ஸ்டெல்லாபுரூஸ் காப்பாற்றி விட்டார்
இந்த மாதம் 7ஆம் தேதி எனக்கு விஜய் டிவியிலிருந்து போன் வந்தது ஸ்டெல்லாபுரூஸ் பற்றி விஜாரித்தார்கள். அவர் இருக்குமிடம் பற்றியெல்லாம் கேட்டார்கள். சொன்னேன். பின் நீங்கள் அவரைப் பற்றி எதாவது சொல்ல வேண்டும் என்று கேட்டார்கள். டிவியில் அவரைப் பற்றி சொல்ல சொல்கிறார்கள். சரி என்றேன்.
டிவி மோகம் யாரையும் விடுவதாயில்லை. பலர் டிவியை வைத்துக்கொண்டுதான் பொழுதைக் கழிக்கிறார்கள். நான் 200க்கும் மேற்பட்ட கவிதைகள் எழுதியிருக்கிறேன் என்றாலோ 50 சிறுகதைகளுக்குமேல் எழுதியிருக்கிறேன் என்றாலோ என் வீட்டில் உள்ள யாருக்கும் ஒரு பொருட்டல்ல.
ஒரு பத்திரிகையை விடாப்பிடியாக 21 ஆண்டுகள் நடத்தி வருகிறேன் என்றாலும் ஒரு அலட்சியம். டிவியிலும் இத்தனை சேனல்கள் இருந்தாலும் இலக்கியவாதிகளுக்கு பெரிய முக்கியத்துவம் கிடையாது. சினிமா நடிகர்கள் நடிகைகள்தான் அவர்களுக்கும் முக்கியம். நான் டிவி சேனல் அதிபதியாக இருந்தால் கவிதை வாசிப்பதை தினமும் வைத்திருப்பேன். குறிப்பிட்ட நேரத்தில் தமிழ் நாட்டில் உள்ள எல்லா கவிஞர்களும் தினம் தினம் கவிதை வாசிக்க வேண்டும் என்று ஏற்பாடு செய்திருப்பேன். ஆனால் டிவியிலோ சீரியல்தான் ஓடும். விதம் விதமான மனதைக் கெடுக்கும்படி இந்த சீரியலை எல்லோரும் விழுந்து விழுந்து பார்க்கிறார்கள். சீரியலைப் போல பல நிகழ்ச்சிகள். உலகம் முழுக்க பல பாதகமான நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்தவண்ணம் உள்ளன. இந்தப் பாதகமான நிகழ்ச்சிகளிலிருந்து ஒவ்வொரு நாளும் நாம் தப்பித்துக்கொண்டு வர வேண்டும்.
சில ஆண்டுகளுக்கு முன் இலக்கிய நண்பர்கள் டிவியில் வர ஆரம்பித்தபோது, அவர்கள் அவ்வப்போது எனக்கு செய்திகள் அனுப்பிக்கொண்டிருப்பார்கள். சிலர் sms அனுப்புவார்கள். உண்மையில் அந்த நேரத்தில் அவர்களை டிவியில் பார்க்கமுடியாமல் அவசரமாக அலுவலகத்தை நோக்கி ஓடிக்கொண்டிருப்பேன். அப்படியும் சிலவற்றைப் பார்ப்பேன். பின் எனக்கும் இதுமாதிரி சந்தர்ப்பம் வராதா என்று என் மனதில் தோன்றாமலில்லை. ஆனால் அதுமாதிரியான சந்தர்ப்பம் எளிதில் எனக்குக் கிட்டவே இல்லை. என் இலக்கிய நண்பர் ஒருவர் ஒவ்வொரு இலக்கிய நண்பராகக் கூப்பிட்டு ஒரு நிகழ்ச்சியை தினசரி காலை நேரத்தில் நடத்திக்கொண்டு வந்தார். போனால் போகிறதென்று எனக்கும் ஒரு சந்தர்ப்பத்தை அந்த இலக்கிய நண்பர் ஏற்படுத்திக்கொடுத்தார். எனக்கோ பரபரப்பு அதிகமாகிவிட்டது. அந்த டிவி ஸ்டேஷனுக்கு குறிப்பிட்ட நேரத்தில் போய்ச் சேர்ந்தேன். நிகழ்ச்சியைத் தயாரிப்பவர்கள் மெதுவாக வந்தார்கள். என்னைப் பேட்டி காண்பவர்கள் அட்டகாசமாக மேக்கப் செய்து வந்தார்கள். யாருக்கும் நான் எதுமாதிரி எழுத்தாளன் என்பது தெரியவில்லை. என்னைப் பார்த்தாலே நான் எழுதுபவனா என்ற சந்தேகம் கூட வந்திருக்கும். அவர்கள் என்னுடன் பேச ஆரம்பித்த பிறகு அந்த சந்தேகம் உறுதி ஆகியிருக்கும். அவர்கள் என்னிடம் நான் என்ன எழுதியிருக்கிறேன் என்று கேட்டுக்கொண்டார்கள்.
நான் எல்லாவற்றையும் சொன்னேன். அதை வைத்துக்கொண்டு அதிகம் மேக்கப் இல்லாமல் இருந்த என்னிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டார்கள். நானோ டிவியில் தோன்ற போகிறேன் என்ற பதட்டத்துடன் காத்திருந்தேன். ஒரே இடத்தைப் பார்க்கச் சொன்னார்கள். சிறிது குரலை உயர்த்திப் பேசச் சொன்னார்கள். தலையை அப்படியும் இப்படியும் அசைக்க வேண்டாம் என்றார்கள். கைகள் மூலம் சைகை செய்ய சொன்னார்கள். என் கால்களில் மாட்டியிருந்த செருப்பு தெரியாமல் பார்த்துக்கொண்டார்கள். அவர்கள் சொல்ல சொல்ல எதுவும் எனக்கு சரியாக வரவில்லை. ஆனால் என்னைக் கேள்வி கேட்டவர்கள் அட்டகாசமாக இருந்தார்கள். ஒரு பெண்மணியும் பார்க்க நன்றாக இருந்தார். அவர்கள் சிரித்து சிரித்து கேள்விகள் கேட்டார்கள். ஒவ்வொரு முறை அவர்கள் கேள்வி கேட்கும்போது படம் எடுக்கும் இடத்தை நோக்கி ஒரு சிரிப்பு சிரிப்பார்கள். படம் பிடிக்க வந்திருப்பவர் வேறு மொழியைச் சேர்ந்தவர். அவர் அவர்களுக்கு ஏதோ ஒரு சிக்னல் கொடுப்பார். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் போராட்டத்திற்குப் பிறகு அதிலிருந்து தப்பித்தேன். பின் எப்படி வந்திருக்கிறது என்று கேட்டேன். நன்றாக வந்திருக்கிறது என்றார்கள். எப்போது டிவியில் வரும் என்று கேட்டேன். ஏதோ ஒரு தேதியை நேரத்தைச் சொன்னார்கள். குறித்துக்கொண்டேன்.
பின் வீட்டிற்கு வந்து எல்லோரிடமும் சொன்னேன். அலுவலக, இலக்கிய நண்பர்களிடம் சொன்னேன். ஒருவரை ஏற்பாடு செய்து டிவியில் வருவதை சீடியில் பதிவு செய்ய சொன்னேன். அதற்கு இவ்வளவு செலவாகும் என்றார்கள். சரி என்றேன்.
எனக்கு சிபிச்செல்வன் என்ற இலக்கிய நண்பர் உண்டு. அவருடன் காலை நேரத்தில் நான் வாக் செல்வேன்.
''என்ன ஒரு மைசூர் பாக் பாக்ஸ் கொடுத்தார்களா?'' என்று அவர் கேட்டார்.
''ஆமாம்,'' என்றேன். பின் அவரைப் பார்த்து, ''நீங்களும் அடுத்த முறை அந்த நிகழ்ச்சிக்கு வருவீர்கள்,'' என்றேன்.
''எங்களைப் பற்றியெல்லாம் சொன்னீர்களா?'' ''சொன்னேன். சொன்னேன். உங்கள் பெயரைப்பற்றி குறிப்பிட்டிருக்கிறேன். ''எனக்கே ஆச்சரியம் எப்படி தைரியத்தோடு இவ்வளவும் சொன்னேன் என்று...முதலில் ஒரு மாதிரி இருந்தது. அப்புறம் ஒன்றுமில்லை..'' என்றேன்.
என் நிகழ்ச்சியைப் பலர் பார்த்தார்கள்.
குறிப்பாக என் உறவினர்களைச் சொல்ல வேண்டும். நான் டிவியில் வருவதால் அவர்கள் மத்தியில்தான் நான் முக்கியமான ஆளாக இருந்தேன். நான் பேசியதைக் கேட்டு அவர்கள் போன் செய்து மகிழ்ச்சியைத் தெரிவித்தார்கள். நான் கவிதை கதை எழுதி என்ன பிரயோசனம்? யாரும் படிக்கக்கூட மாட்டார்கள். ஆனால் நான் டிவியில் பேசியதைப் பார்த்து என் குடும்பத்தினர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள். ஒரு சில தினங்களுக்கு அவர்கள் மதிப்பில் உயர்ந்து இருந்தேன். அலுவலகத்திலும் இவர் டிவியில் வந்தார் என்று எல்லோரும் சொல்ல ஆரம்பித்தார்கள். சிடியில் வந்தபிறகு நான் அடிக்கடி போட்டு போட்டு பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரு தப்பை கண்டு பிடித்தேன்.
நான் தைரியமாகத்தான் அவர்கள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதில் சொன்னேன். ஆனால் 'வந்து..' என்ற சொல்லை அடிக்கடி உபயோகித்திருந்தேன். கேட்கும்போதெல்லாம் இந்த 'வந்து' ரொம்ப தொந்தரவு செய்வதுபோல் தோன்றியது. எனக்கு டிவியில் வருவதைப் பற்றி மறந்தும் போய்விட்டது.
இந்த ஆண்டு மார்ச்சு மாதம் ஸ்டெல்லாபுரூஸ் தற்கொலை செய்து கொண்ட நிகழ்ச்சி பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த சமயத்தில் அவருடைய நண்பர் என்ற முறையில் என்னை சன் டிவியில் பேட்டி கண்டார்கள். சந்தோஷமில்லாமல் அவர் தற்கொலையை துக்கத்துடன் சொல்லும்படி ஆயிற்று. டிவியில் வருவதை யாரிடமும் நான் குறிப்பிடவில்லை. சந்தோஷமில்லாத நிகழ்ச்சி அது. ஆனால் பலர் என்னை டிவியில் பார்த்ததாகச் சொன்னார்கள்.
மார்ச்சு, ஏப்ரல் என்று அந்த நிகழ்ச்சியும் பறந்து போய்விட்டது. ஸ்டெல்லாபுரூஸ் என் நினைவிலேயே இருந்து கொண்டிருந்தார்.
நான் எதிர்பார்க்காத எதிர்பாரத மனிதரிடமிருந்து ஏற்பட்ட மரணம் இது. எனக்கு அவர் மீது கோபம் கூட ஏற்பட்டது. கோழை தற்கொலை செய்துகொண்டார் என்று சொல்லிக் கொண்டிருந்தேன். ஆனால் என் இன்னொரு இலக்கிய பெண்மணி, 'அவர் தற்கொலை செய்து கொண்டதுபோல ஒரு தைரியம் யாருக்கும் வராது என்றார். அவர் கோழை இல்லை. அவர் தெரிந்துதான் தன் முடிவை ஏற்றுக்கொண்டிருக்கிறார். அதற்குப் பயங்கர துணிச்சல் வேண்டும்,' என்றார் அந்த இலக்கிய பெண்மணி.
எனக்கு அவர் சொன்னதைக் கேட்டவுடன் ஆச்சரியமாக இருந்தது. ஏன்எனில் புத்திக் கூர்மையுள்ள இலக்கிய பெண்மணி அவர். ஆனாலும் ஸ்டெல்லாபுரூஸ் தற்கொலையை என்னால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. அவர் நடந்துபோகும் போது விபத்தில் இறந்தாலும் எதாவது நியாயம் இருக்குமென்று நினைத்தேன்.
இதெல்லாம் நடந்து முடிந்தபின், இந்த டிசம்பர் மாதம்தான் எனக்கு விஜய் டிவியிலிருந்து நிகழ்ச்சி தயாரிப்பாளர் சிலர் பேசினார்கள். 'ஸ்டெல்லாபுரூஸ் பற்றி நீங்கள் சொல்ல வேண்டும்' என்றார்கள். என் பெயரை வேறு ஒரு இலக்கிய நண்பர் பிரபல பத்திரிகையில் இருப்பவர் சிபாரிசு செய்திருந்தார். அந்த நிகழ்ச்சி என்னவென்று தெரியாமல் சரி என்று சொல்லிவிட்டேன். எப்படியும் என்னை பேட்டி எடுப்பது என்ற தீர்மானத்தில் அவர்கள் இருந்தார்கள். வீடு தேடி மூன்று பேர்கள் வந்தார்கள். அதிக மேக்கப் இல்லாமல் என்னை ஒரு கோணத்தில் பார்த்தபடியே அமர்ந்து இருக்கச் சொன்னார்கள். பிறகு ஸ்டெல்லாபுரூஸ் பற்றி பேசுங்கள் என்றார்கள். ஏன் அவர் தற்கொலை செய்துகொண்டார்கள் என்று சொல்ல சொன்னார்கள். நானும் ஸ்டெல்லாபுரூஸ் பற்றி பேச ஆரம்பித்தேன். திரும்பத் திரும்ப நான் சொன்னதையே சொல்வதுபோல் பட்டது. ஒரு இடத்தில் ருத்திரன் என்று உச்சரித்தேன். பின் ஸ்டெல்லாபுரூஸ் போட்டோ எதாவது இருக்குமா என்று கேட்டார்கள்.
'அவர் தற்கொலை செய்துகொள்ளுமுன் எடுத்த போட்டோ உள்ளது,' என்று கம்ப்யூட்டரில் காட்டினேன். நான் சமீபத்தில் டிஜிட்டல் காமெரா ஒன்று வாங்கியிருந்தேன். அதில் பலரை போட்டோ எடுத்துக்கொண்டிருந்தேன். ஸ்டெல்லாபுரூஸையும் ஒரு சந்தர்ப்பத்தில் படம் பிடித்திருந்தேன். என்னைப் பேட்டி எடுத்தவர்கள்,
'திங்கள் இரவு பத்துமணிக்குப் பாருங்கள்,' என்றார்கள். அதுவும் நான் கேட்டபிறகுதான் அவர்கள் சொன்னார்கள். உடனே எல்லோருக்கும் இந்தச் செய்தியைத் தெரியப்படுத்தினேன். அலுவலகத்தில் பலருக்குச் சொன்னேன். எனக்கு உள்ளுக்குள் ஒரு வருத்தம் இருந்தது. ஸ்டெல்லாபுரூஸ் தற்கொலையைப் பற்றி ஏன் சொல்ல வேண்டும் என்று. மரணத்தை அவர் ஏற்றுக்கொண்ட விதம் சரியில்லை. ஆனால் அவர் மரணத்திற்கு மரியாதைத் தர வேண்டுமென்று நினைத்தேன். பொதுவாக எந்த நிகழ்ச்சியையும் நான் விரும்பி டிவியில் பார்க்க மாட்டேன். டிவியில்லாமல் என்னால் இருக்க முடியும். ஆனால் புத்தகமும், கம்ப்யூட்டரும் இல்லாமல் இருக்க முடியாது. எதாவது எழுதுவது என்று நினைத்தால் கம்ப்யூட்டரில்தான் என்னால் முடியும். திங்கள் அன்று பத்து மணிக்கு விஜய் டிவி முன் அமர்ந்தேன். 'நடந்தது என்ன?' என்ற அந்த நிகழ்ச்சியைப் பார்த்தபோது, சகிக்க முடியவில்லை. மனைவி இறந்துபோனதைத் தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்ட கணவனைப் பற்றி, கணவன் இறந்துபோன துக்கம் தாங்க முடியாத மனைவியின் தற்கொலை..இதை விவரிக்க பலருடைய பேட்டி. ஸ்டெல்லாபுரூஸ் பேர் வந்தவுடன் நான் வருகிறேனா என்று பார்த்தேன். நான் வரவே இல்லை. என்னைப் பேட்டி எடுத்துச் சென்றவர் என்னை கட் செய்து விட்டார். ஆனால் நான் குறிப்பிட்ட ருத்ரன் வந்திருந்தார். அதே நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக சாருநிவேதிதா வந்திருந்தார். எனக்கோ ஒரு மாதிரியாக இருந்தது. அடுத்த நாள் அலுவலகத்தில் சில நண்பர்கள் கிண்டல் செய்தார்கள். என் உறவினர்களெல்லாம் இரவு பத்துமணிக்குமேல் விழித்திருந்து பார்த்து ஏமாந்து விட்டார்கள். விஜய் டிவிகாரர்களுக்கு என்னிடம் நான் வரவில்லை என்பதைச் சொல்ல வேண்டுமென்ற நாகரீகம் கூட இல்லை. ஸ்டெல்லாபுரூஸுற்கே நான் அவரைப் பற்றி பேசுவது பிடிக்கவில்லை என்று நினைத்தேன். அதனால்தான் வர விடாமல் செய்து விட்டார். எனக்கோ நிம்மதியாக இருந்தது. அந்த நிகழ்ச்சியில் நான் வராமல் இருந்தது ரொம்ப நல்லது என்று நினைத்துக்கொண்டேன். ஸ்டெல்லாபுரூஸ் என்னைக் காப்பாற்றி விட்டார்.
No comments:
Post a Comment