25.2.09

இலக்கியவட்டமும் காஞ்சிபுரம் வெ நாராயணனும்

ந்தப் புத்தகக் காட்சியின்போது வெ நாராயணன் மரணம் அடைந்த விஷயத்தை அவருடைய நண்பர்கள் தெரிவித்தார்கள். வருத்தமாக இருந்தது கேட்பதற்கு. நாராயணன் வட நாட்டிற்கு பயணம் செய்துவிட்டு சென்னை திரும்பும்போது Heart Attack வந்து இறந்து போனதாக நண்பர்கள் சொன்னார்கள்..நாராயணன் காஞ்சிபுரத்தில் இலக்கிய வட்டம் என்ற பெயரில் நூறுக்கும் மேலாகக் கூட்டம் நடத்தியவர். கொஞ்சங்கூட அலுக்காமல் மாதம் ஒரு முறை பள்ளிக்கூடம் ஒன்றில் கூட்டம் நடத்துவார். கூட்டத்தில் பங்கு பெறுபவர்களுக்கு மதியம் சாப்பாடு ஏற்பாடு செய்வார். காஞ்சிபுரம் தாண்டி வருபவர்களுக்கு போக வர செலவிற்குப் பணம் தருவார்.


நான் மூன்று முறை அவர் நடத்திய கூட்டத்தில் கலந்துகொண்டிருக்கிறேன். அவர் இலக்கியவட்டம் நடத்திக் கொண்டிருந்த சமயத்தில், நானும் மாதம் ஒருமுறை விருட்சம் இலக்கிய சந்திப்பு நிகழ்த்திக் கொண்டிருந்தேன். முதல் முறையாக அவர் கூட்டத்தில் என்னைப் பேச அழைத்தபோது எனக்குத் திகைப்பாக இருந்தது. இலக்கியக் கூட்டம் என்ற பெயரில் என்ன பேசுவது என்பது புரியாத புதிராக இருந்தது. எந்த விஷயத்தை எடுத்துக்கொண்டு பேசினாலும் என்னால் 5 நிமிடங்களுக்கு மேல் பேச முடியுமா என்பது சந்தேகமாக இருந்தது. மேலும் நான் எழுதிக்கொண்டு பேசினாலும் 5 நிமிடங்களுக்குமேல் உரையாற்ற முடியுமா? அதனால் நாராயணன் என்னைக் கூப்பிட்டபோது நான் மட்டும் வரவில்லை என்று கூறி என்னுடன் ரா ஸ்ரீனிவாஸன், கோபிகிருஷ்ணனையும் கூட அழைத்துப் போனேன். இலக்கியக்கூட்டங்களில் கலந்துகொள்வதில் பெரிதும் விருப்பமில்லாதவர் ஸ்ரீனிவாஸன், கோபிகிருஷ்ணன் என்னைப் போல் பேச வேண்டுமென்று ஆசைப் படுபவர். ஒருமுறை அவரை விருட்சம் சார்பில் பேச அழைத்திருந்தேன். அவர் அலுவலகம் போகாமல் ஒருநாள் முழுவதும் பேசுவதற்கு தன்னை தயார் படுத்திக்கொண்டிருந்தார். கூட்டத்தில் பேசி முடித்தவுடன் அவர் உடல் வேர்வையில் தொப்பலாக நனைந்து போயிருந்தது.


நாங்கள் மூவரும் காஞ்சிபுரம் சென்றோம். கூட்டத்தில் நான் பேசத் தயங்கும்போது கோபிகிருஷ்ணன் பேசுவார். அவர் தயங்கும்போது ஸ்ரீனிவாஸன் பேசுவார். நாங்கள் மூவரும் அன்று சிறப்பாகவே உரையாற்றினோம். ஏற்பாடு செய்த நாராயணன் எங்களை நன்றாக கவனித்து அனுப்பினார். நாராயணனுக்கு அபார ஞாபக சக்தி உண்டு. யார் கூட்டத்தில் பேசினாலும் அதை அப்படி திரும்பவும் சொல்லுவார்.

இரண்டாவது கூட்டம். ஞானக்கூத்தனின் கவிதைகளுக்காக நடந்தது. முக்கிய விருந்தாளி ஞானக்கூத்தன். பதிப்பாளர் என்ற முறையில் நானும் கூட சென்றேன். ஞானக்கூத்தன் பேசுவதில் வல்லவர். அவர் ஒருவரே கூட்டம் முடியும் வரை அலுக்காமல் திறமையாகப் பேசக் கூடியவர்.அன்று மதியம் வரை ஞானக்கூத்தன் பேசிக்கொண்டிருந்தார். பலர் கேட்ட வினாக்களுக்கு பதிலும் அளித்துக்கொண்டிருந்தார். வெ நாராயணனுக்கு நகைச்சுவை உணர்வு உண்டு. கூட்டம் பற்றி ஒரு sum up கொடுப்பார். அதைப் பெரும்பாலும் நகைச்சுவை உணர்வுடன் வெளிப்படுத்துவார். வெ நாராயணன் அனுப்பிய பல அழைப்பிதழ்கள் என் பார்வைக்கு இப்போது எதுவும் கிடைக்கவில்லை. சிலசமயம் அந்த நகைச்சுவையை ரசிக்க முடியும். எந்த லாபமுமின்றி இலக்கியக் கூட்டம் நடத்த முடியுமென்ற நாராயணனின் வெறி எனக்கு ஆச்சரியமாக இருக்கும். நானும் அப்படித்தான் என்றாலும் நாராயணனை என்னால் தோற்கடிக்க முடியவில்லை.

மூன்றாவது கூட்டத்திற்கு நான் என் அலுவலக நண்பரான ராஜன் பாபுவுடன் சென்றேன். காலச்சுவடு பற்றிய கூட்டம். அந்தக் கூட்டம் பரபரப்பான கூட்டமாக மாறிவிட்டிருந்தது. அடிதடி சண்டையே வந்துவிடும் போலிருந்தது. அக் கூட்டத்திற்கு சுந்தர ராமசாமியும், கண்ணனும் வந்திருந்தார்கள். நவீன விருட்சம் இதழ் ஒன்றை சுந்தர ராமசாமியிடம் கொடுத்தேன். இதழைப் பார்த்த சுந்தர ராமசாமி அதில் விஸ்வம் வரைந்த அசோகமித்திரன் படம் சரியில்லை என்று குறிப்பிட்டார். காலச்சுவடு இதழைப் பாராட்டும் கூட்டமாக மாறாமல் அதை இகழந்து பேசும் கூட்டமாக அது மாறிவிட்டது. மேலும் கூட்டம் குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிவுக்கு வராமல் இருந்தது. நாராயணனுக்கே அக் கூட்டம் போகும் விதம் பிடிக்காமல் இருந்திருக்குமோ என்று தோன்றியது. எனக்கு அவசரமாகக் கிளம்ப வேண்டும்போல் தோன்றியது. ராஜன்பாபுவும் அவசரப்பட்டார். காலச்சுவடு குறித்து நான் எழுதிய கட்டுரையை அவசரம் அவசரமாகப் படித்தேன். பின் நான் நாராயணனிடமிருந்து விடைபெற்று சென்றேன். வழக்கம்போல் நாராயணன் கூட்டம் முடியும்போது விருந்தாளிகளுக்கு போய்வருவதற்கான செலவை கொடுக்கமாலிருக்க மாட்டார். அந்த முறை அவர் கொடுக்கவில்லை. நல்லகாலம் விருட்சத்திற்கு அதுமாதிரியான கூட்டம் ஒன்றும் நடத்தப்படவில்லை.

சென்னை வரும்போது ஏன் கூட்டத்திற்குப் போனோம் என்று தோன்றியது. அன்று காலைதான் எழுத்தாளர் காசியபன் மனைவி இறந்து விட்டார். தகவல் சரியாகத் தெரியவில்லையால், நான் போய்ப் பார்க்கமுடியாமல் போய்விட்டது. நான் எப்போதுமே என் அனுபவத்தைத்தான் பெரும்பாலும் கதையாக எழுதுவேன். கூட்டம் போய் வந்த அனுபவத்தை சுண்டுவிரல் என்ற பெயரில் ஒரு கதை எழுதினேன். அதைப் படித்த வே நாராயணன் ஒரு கடிதம் எழுதியிருந்தார். 'உங்களுக்கு வழிசெலவிற்குப் பணம் கொடுத்ததாக ஞாபகம்' என்று எழுதியிருந்தார். நான் இல்லை என்று குறிப்பிட்டிருந்தேன். என் கடிதம் பார்த்தவுடன் உடனே பணம் அனுப்பிவிட்டார். இதை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. பொதுவாக இலக்கியக் கூட்டம் நம் control ல் வராது. சண்டை வருவதற்கான வாய்ப்பும் அதிகம். அதனால்தான் முதன் முதலில் நான் இலக்கியக் கூட்டம் ஆரம்பிக்கப் போவதாக அறிவித்தவுடன், பிரமிள், it is dangerous என்று கடிதம் எழுதியிருந்தார். எனக்கு அது முதலில் புரியவில்லை. ஆனால் சண்டை நடந்தாலும் இலக்கியக் கூட்டம் மூலமாக எழுத்தாளர்களைப் பார்க்க முடிகிறது. நானும் விருட்சம் சார்பில் 3, 4 ஆண்டுகள் கூட்டம் நடத்தி நிறுத்திவிட்டேன். வெ நாராயணனும் தொடர முடியாமல் நிறுத்திவிட்டார். ஒவ்வொரு முறை நான் காஞ்சிபுரம் போனால் வெ நாராயணனைப் பார்க்காமல் இருக்க மாட்டேன். அவர் வீட்டிற்கெல்லாம் சென்றிருக்கிறேன். அவருடைய ஆர்வத்தை என்னால் மறக்க முடியாது. வெ நாராயணனுக்குப் பிறகு திரும்பவும் இலக்கிய வட்டத்தைத் துவங்கப் போவதாக அவருடைய நண்பர்கள் குறிப்பிட்டார்கள். புத்தகக் காட்சியின் போது அவருடைய நண்பர்கள் வெ நாராயணனிடமிருந்து பலர் புத்தகங்களை (இலக்கிய கூட்டம் நடக்குமிடத்தில் பல பதிப்பக நண்பர்களிடமிருந்து புத்தகங்களை வாங்கி விற்பனைக்கு வைக்கும் பழக்கம் அவருக்குண்டு) கடனுக்கு வாங்கிக்கொண்டு பணம் கொடுக்காமல் போனதைப் பற்றி குறிப்பிட்டார்கள். கேட்க சற்று வருத்தமாக இருந்தது.

No comments:

Post a Comment