிங்கர்