29.6.08
பெண்
கனவில் தெரிந்த பெண்ணொருவள்
நேரில் வரவில்லை
பலவாறு கற்பனையை
விரித்து விரித்துப் பார்த்தேன்
அவள் உருவம் மாறி மாறி தெரிந்ததே
தவிர எந்த மாதிரி அவள் என்று யூகிக்க முடியவில்லை
கனவில் தெரிந்தவள் மாதிரி
யாருமில்லை ஒருபோதும்
இன்னும் உற்றுப் பார்த்தேன்
மாறி மாறி அந்தப் பெண்போல
யாரும் தெரியவில்லை என்றாலும்
பெண்கள்
வேறு வேறு மாதிரியாகத்தான்
தெரிந்துகொண்டிருந்தார்கள்
22.6.08
தசாவதாரம்

டெக்னாலஜி என்ற விஷயம் எந்த அளவிற்கு முன்னேறி இருக்கிறது என்பதை இப்படத்தைப் பார்த்தால் நமக்குப் புரியும். பல ஆண்டுகளுக்கு முன்னால் பார்த்த நவராத்திரி என்ற படத்தில் எல்லா வேஷங்களிலும் சிவாஜிதான் தென்படுவார். ஆனால் தசாவதாரத்தில் கமல்ஹாசன் எந்தந்த வேடங்களில் வருகிறார் என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. படத்தின் ஆரம்ப காட்சிகளிலிருந்து பல காட்சிகள் பிரமிப்பை ஏற்படுத்துகின்றன. மற்றபடி கதை என்று பெரிதாக இல்லை. இடைவேளை வரை உள்ள விறுவிறுப்பு பின்னால் கொஞ்சம் குறைந்து விடுகிறது. கமல்ஹாசனே கதை, வசனம் என்றெல்லாம் எழுதி உள்ளார். சாதாரண ஜனங்களுக்குக் கதை புரிவது சந்தேகமாக உள்ளது. சென்னை உதயம் தியேட்டரில் இந்தப் படத்தைப் பார்த்தேன். முதல் சில காட்சிகளில் ஒலியே இல்லை. வழக்கம்போல ரசிகர்கள் ஊ...ஊ..ன்னு கத்தியபிறகு நிலமை சரியாயிற்று. தெலுங்கு போலீசாக வரும் கமல் பழைய நடிகர் பாலையா மாதிரி பேசுவதாகத் தோன்றியது. வித்தியாசமான நடிப்பு. சுனாமியைக் கொண்டுவருவதும், அமெரிக்க அதிபரை கதாபாத்திரமாக மாற்றுவதும் தமிழில் புதிய முயற்சி. ஆரம்ப காட்சியில் கமல்ஹாசன் பேசுவது சரியாகப் புரிபடவில்லை.
ஆனால் இப்படத்திற்கு ஆரம்ப முதல் இவ்வளவு எதிர்ப்பு ஏன்? வைணவத்திற்கும், சைவத்திற்கும் உள்ள எதிர்ப்பெல்லாம் இப்போது பெரிய விஷயமாக எனக்குத் தோன்றவில்லை. ஆனால் ஏன் இதை எதிர்க்க வேண்டும். என்ன இருந்தாலும் இது ஒருபடம் தானே என்று பார்க்க ஏன் முடியவில்லை.
தமிழ்சினிமாவைப் பொறுத்தவரை இரண்டு முக்கிய நடிகர்கள் தோன்றிகொண்டே இருப்பார்கள். ஒரு காலத்தில், சிவாஜி, எம்ஜியார். இப்போது கமல்ஹாசன், ரஜினிகாந்த். எனக்குத் தெரிந்து ஸ்ரீதர் இயக்கத்தில் சிவாஜியின் சிவந்தமண் என்ற படம். அப் படம் வெளிநாடுகளில் போய் எடுத்து அதிகமாக
ஸ்ரீதர் செலவு செய்தார். அந்தப் படத்தைவிட எம்ஜியார் நடித்த நம்நாடு என்ற படம் அதிகமாகப் பணம் சம்பாதித்துக் கொடுத்தது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். சுந்தரமூர்த்தி என்ற என் பள்ளிக்கூட நண்பன் ஒருவன், சிவாஜி ரசிகன். பள்ளி இறுதி ஆண்டுத் தேர்வின் போது வந்த சிவந்தமண் படத்தை 8 அல்லது 9 தடவைகள் பார்த்து, குறைந்த மதிப்பெண்கள் பெற்று பார்டரில் வெற்றி பெற்றான். அவன் கையெழுத்து பார்க்க அழகாய் இருக்கும். இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறான் என்பது தெரியாது.
22.06.2008
9.30மணியளவில்
14.6.08
இன்று உலகப் புத்தக தினம்
விருட்சம் 80வது இதழ்
வணக்கம்.
இன்னும் சில தினங்களில், 80வது நவீன விருட்சம் வெளிவந்துவிடும். கிட்டத்தட்ட 100 பக்கங்கள். நவீனவிருட்சம் வெளிவந்து 20 ஆண்டுகள் கடந்துவிட்டது. ஒவ்வொரு முறையும் நவீனவிருட்சம் இதழை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கொண்டுவர நினைப்பதுண்டு. ஆனால் முடிவதில்லை. எப்படியோ ஆறு மாதங்கள் ஓடிவிடுகின்றன. ஏன் இதழ் வந்து அதை எல்லோருக்கும் அனுப்புவதற்கு ஒரு மாதம் மேல் ஆகிவிடுகிறது. யாருக்கும் சந்தா கேட்டுக்கூட கடிதம் எழுதமுடிவதில்லை. பத்திரிகை போய்ச் சேர்ந்தால் போதும். அவர்களே பார்த்து அனுப்பினால் சரி என்ற நிலைக்கு வந்துவிட்டேன். ஒருசிலரைத் தவிர பெரும்பாலோர் பத்திரிகை சந்தா அனுப்புவதில்லை. சந்தா பெரிய தொகை இல்லை. ஆனால் அதை அனுப்புவதுதான் பெரிய விஷயமாக அவர்களுக்கு இருக்கும். தபால் அலுவலகத்திற்குப் போய் மணிஆர்டர் மூலம் 40 ரூபாய் அனுப்புவது என்பது பெரிய விஷயமாக எனக்குப் படுகிறது. ஏன்என்றால் நான் நவீனவிருட்சம் பத்திரிகையை தபால் அலுவலகத்தில் கொண்டு செல்ல பாடாதபாடு படுகிறேன். சரி, யார் மூலமாவது இந்தப் பணியைச் செய்ய சொல்லலாம். ஆனால் யாரும் இதுமாதிரி பணியைச் செய்யத் தயாராய் இல்லை. ஒரு முறை என் நண்பா மூலமாக நவீனவிருட்சம் இதழை அனுப்ப ஏற்பாடு செய்தேன். அவரும் கட்டுக்கட்டாக நவீன இதழை எடுத்துக்கொண்டு கிளம்பினார். அனுப்ப வேண்டிய முகவரிப் பட்டியலைக் கொடுத்தேன். எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு கிளம்பியவர் ஒரு வாரமாக வரவில்லை. எனக்கோ பதைப்பு. அனுப்பி விட்டாரா என்பதை அறிய ஆவலாக இருந்தேன். ஆனால் நண்பரோ என்னைப் பார்க்கக் கூட வரவில்லை. பின் ஒரு நாள் வந்தார். வேறு எதோ பேசிக்கொண்டிருந்தோம். நானோ எப்படியாவது விருட்சம் பற்றி அவரிடம் கேட்டுவிடவேண்டும் என்ற எண்ணத்துடன் பேசிக்கொண்டிருந்தேன். கிட்டத்தட்ட நண்பர் பேசி முடித்துவிட்டார். வீட்டிற்குப் போக வேண்டிய தருணம் வந்து விட்டது. ஆவலை அடக்க முடியாமல் கேட்டுவிட்டேன். நண்பரோ சர்வ சாதாரணமாக, " இன்னும் இல்லை. விருட்சம் அனுப்ப எனக்குத் தெரிந்த பசங்களை ஏற்பாடு பண்ணியிருக்கிறேன்..." என்றார. அந்த இதழை அனுப்புவதற்கும் ஒரு மாதம் மேல் ஆகிவிட்டது.
இப்படி ஒரு பத்திரிகையை அடித்து அனுப்பிக்கொண்டிருந்தால், யார் பத்திரிகைக்கு சந்தா அனுப்புவார்கள், யார் பத்திரிகைக்கு படைப்புகள் அனுப்புவார்கள். இந்த இதழுக்கு அசோகமித்திரனை கேட்டுக்கொண்டதன் பேரில் கட்டுரை எழுதி அனுப்பி உள்ளார். கிட்டத்தட்ட 3 மாதங்களுக்கு மேல் ஆகியிருக்கும். நாகார்ஜுனன் எழுதி அனுப்பிய கட்டுரை 6 மாதம் மேல் ஆகியிருக்கும். யாரும் கடிதம் கூட அனுப்ப மாட்டார்கள். போன போகிறதென்று வல்லிக்கண்ணன், தி.க.சி போன்றவர்கள் அனுப்புவார்கள். இதழை அனுப்பியவுடன் கடிதம் எழுதி அனுப்பி விடுவார்கள். எனக்கோ அவர்கள் எழுதிய கடிதங்களை பத்திரமாக வைத்துக்கொண்டு அடுத்த இதழ் வரும்போது கடிதம் பகுதியில் சேர்க்க வேண்டுமென்று தோன்றும். சில சமயம் தொலைந்து கூட போய்விடும். இப்போது வல்லிக்கண்ணன் இல்லை. எனக்கு சில சமயம் என் பத்திரிகை யாருக்காவது போய்ச் சேர்ந்ததா என்பதை அறிய அவரிடம் வரும் கடிதம் மூலம் தெரியும். இனி வல்லிக்கண்ணன் இடத்தை யார் நிரப்புவார்கள்.
அழகியசிங்கர்இரவு 10.57 மணிஅளவில்
6.6.08
திருவனந்தபுரம்
அவரைப் பார்த்துவிட்டு, நகுலன் வீட்டைப் பார்க்கும் எண்ணத்தில், நான் மட்டும் ஒரு ஆட்டோ வில் நகுலன் வீடை மட்டும் போய்ப் பார்த்தேன்.
பொதுவாக ஒரு இடத்திற்கு வரும்போது, அங்கு எழுத்தாளர்கள் என்று யாராவது இருந்தால், பார்க்க வருகிறேன் என்று சொன்னால்,உற்சாகம் குறைந்த உணர்வே ஏற்படுகிறது.
பல ஆண்டுகளுக்கு முன்பு, நகுலனிடம், 'உங்களைப் பார்க்க திருவனந்தபுரம் வருகிறேன்,' என்று குறிப்பிட்டேன். கேட்டவுடன், 'ஐய்யயோ..என் வீட்டில் தங்க முடியாது,' என்று பதறினா. எனக்கோ என்னடா இது என்று தோன்றியது. நான் அவரைப் பார்க்க திருவனந்தபுரம் வருகிறேன் என்று சொன்னேனே தவிர, அவர் வீட்டில் தங்க வருவதாகச் சொல்லவில்லை. அப்படியே வந்தாலும், ஊரையும், அவரையும்தான் பார்க்க வருவதாகத்தான் அர்த்தம் ஆகும். ஒரு ஓட்டலில் அறை எடுத்துக்கொண்டுதான் அவரைப் பார்க்க முடியும். அதுவும் ஒருசில மணி நேரங்கள் மட்டும்தான் பேசவும் முடியும்.அவருடனே பேசிக்கொண்டிருந்தால், ஒரு கட்டத்தில் போரடிக்கத் தொடங்கிவிடும்.அவர் அப்படிச் சொன்னதாலோ என்னவோ நகுலனைப் பார்க்க திருவனந்தபுரமே வரவில்லை.
நானே எதிர்பார்க்காதபடிக்கு இந்த முறை வந்தபோது நகுலன் இல்லை.இறந்து விட்டார். எனக்கோ அவர் வீட்டையாவது போய்ப் பார்க்க வேண்டுமென்ற எண்ணம் இருந்து கொண்டிருந்தது.
நீல பத்மநாபன் சொன்னபடி அந்தத் தெருவின் முனையில் உள்ள கடையில் டி கே துரைசாமி வீடு எங்கே என்று கேட்டவுடன், அந்த இடத்தைச் சுட்டிக் காட்டினார் கடையில் இருந்த பெண்மணி.
நான் அவர் வீட்டிற்கு ஆட்டோ வில் போய்ப் பார்த்தபோது, இருட்டி விட்டது.இறங்கியவுடன் மழை. நனைந்தபடி அவர் வீட்டு கேட்டைப் பிடித்தபடி அவர் வீட்டைப் பார்த்தேன். ஓட்டு வீடாக இருந்தது. ஆனால் பிரமாதமான இடத்தில் இருந்தது. நான் புகைப்படம் எடுத்துக்கொண்டேன். ஆனால் இருட்டில் அது சரியாக விழவில்லை.
கேரளம் முழுவதும் சுற்றிப் பார்த்த அனுபவம் சந்தோஷமாக இருந்தது. மழை. சுற்றிலும் தண்ணீர். தண்ணீர். பல வீடுகள் தண்ணீர் ஓடும் கரையோரமாக இருந்தன.
சென்னையில் குழாயைத் திறக்கும்போது, போதுமான அளவிற்கு தண்ணீர் கிடைக்குமா என்ற சந்தேகத்துடன் திறக்க வேண்டியிருக்கிறது.
அங்கேயும் பரபரப்பு இருக்கிறது. இரவு ஒன்பது மணிக்கெல்லாம் எல்லாக் கடைகளையும் மூடி விடுகிறார்கள். காலையில் மெதுவாகத்தான் கடைகள் எல்லாம் திறக்கப்படுகின்றன.
சென்னையோ இரவு முழுவதும் விழித்துக்கொண்டே இருக்கும். சந்தோஷமான பயணம்.
03.06.2008 at 8.15 PM
1.6.08
பிரமிள்
சரவணன் என்பவர் ஆன்மிக வேட்கையின் மூலம் பிரமளிடம் அறிமுகமானவர், பிரமிளை சென்னையில் கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இரவும் பகலும் பார்த்துக்கொண்டார். இப்போது நினைத்தாலும் என்னால் நம்ப முடியாத நிகழ்ச்சியாகவே அது இருக்கிறது. இதை ஏன் இங்கு குறிப்பிடுகிறேன் என்றால், இலக்கிய ரீதியில் அவருக்கு நண்பர்கள் என்பது கிடையாது. யாரையும் அவர் மதிக்க மாட்டார். மதிப்பது மட்டுமல்ல. அவதூறாக எல்லாரையும் பற்றி எழுதுவார். நான் விருட்சம் பத்திரிகை ஆரம்பித்தபோது, என்னைப் பற்றியும் எதாவது எழுதிவிடுவார் என்ற அச்சம் ஆரம்பத்தில் இருந்ததுண்டு. பின்னாளில் எனக்கு அவர் மீது அபிமானமே ஏற்பட்டது. என்னைப் பற்றி அவதூறாக அப்படி ஒன்றும் எழுதவில்லை.
நான் ஒருவித குழப்பத்தில் பத்திரிகையை நிறுத்திவிட வேண்டுமென்று நினைத்தபோது, அவர்தான் நான் தொடர்ந்து நடத்த வேண்டுமென்று குறிப்பிட்டார். அவர் அன்று சொல்லவில்லை என்றால், பத்திரிகையை நிறுத்தி விட்டிருப்பேன்.
அவர் மரணம் அடைந்த செய்தியை அறிந்தபோது நான் தவித்த தவிப்புப் பற்றி இன்னும் அவரைப் பற்றி எழுதும்போது எழுதுகிறேன். இது ஒரு தொடர் கட்டுரை.
அழகியசிங்கர்
29.05.2008
இரவு 10.15