15.5.09

வாக்காளர் பட்டியலில் என் பெயரும் இல்லை, கமலஹாசன் பெயரும் இல்லை...


நான் இந்த முறை ஓட்டுப் போடலாமென்றிருந்தேன். யாருக்கு என்பதிலும் தீர்மானமாக இருந்தேன். என் பெயர் பட்டியலில் இல்லை என்பது இன்று 4 மணிக்குத்தான் தெரிந்தது. என் குடும்பத்தில் அப்பாவிற்கு (87 வயது), மனைவிக்கு, என் புதல்வனுக்கு, மாமியாருக்கு என்று எல்லோருக்கும் ஓட்டுப்போட பெயர்கள் வாக்காளர் பட்டியில் இருந்தன. ஆனால் என் பெயர் மாத்திரம் இல்லை. ஆனால் வாக்காளர் அடையாள அட்டை இருந்தது. இதற்கு முன் பல முறைகள் நான் ஓட்டுப் போட்டிருக்கிறேன். காலையில் தினத்தந்தி பேப்பரைப் படித்தப்பின்தான் தெரிந்தது கமலஹாசன் பெயரும் வாக்காளர் பட்டியலில் இல்லை என்பது. எனக்கு இது ரொம்ப ஆச்சரியத்தைத் தந்தது. நான் சாதாரண நபர். ஆனால் கமலஹாசன் உலகம் புகழும் நடிகர். ஆனால் அவர் தன்னை சாதாரணன், பாமரன் என்று குறிப்பிட்டுள்ளார். ஓட்டு போடுவதற்காக ஐதாரபாத்தில் நடந்து கொண்டிருக்கும் ஒருநாள் படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு வந்திருக்கிறார். இதனால் அவருக்கு 10 லட்ச ரூபாய் நஷ்டம்.

கமலஹாசனும் என் வயதை ஒத்தவர்தான். ஆனால் சிறந்த நடிகர். நடித்தே புகழ் பெற்றவர். அவருக்கு பிறந்தநாள் கொண்டாட என்றெல்லாம் ரசிகர் மன்றம் உண்டு. அவர் பெயர் எப்படி வாக்காளர் பட்டியலில் இல்லாமல் போய்விட்டது. தேர்தல் ஊழியர்கள் எதற்காக அவரைத் தேடி வீட்டிற்கு வர வேண்டும். கமலஹாசன் பெயர் பத்திரிகைகளில் வந்துகொண்டிருக்கிறது. அவர் படங்கள் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றன. அப்படிப்பட்டவரை வீட்டில் இருக்கின்றாரா என்று ஏன் தேர்தல் ஊழியர்கள் போய்ப் பார்க்க வேண்டும்.

உண்மையில் கமலஹாசன் போன்ற ஒரு நடிகரை வீட்டில் போய்ப் பார்ப்பது என்பது சுலபமான விஷயமுமில்லை. அவர் யாரைப் பார்க்க வேண்டுமென்று நினைக்கிறாரோ அவர்கள் அவரைப் பார்க்க அனுமதிக்கப்படுவார்கள். மற்றவர்கள் சுலபமாக அவரைப் போய் பார்த்துவிட முடியாது. என் இலக்கிய நண்பர் ஒருவர் கமலஹாசனைப் பார்க்க போய்விட்டு, பார்க்க முடியாமல் வெறுத்துப் போய்விட்டார். என்னிடம் இதைச் சொல்லி குமைந்தபோது, 'நீங்கள் ஏன் அவரைப் போய்ப் பார்க்கப் போகிறீர்?' என்றேன். அவரைப் போய்ப் பார்த்து அவர் மூலம் சினிமாவிற்குள் பாட்டு எழுத நுழைந்து விடலாமென்று அவர் நினைத்திருப்பார். இப்படித்தான் கவிதை எழுதும் என் நண்பர்கள் பலர் அவஸ்தைப் படுவதை எண்ணி வருத்தமாக இருக்கிறது. எல்லோருக்கும் எல்லா வெற்றியும் கிடைத்துவிடாது. கவிதை எழுதுவதில் வெற்றி, சினிமா பாடல்கள் எழுதுவதில் வெற்றி என்றெல்லாம் கிடைத்து விடாது.

தேர்தல் ஊழியர்கள் கமலஹாசனை அவர் வீடு தேடி வந்து, கமலஹாசனைப் பார்க்காமல் போனதால் வாக்காளர் பட்டியலில் பெயரை எடுத்திருப்பார்கள்.

என் பெயரும் வாக்காளர் பட்டியலில் இல்லை. அதற்குக் காரணம் நான் காலையில் 7.30 மணிக்கு வீட்டை விட்டுக் கிளம்பினால் திரும்பவும் அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வர இரவு 8 மணி ஆகிவிடும். என்னை தேர்தல் ஊழியர்கள் பார்க்க வாய்ப்பே இல்லை. மேலும் நான் முன்பு இருந்த வீட்டிலிருந்து வேறு வீட்டிற்குக் குடிப்போய்விட்டதால், முன்பு இருந்த வீட்டில் உள்ளவர்கள், 'நான் இல்லை' என்று சொல்லியிருப்பார்கள். உண்மையில் தேர்தல் ஊழியர்கள் பாடு திண்டாட்டம். எப்படி என் குடும்பத்தில் மற்றவர்கள் பெயர்கள் தப்பித்தது என்பது தெரியவில்லை. என் அப்பா பெயர் நிச்சயம் இடம் பெற்றிருக்கும் ஏன்எனில் அவர் வீட்டில்தான் சதாசர்வகாலமும் இருக்கக் கூடியவர். வாக்காளர் பட்டியலில் விடுபடாமல் தப்பித்து சேர்ந்தது என் மனைவியின் பெயரும், புதல்வனின் பெயரும்தான்.

சரி, ஓட்டுப் போடவில்லை என்பதில் வருத்தமா? அதெல்லாம் ஒன்றுமில்லை. கமலஹாசன் மாதிரி நான் ஒருநாளைக்கு 10 லட்சம் இழக்கவில்லை. உண்மையில் எனக்கு சந்தோஷம் தரக்கூடிய நாள் இந்தத் தேர்தல் தினம்தான். தேர்தல் தினத்தன்று அலுவலகம் விடுமுறை விட்டதால், அப்பாடா என்றிருந்தது. ஞாயிற்றுக்கிழமையைத் தவிர extra லீவ். வீட்டில் எல்லோரிடனும் ஒருநாள் முழுவதும் இருந்தேன். காலை 7.30 மணியிலிருந்து அவசரம் அவசரமாக அலுவலகம் ஓடவில்லை. நிம்மதியாக இருந்தேன். காலையில் நிதானமாக எழுந்து சலூன் போய் தலை முடித் திருத்தி, கம்ப்யூட்டரில் (கணினி என்று சொல்ல தோன்றவில்லை) அமர்ந்து 160 பக்கம் நவீன விருட்சம் தயாரித்துக்கொண்டிருந்தேன். காலையில் ஒரு போன் வந்தது. என் எழுத்தாள நண்பர். 'என் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை' என்றார். 'என் பெயரும் இல்லை,' என்றேன். மாலையில் சேலத்திலிருந்து இன்னொரு இலக்கிய நண்பரிடமிருந்து போன் வந்தது. 'என் குடும்பப் பெயர்களே வாக்காளப் பட்டியலில் இல்லை,' என்றார். 'மகிழ்ச்சி' என்றேன்.

8.5.09

எஸ். வைதீஸ்வரனும் மெளனி கதைகளும்....
நேற்று என்று நினைக்கிறேன். இல்லை இல்லை முந்தாநாள் இரவு (06.04.2009) வைதீஸ்வரனிடமிருந்து ஒரு போன் மெளனி கதைகள் புத்தகம் கேட்டு. வைதீஸ்வரன் என்னிடம் புத்தகம் கேட்டு எப்போதும் போன் செய்ததில்லை. அதுவும் மெளனி புத்தகம் ஏன் கேட்கிறார் என்ற ஆச்சரியம் எனக்கு. என்னைப் போன்ற பல படைப்பாளிகளுக்கு மெளனி, புதுமைப்பித்தன், அசோகமித்திரன் போன்ற படைப்பாளிகள் கைடு மாதிரி. வைதீஸ்வரன் இல்லாமல் வேறு யாராவது அந்தப் புத்தகத்தை கேட்டிருந்தால், இல்லை என்று சொல்லியிருப்பேன். கேட்டது வைதீஸ்வரன் என்பதால் என் புத்தக அலமாரியில் போய்த் தேடினேன். மெளனி புத்தகம் கிடைத்ததோடல்லாமல் வேறு ஒருபுத்தகம் ஒன்றை புரட்டிப் பார்க்கும்போது இரு கடிதங்கள் கீழே விழுந்தன. எடுத்துப் புரட்டிப் பார்த்தால் சுந்தர ராமசாமி எழுதிய கடிதங்கள். எனக்கு ஆச்சரியம். அக்டோபர் மாதம் 2001ஆம் ஆண்டு எழுதிய அக் கடிதத்தை ஏன் விருட்சத்தில் பிரசுரம் செய்யவில்லை என்று யோசித்துக் கொண்டிருந்தேன். எந்தக் கடிதம் எழுதினாலும் சுந்தர ராமசாமி பதில் எழுதி விடுவார். அழகாக டைப் செய்து கீழே சுரா என்று கையெழுத்திடுவார். விருட்சம் வெளியீடாக நான் சில புத்தகங்களை அவருக்கு அனுப்பி இருந்தேன். அதற்குத்தான் அவர் பதில் எழுதியிருந்தார். தொடர்ந்து அவருக்கு நான் பதில் எழுத, எனக்கு அவர் இன்னொரு கடிதமும் எழுதியிருந்தார்.திரும்பவும் அக் கடிதங்களைப் படித்த எனக்கு உடனே விருட்சம் இதழில்வெளியிட வேண்டுமென்ற பரபரப்பு கூடியது. அதற்குமுன் பிளாகில் அக் கடிதங்களைப் பிரசுரம் செய்யலாமென்று தோன்றியதால் இங்கு அவற்றைப் பிரசுரம் செய்கிறேன்.முதல் கடிதம் 20.10.2001


அன்புள்ள அழகியசிங்கர் அவர்களுக்கு,


உங்கள் 04.10.2001 கடிதமும் நீங்கள் அனுப்பியிருந்த நான்கு கவிதைத் தொகுதிகளும் கிடைத்தன.பா.வெங்கடேசன் தொகுப்பை அவர் அனுப்பி வைத்திருக்கிறார். அதைத்தான் இப்போது படித்துக் கொண்டிருக்கிறேன். அத்தொகுப்பைப்பற்றி ஒரு மதிப்புரை எழுதலாம் என்ற எண்ணம் இருக்கிறது.நீங்கள் அனுப்பிய தொகுப்புகளைப் படித்துவிட்டு என் அபிப்பிராயத்தைத் தெரிவிக்கிறேன். திட்டம் போட்டு வேலை செய்ய முடியவில்லை. தேதியில் முடித்துத் தரவேண்டிய வேலைக்கு முன்னுரிமை போய்விடுகிறது.இப்போது நீங்கள் அனுப்பித் தந்திருக்கும் தொகுப்புகளை நான் இலவசமாகப் பெற்றுக்கொள்ள விரும்பவில்லை. உங்கள் வெளியீடுகளுக்கு நான் உரிய விலை தந்து வாங்குவதே நியாயமானது. அனுப்பித் தரவேண்டிய தொகையை கணக்கிட்டு எழுதுங்கள். தபால் செலவையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
எதிர்காலத்தில் நீங்கள் காலச்சுவடு மதிப்புரைக்கு அனுப்பும் புத்தகங்களை தனியாக எனக்கு அனுப்ப வேண்டியதில்லை.விருட்சத்தில் நீங்கள் வெளியிடும் அசோகமித்திரனின் வரைபடத்தை என்னால் சகிக்க முடியவில்லை. சமீபத்தில் அவர் சைக்கிளிலிருந்து கீழே விழுந்த நிமிஷத்தில் வேண்டுமென்றால் அவர் முகம் உங்கள் வரைபடம்போல் இருந்திருக்கலாம். இப்போது நல்ல குணம் பெற்றுவிட்டார். நீங்கள் விரும்பினால் நான் ஒரு வரைபடத்தை வரைந்து அனுப்புகிறேன். நீங்கள் வெளியிடுவதைவிட அது நன்றாக இருக்கும்.என் அன்பார்ந்த வாழ்த்துக்களுடன்,சுரா


பின் குறிப்பு : உங்கள் 16.10.2001 கடிதம் இப்போது கிடைத்தது. நீங்கள் புத்தக விலையைத் தெரிவித்ததும் அதனுடன் சந்தா நாற்பது ரூபாய் சேர்த்து அனுப்பிவிடுகிறேன்.(சுரா அசோகமித்திரன் வரைபடத்தைப் பற்றி குறிப்பிடுகிறார். ஓவியர் விஸ்வம் வரைந்த ஓவியம் அது. எனக்குப் பிடித்த அசோகமித்தரன் படம் அது. எப்போதும் விருட்சத்தில் அவருடைய அந்த ஓவியத்தையே வெளியிடுவேன். அசோகமித்திரனுக்கும் அந்த ஓவியம் பிடிக்கும் - அழகியசிங்கர்)இரண்டாவது கடிதம் 15.11.2001

அன்புள்ள அழகியசிங்கர்,


வணக்கம். உங்கள் 06.11.2001 கடிதம் கிடைத்தது. வேலை நெருக்கடியால் உடனடியாகப் பதில்போட இயலவில்லை. மன்னியுங்கள்.அசோகமித்திரன் வரைபடத்தைப்** பற்றி நான் எழுதியிருந்த விமர்சனத்திற்கு அழுத்தம் தருவதற்காகவே 'நான் வரைந்தால்கூட இதைவிட நன்றாக இருக்கும்' என்ற அர்த்தத்தில் எழுதினேன். நான் எழுதிய முறை யதார்த்தமாக நீங்கள் எடுத்துக்கொள்ளும்படி இருந்ததோ என்னவோ.யோகா* வகுப்புக்கு வந்தவர்களுக்க என் பெயர் தெரியாமல் இருப்பதில் என்ன அதிசயம்? என் பக்கத்து வீட்டு டாக்டருக்குத் தெரியாதே! நேற்று தொலைபேசியில் அழைத்து தினமணி தீபாவளி மலரில் கமலஹாசன் சுந்தர ராமசாமி என்று ஒரு பெயரைக் குறிப்பிடுகிறார். தமிழ்நாட்டில் இன்னொரு சுந்தர ராமசாமி யார் என்று கேட்டார். கமலஹாசன் என் பெயரைச் சொல்லியிருக்க முடியாது என்பதில்தான் அவருக்கு என்ன தீர்மானம்! இதற்குத்தான் பெரிய பத்திரிகைகளில் எழுதவேண்டுமென்று புத்திசாலிகள் சொல்கிறார்கள். உண்மைதானே அவர்கள் சொல்வது?இன்று ரூ.155 திரு என் சுப்பிரமணியன் பெயருக்கு அனுப்பி வைக்க இருக்கிறேன்.என் அன்பார்ந்த வாழ்த்துக்களுடன்,சுரா*வெள்ளியங்கிரி நடைப்பெற்ற ஈசா யோகா வகுப்பில் கலந்துகொண்ட நாகர்கோவிலைச் சேர்ந்த சிலரிடம் சுந்தர ராமசாமியைப் பற்றி விஜாரித்தேன். அவர்கள் யாருக்கும் அவருடைய பெயர் தெரியவில்லை. சுந்தர ராமசாமியிடம் ஏன் உங்கள் பெயர் தெரியவில்லை என்று எழுதிக் கேட்டிருந்தேன். அதற்கான பதில்தான் மேலே வந்துள்ளது.


** சுந்தர ராமசாமி பிடிக்கவில்லை என்று கூறிய அசோகமித்திரன் வரைபடத்தை திரும்பவும் இங்கு பிரசுரம் செய்துள்ளேன்.

6.5.09

புத்தக விமர்சனங்கள்

நவீன விருட்சம் ஆரம்பித்த (1988ஆம் ஆண்டு) ஆண்டிலிருந்து அதில் புத்தக விமர்சனங்கள் பல எழுதியுள்ளேன். நினைத்துப் பார்த்தால் இப்போது என்னால் அதுமாதிரி புத்தக விமர்சனங்கள் எழுத முடியவில்லை. இருந்தும் நான் எழுதிய புத்தக விமர்சனங்களைத் தொகுத்து உங்களுக்கு அளிக்க விரும்புகிறேன்.

த பழமலயின் 'சனங்களின் கதை'


த பழமலயின் 'சனங்களின் கதை' என்கிற கவிதைத் தொகுதியில் இரண்டு விஷயங்களை முக்கியமாக கவனிக்கலாம்.


மிக எளிமையான வார்த்தைகள் மூலம் ஊரையும் சுற்றத்தையும் வெளிப்படுத்துவது.


உள்ளது உள்ளபடியே கூறுவது.


எடுத்தவுடன் எதிர்படும் 'அம்மா' என்கிற கவிதையில் 'முற்றத்துப் பவழமல்லி நீ மறந்தும் நினைத்தும் அழும் என்கிறபோது, மிகைப்படுத்தப்பட்ட உணர்வு நிலையில் கவிதை வெளிப்பட்டிருப்பதுபோல் தோன்றினாலும், கூடவே நயம் செறிந்த வார்த்தைகளையும் எந்தவித பகட்டுமின்றி வெளிப்படுத்துகிறது.


அப்பா என்கிற கவிதை

'கடாவை வெட்டுகையில் கண்ணீரும் வடிப்பார்? கருப்பனார் சாமிக்குப் பன்றியும் வளர்ப்பார்? படைக்காமல் உண்பது 'பழையது' மட்டும்

என்கிற தொடக்க வரிகளுடன் அபாரமாக ஆரம்பமாகிறது. இக் கவிதையில் அறிமுகமாகும் ந. தங்கவேல் படையாச்சி எந்தவித ஒளிவு மறைவுமில்லாமல், அவருடைய தற்பெருமையுடன் சேர்த்தே அறிமுகப் படுத்தப்படுகிறார்.

'அப்பாவின் கொடுவாள்' என்கிற கவிதையில் கொடுவாள் இறுதியில்
ஒனக்கு எனக்குன்னு ஒடம் பிரிக்கிற ஒன்னு இருக்கு அத எதுத்துத்தான் நீ என்ன எடுக்கணும்'என்று புத்தி புகட்டுவது புதுமாதிரியாகத் தோன்றுகிறது.

'உழுதவன் கணக்கில்' துண்டை தொலைத்துவிட்டு எதையோ சுற்றிக்கொண்டு, பள்ளிக்கு ஓடுவதிலிருந்து ஆரம்பிக்கிற கவதை ஒரு கசப்பான அனுபவத்தை அங்கதத் தொனியுடன் விளக்குகிறது.

'முருங்கை மரம்' என்கிற கவிதையில் உறவு முறைகளில் நமக்கிருக்கும் நம்பிக்கையை ஆழப்படுத்துகிறார்.

'இனி எனக்குக் கொல்லை வெளிக்குறுக்கு வழிகள் திருகு கள்ளிகளின் செவிகளில் என்வரவு சொல்லும் ஓணான்கள்


என்கிற வரிகள் மூலம் 'த பழமலை 'புத்தரை மறந்த ஊர்' கவிதையில் ஒரு ஊரை நயத்துடன் அறிமுகப்படுத்துகிறார். ஊரிலுள்ள ஏரிக்கரைப் பிள்ளையார் நாத்திகனையும் நலம் விசாரிப்பார்.


..................................... இடாத முத்தத்திற்கு எப்படியெல்லாம் வருணனை


'தப்புக் கணக்கு' என்கிற கவிதையில், சிறுவயது முதற்கொண்டு உறவுகொண்ட ஒரு பெண்ணின் நினைவுகள், அவளுக்குத் திருமணம் ஆகி, இடுப்புக் குழந்தையுடன் பார்க்க வந்தும் ஞாபகத்திலிருந்து அகலாமலிருப்பதைக் குறிப்பிடுகிறார்.

'சனங்களின் கதை' என்கிற இந்தத் தொகுதியில் உள்ள பல கவிதைகள் படிக்கிற உணர்வை ஏற்படுத்துகின்றன என்பதைக் குறிப்பிட்டுச் சொல்வது அவசியமாகப் படுகிறது.

மீண்டும் வாசிக்கிறேன் 1
நிமல விஸ்வநாதனின் மூன்று கவிதைகள்


1. நட்பு


நானுன்னை வெறுக்கவில்லை


நானுன்னோடு சண்டை போட


விரும்புகிறேன் - நன்றாக கவனி நண்பா,


விரும்புகிறேன் உன்னோடு சண்டை போட.


எனினும் இதிலிருந்து இன்னொன்றும்


நீ சுலபமாய் புரிந்து கொள்ளலாம் -


நான் சண்டை போடாத எல்லோரையும்


நான் விரும்புகிறேன் என்றர்த்தமில்லை.


2. நிலை


மத்தியானம் தூங்கினால் மாலையில் என் மனம் குற்றமுணரும்


தெரிந்தும் வேலைதேடும் நான் எப்படியோ


இன்று மத்தியானம் தூங்கிவிட்டிருக்கிறேன்....


திடீரென காறிக் கமறிய காகங்களின் ஒப்பாரி.


கிழித்தெறிந்து விட்டது அதையும் இப்போது...


கனவுக்கு வேலி கட்டிய கைசலிப்பில்


மளாரென எழுந்திருக்க முடியவில்லை என்னால்


வாசலுக்கு வருகிறேன் தெரிகிறது -


இன்றேனோ கருணை காட்டாத மின் கம்பிகள் -


விழுந்து கிடக்குமொரு கறுப்பைச் சுற்றும்


கறுப்பு நிறங்களின் தாறுமாறில்


பல்லிளிக்கும் மேலை வானின் வெள்ளைச் சூரியன்.


அங்கே நிற்கின்ற நிலையில்


எனக் கொன்றும் புரிகிறது -


நடுத் தெருவில் அப்போது தான்


புணர்ந்திறங்குகிற ஆண் கழுதையின்


கண்ணில் கசியும் சோகம்.3. விடுதலை


மாசு மறுவின்றி வெம்பரப்பாய் விரிந்து கிடக்கும்


மத்தியான வெளியில்


படபடத்துப் போகும்


வசீகரமாயொரு வண்ணத்துப் பூச்சி.


திடீரெனப் பாய்ந்தறையும் காற்று, கூடவே


திடீரெனத் துடிக்கும் ஒரு எண்ணம் -


வண்ணத்துப் பூச்சியைப் பிடித்து 'விட'லாம்.


ஆனால் ஏனோ நல்ல வேளை


காற்று போய் எங்கோ மீண்டும்


பழையபடி பதுங்குவதற்குள்


வண்ணத்துப் பூச்சி பிடிக்கும் எண்ணத்தை நான்


காற்றில் விட்டு விட்டேன்.........................(ழ அக்டோபர் 1980 / 11வது இதழ்)