தமிழில் மூத்த கவிஞர் வைதீஸ்வரன். கவிதைகள் மட்டுமல்லாமல், ஓவியத்திலும் நாட்டமுடையவர். சமீபத்தில் அவர் வரைந்த ஓவியங்கள் சிலவற்றை நவீன விருட்சம் இதழுக்காகப் பெற வேண்டுமென்று நினைத்தேன். அப்படி நினைத்தபடி என்னால் போக முடியவில்லை. காரணம் 7.30 மணியிலிருந்து மாலை 7.30 மணிவரை உள்ள அலுவலக நிர்ப்பந்தம். மேலும் நான் அலுவலகத்திலிருந்து வீட்டிற்குச் சென்றுவிட்டால் வேறு எங்கும் என்னால் செல்ல முடியவில்லை.
அதனால் ஒருநாள் அலுவலகத்திலிருந்து அவர் வீட்டிற்குச் சென்றேன். அவர் வீட்டிலுள்ள எல்லோரையும் எனக்குத் தெரியும். குறிப்பாக வைதீஸ்வரனின் தாயாரை. அவருக்கு வயது 90க்கு மேல் இருக்கும். வைதீஸ்வரனும் நானும் சந்திக்கும்போது (அதுவே ரொம்ப ரொம்ப அதிசயமாக நடக்கக் கூடியது) அவர் வீட்டு வராந்தாவில் அமர்ந்து சில நிமிடங்கள் அவருடைய படைப்புகளை வாங்கிக்கொண்டு சென்று விடுவேன். அவர்கள் வீட்டிலுள்ளவர்களைப் பொதுவாகப் பார்க்க மாட்டேன். இந்த முறை வைதீஸ்வரனுக்குப் போன் செய்தபோது, அம்மா பாத்ரூம் போகும்போது கீழே விழுந்துவிட்டார் என்று குறிப்பிட்டார். எனக்கு கேட்க என்னவோ போல் இருந்தது. வயதானவர்கள் கீழே விழும்போது உயிருக்கு ஆபத்து நெருங்கி விட்டதாக அர்த்தம். கீழே விழுந்தாலும் அம்மாவைப் பார்த்துக் கொள்வது என்பது அவர்கள் வீட்டில் சிரமம். வைதீஸ்வரனுக்கு 70 + வயது இருக்கும். அவர் மனைவிக்கு 65 + வயதிருக்கும். மேலும் அவர் மனைவிக்கு இயல்பாக நடமாட முடியாத துன்பம்.
வைதீஸ்வரனைப் பார்க்க வந்தபோது, அவர் அம்மாவைப் பார்க்க வேண்டுமென்று தோன்றியது. அவரும் அம்மா இருக்குமிடத்திற்கு அழைத்துப் போனார். அவர் அம்மா நாற்காலி ஒன்றில் அமர்ந்துகொண்டு, கண்ணாடி மாட்டிக்கொண்டு ஏதோ பத்திரிகையைப் பார்த்துக்கொண்ட மாதிரி தெரிந்தது. ''என்னைத் தெரியறதா?'' என்று கேட்டேன். ''விஸ்வநாதனா?'' என்று கேட்டார். ''இல்லை..இல்லை..மெளலி (புனைபெயர் அழகியசிங்கர்),'' என்றேன். அவர் தாயாரைப் பார்த்து பல ஆண்டுகளுக்குமேல் இருக்கும்.''ஏன் இளைத்துப் போயிட்டே?'' என்று கேட்டபோதே என்னை அடையாளம் கொண்டுவிட்டார் என்று தோன்றியது. விஸ்வநாதன் என்ற டாக்டர் ஒருவர் என்னை மாதிரிதான் இருப்பார் என்று வைதீஸ்வரன் கூறினார். அன்று சற்று வித்தியாசமான வைதீஸ்வரனின் ஓவியங்களை வாங்கிக்கொண்டு வந்தேன். இது நடந்து 2 நாள் கழித்து வைதீஸ்வரனிடமிருந்து போன் வந்தது. அவர் தாயார் இறந்து விட்டாரென்று. கேட்க வருத்தமாக இருந்தது. 90 வயதில் ஒருவர் உயிரோடு இருப்பதே சிரமம். மரணம் விடுதலையாகத்தான் இருக்கும். இருந்தாலும் வைதீஸ்வரனைத் திரும்பவும் பார்க்கும்போது அவர் துக்கமாகத்தான் தென்பட்டார். அவருடைய தாயாரை இழந்து நிற்கும் அவருக்கும், அவருடைய குடும்பத்தாருக்கும் விருட்சம் சார்பில் இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இத் தருணத்தில் விருட்சத்திற்கு சமீபத்தில் அவர் அனுப்பிய கவிதைகள் இரண்டை சமர்ப்பிக்கிறேன்.
குழுக்கள்
இரண்டையுமே
ஒன்றுபோல நேசித்து வந்தேன்
ஏதோ.....
ஒரு மனிதனுக்கு அது தான்
உயர்ந்த பக்குவம் போல
இரண்டுமே என்னை
ஏகமாகப் பாராட்டின
ஏதோ....
தங்களை மட்டும் நேசிப்பதாக
தவறாக எண்ணிக்கொண்டு
உண்மை ஒருநாள்
பொதுவாக விடிந்தவுடன்
இரண்டுமே என்னை
தூக்கி எறிந்தன தெருவில்
ஒற்றுமையாக!
ஏதோ.........
தங்கள் நேசத்துக்கு நான்
தகுதியற்றவன் என்பது போல
தெருமண் ஒட்டிய உடம்போடு
ஊன்றி எழுந்தபோது தான்
நியாயம் எனக்கும் உறைத்தது
ஊரோடு இனி ஒட்டி வாழவேண்டுமென்று
ஒரு ஆரம்பமாக
அருகில் நின்ற நண்பனை
அந்தரங்கமாக வெறுக்கத் தொடங்கினேன்
முகத்தின் புன்சிரிப்பு மாறாமல்.
தமிழ் பாடம்
வீரமாக தமிழ் நடத்த வேணுமென்று
வாத்தியார் விரும்பினார்
அந்த நாளில் அது பரவலமான மோகம்
நான் ஆறாம் வகுப்பென்று ஞாபகம்
வீரம் விளங்காத வயது
பயம் அறியாத கன்று
அரையடி உயர மேடையில் வாத்தியார்
சிகை பறக்கும் வேகமும்
நாற்றிசையும் தெறிக்கும் ஈர வசனமும்
கரகரத்த குரலும் விரிந்த நாசியும்.....
எனக்கு 'பக்கென்று' சிரிப்பு
பொத்துக்கொண்டது
அவர் அதட்டினாலும்அடங்கவில்லை
மறுகணம்
மேடைவீரம் தமிழ்ப்புயலாய்
கோலோடு குதித்தது என்மேல்
நய்யப் புடைத்தார் நாச்சிமுத்து வாத்தியார்
அடியோ பலம்
ஆனால் ஏனோ 'அய்யோ அய்யோ'வென்று கத்தவில்லை
பேச்சைப்போல் கோபம்
பாசாங்காக இல்லை போலும்!
ஒழுங்கைத்தான்
உதைத்து சொல்லியது
கவிஞர் வைத்தீஸ்வரன் தாயார் பற்றியும், அவரின் நிலை குறித்தும்,,,,
ReplyDeleteஎவ்வளவு வயதானாலும் அம்மா
உணர்வுக்குவியலாய் கிடக்கும் கவிமனம்
70 வருட நினைவுகள், நிகழ்வுகள், உடலும் உயிருமாய்.......
குழுக்கள் கவிதை மிகவும் பிடித்திருக்கிறது,பதிவிட்டமைக்கு மிக்க நன்றி