24.10.08

மழை 1, 2, 3.....



மழை பெய்தால் சென்னை நகரம் போல் ஒரு வேதனை தரும் இடத்தைப் பார்க்க முடியாது. நான் வசிக்கும் மேற்கு மாம்பலம் இன்னும் மோசம். கடந்த 2 நாட்களாக முட்டி கால்வரை தண்ணீர். அலுவலகம் போவதற்கே அருவெறுப்பாக இருந்தது. கூடவே அங்கங்கே பாதாள சாக்கடைகளின் மூடிகள் திறந்துகொண்டு சாக்கடை மல ஜலம், மழை நீர் என்று நாசம் செய்து விட்டது. தாங்க முடியாத துர்நாற்றம். இந்த மழையால் 15 பேர்களுக்குமேல் இறந்துவிட்டார்களாம். இத் தருணத்தில் மழையைப் பற்றி எழுதிய மூன்று கவிதைகளை இங்கு வாசிக்க அளிக்கிறேன்.



மழை 1



மழை பெய்தது


தெரு நனைந்து மிதக்க


இரண்டு பூனைக்குட்டிகள்


இடுக்கில்


குளிருக்குப் பயந்து


தாய் மடியில் பதுங்க


தாய்ப்பூனை


குட்டிகளைப் பற்றி யோசனையில்


கீழே


அப்பா


பாட்டி


தம்பி மூவரும் டிவியில்


துருப்பிடித்த சைக்கிளை


எடுத்தேன்


மழை விட்டிருந்தது


என் குழந்தைகளைப் பார்க்க............


மழை 2


மழை பெய்யவில்லை என்று என் அப்பா சொன்னார்


மழை பெய்யவில்லை என்று என் மனைவி சொன்னாள்


மழை பெய்யவில்லை என்று என் பையன் சொன்னான்


மழை பெய்யவில்லை என்று என் பெண் சொன்னாள்


மழை பெய்யவில்லை என்று பக்கத்துவீட்டார் சொன்னார்


வெயில் கொளுத்துகிறது என்று நான் சொன்னேன்.


மழை 3



மழை தூறி முடிந்தது

சம்பவங்கள் நடக்காமலில்லை


ஸ்தம்பித்துப் போன தோற்றம்


விடைபெறும் நண்பர்


எல்லோருடனும் புன்னகை செய்தார்


எப்போதும் குறைந்த வார்த்தைகளைப் பயன்படுத்துவார்


தெருவைக் கடக்கும்போது


ஈரம் சதக்கென்று காலில் ஒட்டி


வெறுப்பாய் மாறுகிறது பாவனை


விடைபெறும் நண்பர்


புதிய இடம் செல்ல ஆயத்தமாகிறார்


தனியாகப் பயணம்


பெற்றோரை விட்டுச்செல்லும் தயக்கம்


புதிய இடம்


புதிய முகங்கள்


வேறு மொழி


இங்கு ஈரம் இருந்துகொண்டுதான் இருக்கிறது


நண்பர் மனதிலும்


சதக்கென்று காலில் ஒட்டாத ஈரம்


நினைவுப் பறவைகள் மிதந்த வண்ணம்


புதிய இடம்


வரவேற்க காத்திருக்கலாம்.


No comments:

Post a Comment