நவீன விருட்சம் 81-82 வது இதழ் அச்சாகிவிட்டது. அக்டோபர் மாதத்திற்குள் கொண்டு வர வேண்டுமென்ற என் பரபரப்பு இதழ் உருவாக்கத்தில் சில குறைபாடுகளை ஏற்படுத்தாமலில்லை. navinavirutcham.blogspot மூலம் பல புதியவர்கள் நவீன விருட்சத்திற்குக் கிடைத்துள்ளார்கள். வேண்டியமட்டும் படைப்புகளும் கிடைத்துள்ளன. எல்லாவற்றையும் நவீன விருட்சம் இதழில் கொண்டு வந்துள்ளேன்.
கவிஞர் எஸ் வைதீஸ்வரன் முகப்போவியம் பிரமாதமாக வந்துள்ளது.
இனி நவீன விருட்சத்தை எல்லோருக்கும் அனுப்ப வேண்டும். முழுவதும் அனுப்ப எனக்கு குறைந்தபட்சம் 15 நாட்களாவது பிடிக்கும். கனத்த ஜோல்னா பையை தோளில் சுமந்துகொண்டு அலுவலக சாப்பிடும் நேரத்தில் வண்டியில் க்ரோம்பேட்டை தபால் அலுவலகத்தில் எல்லாவற்றையும் சேர்த்துவிடுவேன்.
முன்பெல்லாம் சந்தா அனுப்பச் சொல்லி எல்லோருக்கும் கார்டு எழுதுவது வழக்கம். இப்போது அதெல்லாம் முடிவதில்லை. சந்தா அனுப்பிவிடுவார்கள் என்று எண்ணி பத்திரிகை அனுப்பிக்கொண்டிருக்கிறேன்.
இந்த இதழில் புதியவர்களாக நிலாரசிகன், அனுஜன்யா, மைக்கேல், இராகவன், ச முத்துவேல், சைதை செல்வராஜ், செல்வராஜன் ஜெகதீசன் முதலியவர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். அவர்களுக்கு என் வாழ்த்துகள். (இவர்கள் முகவரிகள் தேவை. பத்திரிகை பிரதிகள் அனுப்ப.)
அடுத்த இதழ் ஜனவரி மாதம் வருகிறது. தொடர்ந்து படைப்புகளை அனுப்பும்படிக் கேட்டுக்கொள்கிறேன்.முதலில் navinavirutcham.blogspot லும் பின், நவீன விருட்சம் இதழிலும் பிரசுரம் செய்கிறேன்.
இப்போது அனுப்பி உள்ள கவிதை ஒன்றை இங்கு பிரசுரம் செய்கிறேன்.
ச.முத்துவேல்
நம்ப மறுத்த கணங்களை
மீண்டும் மீண்டும்
நிகழ்த்திப் பார்க்கிறது மனம்.
கடந்துபோன ஆற்று நீர்போல்
ஏற்கனவே பெய்த வெயில்போல்
இழந்த கணங்கள் என்றபோதிலும்
பரவசமான கணங்களை
முன்பைவிடத் தேய்ந்துபோன
பரவசத்தோடும்
வலிமிகுந்தத் தருணங்களை
முன்பைவிடத் தேய்ந்துபோன
வருத்தத்தோடும்.
அக்கணங்களின்
அதிர்வலைகள் இன்னமும்
ஓய்ந்தபாடில்லை
No comments:
Post a Comment