இந்த ஞாயிற்றுக்கிழமை (15.03.2009) எங்கே போவது என்று யோசித்தேன். அய்யப்பமாதவனின் நிசி அகவல் விமர்சனக் கூட்டத்திற்குச் செல்லலாம் என்று தோன்றியது. மாலை 5.30க்குக் கூட்டம். ஆனால் இலக்கியக் கூட்டம் குறித்த நேரத்தில் தொடங்குவது இல்லை. அதுதான் வழக்கம். அதனால் நான் 5.30 மணிக்கு அங்கு செல்லவில்லை. தனியாகப் போகப் பிடிக்கவில்லை. கூட ஸ்ரீனிவாஸனைக் கூப்பிட்டேன். நண்பர் ஸ்ரீனிவாஸன் வர ஒப்புக்கொண்டார். பொதுவாக என்னால் ஒரு வகுப்பில், இலக்கியக் கூட்டத்தில் தொடர்ந்து பேசுவதைக் கேட்டுக்கொண்டே உட்கார சிரமமாக உள்ளது. அலுமினிய கிளப், போட் கிளப் அருகில் என்ற இடம் என் மனதை மிகவும் கவர்ந்தது. முன்பே ஒருமுறை அலுவலக நண்பர் ஒருவரின் குழந்தையின் பிறந்த தினக் கொண்டாட்டத்திற்கு அங்கு சென்றிருக்கிறேன்.
அய்யப்பமாதவனின் கூட்டத்திற்கு நானும் ஸ்ரீனிவாஸனும் சற்று தாமதமாக வந்து சேர்ந்தோம். ஞானக்கூத்தன் பேசிக்கொண்டிருந்தார். அவருடைய பேச்சை முடிக்கும் தறுவாயில்தான் நுழைந்தோம். அவர் பேசி முடித்தவுடன் ஒவ்வொருவராகப் பேச ஆரம்பித்தார்கள். நேசன் பேச ஆரம்பித்தார். மிகவும் நிதானமாக ஒவ்வொரு வரியாக யோசித்து யோசித்துப் பேசுவதாகத் தோன்றியது. அய்யப்பமாதவன் தன்னடக்கமாக அமர்ந்திருந்தார். கூட்டத்தைப் பார்க்கும்போது ஜாலியாக இருந்தது. அய்யப்ப மாதவன் வயதையொத்த நண்பர்கள் பலர் இருந்தார்கள். அதில் பலர் கவிதைகள் எழுதுவார்கள். அக்கூட்டத்தில் ஒருவரை ஒருவர் கட்டி முத்தமிட்டுக்கொண்டிருந்தார்கள். ''என்ன நேசன், இதுமாதிரியெல்லாம் நடக்கிறதே?''என்று கேட்டேன். நேசன் சிரித்துக்கொண்டே சொன்னார். ''இன்னும் ஒருவர் வந்தால் உதட்டிலே முத்தம் கொடுப்பார்,'' என்றார்.
யவனிகா ஸ்ரீராம் அய்யப்பமாதவனைப் பற்றி ஒருமையில் நட்புடன் பேசினார். எல்லோரும் ரசித்தோம். நிசி அகவல் என்ற தலைப்பு வசீகரமாக இருந்தது. புத்தக விலை 60 ரூபாய் என்று போட்டிருந்தது. நல்ல தாளில் பிரமாதமான அட்டைத் தாளில் புத்தகம் அச்சிடப்பட்டிருந்தது. விமர்சனக் கூட்டத்தில் உள்ள பிரச்சினை யாரும் புத்தகம் படிக்காமல் வந்து உட்கார்ந்திருப்பார்கள். இக் கூட்டம் ஒவ்வொன்றும் அரசியல் கட்சி கூட்டம் போடுவதுபோல் தோன்றுகிறது. ஒவ்வொருக்கும் ஒரு கூட்டம் சேர்ந்துவிடும். அய்யப்பன் மாதவனுக்கு கிட்டத்தட்ட 50 பேர்களாவது வந்திருப்பார்கள். இது வரவேற்க வேண்டிய கூட்டமாக எனக்குத் தோன்றுகிறது.
நான் பல ஆண்டுகளுக்கு முன் விருட்சம் சார்பில் சுந்தர ராமசாமியை வைத்து ஒரு கூட்டம் நடத்தினேன். காலச்சுவடிலிருந்து யாரும் வரவில்லை. ஏன் வரவில்லை என்று யோசித்தேன்? நான் விருட்சம். கூட்டம் நடத்துகிறேன். அதனால் காலச்சுவடிலிருந்து யாரும் வந்திருக்க மாட்டார்கள் என்று தோன்றியது. சுந்தர ராமசாமியை வைத்து கூட்டம் நடத்தினாலும் அப்படித்தான். அதாவது கூட்டம் போடுவது ஒரு compartment கூட்டம் மாதிரி ஆகிவிட்டது. காலச்சுவடுன்னு ஒரு compartment, உயிர்மைன்னு ஒரு compartment, ஆழின்னு ஒரு compartment..... பொதுவா எழுதறவர்களுக்கான கூட்டமாக மாற்ற வேண்டும்.
அய்யப்பமாதவன் கூட்டத்தில் அதிகம் பேர்கள் பேசிக்கொண்டே போய்க்கொண்டிருந்ததால், என்னால் அதிக நேரம் அங்கு இருக்க முடியவில்லை. கூட்டத்திற்கு வந்திருந்தவர்கள் ஜாலியாக இருந்தார்கள். ஆனால் கூட்டத்தில் பேசியவர்கள் அந்த மூடை கொண்டு வர முடியவில்லை. என் நண்பர் ஸ்ரீனிவாஸனும் இந்தக் கருத்தை வெளிப்படுத்தினார். ஒருவர் அல்லது இருவர் பேச வேண்டும். அய்யப்பமாதவன் அவருடைய கவிதைகள் சிலவற்றை வாசிக்க வேண்டும். வாசிக்க அய்யப்பமாதவன் கவிதைகள் சில வந்தவர்களுக்குக் கிடைக்க வேண்டும். கூட்டம் சீக்கிரம் முடிந்துவிட வேண்டும்.
No comments:
Post a Comment