24.9.09

சில குறிப்புகள் - 12

மீபத்தில் ஒரு பிரயாணத்தின்போது நான் படித்தப் புத்தகம் மகேஷ்பட் எழுதிய A Taste of லைப். இப்புத்தகம் யூ ஜி கிருஷ்ணமூர்த்தியின் கடைசி தினங்களைப் பற்றி விவரிக்கிறது. மகேஷ்பட், லாறி, சூசைன் மூவர்தான் கடைசிவரை யூ ஜி யைப் பார்த்துக்கொள்கிறார்கள். யூஜிக்கு அவர் மரணம் பற்றி நிச்சயம் தெரிந்து விடுகிறது. அவர் பார்க்க விரும்புகிற நண்பர்கள் அனைவரையும் அழைத்துப் பார்க்கிறார்கள். எல்லோரையும் உடனே உடனே போகவும் சொல்லி விடுகிறார். இதாலியில் உள்ள வலேக்ராஸியா என்ற இடத்தில் அவர் மரணம் நிகழ்கிறது.

அவருடைய மரணம் குறித்து அவரிடமே உரையாடுகிறார்கள்.

"நீங்கள் இறந்தபிறகு உங்கள் உடலை என்ன செய்வது?" என்று கேட்கிறார்கள்.

"தூக்கி குப்பைத் தொட்டியில் போடுங்கள்,"என்கிறார் யூஜி.

தன்னை ஒரு அவதார புருஷராக யாரும் கருதக் கூடாது என்பதில் யூஜி கறாராக இருப்பவர். மரணத்திற்குப் பிறகு யாரும் கொண்டாடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்.

மகேஷ்பட்டால் யூஜியின் மரணத்தைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவருக்கு யூஜியின் மரணம் பல பாடங்களைக் கற்றுத் தருகிறது.

இப் புத்தகம் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, முதல் பகுதியில் யூஜியின் வாழ்க்கை வரலாறாகவும், இரண்டாவது பகுதி அவருடைய இறுதி நாட்களை விவரிப்பதாக உள்ளது. ஒரு கதைப் புத்தகம் படிப்பதைவிட மிக சுவாரசியமாக இப் புத்தகம் படிக்க சுவாரியசத்தைக் கூட்டிக்கொண்டு போகிறது.

பல நிகழ்ச்சிகளை இப் புத்தகம் விவரித்தக் கொண்டே போகிறது. ஞாபகத்திலிருந்தும் மகேஷ்பட் யூஜியைப் பற்றி அவ்வப்போது எழுதிக்கொண்டே போகிறார்.

"உன்னால் எனக்கு புகழ் கிடைத்ததா? அல்லது என்னால் உனக்குப் புகழ் கிடைத்ததா?" என்று மகேஷ்பட்டைப் பார்த்து யூஜி கேட்டதாக ஒரு தகவல் வருகிறது.

பர்வீன் பாபியால் ஏற்பட்ட உறவால் மகேஷ்பட் அவதிக்கு உள்ளாகிறார். அப்போது ஒரு கேள்வி எழுகிறது. யூஜி மகேஷ்பட்டை பர்வீன் பாபியிடமிருந்து காப்பாற்றினாரா அல்லது பர்வீன் பாபியை மகேஷ்பட்டிடமிருந்து காப்பாற்றினாரா என்ற சுவாரசியமான கேள்வி எழுகிறது.

மகேஷ்பட்டை யூஜி ரஜினீஷிடமிருந்து காப்பாற்றுகிறார். யூஜியிடம் கோபம்கொண்டு மகேஷ்பட் கொலைவெறியுடன் ஒருமுறை இரவு யூஜி தங்கியிருக்கும் இடத்திற்கு வந்து கதவைத் தட்டுகிறார். "நாம் எங்கே போகப்போகிறோம்..உன் திட்டத்தை காலையில் வைத்துக்கொள்ளலாம்," என்கிறார் யூஜி.

பங்களுரில் யூஜி ஒரு இடத்தில் வாடகைக் கொடுத்து வருகிறார். யூஜிக்குப் பிறகு அந்த இடத்தை என்ன செய்வது என்று அங்குள்ளவர் கேட்கிறார். யூஜியோ அதை விபாச்சார விடுதியாக மாற்றி விடலாம் என்கிறார் ரொம்ப சாதாரணமாக.

ஜே கிருஷ்ணமூர்த்தி, ரமணர் என்று எல்லோரையும் வம்புக்கு இழுப்புவர் யூஜி. தான் சொல்வதை யார் வேண்டுமானாலும் திருத்தலாம். புத்தகமாகக் கொண்டு வரலாம். இதற்கு ராயல்டி எதுவும் கிடையாது என்று கூறியவல் யூஜி.

யூஜியின் நாட்கள் எண்ணப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் அவர் படுகிற அவதியை துல்லியமாக மகேஷ்பட் விவரித்துக் கொண்டே போகிறார். கண்ணீர் மல்க. படிக்க வேண்டிய புத்தகம்


11.9.09

புரியாத பிரச்சினை
சிறுகதை


த்மநாபனிடமிருந்து போன் வந்தது. ஆச்சரியமாக இருந்தது. கடந்த 4 ஆண்டுகளாக பத்மநாபனிடமிருந்து போன் வரவே இல்லை. அவர் பதவி மாற்றம் பெற்று பந்தநல்லூருக்குச் சென்ற பிறகு என்னுடன் தொடர்புJustify Full கொள்ளவில்லை. சென்னையில் இருக்கும்போது நானும் அவரும் முக்கியமான நண்பர்கள். எல்லா இடங்களுக்கும் ஒன்றாகப் போய்விட்டு ஒன்றாக வருவோம். மேலும் நாங்கள் இருவரும் மேற்கு மாம்பலத்தில்தான் இருக்கிறோம். இன்னும் நானும் அவர் குடும்பமும் மேற்கு மாம்பலத்தில்தான் இருக்கிறோம். அவர் மட்டும் பந்தநல்லூரில் இருக்கிறார். உண்மையில் பந்தநல்லூர் கிட்டத்தட்ட மயிலாடுதுறையிலிருந்து 28 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. மயிலாடுதுறையில் அவர் தங்கியிருக்கிறார். நான் தலைமை அலுவலகத்தில் சுருக்கெழுத்தாளராக பணிபுரிந்து கொண்டு வருகிறேன்.

பத்மநாபனை பிறகு ஒருமுறைதான் பார்த்தேன். சற்று இளைத்து இருந்தார். அப்போது ரொம்ப நேரம் அவருடன் பேச முடியவில்லை. எங்கள் அலுவலக விதிப்படி தமிழ்நாட்டிற்குள் ஒருவர் மாற்றல் பெற்று போனால் அவர் எந்த இடத்திற்குப் போகிறார்களோ அங்கயே இருக்க வேண்டும். உண்மையில் பத்மநாபன் போனபிறகு எனக்கு கை உடைந்த மாதிரி ஆகிவிட்டது. நாங்கள் இருவரும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைதோறும் சரவணா ஓட்டலில் காப்பியும், பொங்கலும் சாப்பிடாமல் இருக்க மாட்டோ ம். பத்மநாபன் இல்லாமல் எனக்குத் தனியாக அங்கு போகப் பிடிக்கவில்லை.

பத்மநாபனை நான் மறந்தே விட்டேன். திடீரென்று அவர் குரலைக் கேட்டவுடன் எனக்கு ஆச்சரியமான ஆச்சரியம். அதுவும் காலை நேரத்தில்.

''என்ன பத்மநாபன்?...எங்கிருந்து பேசுகிறீர்கள்? சென்னைக்கு வந்துவிட்டீர்களா?''

''வந்துவிட்டேன். டெம்பரரி டிரான்ஸ்வர்...வந்து ஒரு மாசம்தான் ஆகிறது...''

''எங்கே இருக்கிறீர்கள்?''

''ஹஸ்தினாபுரம்....''

''சொல்லவே இல்லையே?''

''என்னத்தைச் சொல்வது? டெம்பரரிதானே? ஆமாம்... உங்க பெண் பெயர் என்ன?

''ஏன்?

''சுருதிதானே?''

''ஆமாம்..''

''என்ன பண்றா?''

''பி டெக்...எம்ஐடியிலே பண்றா..''

''நினைச்சது சரியாப்போச்சு..''

''என்ன நினைச்சீங்க..''

''சுருதி மாதிரி ஒரு பெண் இருந்தாள். அவளாக இருக்குமோன்னு நினைச்சேன்...அது சரியாப் போச்சு.....அவளுக்கு என்னை அடையாளம் தெரியலை...''

''நாமதானே அடிக்கடிப் பார்த்துப்போம்...இந்தக் காலத்துப் பசங்களுக்கு எங்கே அடையாளம் தெரியப்போறது..''

''நான் சொல்ல வந்தது வேற விஷயம்...நீங்க சீரியஸ்ஸா கவனிக்க வேண்டிய விஷயம்...எனக்கு ஆபிஸ் 8.30 மணிக்கு...நான் மாம்பலத்திலிருந்து காலையிலேயே 7.30க்கெல்லாம் ஓடணும்...டெய்லி ஓடறேன்..நான் போற சமயம் எம்ஐடியில் படிக்கிற பசங்களும் போவாங்க...ஒரே கூட்டமா இருக்கும்....அங்கே படிக்கிற ஆண்களும் பெண்களும் சிரிச்சு சிரிச்சுப் பேசிண்டே போவாங்க...தினமும் உங்கப் பொண்ணு சுருதியைப் பாக்கறேன்....நான் உங்க பிரண்ட்ங்கறதே அவளுக்குத் தெரியலை..அவளைச் சுத்தி நாலைஞ்சு ஆம்பளைப் பசங்க..எல்லாம் படிக்கிற பசங்க.. அந்த கண்றாவியை நானே சொல்ல விரும்பலை..அந்தப் பசங்க சும்மா இருக்கமாட்டாங்க..சுருதிகிட்ட வந்து ரொம்ப நெருக்கமா பேசுவாங்க..யாராவது ஒரு பையன் அவள் தோள்மேல கூட கையைப் போடுவான். ஒருத்தன் கன்னத்தில கிஸ் பண்றான்...சுருதிகிட்ட சொல்றான்...உதட்டுலதான் பண்ணக்கூடாதாம்....கேட்க சகிக்கலை..''

பத்மநாபன் சொன்னதைக் கேட்டவுடன் எனக்கு சொரேர் என்றிருந்தது. ''என்ன பத்மநாபன் சொல்றீங்கன்னு....'' சத்தம் போட்டு கேட்டேன்.

''தப்பா எடுத்துக்காதீங்க...கடந்த ஒரு வாரமா எனக்குத் தயக்கமா இருந்தது. இத எப்படி உங்ககிட்ட சொல்றதுன்னு....இத எப்படியாவது தடுக்கணும். நீங்க உங்க பெண்ணுக்கிட்ட எதுவும் பேசாமல் இத எப்படியாவது டீல் பண்ணணும்...ஜாக்கிரதையா டீல் பண்ணனும்..''

''பத்மநாபன் ரொம்ப நன்றி...இத எப்படியாவது சரி செய்யணும்...சுருதி நல்லப் பொண்ணு...கொஞ்சம் வெகுளி...இந்த விஷயத்தில நீங்களும் எனக்கு உதவி செய்யணும்..''

பத்மநாபனுடன் பேசிய விஷயத்தை வீட்டில் யாரிடமும் சொல்லவில்லை. மனைவியிடம் சொன்னால் தேவையில்லாமல் கவலைப்படுவாள்....அன்று முழுவதும் சங்கடமாக இருந்தது. மாலையில் சுருதி காலேஜ் போயிட்டு வந்தவுடன், அவளை எப்போதும்விட அதிகமாக கவனித்தேன்... ''என்ன எப்படிப் போயிண்டிருக்கு படிப்பெல்லாம்...'' என்று கேட்டேன்..''நல்லாதானே இருக்கு..''என்றாள் சுருதி.

''உன் காலேஜ்ஜிலே ராக்கிங்லாம் கிடையாதா?''

''அதெல்லாம் கிடையாது...தெரிஞ்சா துரத்திடுவாங்க வீட்டுக்கு..காலேஜ் திறந்து 4 மாசம் மேலே ஆயிடுத்தே..''

அன்று இரவு எனக்கு சரியாத் தூக்கம் வரலை... மறுநாள் காலையில் சுருதி காலேஜ் கிளம்பியவுடன் நானும் கிளம்பினேன். எதுவும் சுருதிக்குத் தெரியாது. அவள் ஏறுகிற ரயில் கம்பார்ட்மெண்டில் நானும் ஏறினேன். சுருதிக்குத் தெரியாமல்..நாலைந்து ஸ்டூடன்ஸ் சுருதியைப் பார்த்தவுடன் உற்சாகமாக கையசைத்துச் சிரித்தார்கள். சுருதி அவர்கள் இருந்த பக்கம் நகர்ந்தாள்..

''உன்காகத்தான் இடம் போட்டிருக்கேன்..,'' என்றான் ஒருவன் இளித்தபடியே.

இந்த சமயத்தில், ''சுருதி...'' என்று நான் சத்தம் போட்டேன். சுருதி திரும்பிப் பார்த்தாள்.. என்னைப் பார்த்தவுடன் திகைப்பு அவளுக்கு..''அப்பா நீங்களா?'' என்றாள்.

''இங்க என் பக்கத்தில் வந்து உட்காரு,'' என்றேன். சுருதி என் பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள்.

''அவர்கள் எல்லோரும் யாரு?'' என்று கேட்டேன்.

''ஃபிரண்ட்ஸ்,'' என்றாள்.

சுருதி பேசாமல் என் பக்கத்தில் இருந்தாள். சுருதியைக் கிண்டல் செய்யும் ஃபிரண்ட்ஸைப் பார்த்தேன். எல்லோரும் படிக்கிறவர்கள். கையில் சின்ன நோட் மாதிரி வைத்திருந்தார்கள். எல்லோர் கையிலும் செல்போன்...வண்டி அடுத்த ஸ்டேஷனில் நின்றவுடன், அவளுடைய ஃபிரண்ட்ஸ் இறங்கி வேற கம்பார்ட்மெண்ட் போய்விட்டார்கள்.

''தினமும் இவர்களோடத்தான் காலேஜ் போயிண்டிருக்கிறாயா..?''

''ஆமாம்..''

''அவர்கள் தினமும் உன்னை கிண்டல் செய்கிறார்களாமே?''

''இல்லையே..''

''பத்மநாபன் சொல்றார்...இல்லைங்கறீயே..''

''என் வகுப்பில படிக்கிறவங்க..நாங்க தினமும் இந்த டிரையினில் ஜாலியாப் பேசிக்கிட்டுப் போவோம்..''

''ஏன் உன்கூட மத்த கேர்ள்ஸ் வரமாட்டாங்களா?''

''மல்லிகாவும் என் கூடத்தான் வருவாள்..என் வகுப்புல கேர்ள்ஸ் கொஞ்சம் குறைச்சல்..''

''சுருதி...என்னைப் பொருத்தவரை இதெல்லாம் தப்பு..கன்னத்தில இடிக்கிறது. தோள்ல கையைப் போடறது.. நீங்கள்ளாம் ஃபிரண்ட்டா இருக்கலாம்..அதெற்கெல்லாம் ஒரு லிமிட் வேண்டும்...உங்க காலேஜ்ல வந்து பேசறேன்...''

கடகடவென்று சுருதி அழ ஆரம்பித்துவிட்டாள். ''நீங்க காலஜ்ஜூக்கெல்லாம் வராதிங்கப்பா,'' என்றாள்.

குரோம்பேட்டை ஸ்டேஷன் வந்தவுடன், நானும் சுருதியுடன் இறங்கினேன். அவளுடைய ஃபிரண்ட்ஸ் என்னையும் அவளையும் பார்த்தபடியே முன்னால் சென்று விட்டார்கள். ''எப்ப காலேஜ் முடியும்?''

''தெரியாது..சிலசமயம் 4க்கெல்லாம் முடியும்.. ஸ்பெஷல் க்ளாஸ் இருந்தால், 5கூட ஆகும்..''

''சரி. க்ளாஸ் போ..'' என்று கூறியபடி காலேஜ் வாசல்வரை வந்தேன். பத்மநாபனுக்கு போன் செய்தேன். ''இன்று உங்களைப் பார்க்கவில்லையே?''என்றார்.

''நான் சுருதியுடன் வந்தேன்..'' என்றேன்.

''எத்தனை நாள்தான் உங்களால் சுருதியுடன் வந்து கொண்டிருக்க முடியும்?''

''அதுதான் எனக்கும் புரியவில்லை..''

''இதற்கு வேறு எதாவது வழி இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்..''

அன்று மாலை சுருதி வகுப்புகளை முடித்துவிட்டு காலேஜ் வாசலுக்கு வந்தாள்.. அவளுடைய ஃபிரண்ட்ஸ்களுடன்..கேட் அருகில் நான் இருப்பதைப் பார்த்தார்கள் அவளுடைய ஃபிரண்ட்ஸ். அவர்களில் ஒருவன், ''சுருதி உன் அப்பா,'' என்றான். சுருதி பயந்தபடியே என்கிட்டே வந்தாள். அவள் ஃபிரண்ட்ஸை சைகை செய்து கூப்பிட்டேன். அவர்கள் தயக்கத்துடன் வந்தார்கள்.

''சுருதிக்குத் திருமணம் ஆகப் போறது.. நீங்கள் இப்படி ஒண்ணா வருவதைப் பார்த்தால், தப்பாக எடுத்துக்கொண்டு விடுவார்கள்..''என்றேன்.

''சரி அங்கிள்... நாங்கள் இனிமேல் அப்படி வரமாட்டோம்,''என்றார்கள். பிரிந்து சென்றார்கள்.

நானும் சுருதியும் மின்சார வண்டிக்காகக் காத்திருந்தோம். ''ஏன்பா..இப்படிப் பொய் சொல்றீங்க..அவங்க நல்லவங்கப்பா...சும்மா ஜாலியாப் பேசிண்டு வர்றோம்..''

''எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு, சுருதி.''

அடுத்தநாள் காலையில் நான் சுருதியுடன் மாம்பலத்தில் வண்டியில் ஏறினேன். அன்றும் பத்மநாபன் என் கண்ணில்படவில்லை. சுருதியின் நண்பர்களும் கண்ணில் படவில்லை. திரும்பவும் அவள் காலேஜ் விட்டு வரும்போது கேட் அருகில் நான் நின்றிருந்தேன். ''அவர்கள் நல்லவர்கள்,''என்றாள் சுருதி முணுமுணுத்தபடி. நான் பதில் எதுவும் பேசவில்லை. கிட்டத்தட்ட ஒருவாரம் நான் சுருதியுடன் வந்து கொண்டிருந்தேன். பத்மநாபனிடம் போனில் பேசினேன். ''நானும் உங்களை கவனித்துக்கொண்டுதான் வருகிறேன்..சுருதிக்கு என்னைத் தெரியாமல் இருப்பது நல்லது,''என்றார்.

ஒருவாரம் கழித்து சுருதி தனியாக காலேஜ் சென்றாள். தொடர்ந்து அவளுடன் செல்வது என்பதும் முடியாத காரியம் என்று எனக்குத் தோன்றியது. மேலும் சுருதி மீது எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது. இனிமேல் அவர்கள் அவளுடன் வர மாட்டார்கள் என்று நினைத்தேன்.

நான்கு ஐந்து நாட்கள் கழித்து பத்மநாபனை விஜாரித்தேன்.. ''நான் பார்த்துக்கொண்டுதான் வருகிறேன். சுருதி மட்டும் அவர்களோடு வருவதில்லை. ஆனால் நாலைந்து பெண்கள் அந்தப் பசங்களுடன் அரட்டை அடித்துக்கொண்டுதான் போகிறார்கள்,''என்றார். எனக்குக் கேட்க நிம்மதியாக இருந்தது.

இரண்டு நாட்கள் கழித்து பத்மநாபன் அவசரமாகப் போன் செய்தார். ''அந்த நாலைந்து பெண்களுடன் சுருதியும் சேர்ந்துவிட்டாள். இப்போது எல்லோரும் அரட்டை அடித்துக்கொண்டு வருகிறார்கள்,''என்றார்.

எனக்கு என்ன செய்வதென்பது புரியவில்லை.


5.9.09

நான்கு சின்னஞ்சிறு கவிதைகள்கவிதை ஒன்று

கீழே
விழுந்துகிடந்த
ரூபாய்த் தாளை
எடுத்துப்
பார்த்துக் கொண்டிருந்தேன்
யார் யார்
கைகளிலிருந்து
தப்பி விழுந்ததோ
என்ன பாடுபட்டதோ
என்ன துரோகம் செய்ததோ


கவிதை இரண்டு

எண்ணற்ற வழிகளில்
பயணம் செய்துகொண்டிருக்கிறோம்
ஆனால்
சிலரை மட்டும் பார்க்கிறோம்
இன்னும் சிலரிடம்தான் பேசுகிறோம்
இன்னும் இன்னும் சிலரிடம்தான்
உறவு வைத்துக்கொள்கிறோம்.


கவிதை மூன்று
நீண்ட
சோம்பல்
என்னிடம் ஒட்டிக்கொண்டது
நாற்காலியில்
உட்கார்ந்தால்போதும்
தூக்கம்
கண்ணைச் சுழற்றும்
ஒன்றும் தோன்றாமல்
ஒரு நிமிடம் என்னால்
இருக்க முடியவில்லை


கவிதை நான்கு

பிழிய பிழிய
மழைப்பெய்து
விழியை வைத்தது
கட்டுப்பாடற்ற முறையில்
ஒழுங்கு தப்பி
தெறித்தன வாகனங்கள்

17.6.09

மூன்று கவிதைகள்


கவிதை : ஒன்று


சிலருடன் பேச விரும்புகிறோம்

ஆனால்பேச முடிவதில்லை


சிலரைப் பார்க்கவே விரும்புவதில்லை


சிலரைத் தேடிப் போகிறோம்


அகப்படுவதில்லை


சிலர்முன்னால்


தேவைப்படாமல் தட்டுப் படுகிறோம்


வானத்தில் கோலம் போடுவதுபோல்


பறவைகள் பறந்து கொண்டிருக்கின்றன


தினமும் அப்படி எதிர்பார்க்க முடியுமா?


ஒருநாள் மகிழ்ச்சியாக இருக்கிறோம்


ஒருநாள் துக்கமாக இருக்கிறோம்


காரணம் புரிவதில்லை


உருண்டோடிப் போகும் காலப் பந்து


புரியாத புதிராக எட்டி


உதைக்கப் படுகிறது

கவிதை : இரண்டுஹஸ்தினாபுரத்தின் கிளை அலுவலகத்தில்


காலை வைத்ததும் ஒரே இருட்டு


ஜெனரேட்டர் இன்னும் பிக்அப் பண்ணவில்லை


பல்லைக் கடித்தபடி சீட்டில் அமர்ந்திருந்தேன்


கணினியில் எண்களைத் தடவி தடவி தட்டினேன்


விழுந்தனதப்புத் தப்பாய் எண்கள்


வாடிக்கையாளர் முன்னாள்


தலையில் அடித்துக்கொண்டேன்
வாசலில் போய்தனியாக வெயிலின்


புழுக்கத்தைப் போக்கிக்கொள்ள நின்று கொண்டிருந்தேன்


புழுக்கமில்லாத வெளி இதமாய் இருந்தது


இப்போதெல்லாம்


ஏனோ எனக்கு சிரிப்பே வருவதில்லை
கவிதை : மூன்றுகூட்டங்களில் நான்


தூங்குவது வழக்கம்


இலக்கியக் கூட்டங்களில்


நன்றாய் தூக்கம் வருகிறது


வகுப்புகளில் மாட்டிக்கொண்டால்


தூக்கம் தவிர்க்க


வகுப்பு வாசலில் நிற்பேன்


அலுவலகத்தில் நடக்கும்


கூட்டத்தில்தூங்கும்போது


யார் பேசுகிறார்கள்


என்பதை கவனமாய் கவனிப்பேன்


தூக்கத்தில் தலை ஆடுகிறதா என்றும்


ஆடும் தலையை யாராவது கவனிக்கிறார்களா என்றும்


பார்ப்பேன்


அப்படியும்


சற்று தூக்கம் என்னைக் கவர்ந்துவிடும்


தூக்கம் வரும்போது


பேசுபவர்கள் என்னை அத்திரத்தோடு
முறைத்துப் பார்ப்பதாக தோன்றுகிறது


முஷ்டியை மடக்கிக்கொண்டு முகத்தில்


ஓங்கி குத்த வேண்டுமென்று


பேசுபவருக்குத் தோன்றுகிறதோ...
ஆனால்


இரவில் குறைவாக தூங்குவது


என் வழக்கமாயிற்று


8.6.09

எதிர்பாராத மரணம்...


சனிக்கிழமை தேவிபாரதி ஒரு SMS அனுப்பியிருந்தார். ஒரு விபத்தில் ராஜமார்த்தாண்டன் மரணம் அடைந்துவிட்டதை. அறிந்தபோது வருத்தமாக இருந்தது. இந்த எழுத்தாளர்களுக்கெல்லாம் போறாத காலம் போல் தோன்றுகிறது. குறிப்பாக கவிஞர்களுக்கு..வரிசையாக சுகந்தி சுப்பிரமணியன், அப்பாஸ், சி மணி, இப்போது ராஜமார்த்தாண்டன். அவர் தினமணியில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது அடிக்கடி சந்திப்பேன். கொல்லிப்பாவையில் அவர் ஒவ்வொரு கவிஞராக எடுத்து அவர்களுடைய தொகுதியைப் படித்து அது குறித்து விமர்சனம் எழுதுவார். அதே பாணியில் நவீன விருட்சத்தில் எழுதும்படி கேட்டுக்கொண்டேன். அதன்படி உமாபதி, வைதீஸ்வரனுக்கு கட்டுரைகள் எழுதிக் கொடுத்தார். கவிதையைக் குறித்து கட்டுரைகள் எழுதுபவராகத்தான் எனக்கு அவரை முதலில் தெரியும். நவீன விருட்சத்திற்கு அவர் கவிதைகள் அனுப்பிய பிறகுதான் அவர் கவிதைகளும் எழுதுவார் என்பதைத் தெரிந்துகொண்டேன். ஆனால் மிகக் குறைவாகவே அவர் கவிதைகள் எழுதி உள்ளார்.தினமணி அலுவலகத்திற்கு அவரைப் பார்க்கச் செல்லும்போது, சிரித்த முகத்துடன் வரவேற்று பேசத் தொடங்குவார். நான் அங்குப் போனால், ராஜமார்த்தாண்டனைத்தான் தேடிப் போவேன். பின் இருவரும் அலுவலக வாசலில் வீற்றிருக்கும் டீ கடையில் டீ சாப்பிடுவோம். நவீன விருட்சம் இதழ் மீது அவருக்கு அன்பும் மரியாதையும் உண்டு. பிரமிளை சிலாகித்துப் பேசினாலும், அவர் சுந்தர ராமசாமியின் பக்கம். சு.ராவை விட்டுக்கொடுக்க மாட்டார்.பிரமிள் கரடிக்குடி என்ற இடத்தில் மரணம் அடைந்துவிட்டார் என்ற செய்தியை உடனடியாக அவரிடம் சொல்லவில்லை என்ற கோபம் என்னிடத்திலும், வெளி ரங்கராஜனிடமும் உண்டு. ஆனால் பிரமிள் நோய்வாய்ப்பட்டிருந்தபோது, பலர் அவரைப் பார்க்கவே வரவில்லை. விரும்பவும் இல்லை.விபத்தில் மரணமடைவதுபோல கொடுமை வேறு எதுவுமில்லை. பெரும்பாலும் இதுமாதிரியான விபத்துகளில் வண்டியில் செல்பவர்கள்தான் இறப்பதுண்டு. சமீபத்தில் என் அலுவலக நண்பரின் மகன் டூ வீலர் விபத்தில் மரணமடைந்த நிகழ்ச்சி அதிர்ச்சியைத் தந்தது. விபத்து ஒரு சுழற்சி மாதிரி. சுழலில் மாட்டிக்கொண்டால், பலருக்கு தொடர்ச்சியான விபத்துக்கள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். பல ஆண்டுகளுக்கு முன் கார்விபத்தில் காஞ்சிபுரம் அருகில் மாட்டிக்கொண்ட நண்பர் ஒருவரின் குடும்பத்தில் பலர் பலவிதமான பாதிப்புகளுக்கு ஆளானார்கள். நண்பருக்கு முதுகு தண்டுவடத்தில் ஏற்பட்ட எலும்பு முறிவு. இன்னும்கூட அவரால் முழுதாக திரும்ப முடியவில்லை.சில அண்டுகளுக்கு முன், என் அப்பா, நான், என் மகள் என்று மூவரும் தனித்தனியாக விபத்தில் சிக்கினோம். நினைத்துப்பார்த்தால் ஆபத்தான விபத்துக்கள்தான். ஒரு நாய் குறுக்கே வந்து நான் அடிப்பட்டு விழுந்தபோது, விபத்து எனக்குத்தான் ஏற்பட்டதா என்பதைப் புரிந்துகொள்ள சில மணி நேரம் ஆனது. விபத்து நடந்த சில தினங்கள் நான் படுக்கையிலிருந்து எழும்போது தலை சுற்றோ சுற்றென்று சுற்றும். இன்னும் கூட என் வலதுபக்கம் மூக்கு மரத்துப்போனதுபோல் தோன்றும்.இந்த ஆரியகவுடர் ரோடில் என் தந்தை (87வயது) தள்ளாடி தள்ளாடி சாயிபாபா கோயிலுக்குப் போவதை அறியும்போது எனக்கு பக் பக்கென்று அடித்துக்கொள்ளும். ராட்சத உருமலுடன் சீறிக்கொண்டு பாயும் வாகனங்களைப் பற்றி அவர் கவலைகொள்ளாமல் ரோடை கடந்துசெல்வார்.
ஒரு டூ வீலர் இடித்துத் தள்ளி ராஜமார்த்தாண்டன் மரணம் அடைந்து விட்டார் என்பதை அறியும்போது வருத்தமாக இருக்கிறது. அவரை இழந்து நிற்கும் அவர் குடும்பத்திற்கு விருட்சம் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

15.5.09

வாக்காளர் பட்டியலில் என் பெயரும் இல்லை, கமலஹாசன் பெயரும் இல்லை...


நான் இந்த முறை ஓட்டுப் போடலாமென்றிருந்தேன். யாருக்கு என்பதிலும் தீர்மானமாக இருந்தேன். என் பெயர் பட்டியலில் இல்லை என்பது இன்று 4 மணிக்குத்தான் தெரிந்தது. என் குடும்பத்தில் அப்பாவிற்கு (87 வயது), மனைவிக்கு, என் புதல்வனுக்கு, மாமியாருக்கு என்று எல்லோருக்கும் ஓட்டுப்போட பெயர்கள் வாக்காளர் பட்டியில் இருந்தன. ஆனால் என் பெயர் மாத்திரம் இல்லை. ஆனால் வாக்காளர் அடையாள அட்டை இருந்தது. இதற்கு முன் பல முறைகள் நான் ஓட்டுப் போட்டிருக்கிறேன். காலையில் தினத்தந்தி பேப்பரைப் படித்தப்பின்தான் தெரிந்தது கமலஹாசன் பெயரும் வாக்காளர் பட்டியலில் இல்லை என்பது. எனக்கு இது ரொம்ப ஆச்சரியத்தைத் தந்தது. நான் சாதாரண நபர். ஆனால் கமலஹாசன் உலகம் புகழும் நடிகர். ஆனால் அவர் தன்னை சாதாரணன், பாமரன் என்று குறிப்பிட்டுள்ளார். ஓட்டு போடுவதற்காக ஐதாரபாத்தில் நடந்து கொண்டிருக்கும் ஒருநாள் படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு வந்திருக்கிறார். இதனால் அவருக்கு 10 லட்ச ரூபாய் நஷ்டம்.

கமலஹாசனும் என் வயதை ஒத்தவர்தான். ஆனால் சிறந்த நடிகர். நடித்தே புகழ் பெற்றவர். அவருக்கு பிறந்தநாள் கொண்டாட என்றெல்லாம் ரசிகர் மன்றம் உண்டு. அவர் பெயர் எப்படி வாக்காளர் பட்டியலில் இல்லாமல் போய்விட்டது. தேர்தல் ஊழியர்கள் எதற்காக அவரைத் தேடி வீட்டிற்கு வர வேண்டும். கமலஹாசன் பெயர் பத்திரிகைகளில் வந்துகொண்டிருக்கிறது. அவர் படங்கள் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றன. அப்படிப்பட்டவரை வீட்டில் இருக்கின்றாரா என்று ஏன் தேர்தல் ஊழியர்கள் போய்ப் பார்க்க வேண்டும்.

உண்மையில் கமலஹாசன் போன்ற ஒரு நடிகரை வீட்டில் போய்ப் பார்ப்பது என்பது சுலபமான விஷயமுமில்லை. அவர் யாரைப் பார்க்க வேண்டுமென்று நினைக்கிறாரோ அவர்கள் அவரைப் பார்க்க அனுமதிக்கப்படுவார்கள். மற்றவர்கள் சுலபமாக அவரைப் போய் பார்த்துவிட முடியாது. என் இலக்கிய நண்பர் ஒருவர் கமலஹாசனைப் பார்க்க போய்விட்டு, பார்க்க முடியாமல் வெறுத்துப் போய்விட்டார். என்னிடம் இதைச் சொல்லி குமைந்தபோது, 'நீங்கள் ஏன் அவரைப் போய்ப் பார்க்கப் போகிறீர்?' என்றேன். அவரைப் போய்ப் பார்த்து அவர் மூலம் சினிமாவிற்குள் பாட்டு எழுத நுழைந்து விடலாமென்று அவர் நினைத்திருப்பார். இப்படித்தான் கவிதை எழுதும் என் நண்பர்கள் பலர் அவஸ்தைப் படுவதை எண்ணி வருத்தமாக இருக்கிறது. எல்லோருக்கும் எல்லா வெற்றியும் கிடைத்துவிடாது. கவிதை எழுதுவதில் வெற்றி, சினிமா பாடல்கள் எழுதுவதில் வெற்றி என்றெல்லாம் கிடைத்து விடாது.

தேர்தல் ஊழியர்கள் கமலஹாசனை அவர் வீடு தேடி வந்து, கமலஹாசனைப் பார்க்காமல் போனதால் வாக்காளர் பட்டியலில் பெயரை எடுத்திருப்பார்கள்.

என் பெயரும் வாக்காளர் பட்டியலில் இல்லை. அதற்குக் காரணம் நான் காலையில் 7.30 மணிக்கு வீட்டை விட்டுக் கிளம்பினால் திரும்பவும் அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வர இரவு 8 மணி ஆகிவிடும். என்னை தேர்தல் ஊழியர்கள் பார்க்க வாய்ப்பே இல்லை. மேலும் நான் முன்பு இருந்த வீட்டிலிருந்து வேறு வீட்டிற்குக் குடிப்போய்விட்டதால், முன்பு இருந்த வீட்டில் உள்ளவர்கள், 'நான் இல்லை' என்று சொல்லியிருப்பார்கள். உண்மையில் தேர்தல் ஊழியர்கள் பாடு திண்டாட்டம். எப்படி என் குடும்பத்தில் மற்றவர்கள் பெயர்கள் தப்பித்தது என்பது தெரியவில்லை. என் அப்பா பெயர் நிச்சயம் இடம் பெற்றிருக்கும் ஏன்எனில் அவர் வீட்டில்தான் சதாசர்வகாலமும் இருக்கக் கூடியவர். வாக்காளர் பட்டியலில் விடுபடாமல் தப்பித்து சேர்ந்தது என் மனைவியின் பெயரும், புதல்வனின் பெயரும்தான்.

சரி, ஓட்டுப் போடவில்லை என்பதில் வருத்தமா? அதெல்லாம் ஒன்றுமில்லை. கமலஹாசன் மாதிரி நான் ஒருநாளைக்கு 10 லட்சம் இழக்கவில்லை. உண்மையில் எனக்கு சந்தோஷம் தரக்கூடிய நாள் இந்தத் தேர்தல் தினம்தான். தேர்தல் தினத்தன்று அலுவலகம் விடுமுறை விட்டதால், அப்பாடா என்றிருந்தது. ஞாயிற்றுக்கிழமையைத் தவிர extra லீவ். வீட்டில் எல்லோரிடனும் ஒருநாள் முழுவதும் இருந்தேன். காலை 7.30 மணியிலிருந்து அவசரம் அவசரமாக அலுவலகம் ஓடவில்லை. நிம்மதியாக இருந்தேன். காலையில் நிதானமாக எழுந்து சலூன் போய் தலை முடித் திருத்தி, கம்ப்யூட்டரில் (கணினி என்று சொல்ல தோன்றவில்லை) அமர்ந்து 160 பக்கம் நவீன விருட்சம் தயாரித்துக்கொண்டிருந்தேன். காலையில் ஒரு போன் வந்தது. என் எழுத்தாள நண்பர். 'என் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை' என்றார். 'என் பெயரும் இல்லை,' என்றேன். மாலையில் சேலத்திலிருந்து இன்னொரு இலக்கிய நண்பரிடமிருந்து போன் வந்தது. 'என் குடும்பப் பெயர்களே வாக்காளப் பட்டியலில் இல்லை,' என்றார். 'மகிழ்ச்சி' என்றேன்.

8.5.09

எஸ். வைதீஸ்வரனும் மெளனி கதைகளும்....
நேற்று என்று நினைக்கிறேன். இல்லை இல்லை முந்தாநாள் இரவு (06.04.2009) வைதீஸ்வரனிடமிருந்து ஒரு போன் மெளனி கதைகள் புத்தகம் கேட்டு. வைதீஸ்வரன் என்னிடம் புத்தகம் கேட்டு எப்போதும் போன் செய்ததில்லை. அதுவும் மெளனி புத்தகம் ஏன் கேட்கிறார் என்ற ஆச்சரியம் எனக்கு. என்னைப் போன்ற பல படைப்பாளிகளுக்கு மெளனி, புதுமைப்பித்தன், அசோகமித்திரன் போன்ற படைப்பாளிகள் கைடு மாதிரி. வைதீஸ்வரன் இல்லாமல் வேறு யாராவது அந்தப் புத்தகத்தை கேட்டிருந்தால், இல்லை என்று சொல்லியிருப்பேன். கேட்டது வைதீஸ்வரன் என்பதால் என் புத்தக அலமாரியில் போய்த் தேடினேன். மெளனி புத்தகம் கிடைத்ததோடல்லாமல் வேறு ஒருபுத்தகம் ஒன்றை புரட்டிப் பார்க்கும்போது இரு கடிதங்கள் கீழே விழுந்தன. எடுத்துப் புரட்டிப் பார்த்தால் சுந்தர ராமசாமி எழுதிய கடிதங்கள். எனக்கு ஆச்சரியம். அக்டோபர் மாதம் 2001ஆம் ஆண்டு எழுதிய அக் கடிதத்தை ஏன் விருட்சத்தில் பிரசுரம் செய்யவில்லை என்று யோசித்துக் கொண்டிருந்தேன். எந்தக் கடிதம் எழுதினாலும் சுந்தர ராமசாமி பதில் எழுதி விடுவார். அழகாக டைப் செய்து கீழே சுரா என்று கையெழுத்திடுவார். விருட்சம் வெளியீடாக நான் சில புத்தகங்களை அவருக்கு அனுப்பி இருந்தேன். அதற்குத்தான் அவர் பதில் எழுதியிருந்தார். தொடர்ந்து அவருக்கு நான் பதில் எழுத, எனக்கு அவர் இன்னொரு கடிதமும் எழுதியிருந்தார்.திரும்பவும் அக் கடிதங்களைப் படித்த எனக்கு உடனே விருட்சம் இதழில்வெளியிட வேண்டுமென்ற பரபரப்பு கூடியது. அதற்குமுன் பிளாகில் அக் கடிதங்களைப் பிரசுரம் செய்யலாமென்று தோன்றியதால் இங்கு அவற்றைப் பிரசுரம் செய்கிறேன்.முதல் கடிதம் 20.10.2001


அன்புள்ள அழகியசிங்கர் அவர்களுக்கு,


உங்கள் 04.10.2001 கடிதமும் நீங்கள் அனுப்பியிருந்த நான்கு கவிதைத் தொகுதிகளும் கிடைத்தன.பா.வெங்கடேசன் தொகுப்பை அவர் அனுப்பி வைத்திருக்கிறார். அதைத்தான் இப்போது படித்துக் கொண்டிருக்கிறேன். அத்தொகுப்பைப்பற்றி ஒரு மதிப்புரை எழுதலாம் என்ற எண்ணம் இருக்கிறது.நீங்கள் அனுப்பிய தொகுப்புகளைப் படித்துவிட்டு என் அபிப்பிராயத்தைத் தெரிவிக்கிறேன். திட்டம் போட்டு வேலை செய்ய முடியவில்லை. தேதியில் முடித்துத் தரவேண்டிய வேலைக்கு முன்னுரிமை போய்விடுகிறது.இப்போது நீங்கள் அனுப்பித் தந்திருக்கும் தொகுப்புகளை நான் இலவசமாகப் பெற்றுக்கொள்ள விரும்பவில்லை. உங்கள் வெளியீடுகளுக்கு நான் உரிய விலை தந்து வாங்குவதே நியாயமானது. அனுப்பித் தரவேண்டிய தொகையை கணக்கிட்டு எழுதுங்கள். தபால் செலவையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
எதிர்காலத்தில் நீங்கள் காலச்சுவடு மதிப்புரைக்கு அனுப்பும் புத்தகங்களை தனியாக எனக்கு அனுப்ப வேண்டியதில்லை.விருட்சத்தில் நீங்கள் வெளியிடும் அசோகமித்திரனின் வரைபடத்தை என்னால் சகிக்க முடியவில்லை. சமீபத்தில் அவர் சைக்கிளிலிருந்து கீழே விழுந்த நிமிஷத்தில் வேண்டுமென்றால் அவர் முகம் உங்கள் வரைபடம்போல் இருந்திருக்கலாம். இப்போது நல்ல குணம் பெற்றுவிட்டார். நீங்கள் விரும்பினால் நான் ஒரு வரைபடத்தை வரைந்து அனுப்புகிறேன். நீங்கள் வெளியிடுவதைவிட அது நன்றாக இருக்கும்.என் அன்பார்ந்த வாழ்த்துக்களுடன்,சுரா


பின் குறிப்பு : உங்கள் 16.10.2001 கடிதம் இப்போது கிடைத்தது. நீங்கள் புத்தக விலையைத் தெரிவித்ததும் அதனுடன் சந்தா நாற்பது ரூபாய் சேர்த்து அனுப்பிவிடுகிறேன்.(சுரா அசோகமித்திரன் வரைபடத்தைப் பற்றி குறிப்பிடுகிறார். ஓவியர் விஸ்வம் வரைந்த ஓவியம் அது. எனக்குப் பிடித்த அசோகமித்தரன் படம் அது. எப்போதும் விருட்சத்தில் அவருடைய அந்த ஓவியத்தையே வெளியிடுவேன். அசோகமித்திரனுக்கும் அந்த ஓவியம் பிடிக்கும் - அழகியசிங்கர்)இரண்டாவது கடிதம் 15.11.2001

அன்புள்ள அழகியசிங்கர்,


வணக்கம். உங்கள் 06.11.2001 கடிதம் கிடைத்தது. வேலை நெருக்கடியால் உடனடியாகப் பதில்போட இயலவில்லை. மன்னியுங்கள்.அசோகமித்திரன் வரைபடத்தைப்** பற்றி நான் எழுதியிருந்த விமர்சனத்திற்கு அழுத்தம் தருவதற்காகவே 'நான் வரைந்தால்கூட இதைவிட நன்றாக இருக்கும்' என்ற அர்த்தத்தில் எழுதினேன். நான் எழுதிய முறை யதார்த்தமாக நீங்கள் எடுத்துக்கொள்ளும்படி இருந்ததோ என்னவோ.யோகா* வகுப்புக்கு வந்தவர்களுக்க என் பெயர் தெரியாமல் இருப்பதில் என்ன அதிசயம்? என் பக்கத்து வீட்டு டாக்டருக்குத் தெரியாதே! நேற்று தொலைபேசியில் அழைத்து தினமணி தீபாவளி மலரில் கமலஹாசன் சுந்தர ராமசாமி என்று ஒரு பெயரைக் குறிப்பிடுகிறார். தமிழ்நாட்டில் இன்னொரு சுந்தர ராமசாமி யார் என்று கேட்டார். கமலஹாசன் என் பெயரைச் சொல்லியிருக்க முடியாது என்பதில்தான் அவருக்கு என்ன தீர்மானம்! இதற்குத்தான் பெரிய பத்திரிகைகளில் எழுதவேண்டுமென்று புத்திசாலிகள் சொல்கிறார்கள். உண்மைதானே அவர்கள் சொல்வது?இன்று ரூ.155 திரு என் சுப்பிரமணியன் பெயருக்கு அனுப்பி வைக்க இருக்கிறேன்.என் அன்பார்ந்த வாழ்த்துக்களுடன்,சுரா*வெள்ளியங்கிரி நடைப்பெற்ற ஈசா யோகா வகுப்பில் கலந்துகொண்ட நாகர்கோவிலைச் சேர்ந்த சிலரிடம் சுந்தர ராமசாமியைப் பற்றி விஜாரித்தேன். அவர்கள் யாருக்கும் அவருடைய பெயர் தெரியவில்லை. சுந்தர ராமசாமியிடம் ஏன் உங்கள் பெயர் தெரியவில்லை என்று எழுதிக் கேட்டிருந்தேன். அதற்கான பதில்தான் மேலே வந்துள்ளது.


** சுந்தர ராமசாமி பிடிக்கவில்லை என்று கூறிய அசோகமித்திரன் வரைபடத்தை திரும்பவும் இங்கு பிரசுரம் செய்துள்ளேன்.

6.5.09

புத்தக விமர்சனங்கள்

நவீன விருட்சம் ஆரம்பித்த (1988ஆம் ஆண்டு) ஆண்டிலிருந்து அதில் புத்தக விமர்சனங்கள் பல எழுதியுள்ளேன். நினைத்துப் பார்த்தால் இப்போது என்னால் அதுமாதிரி புத்தக விமர்சனங்கள் எழுத முடியவில்லை. இருந்தும் நான் எழுதிய புத்தக விமர்சனங்களைத் தொகுத்து உங்களுக்கு அளிக்க விரும்புகிறேன்.

த பழமலயின் 'சனங்களின் கதை'


த பழமலயின் 'சனங்களின் கதை' என்கிற கவிதைத் தொகுதியில் இரண்டு விஷயங்களை முக்கியமாக கவனிக்கலாம்.


மிக எளிமையான வார்த்தைகள் மூலம் ஊரையும் சுற்றத்தையும் வெளிப்படுத்துவது.


உள்ளது உள்ளபடியே கூறுவது.


எடுத்தவுடன் எதிர்படும் 'அம்மா' என்கிற கவிதையில் 'முற்றத்துப் பவழமல்லி நீ மறந்தும் நினைத்தும் அழும் என்கிறபோது, மிகைப்படுத்தப்பட்ட உணர்வு நிலையில் கவிதை வெளிப்பட்டிருப்பதுபோல் தோன்றினாலும், கூடவே நயம் செறிந்த வார்த்தைகளையும் எந்தவித பகட்டுமின்றி வெளிப்படுத்துகிறது.


அப்பா என்கிற கவிதை

'கடாவை வெட்டுகையில் கண்ணீரும் வடிப்பார்? கருப்பனார் சாமிக்குப் பன்றியும் வளர்ப்பார்? படைக்காமல் உண்பது 'பழையது' மட்டும்

என்கிற தொடக்க வரிகளுடன் அபாரமாக ஆரம்பமாகிறது. இக் கவிதையில் அறிமுகமாகும் ந. தங்கவேல் படையாச்சி எந்தவித ஒளிவு மறைவுமில்லாமல், அவருடைய தற்பெருமையுடன் சேர்த்தே அறிமுகப் படுத்தப்படுகிறார்.

'அப்பாவின் கொடுவாள்' என்கிற கவிதையில் கொடுவாள் இறுதியில்
ஒனக்கு எனக்குன்னு ஒடம் பிரிக்கிற ஒன்னு இருக்கு அத எதுத்துத்தான் நீ என்ன எடுக்கணும்'என்று புத்தி புகட்டுவது புதுமாதிரியாகத் தோன்றுகிறது.

'உழுதவன் கணக்கில்' துண்டை தொலைத்துவிட்டு எதையோ சுற்றிக்கொண்டு, பள்ளிக்கு ஓடுவதிலிருந்து ஆரம்பிக்கிற கவதை ஒரு கசப்பான அனுபவத்தை அங்கதத் தொனியுடன் விளக்குகிறது.

'முருங்கை மரம்' என்கிற கவிதையில் உறவு முறைகளில் நமக்கிருக்கும் நம்பிக்கையை ஆழப்படுத்துகிறார்.

'இனி எனக்குக் கொல்லை வெளிக்குறுக்கு வழிகள் திருகு கள்ளிகளின் செவிகளில் என்வரவு சொல்லும் ஓணான்கள்


என்கிற வரிகள் மூலம் 'த பழமலை 'புத்தரை மறந்த ஊர்' கவிதையில் ஒரு ஊரை நயத்துடன் அறிமுகப்படுத்துகிறார். ஊரிலுள்ள ஏரிக்கரைப் பிள்ளையார் நாத்திகனையும் நலம் விசாரிப்பார்.


..................................... இடாத முத்தத்திற்கு எப்படியெல்லாம் வருணனை


'தப்புக் கணக்கு' என்கிற கவிதையில், சிறுவயது முதற்கொண்டு உறவுகொண்ட ஒரு பெண்ணின் நினைவுகள், அவளுக்குத் திருமணம் ஆகி, இடுப்புக் குழந்தையுடன் பார்க்க வந்தும் ஞாபகத்திலிருந்து அகலாமலிருப்பதைக் குறிப்பிடுகிறார்.

'சனங்களின் கதை' என்கிற இந்தத் தொகுதியில் உள்ள பல கவிதைகள் படிக்கிற உணர்வை ஏற்படுத்துகின்றன என்பதைக் குறிப்பிட்டுச் சொல்வது அவசியமாகப் படுகிறது.

மீண்டும் வாசிக்கிறேன் 1
நிமல விஸ்வநாதனின் மூன்று கவிதைகள்


1. நட்பு


நானுன்னை வெறுக்கவில்லை


நானுன்னோடு சண்டை போட


விரும்புகிறேன் - நன்றாக கவனி நண்பா,


விரும்புகிறேன் உன்னோடு சண்டை போட.


எனினும் இதிலிருந்து இன்னொன்றும்


நீ சுலபமாய் புரிந்து கொள்ளலாம் -


நான் சண்டை போடாத எல்லோரையும்


நான் விரும்புகிறேன் என்றர்த்தமில்லை.


2. நிலை


மத்தியானம் தூங்கினால் மாலையில் என் மனம் குற்றமுணரும்


தெரிந்தும் வேலைதேடும் நான் எப்படியோ


இன்று மத்தியானம் தூங்கிவிட்டிருக்கிறேன்....


திடீரென காறிக் கமறிய காகங்களின் ஒப்பாரி.


கிழித்தெறிந்து விட்டது அதையும் இப்போது...


கனவுக்கு வேலி கட்டிய கைசலிப்பில்


மளாரென எழுந்திருக்க முடியவில்லை என்னால்


வாசலுக்கு வருகிறேன் தெரிகிறது -


இன்றேனோ கருணை காட்டாத மின் கம்பிகள் -


விழுந்து கிடக்குமொரு கறுப்பைச் சுற்றும்


கறுப்பு நிறங்களின் தாறுமாறில்


பல்லிளிக்கும் மேலை வானின் வெள்ளைச் சூரியன்.


அங்கே நிற்கின்ற நிலையில்


எனக் கொன்றும் புரிகிறது -


நடுத் தெருவில் அப்போது தான்


புணர்ந்திறங்குகிற ஆண் கழுதையின்


கண்ணில் கசியும் சோகம்.3. விடுதலை


மாசு மறுவின்றி வெம்பரப்பாய் விரிந்து கிடக்கும்


மத்தியான வெளியில்


படபடத்துப் போகும்


வசீகரமாயொரு வண்ணத்துப் பூச்சி.


திடீரெனப் பாய்ந்தறையும் காற்று, கூடவே


திடீரெனத் துடிக்கும் ஒரு எண்ணம் -


வண்ணத்துப் பூச்சியைப் பிடித்து 'விட'லாம்.


ஆனால் ஏனோ நல்ல வேளை


காற்று போய் எங்கோ மீண்டும்


பழையபடி பதுங்குவதற்குள்


வண்ணத்துப் பூச்சி பிடிக்கும் எண்ணத்தை நான்


காற்றில் விட்டு விட்டேன்.........................(ழ அக்டோபர் 1980 / 11வது இதழ்)

21.4.09

கவிதை புரிய வேண்டுமா வேண்டாமாஇரண்டு வாரங்களுக்கு முன் திரிசூலம் ரயில்வே நிலையத்தில் அமர்ந்திருந்தபோது எங்களுடைய முதல் கேள்வி கவிதை புரிய வேண்டுமா வேண்டாமா என்பதுதான். எங்களிடையே பலத்த சர்ச்சையை இந்தக் கேள்வி ஏற்படுத்தியது. என்னைப் பொறுத்தவரை கவிதை புரிய வேண்டும் என்ற கட்சியைச் சேர்ந்தவன். ஆனால் கவிதை மனதிலிருந்து எழுதுவதால் புரியாமல் போக வாய்ப்புண்டு. கவிதையை எழுதுகிற மனமும், கவிதையை வாசிக்கிற மனமும் வேறு வேறு தளங்களில் இயங்குபவை. அதனால் கவிதை புரியவில்லை என்று ஒரு வாசிப்பவன் சொல்லி கவிதையைத் தூக்கிப் போட்டுவிட முடியும். என் நண்பர்கள் சிலர் கவிதை புரியவில்லை என்றே சொல்லாதே என்று அறிவுரை கூறுவார்கள். ஏனெனில் கவிதை புரியவில்லை என்று சொன்னால் எழுதுபவர்களுக்குப் பெரிய கித்தாப்பு ஏற்பட்டுவிடும். ஆனால் கவிதை எளிதாகப் புரியவேண்டும் என்று பாரதியார் கூறியபடி எளிதாக பல கவிதைகளைப் படைத்திருக்கிறார்.சிலசமயம் கவிதை புரியும் ஆனால் கவிஞர் என்ன சொல்ல வருகிறார் என்பது தெரியாது. அதனால் கவிதையைப் பொருத்தவரை இரண்டுவிதமான அபிப்பிராயங்கள் தோன்றாமல் இருப்பதில்லை. ஒன்று கவிஞரின் அபிப்பிராயம். இரண்டாவது வாசகனின் அபிப்பிராயம். எனக்குத் தெரிந்து நகுலன் ஆனந்த் கவிதை ஒன்றைப் படித்துவிட்டு, என்ன எழுதியிருக்கிறார், புரியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
ஷாஅ என்பவரின் ஒரு கவிதையைப் பார்ப்போம்.
எனதுவீணையின் நரம்புகளுக்குபாடத்தெரியாதுநடனம்தான்தெரியும்.அவைஆடினால்பார்க்கமுடியாதுகேட்கத்தான்முடியும்மேலே குறிப்பிடப்பட்ட கவிதை படிப்பதற்கு எளிதாக தோன்றினாலும், என்ன சொல்ல வருகிறார் என்பதை வாசகர்கள் மூளையைக் கசக்கிக்கொண்டுதான் இருக்க வேண்டும். கவிதை மூலம் எளிமையாகச் சொல்லுதல் வேறு. அப்படி எளிதாக சொல்வதன் மூலம் புரிந்துகொண்டு விட முடியும் என்று சொல்ல முடியாது. ஜே கிருஷ்ணமூர்த்தி சொல்லுவது எளிதாகப் புரிவதுபோல் இருக்கும். ஆனால் ஆழமாக யோசித்தால் ஒன்றும் புரிபடாது. நம் வாழ்க்கைக்கு ஜே கே தத்துவம் உதவாது. என் நண்பர் ஒருவர் ஜே கே பேசுவதைக் கேட்டு எக்ஸ்பிரஸ் காஃபி குடிப்பதுபோல் இருக்கிறது என்பார். இன்னும் பல நண்பர்கள் ஜேகே படித்துவிட்டு இயல்பு நிலையிலிருந்து மாறி விட்டதாக தோன்றும். நான் ஜே கேயைத் தீவிரமாகப் படித்தபிறகு, எனக்கு கோபமே இல்லாமல் போய்விட்டது. யாராவது திட்டினால்கூட கேட்டுக்கெண்டிருப்பேன் சும்மா. நாராணோ ஜெயராமன் என்ற ஒரு கவிஞர். 'வேலி மீறிய கிளைகள்' என்ற தொகுதி க்ரியா பதிப்பகம் மூலம் வெளி வந்திருக்கிறது. இத் தொகுப்பு வந்தவுடன் அவர் எழுதுவதையே நிறுத்திவிட்டார். காரணம் ஜே கே. ஜே கே மாதிரி ஒருவரைப் பார்த்தபிறகு எழுதுவதில் ஒரு அர்த்தமுமில்லை என்பார் அவர். எனக்கு ஜே கே மீது கோபம் வரும்.
அதேபோல் கவிதை எழுதுவதிலும், கவிதையை வாசிப்பதிலும் நம்மைப் பெரிதும் தொடர்பு படுத்திக்கொள்ள முடியும். நாம் கவிதை எழுதுகிறோம். கவிதை வாசிக்கிறோம். எதை வாசிக்கிறோமோ அதை வேறு மாதிரி எழுத முயற்சிக்கிறோம். நாம் வாசிக்கும்போதே நம்முடைய உலகத்தை கவிதை பிடித்து விடுகிறது. அதேபோல் கவிதை எழுதுபவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஏனெனில் கவிதை எழுதுபவனை கவிதை காட்டிக் கொடுத்துவிடுகிறது. இது கவிதை எழுதுபவனுக்கே தெரியாது.
'கொல்லும் முகம்' என்ற சம்பத்தின் கவிதையைப் பார்ப்போம்.
சுழலும் விழிகளில் நீர் ஏனோ?கழநிகளில் பாய்ந்ததுதான் போதாதோ
மறையும் மாலையில் ஒளிர்ந்திடும் -உன் முகம்தான் என் வாழ்வின் விதிப்பயனோ?
தெரிந்ததில்லை பயணம் தொடர்ந்தக்கால்தெரிந்ததில்லை - பருவமதில் - மாற்றத்தில் -தெரிந்ததுதான் யாருக்கு எப்போது?இயம்புமோ உன் முகம்தான் அதைப்பற்றி?என் உறக்க, விழிப்பில், ஊர்ந்தவளேஎன் சிந்தையில் படர்ந்த கொடிப் பூவேஎன் மூளையில் பூத்த வெண் மலரேஉன் முகம்தான் என்னைக் கொன்றதடி.மூளையில் வெண் மலர் பூத்தால் எப்படி இருக்கும்? எதிர்பாராதவிதமாக சம்பத் மூளை வெடித்து இறந்துவிட்டார். இந்தக் கவிதை மூலம் அவர் இது மாதிரி ஒரு முடிவு அவருக்கு ஏற்படுமென்று தெரியாமல் தெரிவித்து விட்டதாக எனக்குத் தோன்றும்.அதேபோல் ஆத்மாநாம் கவிதை ஒன்றை பார்க்கலாம்.
நான் ஒரு ஞானியுமில்லைநான் ஒரு சித்தனுமில்லைபித்தம் பிடித்தும் பிடிக்காத மேதை நான்படித்தும் படிக்காத புலவன் நான்வைத்தியம் தெரிந்தும் செய்து கொள்ளா நோயாளி நான்உண்மையைத் தொட்ட ஒரு பேதை நான்உத்தமனில்லை ஆனால் பொய் சொல்லத் தெரியாதுசத்தியவான் இல்லை ஆனால் உண்மையே பேசுபவன்இவற்றையும் மீறி இருக்கிற கொஞ்சம் மட்டுமே நான்இந்தக் கவிதை தெளிவாகவே ஆத்மாநாமின் மனநிலையைக் காட்டுகிறது. நான் என்ன சொல்ல வருகிறேனென்றால் இக் கவிதை எழுதுபவனுக்கு மட்டுமல்ல வாசிப்பவனையும் வசப்படுத்துகிறது. வாசிப்பவன் இந்தக் கவிதையைப் படித்து மயங்கிவிட்டால் தொலைந்தான். அவனையும் இந்தக் கவிதைப் பிடித்துக் கொண்டு விடும். கவிஞனின் பிரக்ஞையை வாசகனைத் தெட்டுவிடும்.இது கவிஞனின் பிரச்சினையாக மட்டுமல்லாமல், வாசிப்பவனின் பிரச்சினையாகக் கூட மாறிவிடத் தொடங்கும். இதைப் பற்றி இன்னும் யோசித்து எதாவது எழுத முடியுமாவென்று பார்க்கிறேன். இதை வாசிப்பவர்களும் தங்களுடைய கருத்துக்களைத் தெரிவிக்கலாம். (இன்னும் வரும்)

9.4.09

தேர்தலும் நானும்........


(நன்றி : தினமணி)

நான் சாதாரணத்திலும் சாதாரண வாக்காளன். ஓட்டுப் போட உரிமை எனக்கு வந்தபிறகு, ஓட்டுப் போடும் தருணத்தை வேண்டுமென்றே தவற விட்டிருக்கிறேன். ஏனோ இந்த அரசியல் கட்சிகளின் மீது அளவுகடந்த அலட்சியம். இந்தியா மாதிரியான ஒரு பெரிய தேசத்தை ஆள்வது சாதாரணமான விஷயமல்ல. எல்லோரையும் திருப்தி செய்யும்படியான ஒரு ஆட்சியை யாராலும் கொடுக்க முடியாது. பாரதிய ஜனதாவும், காங்கிரசும் குட்டி குட்டி மாநிலக் கட்சிகளின் தயவால் 5 ஆண்டுகள் ஒரு திருப்புமுனையும் இல்லாமல் ஆட்சியை முடித்துக்கொண்டது பெரிய சாதனையாகவே எனக்குத் தோன்றுகிறது. முதலில் இதைச் சாதித்தவர் முன்னாள் பிரதம மந்திரி நரசிம்மராவ்தான்.இப்போதோ எந்த அளவிற்கு உடைய முடியுமோ அந்த அளவிற்கு தேசிய கட்சிகளான காங்கிரசும், பாரதிய ஜனதாவும் உடைந்து போயிருக்கின்றன. தேர்தல் நடப்பதற்கு முன்பே இந்தத் துண்டு துண்டான நிலையை உணர முடிகிறது. தேர்தலுக்குப் பிறகு என்ன நிலை என்பது தெரியவில்லை.
தேர்தல் கவலைக்குரிய விஷயமாக உள்ளது. ஏராளமான பணம் செலவாகும். தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடிக்க தேர்தல் அதிகாரிகள், காவல் துறையினர், ராணுவத்தினர், அரசாங்கத்தில் உத்தியோகம் பார்ப்பவர்கள் என்று பலர் பலவிதமாக முடுக்கப்பட்டு சிரமத்திற்கு உட்படுவார்கள்.
எப்படியாக இருந்தாலும் எதாவது ஒரு கட்சி ஆட்சி செய்ய வரவேண்டும். இப்போது நடக்கப்போகும் தேர்தலில் அப்படி நடக்க வாய்ப்புள்ளதா என்பது சந்தேகமாக உள்ளது.ஒவ்வொரு முறையும் வாக்குப் போடும்போது அதிருப்தி நிலை அதிகரித்துக்கொண்டே போகும். ஒரு சமயத்தில் நான் பலருக்கும் ஓட்டுப் போடுவேன். அல்லது எனக்குத் தெரியாத தனியாக நிற்கும் தனிநபருக்கு ஓட்டுப் போடுவேன். ஒரு முறை திமுகாவிற்கும், இன்னொரு முறை அதிமுகாவிற்கும் ஓட்டுப் போடுவேன். நான் யாருக்கு ஓட்டுப் போட்டாலும், போடாவிட்டாலும் ஆட்சியை ஏற்படுத்தும் சக்தி என் ஓட்டிற்கு இல்லை. பல லட்சக்கணக்கான மனிதர்களில் நானும் ஒருவன் அவ்வளவுதான்.
தேர்தலை ஒடடி நடக்கும் வன்முறை எல்லோரையும் போல என்னையும் கவலைப்படுத்தும். ஒவ்வொரு முறை தேர்தலின் போதும் என் வீட்டுச் சுவரில் பல கட்சிகளின் விளம்பரம் அலங்கரிக்கும். உற்சாகமுள்ள கட்சிக்காரர்கள் சுவர்களை நாசம் செய்துவிடுவார்கள். தேர்தல் முடிந்தபின்னும் சுவரொட்டிகளைத் தாங்கி நிற்கும் சுவர்கள் இருந்துகொண்டே இருக்கும்.தேர்தலைச் சந்திப்பவர்கள் ஏகப்பட்ட பணத்தைத் தண்ணீராக செலவு செய்துகொண்டே இருப்பார்கள். கருப்புப் பணத்தையெல்லாம் தாராளமாகச் செலவிடுவார்கள். ஒரு வங்கியிலோ, அரசாங்கத்திலோ ஒருவர் பணியில் சேர்வதற்கு, குறைந்தபட்சம் கல்வித் தகுதி, தேர்வு எழுதி அதில் வெற்றி பெறும் தகுதி என்றெல்லாம் தேவை. ஆனால் ஒரு அரசியல் பிரமுகருக்கு எதுமாதிரியான தகுதி வேண்டும்?

1.4.09

கவிதையும் பார்வையும்

கவிதைகள் ஒரே பார்வையைக்கொண்டு வெளி வருகின்றன. அப்படி வெளி வருகின்ற கவிதைகளைப் படிக்கும்போது, ஒரே மாதிரியான கவிதைகளை வாசிக்கிறோம் என்ற உணர்வு எழுந்தாலும், ஒவ்வொரு கவிதையும் வெவ்வேறு உணர்வு உலகத்தை நமக்குச் சித்தரித்துக் காட்டுகிறது. உதாரணமாக சமீபத்தில் மரணத்தைப் பற்றி அதிகமான கவிதைகளை இரு கவிஞர்கள் ஒரே சமயத்தில் எழுதி உள்ளார்கள். இது ஒருவரைப் பார்த்து இன்னொருவர் எழுதியிருக்கலாம் அல்லது கவிதைகளைப் பரிமாறிக்கொள்ளாமலே எழுதியிருக்கலாம். இப்படி வாசிக்கிற கவிதைகளில், கவிதையின் பொருள் ஒன்றாக இருந்தாலும், ஒவ்வொருவரும் மரணத்தை எப்படி எழுதியுள்ளார்கள் என்பதை கவனிக்க வேண்டும். இப்படிப் பார்க்கும்போது மரணத்தைப் பற்றி இவர்கள் இருவர்தான் எழுதி உள்ளார்கள் என்பது அர்த்தமில்லை. இதற்குமுன் மரணத்தைப் பற்றி பலர் எழுதி உள்ளார்கள்.
காலச்சுவடு இதழில் வெளிவந்த 'சிபிச்செல்வன்' கவிதையான 'சாவிற்காகக் காத்திருக்கும் துயரம் மிகுந்த கணங்கள்' என்ற கவிதையை எடுத்துக் கொள்வோம். இக் கவிதை மரணத்தைப் பற்றி எழுதப்பட்ட கவிதைகளின் தொடர்ச்சி.
பெருந்துயரிலலைகிறேன் சுடு பாலைவெளிகளில்
இருளடர்ந்த இரவுகளில் வேதனையின் உச்சத்தில்
அலறியழுகிறேன். இரக்கமற்ற இரவுகள்
மெல்ல மெல்ல நெரித்து விளையாடுகின்றன
எல்லையற்ற
பெருவெளியில் சாகிறார்கள்
வாழ்வதற்காக ஆசைப்படுகிறவர்கள்
இதேபோல் 'பூமா ஈஸ்வரமூர்த்தி' மரணத்தைப் பற்றி எழுதிய நீண்ட கவிதையைப் பார்ப்போம். 'சிற்றெறும்பு' என்ற கவிதை,
சின்ன
சட்டகத்துள்
பாதுகாக்கப்பட்ட
சின்ன கடவுள்
சின்ன மேஜையில்
சின்னக் கிண்ணத்தில்
கல்கண்டு கலந்த பால்
அலையில்லாத
பாற்கடலில்
செத்து மிதந்தன
சிற்றெறும்புகள் மேலே
குறிப்பிடப்பட்ட இரு கவிதைகளையும் கூர்ந்து பார்த்தால், முதல் கவிதையில் தென்பட்ட கவியின் பார்வை எந்த அளவிற்கு மரணத்தைச் சொல்வதில் இரண்டாவது கவிதையிலிருந்து விலகி இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளமுடியும். முதல் கவிதையில் வெளிப்பட்ட நெருக்கம், இரண்டாவது கவிதையில் இல்லை. அடிப்படையில் மரணத்தைப் பற்றி கூறினாலும், முதல் கவிதை ஒரு கருத்தை கூறுகிறது. இரண்டாவது கவிதை ஒரு அனுபவத்தை வெளிப்படுத்துகிறது. இக் கவிதைகள் இரண்டும் இருவிதப் பார்வைகளை மரணத்திலிருந்து விலகியே வெளிப்படுத்துகின்றன. பொதுவான அம்சமாக இரு கவிதைகளிலும் மரணத்தைப் பற்றிய பதைப்பு வெளிப்படவில்லை.
ஆனால் முதல் கவிதையில் படிப்பவரின் பிடிப்பு வெளிப்படுவதுபோல், இரண்டாவது கவிதையில் இல்லை. ஞானக்கூத்தன் இதை ஒரே துறையில் எழுதப்படுகிற கவிதைகள் என்று குறிப்பிடுகிறார். இங்கு நாம் ஆராய்வது கவிதை ஒரே துறையில் எழுதப்பட்டாலும், ஒவ்வொரு கவிதையும் எந்தப் பார்வையை முன்னிறுத்துகிறது என்பதுதான்.
உதாரணமாக, 1. அழகியசிங்கர் எழுதிய 'அவர்' என்ற கவிதையும்
2. எஸ் வைதீஸ்வரன் எழுதிய, 'பிரிவுபசாரம்' என்ற கவிதையும்
3. ஞானக்கூத்தன் எழுதிய, 'நாயர் ஓய்வுப் பெற்றார்' என்ற கவிதையும் பார்ப்போம்.
இம் மூன்று கவிதைகளும் நீóóண்ட காலம் பணி புரிந்தவரின் ஓய்வுப் பெறும் அனுபவத்தை மையமாகக் கொண்டு புனையப்பட்டுள்ளது. அதாவது ஓய்வு பெறுதல் என்ற அடிப்படையான துறையைக் கொண்டு, ஆனால் மூன்று விதமான பார்வைகளை நம் முன் இக் கவிதைகள் வெளிப்படுத்துகின்றன. முதலில், 'அவர்' என்ற கவிதையை எடுத்துக்கொள்வோம்.
'எழுந்தவுடன் தெரிந்தது
அவர் பணியிலிருந்து
ஓய்வு பெறும் நாளென்று
இக் கவிதையில் கவியின் குரல் பணியிலிருந்து ஓய்வு பெறும் ஒருவரைப் பற்றி பணிபுரியும் ஒருவர் கூறும் கூற்றாக ஒலிப்பது தெளிவாகத் தெரிகிறது. ஓய்வு பெறும் தறுவாயில் புன்னகை பூத்தவாறு இருப்பதாக கவியின் கூற்றாக வெளிப்படுகிறது.
'அவர் எப்போதும்
அந்த இடத்தில்
சில சந்தர்ப்பங்களில்
அவர் இல்லாமலிருந்தாலும்
அவர் அமரும் விதத்தில்
என்று விவரிக்கும்போது, ஓய்வு பெறப் போகிற ஒருவரைப் பற்றி, பணியில் இருக்கும் ஒருவர் ஒருவித இரக்க உணர்ச்சியோடு, ஓய்வு பெறுபவர் பற்றிய தன் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்கிறார்.
'ஏதோ ஒரு தருணத்தில்
எங்கோ ஒரு புள்ளியில்
அலுவலக விதியை
சந்திக்கும் சந்தர்ப்பத்தில்
சிறு சிறு உரசல்கள்
என்று குறிப்பிடும்போது, அலுவலகத்தில் சில சந்தர்ப்பங்களில் அவர்கள் இருவரிடையே அலுவலகச் சம்பந்தமாக சில சமயம் தகராறு ஏற்பட்டிருந்தாலும், அதெல்லாம் அலுவலகத்தில் ஏற்படுகிற சாதாரண நிகழ்ச்சியாக விவரிக்கப்படுகிறது. காலையில் எழுந்ததிலிருந்து ஒருவர் ஓய்வுப் பெறும் ஒருவரைப் பற்றி தீவிரமாக தன் உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒற்றைக் குரலைக் கொண்ட கவிதையாக வெளிப்படுகிறது..
இரண்டாவதாக 'பிரிவுபசாரம்' கவிதையை எடுத்துக்கொள்வோம்.
உபயோகம் தீர்ந்த
கரும்பலகை எழுத்துக்கள்
ஒரு கைத்துடைப்பின் வீச்சில்
காற்றை
நரைத்த தூசுகளாக்கும்
என்று குறிப்பிடும்போது இக் கவிதையில் பார்வை ஓய்வு பெறும் ஒருவர் மீது கவனத்தைத் திருப்புகிறது. இக் கவிதையில் கவியின் கூற்றாக ஓய்வுப் பெறும் ஒருவரின் வழியாக வெளிப்படுகிறது. அதாவது 'அவர்' கவிதையில் ஓய்வு பெறுபவர் பற்றி இன்னொருவர் வைக்கும் பார்வையை கவியின் குரல் தெளிவாக முன் வைக்கிறது. ஆனால் 'பிரிவுபசாரம்' என்ற கவிதையில் கவியின் கூற்றாக முன் வைக்கப்படுவது ஓய்வு பெறப்போகிற ஒருவர் பற்றி அவரே தெரியப் படுத்துகிற கூற்றாக ஒலிக்கிறது. இதனால்,
'அவசரமாய் உடனே
அங்கே உயர்ந்த
பல்வேறு நீளக்கைகள்
ஒரு கூட்டப் பாம்புகளாய்
தெரிகிறது. ஓய்வு பெறுவதில் ஓய்வுப் பெறப்போகும் நபருக்கு விருப்பம் இல்லை என்றும், ஆனால் மற்றவர் கூட்டப் பாம்புகளாய் மாறி துரத்தி விடுவதாக கவிக் கூற்றாக வெளிப்படுகிறது.
மூன்றாவது கவிதையான 'நாயர் ஓய்வுப் பெற்றார்' என்ற கவிதையைப் பார்ப்போம். இக் கவிதையிலும் ஓய்வுப் பெறும் ஒருவரைப் பற்றி இன்னொருவர் கூறும் கூற்றாக இக் கவிதையின் பார்வை வெளிப்படுகிறது. ஓய்வுப் பெறப் போகிற நபர் ஒரு மலையாளி.
'அதற்கு முன்னே ஒருநாள் அவரை
தற்செயலாகத் தெருவில் கண்டேன்
'வாருங்கள் நாயர் கடையில் தேநீர்
குடிக்கலாம்' என்றேன்.
அவரென்னைப் பார்த்தார்
இப்படிச் சொல்லும்போது வேண்டுமென்றே குஞ்சு குட்டன் நாயரின் வெங்காய வேர் மீசையில் கோபம் ஏற்படுவதைக் காண முடிகிறது.
குஞ்சு குட்டன் நாயர்
ஓய்வுபெற்ற நாளன்று சம்பிரதாயமாக
எல்லோரும் அவரது சேவையைக்
குறிப்பிட்டுப் பேசினார்கள்.
ரோஜா மாலையை நெருடிக் கொண்டு
நாயர் என்னவோ நன்றி சொன்னார்
என்று இக் கவிதை முடிகிறது. இம் மூன்று கவிதைகளையும் உற்றுப் பார்க்கும்போது, ஓய்வு பெறுகிற ஒரே விஷயத்தை இம் மூன்று கவிதைகள் வெளிப்படுத்தினாலும், மூன்று வெவ்வேறு பார்வைகளை இம் மூன்று கவிதைகளும் வெளிப்படுத்துகின்றன.
'அவர்' என்கிற கவிதை ஓய்வு பெறப் போகிற நபரைப் பற்றி அக்கறையை கவிக்குரல் மூலம் வெளிப்படுகிறது. 'பிரிவுபசாரம்' என்ற கவிதை ஓய்வுப் பெறுவதற்கு கவிக்குரலோனுக்கு விருப்பமில்லை என்றும், ஆனால் மற்றவர்கள் இரக்கமற்று நீளக் கைகள் கூட்டப் பாம்புகளாய் துரத்துவதுபோல் வெளிப்படுகிறது. மூன்றாவது கவிதையான, 'நாயர் ஓய்வுப் பெற்றார்,' என்ற கவிதையில், ஓய்வுப் பெறப்போகும் குஞ்சு குட்டன் நாயருக்கும், கவிக் குரலோனுக்கும் கொஞ்ச நாட்கள்தான் பழக்கம். அதனால்தான் நாயர் ஓய்வுப் பெறும் தறுவாயை
ரோஜா மாலையை நெருடிக் கொண்டு
நாயர் என்னவோ நன்றி சொன்னார்
என்று முடிக்கிறார்.இன்னும் சுருக்கமாகப் பார்க்கும்போது முதல் கவிதை: ஓய்வுப் பெறும் நபர் மீது இரக்கப்படும் சுபாவமாக கவியின் குரல் வெளிப்படுகிறது. இரண்டாவது கவிதை : ஓய்வு பெறுவதை விரும்பவில்லை. ஆனால் வலுக்கட்டாயமாக எல்லோரும் துரத்துவதாக ஒருவித அவநம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. மூன்றாவது கவிதை : ஓய்வுப் பெறப் போவதால் ஏற்படப்போகும் உணர்ச்சிப் போராட்டம் சிறிதும் இல்லை. அதனால் ஓய்வுப் பெறப்போகும் ஒரே சம்பவத்தைக் கொண்ட மூன்று வெவ்வேறான பார்வைகளைக் கொண்ட கவிதைகளாக இதைக் குறிப்பிடலாம்.
( 27.12.2003 அன்று எழுதப்பட்டது)

28.3.09

வைரமுத்துவும் சம்பத்தும்


யோசித்துப் பார்த்தால் வைரமுத்துதான் தமிழில் அதிகமாக விருதுகளைப் பெறுபவர் என்று தோன்றுகிறது. சமீபத்தில் அவருக்கு 'சாதனா சம்மான்' விருது கிடைத்துள்ளது. இச் செய்தியை வெளியிட்ட பத்திரிகை 'மேலும் ஒரு விருது' என்று குறிப்பிட்டிருந்தது. இப்படியெல்லாம் விருதுபெற அவர் பெரிய சாதனை செய்திருக்க வேண்டும். ஆரம்பத்தில் அவர் சினிமாப் பாடலாசிரியராக அறிமுகமாகிறார், பின் அவர் கவிஞராக தன்னை தெரியப்படுத்திக் கொள்கிறார். பின் நாவலாசிரியராக பவனி வருகிறார். அவர் எழுதினால் போதும் எல்லோரும் வரவேற்று பிரசுரம் செய்ய தயாராக இருக்கிறார்கள். அவருடைய நாவல் தொடர் கதையாக பெரிய பத்திரிகைகளில் வெளி வருகிறது. ஒரு பத்திரிகையில் அவர் கேள்வி பதில் எழுதுகிறார். இன்னொரு பக்கம் அவர் சினிமாவிற்கு பாடல்களை எழுதித் தள்ளுகிறார்.அவருடைய முக ராசி அவர் எதை எழுதினாலும் அவருக்கு விருது தேடிக்கொண்டு வருகிறது. அரசாங்கம் விருது கொடுக்கிறது. தனியார் நிறுவனம் விருது கொடுக்கிறது. சிறந்த பாடலாசிரியருக்கான விருது வாங்குகிறார். சிறந்த கவிதைக்கான விருது வாங்குகிறார். சிறந்த நாவலுக்கான விருதையும் பெறுகிறார். இப்படி சகலகலா வல்லவனாக இருக்கிறார்.அதேசமயத்தில் சம்பத் என்ற எழுத்தாளரைப் பற்றி இங்கே குறிப்பிட விரும்புகிறேன். அவர் இப்போது உயிரோடு இல்லை. அவர் எழுத்து முதன் முதலாக கணையாழியில் வெளிவந்தபோது, சுஜாதாவையும் சம்பத்தையும் இணைத்து தமிழில் முக்கியமான படைப்பாளிகள் என்று எழுதியிருந்தார்கள். ஆனால் குமுதம் மூலமாக சுஜாதாவிற்குக் கிடைத்த வெற்றி சம்பத்திற்குக் கிட்டவில்லை. எதிலும் வெற்றி சுஜாதாவிற்கு. ஆனால் அவருக்கும் முக்கியமான விருதெல்லாம் கிடைக்க வில்லை.சம்பத்திற்கோ பெரும் பத்திரிகைகளில் படைப்பு வெளிவர வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது. ஒருமுறை ஒரு நாவல் எழுதிக்கொண்டு போய் இந்திரா பார்த்தசாரதியிடம் சம்பத் காட்ட, இந்திரா பார்த்தசாரதி அந் நாவலைப் படித்து திருப்தியாக வரவில்லை என்று கூற, சிறிது நேரத்தில் சமையல் அறையில் ஏதோ பொசுங்குவதுபோல் தோன்ற, இ.பா உடனே ஓடிப் போய்ப் பார்த்திருக்கிறார். சம்பத் படிக்கக் கொடுத்த நாவல் சாம்பலாகிக் கொண்டிருந்தது. இந்தச் சம்பவத்தை இ.பாவே என்னிடம் தெரிவித்திருக்கிறார். சம்பத்திற்கு அவர் வாழ்க்கையே பிரச்சினையாகப் போய்விட்டது. அவர் பார்த்த வேலை போய்விட்டது. சம்பாதிப்பதே பெரியபாடாகப் போய்விட்டது. அவர் எழுத்துகளை சிறுபத்திரிகைகள்தான் பிரசுரம் செய்தன. 1000 பிரதிகளைக் கூட தாண்டாத சிறுபத்திரிகையில் அவர் எழுதியதால் அவரைத் தெரிந்திருக்க வாய்ப்பு மிகக் குறைவு. சம்பத் 'பிரிவு, மரணம்' என்ற அடிப்படையில் உழன்று அவற்றுக்கு விடை தெரியாமல் போய்விட்டார். அந்த சம்பத்தின் சிறந்த நாவலான 'இடைவெளி' க்ரியா மூலம் புத்தகமாக தயார் ஆகிக்கொண்டிருக்கும்போது சம்பத் அவர் கதைகளில் எழுதியவாறே மூளையில் ரத்த நாளங்கள் வெடித்து இறந்து விட்டார்.இதே தமிழ் சமுதாயம்தான் வைரமுத்து என்ற படைப்பாளிக்கு கேட்காமலே விருதுகளை அள்ளி அள்ளித் தருகிறது. அப்படி விருதுகளை அள்ளித் தருவதே வைரமுத்துவிற்கு வழங்கும் தண்டனையா என்பது தெரியவில்லை. அப்படி விருது மழை கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது.

23.3.09

சில குறிப்புகள் - 11
கோவில்பட்டியைச் சேர்ந்த கவிஞர் அப்பாஸ் 49வது வயதில் வெள்ளிக்கிழமை காலை (20.03.2009) இறந்த செய்தியை என் நண்பரும் கவிஞருமான சிபிச்செல்வன் மூலம் அன்றே அறிந்தேன். நான் கவிஞர் அப்பாஸ் அவர்களைப் பார்த்ததாக ஞாபகமில்லை. ஆனால் அவர் கவிதைகளை அறிவேன். 'வரைபடம் மீறி' என்ற அவர் கவிதைத் தொகுதிக்கு விருட்சத்தில் விமர்சனம் எழுதியதாகக் கூட ஞாபகமிருக்கிறது. அவருடைய மரணத்தைப் பற்றிய செய்தி தினமணி நாளிதழில் ஒரு மூலையில் வெளியிட்டிருந்தார்கள். மற்ற பத்திரிகைகள் அதைக்கூட கண்டுகொள்ளவில்லை. அவ்வளவுதான் அப்பாஸ் வாழ்க்கை முடிந்துவிட்டது. பல எழுத்தாளர்களுடைய மரணம்கூட இப்படித்தான் யார் கவனத்தையும் கவராமல் போய்விடுகிறது. மிகச் சிறிய வட்டத்தில்தான் அப்பாஸ் மரணமடைந்துவிட்டார் என்பது தெரியும். சமீபத்தில் இப்படி மறைந்த இன்னொரு கவிஞர் சுகந்தி சுப்பிரமணியன். அப்பாஸ் நினைவாக அவருடைய கவிதைகளைச் சமர்ப்பிக்கிறேன்.


உன் முகம்


உன்னைப் பற்றிய என் பிரக்ஞை


கடிகார முட்களை தாண்டிய


பூமியின் இருப்பு.


நடக்கும் கால்களில் தெரியும்


உன் முகம், ஒரு பாதி.


இருப்பை அறியாது உள்வளரும் மரம்


நானும், நீயும் காணாத காற்று


அறிந்ததில் தெரிந்தது


அறிந்ததை தாண்டி


எப்போதும் விரியும் பூ.இடைவெளி


வெளியில் இருந்து அறை திரும்பிய நான்


லுங்கி மாற்றி,


ஃபேனை தட்டிவிட்டு


மல்லாந்து சாய்ந்தேன்காற்று பரவ


தன் இடைவெளிகளில் விடுதலை கண்டது


மின் விசிறி.மலையும் வீடும்


வீட்டிலிருந்து மலைகளை


சுதந்திரமாய் பார்த்தேன்


பின்


பாதை பற்றி மலை ஏறி


இறங்கும் நீர்வீழ்ச்சி என


வீடுகளை சுதந்திரமாய் பார்த்தேன்


பார்த்தது விழித்துக்கொள்ள


இப்பொழுது


என் குழந்தையோடு விளையாடிக்


கொண்டிருக்கிறேன்.
ரோஜா


சொல்லிக்கொள்ளாமலே போ


கேட்டு வருவதில்லை காற்று


சொல்வதில் நீள்கிறது


யாருமற்ற ஒற்றையடிப் பாதை


யாருக்கும் தெரிவதில்லை


நீரற்ற கண்ணாடி தம்ளர்


எப்போதும் காலிய்க்கிவிடு


வார்த்தைகளை கவனமாய்


இருப்பது ஆபத்து


முடிந்தால் ஒரு ரோஜா பதியம்


நட்டு வை


எப்படி, எதுவென்று


யாரிடமும் சொல்லாதே


நீ சொல்லிய எதையும்


கொண்டதில்லை ரோஜா


20.3.09

வைதீஸ்வரனின் இரண்டு கவிதைகள்


மிழில் மூத்த கவிஞர் வைதீஸ்வரன். கவிதைகள் மட்டுமல்லாமல், ஓவியத்திலும் நாட்டமுடையவர். சமீபத்தில் அவர் வரைந்த ஓவியங்கள் சிலவற்றை நவீன விருட்சம் இதழுக்காகப் பெற வேண்டுமென்று நினைத்தேன். அப்படி நினைத்தபடி என்னால் போக முடியவில்லை. காரணம் 7.30 மணியிலிருந்து மாலை 7.30 மணிவரை உள்ள அலுவலக நிர்ப்பந்தம். மேலும் நான் அலுவலகத்திலிருந்து வீட்டிற்குச் சென்றுவிட்டால் வேறு எங்கும் என்னால் செல்ல முடியவில்லை.


அதனால் ஒருநாள் அலுவலகத்திலிருந்து அவர் வீட்டிற்குச் சென்றேன். அவர் வீட்டிலுள்ள எல்லோரையும் எனக்குத் தெரியும். குறிப்பாக வைதீஸ்வரனின் தாயாரை. அவருக்கு வயது 90க்கு மேல் இருக்கும். வைதீஸ்வரனும் நானும் சந்திக்கும்போது (அதுவே ரொம்ப ரொம்ப அதிசயமாக நடக்கக் கூடியது) அவர் வீட்டு வராந்தாவில் அமர்ந்து சில நிமிடங்கள் அவருடைய படைப்புகளை வாங்கிக்கொண்டு சென்று விடுவேன். அவர்கள் வீட்டிலுள்ளவர்களைப் பொதுவாகப் பார்க்க மாட்டேன். இந்த முறை வைதீஸ்வரனுக்குப் போன் செய்தபோது, அம்மா பாத்ரூம் போகும்போது கீழே விழுந்துவிட்டார் என்று குறிப்பிட்டார். எனக்கு கேட்க என்னவோ போல் இருந்தது. வயதானவர்கள் கீழே விழும்போது உயிருக்கு ஆபத்து நெருங்கி விட்டதாக அர்த்தம். கீழே விழுந்தாலும் அம்மாவைப் பார்த்துக் கொள்வது என்பது அவர்கள் வீட்டில் சிரமம். வைதீஸ்வரனுக்கு 70 + வயது இருக்கும். அவர் மனைவிக்கு 65 + வயதிருக்கும். மேலும் அவர் மனைவிக்கு இயல்பாக நடமாட முடியாத துன்பம்.

வைதீஸ்வரனைப் பார்க்க வந்தபோது, அவர் அம்மாவைப் பார்க்க வேண்டுமென்று தோன்றியது. அவரும் அம்மா இருக்குமிடத்திற்கு அழைத்துப் போனார். அவர் அம்மா நாற்காலி ஒன்றில் அமர்ந்துகொண்டு, கண்ணாடி மாட்டிக்கொண்டு ஏதோ பத்திரிகையைப் பார்த்துக்கொண்ட மாதிரி தெரிந்தது. ''என்னைத் தெரியறதா?'' என்று கேட்டேன். ''விஸ்வநாதனா?'' என்று கேட்டார். ''இல்லை..இல்லை..மெளலி (புனைபெயர் அழகியசிங்கர்),'' என்றேன். அவர் தாயாரைப் பார்த்து பல ஆண்டுகளுக்குமேல் இருக்கும்.''ஏன் இளைத்துப் போயிட்டே?'' என்று கேட்டபோதே என்னை அடையாளம் கொண்டுவிட்டார் என்று தோன்றியது. விஸ்வநாதன் என்ற டாக்டர் ஒருவர் என்னை மாதிரிதான் இருப்பார் என்று வைதீஸ்வரன் கூறினார். அன்று சற்று வித்தியாசமான வைதீஸ்வரனின் ஓவியங்களை வாங்கிக்கொண்டு வந்தேன். இது நடந்து 2 நாள் கழித்து வைதீஸ்வரனிடமிருந்து போன் வந்தது. அவர் தாயார் இறந்து விட்டாரென்று. கேட்க வருத்தமாக இருந்தது. 90 வயதில் ஒருவர் உயிரோடு இருப்பதே சிரமம். மரணம் விடுதலையாகத்தான் இருக்கும். இருந்தாலும் வைதீஸ்வரனைத் திரும்பவும் பார்க்கும்போது அவர் துக்கமாகத்தான் தென்பட்டார். அவருடைய தாயாரை இழந்து நிற்கும் அவருக்கும், அவருடைய குடும்பத்தாருக்கும் விருட்சம் சார்பில் இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இத் தருணத்தில் விருட்சத்திற்கு சமீபத்தில் அவர் அனுப்பிய கவிதைகள் இரண்டை சமர்ப்பிக்கிறேன்.

குழுக்கள்

இரண்டையுமே

ஒன்றுபோல நேசித்து வந்தேன்

ஏதோ.....

ஒரு மனிதனுக்கு அது தான்

உயர்ந்த பக்குவம் போல


இரண்டுமே என்னை

ஏகமாகப் பாராட்டின

ஏதோ....

தங்களை மட்டும் நேசிப்பதாக

தவறாக எண்ணிக்கொண்டு

உண்மை ஒருநாள்

பொதுவாக விடிந்தவுடன்

இரண்டுமே என்னை

தூக்கி எறிந்தன தெருவில்

ஒற்றுமையாக!

ஏதோ.........

தங்கள் நேசத்துக்கு நான்

தகுதியற்றவன் என்பது போல

தெருமண் ஒட்டிய உடம்போடு

ஊன்றி எழுந்தபோது தான்

நியாயம் எனக்கும் உறைத்தது

ஊரோடு இனி ஒட்டி வாழவேண்டுமென்று

ஒரு ஆரம்பமாக

அருகில் நின்ற நண்பனை

அந்தரங்கமாக வெறுக்கத் தொடங்கினேன்

முகத்தின் புன்சிரிப்பு மாறாமல்.

தமிழ் பாடம்

வீரமாக தமிழ் நடத்த வேணுமென்று

வாத்தியார் விரும்பினார்

அந்த நாளில் அது பரவலமான மோகம்

நான் ஆறாம் வகுப்பென்று ஞாபகம்

வீரம் விளங்காத வயது

பயம் அறியாத கன்று

அரையடி உயர மேடையில் வாத்தியார்

சிகை பறக்கும் வேகமும்

நாற்றிசையும் தெறிக்கும் ஈர வசனமும்

கரகரத்த குரலும் விரிந்த நாசியும்.....

எனக்கு 'பக்கென்று' சிரிப்பு

பொத்துக்கொண்டது

அவர் அதட்டினாலும்அடங்கவில்லை

மறுகணம்

மேடைவீரம் தமிழ்ப்புயலாய்

கோலோடு குதித்தது என்மேல்

நய்யப் புடைத்தார் நாச்சிமுத்து வாத்தியார்

அடியோ பலம்

ஆனால் ஏனோ 'அய்யோ அய்யோ'வென்று கத்தவில்லை

பேச்சைப்போல் கோபம்

பாசாங்காக இல்லை போலும்!

ஒழுங்கைத்தான்

உதைத்து சொல்லியது
17.3.09

இலக்கியக் கூட்டம்


ந்த ஞாயிற்றுக்கிழமை (15.03.2009) எங்கே போவது என்று யோசித்தேன். அய்யப்பமாதவனின் நிசி அகவல் விமர்சனக் கூட்டத்திற்குச் செல்லலாம் என்று தோன்றியது. மாலை 5.30க்குக் கூட்டம். ஆனால் இலக்கியக் கூட்டம் குறித்த நேரத்தில் தொடங்குவது இல்லை. அதுதான் வழக்கம். அதனால் நான் 5.30 மணிக்கு அங்கு செல்லவில்லை. தனியாகப் போகப் பிடிக்கவில்லை. கூட ஸ்ரீனிவாஸனைக் கூப்பிட்டேன். நண்பர் ஸ்ரீனிவாஸன் வர ஒப்புக்கொண்டார். பொதுவாக என்னால் ஒரு வகுப்பில், இலக்கியக் கூட்டத்தில் தொடர்ந்து பேசுவதைக் கேட்டுக்கொண்டே உட்கார சிரமமாக உள்ளது. அலுமினிய கிளப், போட் கிளப் அருகில் என்ற இடம் என் மனதை மிகவும் கவர்ந்தது. முன்பே ஒருமுறை அலுவலக நண்பர் ஒருவரின் குழந்தையின் பிறந்த தினக் கொண்டாட்டத்திற்கு அங்கு சென்றிருக்கிறேன்.

அய்யப்பமாதவனின் கூட்டத்திற்கு நானும் ஸ்ரீனிவாஸனும் சற்று தாமதமாக வந்து சேர்ந்தோம். ஞானக்கூத்தன் பேசிக்கொண்டிருந்தார். அவருடைய பேச்சை முடிக்கும் தறுவாயில்தான் நுழைந்தோம். அவர் பேசி முடித்தவுடன் ஒவ்வொருவராகப் பேச ஆரம்பித்தார்கள். நேசன் பேச ஆரம்பித்தார். மிகவும் நிதானமாக ஒவ்வொரு வரியாக யோசித்து யோசித்துப் பேசுவதாகத் தோன்றியது. அய்யப்பமாதவன் தன்னடக்கமாக அமர்ந்திருந்தார். கூட்டத்தைப் பார்க்கும்போது ஜாலியாக இருந்தது. அய்யப்ப மாதவன் வயதையொத்த நண்பர்கள் பலர் இருந்தார்கள். அதில் பலர் கவிதைகள் எழுதுவார்கள். அக்கூட்டத்தில் ஒருவரை ஒருவர் கட்டி முத்தமிட்டுக்கொண்டிருந்தார்கள். ''என்ன நேசன், இதுமாதிரியெல்லாம் நடக்கிறதே?''என்று கேட்டேன். நேசன் சிரித்துக்கொண்டே சொன்னார். ''இன்னும் ஒருவர் வந்தால் உதட்டிலே முத்தம் கொடுப்பார்,'' என்றார்.

யவனிகா ஸ்ரீராம் அய்யப்பமாதவனைப் பற்றி ஒருமையில் நட்புடன் பேசினார். எல்லோரும் ரசித்தோம். நிசி அகவல் என்ற தலைப்பு வசீகரமாக இருந்தது. புத்தக விலை 60 ரூபாய் என்று போட்டிருந்தது. நல்ல தாளில் பிரமாதமான அட்டைத் தாளில் புத்தகம் அச்சிடப்பட்டிருந்தது. விமர்சனக் கூட்டத்தில் உள்ள பிரச்சினை யாரும் புத்தகம் படிக்காமல் வந்து உட்கார்ந்திருப்பார்கள். இக் கூட்டம் ஒவ்வொன்றும் அரசியல் கட்சி கூட்டம் போடுவதுபோல் தோன்றுகிறது. ஒவ்வொருக்கும் ஒரு கூட்டம் சேர்ந்துவிடும். அய்யப்பன் மாதவனுக்கு கிட்டத்தட்ட 50 பேர்களாவது வந்திருப்பார்கள். இது வரவேற்க வேண்டிய கூட்டமாக எனக்குத் தோன்றுகிறது.

நான் பல ஆண்டுகளுக்கு முன் விருட்சம் சார்பில் சுந்தர ராமசாமியை வைத்து ஒரு கூட்டம் நடத்தினேன். காலச்சுவடிலிருந்து யாரும் வரவில்லை. ஏன் வரவில்லை என்று யோசித்தேன்? நான் விருட்சம். கூட்டம் நடத்துகிறேன். அதனால் காலச்சுவடிலிருந்து யாரும் வந்திருக்க மாட்டார்கள் என்று தோன்றியது. சுந்தர ராமசாமியை வைத்து கூட்டம் நடத்தினாலும் அப்படித்தான். அதாவது கூட்டம் போடுவது ஒரு compartment கூட்டம் மாதிரி ஆகிவிட்டது. காலச்சுவடுன்னு ஒரு compartment, உயிர்மைன்னு ஒரு compartment, ஆழின்னு ஒரு compartment..... பொதுவா எழுதறவர்களுக்கான கூட்டமாக மாற்ற வேண்டும்.

அய்யப்பமாதவன் கூட்டத்தில் அதிகம் பேர்கள் பேசிக்கொண்டே போய்க்கொண்டிருந்ததால், என்னால் அதிக நேரம் அங்கு இருக்க முடியவில்லை. கூட்டத்திற்கு வந்திருந்தவர்கள் ஜாலியாக இருந்தார்கள். ஆனால் கூட்டத்தில் பேசியவர்கள் அந்த மூடை கொண்டு வர முடியவில்லை. என் நண்பர் ஸ்ரீனிவாஸனும் இந்தக் கருத்தை வெளிப்படுத்தினார். ஒருவர் அல்லது இருவர் பேச வேண்டும். அய்யப்பமாதவன் அவருடைய கவிதைகள் சிலவற்றை வாசிக்க வேண்டும். வாசிக்க அய்யப்பமாதவன் கவிதைகள் சில வந்தவர்களுக்குக் கிடைக்க வேண்டும். கூட்டம் சீக்கிரம் முடிந்துவிட வேண்டும்.

9.3.09

நான் கடவுள் படம் பற்றி சில வார்த்தைகள்...

சமீபத்தில் நான் பார்த்த படம் 'நான் கடவுள்'. முதலில் நான் சாதாரணமாக எல்லோரையும் போல் சினிமா பார்க்கிறவன். சினிமாவைப் பற்றிய நுணுக்கங்கள் தெரிந்தவன் இல்லை. ஆனால் நான் பார்த்த சில படங்களில் கூட கிணறு செட் போட்டிருந்தால், கதாநாயகனோ யாராவது வசனம் பேசிக்கொண்டிருந்தால் கிணறு செட் ஆடும். கோபாலகிருஷ்ணன் டைரக்ட் செய்த ஒரு படம் என்று நினைக்கிறேன். அதேபோல் ஜெயகாந்தனின் ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் என்ற படம் நினைக்கிறேன். அதில் வரும் கதாபாத்திரங்கள் வசனம் பேசிக்கொண்டே இருப்பார்கள். அந்தப் படத்தைப் பார்த்துக்கொண்டிருந்தவன் பாதியில் எழுந்து வந்துவிட்டேன். தமிழ் படங்கள் பார்ப்பதுபோல், சினிமா சங்கம் மூலம் பல நாட்டு படங்களையும் பார்த்து ரசித்திருக்கிறேன். ஆனால் எனக்கு எந்தப் படம் சிறந்த படம், எந்தப் படத்தின் டைரக்டர் சிறந்த டைரக்டர் என்ற அறிவு இல்லை. அந்த அறிவு மட்டும் இருந்திருந்தால் நானும் சினிமாவைப் பற்றி ஒரு புத்தகம் எழுதியிருப்பேன்.
இப்போது வரும் தமிழ் சினிமாவில் ஏற்படும் மாற்றங்களைப் பற்றி புரிந்துகொள்வது அவசியம். ஒரே மாதிரியாக தயாரிக்கப்பட்ட பார்மூலா கதைகளை ஒழித்துவிட்டு வேறுவிதமான படங்கள் இப்போது வரத் துவங்கி உள்ளன. இது நல்ல மாற்றம் என்று தோன்றுகிறது. பார்வையாளர்களை புத்திசாலிகளாக மாற்றும் முயற்சியை பாலா போன்ற சில இயக்குனர்கள் உருவாக்குகிறார்கள். தமிழில்தான் இதுமாதிரியான படங்கள் வருகின்றனவா என்ற ஆச்சரியம் எழாமல் இல்லை. ஆனால் இப்படிப்பட்ட படங்களைத் தயாரிக்கும் இயக்குனர்கள் ஜாக்கிரதையாகவும் இருக்க வேண்டியுள்ளது. ஒரு படம் தயாரிப்பது என்பது கோடிக்கான பணம் முதலீடு செய்யப்படும் தொழில். அத் தொழிலில் பார்வையாளர்களைத் திருப்தி பண்ணுவதுடன் அல்லாமல், முதலீடு செய்த பணத்தையும் எடுக்க வேண்டும். பாலா போன்ற இயக்குனர்கள் இந்த டெக்னிக்கை தெரிந்தவர்களாக தோன்றுகிறார்கள்.


இந்தப் படத்தில் அகோரி உலகத்தையும், பிச்சைக்காரர்களின் உலகத்தையும் கொண்டு வருகிறார். அது வெற்றிகரமாக கைவந்த மாதிரிதான் தெரிகிறது. மேலும் பலவித உடல் ஊனமுற்ற பிச்சைக்காரர்களைப் பார்க்கும்போது மனதுக்கு பெரிதும் சங்கடமாகத் தெரிகிறது. உண்மையான பிச்சைக்காரர்களா? அல்லது அப்படி நடிக்கிறார்களா என்று தெரியவில்லை. என் நண்பரும் கவிஞருமான விக்கிரமாதித்யன் இதில் நடித்திருக்கிறார். தாடியுடன் எப்போதும் காட்சி அளிக்கும் விக்கிரமாதித்யன் ஆசான் பாத்திரத்தில் இயல்பாக பொருந்திவிடுகிறார். வசனம் சில இடங்களில் ரசிக்கும்படி இருக்கிறது. சில இடங்களில் ரசிக்க முடியவில்லை. ஜட்ஜ் போலீஸ்காரரிடம் பேசும் வசனம்.


எனக்குத் தெரிந்து குருதத்தின் ஒரு படத்தை இலக்கிய நண்பர் ஒருவருடன் பார்க்கும்போது, ஒரு கட்டத்தில் அவர் அழ ஆரம்பித்துவிட்டார். படத்தைப் பார்க்கும்போது படத்துடன் ஒன்றிப்போகாமல் பார்க்கிற தன்மை வேண்டுமென்று எனக்குத் தோன்றுகிறது. அதேபோல் பாலாவின் இந்தப் படம் எல்லோருடைய மனதையும் கலக்கும். என் பெண் இந்தப் படத்தைப் பார்க்கச் சென்றபோது, பெண்ணின் பக்கத்தில் அமர்ந்திருந்த ஒரு பெண்மணி, 'பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன், ஐயனே, என் ஐயனே' என்ற பாடலைக் கேட்டவுடன் அழ ஆரம்பித்துவிட்டாராம். பூஜாவும், ஆர்யாவும் படத்தில் நடிப்பின் எல்லைக்கே சென்றுவிட்டதாக தோன்றுகிறது. 3 ஆண்டுகளாக ஆர்யா இப் படத்திற்காக நடித்திருக்கிறார் என்று தோன்றுகிறது.ஆனால் நிச்சயமாக எல்லோருடைய மனதிலும் நிற்கும் படமாக இது இருக்குமென்று தோன்றுகிறது.


பாலா அடுத்தப்படம் எடுக்கும்போது, பிச்சைக்காரர்கள், மன நிலை சரியில்லாதவர்கள், பார்வையற்றவர்கள் பற்றியெல்லாம் இனிமேல் எடுக்கக் கூடாது. வேறு விதமான முயற்சியை அவர் மேற்கொள்ள வேண்டும்.

25.2.09

இலக்கியவட்டமும் காஞ்சிபுரம் வெ நாராயணனும்

ந்தப் புத்தகக் காட்சியின்போது வெ நாராயணன் மரணம் அடைந்த விஷயத்தை அவருடைய நண்பர்கள் தெரிவித்தார்கள். வருத்தமாக இருந்தது கேட்பதற்கு. நாராயணன் வட நாட்டிற்கு பயணம் செய்துவிட்டு சென்னை திரும்பும்போது Heart Attack வந்து இறந்து போனதாக நண்பர்கள் சொன்னார்கள்..நாராயணன் காஞ்சிபுரத்தில் இலக்கிய வட்டம் என்ற பெயரில் நூறுக்கும் மேலாகக் கூட்டம் நடத்தியவர். கொஞ்சங்கூட அலுக்காமல் மாதம் ஒரு முறை பள்ளிக்கூடம் ஒன்றில் கூட்டம் நடத்துவார். கூட்டத்தில் பங்கு பெறுபவர்களுக்கு மதியம் சாப்பாடு ஏற்பாடு செய்வார். காஞ்சிபுரம் தாண்டி வருபவர்களுக்கு போக வர செலவிற்குப் பணம் தருவார்.


நான் மூன்று முறை அவர் நடத்திய கூட்டத்தில் கலந்துகொண்டிருக்கிறேன். அவர் இலக்கியவட்டம் நடத்திக் கொண்டிருந்த சமயத்தில், நானும் மாதம் ஒருமுறை விருட்சம் இலக்கிய சந்திப்பு நிகழ்த்திக் கொண்டிருந்தேன். முதல் முறையாக அவர் கூட்டத்தில் என்னைப் பேச அழைத்தபோது எனக்குத் திகைப்பாக இருந்தது. இலக்கியக் கூட்டம் என்ற பெயரில் என்ன பேசுவது என்பது புரியாத புதிராக இருந்தது. எந்த விஷயத்தை எடுத்துக்கொண்டு பேசினாலும் என்னால் 5 நிமிடங்களுக்கு மேல் பேச முடியுமா என்பது சந்தேகமாக இருந்தது. மேலும் நான் எழுதிக்கொண்டு பேசினாலும் 5 நிமிடங்களுக்குமேல் உரையாற்ற முடியுமா? அதனால் நாராயணன் என்னைக் கூப்பிட்டபோது நான் மட்டும் வரவில்லை என்று கூறி என்னுடன் ரா ஸ்ரீனிவாஸன், கோபிகிருஷ்ணனையும் கூட அழைத்துப் போனேன். இலக்கியக்கூட்டங்களில் கலந்துகொள்வதில் பெரிதும் விருப்பமில்லாதவர் ஸ்ரீனிவாஸன், கோபிகிருஷ்ணன் என்னைப் போல் பேச வேண்டுமென்று ஆசைப் படுபவர். ஒருமுறை அவரை விருட்சம் சார்பில் பேச அழைத்திருந்தேன். அவர் அலுவலகம் போகாமல் ஒருநாள் முழுவதும் பேசுவதற்கு தன்னை தயார் படுத்திக்கொண்டிருந்தார். கூட்டத்தில் பேசி முடித்தவுடன் அவர் உடல் வேர்வையில் தொப்பலாக நனைந்து போயிருந்தது.


நாங்கள் மூவரும் காஞ்சிபுரம் சென்றோம். கூட்டத்தில் நான் பேசத் தயங்கும்போது கோபிகிருஷ்ணன் பேசுவார். அவர் தயங்கும்போது ஸ்ரீனிவாஸன் பேசுவார். நாங்கள் மூவரும் அன்று சிறப்பாகவே உரையாற்றினோம். ஏற்பாடு செய்த நாராயணன் எங்களை நன்றாக கவனித்து அனுப்பினார். நாராயணனுக்கு அபார ஞாபக சக்தி உண்டு. யார் கூட்டத்தில் பேசினாலும் அதை அப்படி திரும்பவும் சொல்லுவார்.

இரண்டாவது கூட்டம். ஞானக்கூத்தனின் கவிதைகளுக்காக நடந்தது. முக்கிய விருந்தாளி ஞானக்கூத்தன். பதிப்பாளர் என்ற முறையில் நானும் கூட சென்றேன். ஞானக்கூத்தன் பேசுவதில் வல்லவர். அவர் ஒருவரே கூட்டம் முடியும் வரை அலுக்காமல் திறமையாகப் பேசக் கூடியவர்.அன்று மதியம் வரை ஞானக்கூத்தன் பேசிக்கொண்டிருந்தார். பலர் கேட்ட வினாக்களுக்கு பதிலும் அளித்துக்கொண்டிருந்தார். வெ நாராயணனுக்கு நகைச்சுவை உணர்வு உண்டு. கூட்டம் பற்றி ஒரு sum up கொடுப்பார். அதைப் பெரும்பாலும் நகைச்சுவை உணர்வுடன் வெளிப்படுத்துவார். வெ நாராயணன் அனுப்பிய பல அழைப்பிதழ்கள் என் பார்வைக்கு இப்போது எதுவும் கிடைக்கவில்லை. சிலசமயம் அந்த நகைச்சுவையை ரசிக்க முடியும். எந்த லாபமுமின்றி இலக்கியக் கூட்டம் நடத்த முடியுமென்ற நாராயணனின் வெறி எனக்கு ஆச்சரியமாக இருக்கும். நானும் அப்படித்தான் என்றாலும் நாராயணனை என்னால் தோற்கடிக்க முடியவில்லை.

மூன்றாவது கூட்டத்திற்கு நான் என் அலுவலக நண்பரான ராஜன் பாபுவுடன் சென்றேன். காலச்சுவடு பற்றிய கூட்டம். அந்தக் கூட்டம் பரபரப்பான கூட்டமாக மாறிவிட்டிருந்தது. அடிதடி சண்டையே வந்துவிடும் போலிருந்தது. அக் கூட்டத்திற்கு சுந்தர ராமசாமியும், கண்ணனும் வந்திருந்தார்கள். நவீன விருட்சம் இதழ் ஒன்றை சுந்தர ராமசாமியிடம் கொடுத்தேன். இதழைப் பார்த்த சுந்தர ராமசாமி அதில் விஸ்வம் வரைந்த அசோகமித்திரன் படம் சரியில்லை என்று குறிப்பிட்டார். காலச்சுவடு இதழைப் பாராட்டும் கூட்டமாக மாறாமல் அதை இகழந்து பேசும் கூட்டமாக அது மாறிவிட்டது. மேலும் கூட்டம் குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிவுக்கு வராமல் இருந்தது. நாராயணனுக்கே அக் கூட்டம் போகும் விதம் பிடிக்காமல் இருந்திருக்குமோ என்று தோன்றியது. எனக்கு அவசரமாகக் கிளம்ப வேண்டும்போல் தோன்றியது. ராஜன்பாபுவும் அவசரப்பட்டார். காலச்சுவடு குறித்து நான் எழுதிய கட்டுரையை அவசரம் அவசரமாகப் படித்தேன். பின் நான் நாராயணனிடமிருந்து விடைபெற்று சென்றேன். வழக்கம்போல் நாராயணன் கூட்டம் முடியும்போது விருந்தாளிகளுக்கு போய்வருவதற்கான செலவை கொடுக்கமாலிருக்க மாட்டார். அந்த முறை அவர் கொடுக்கவில்லை. நல்லகாலம் விருட்சத்திற்கு அதுமாதிரியான கூட்டம் ஒன்றும் நடத்தப்படவில்லை.

சென்னை வரும்போது ஏன் கூட்டத்திற்குப் போனோம் என்று தோன்றியது. அன்று காலைதான் எழுத்தாளர் காசியபன் மனைவி இறந்து விட்டார். தகவல் சரியாகத் தெரியவில்லையால், நான் போய்ப் பார்க்கமுடியாமல் போய்விட்டது. நான் எப்போதுமே என் அனுபவத்தைத்தான் பெரும்பாலும் கதையாக எழுதுவேன். கூட்டம் போய் வந்த அனுபவத்தை சுண்டுவிரல் என்ற பெயரில் ஒரு கதை எழுதினேன். அதைப் படித்த வே நாராயணன் ஒரு கடிதம் எழுதியிருந்தார். 'உங்களுக்கு வழிசெலவிற்குப் பணம் கொடுத்ததாக ஞாபகம்' என்று எழுதியிருந்தார். நான் இல்லை என்று குறிப்பிட்டிருந்தேன். என் கடிதம் பார்த்தவுடன் உடனே பணம் அனுப்பிவிட்டார். இதை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. பொதுவாக இலக்கியக் கூட்டம் நம் control ல் வராது. சண்டை வருவதற்கான வாய்ப்பும் அதிகம். அதனால்தான் முதன் முதலில் நான் இலக்கியக் கூட்டம் ஆரம்பிக்கப் போவதாக அறிவித்தவுடன், பிரமிள், it is dangerous என்று கடிதம் எழுதியிருந்தார். எனக்கு அது முதலில் புரியவில்லை. ஆனால் சண்டை நடந்தாலும் இலக்கியக் கூட்டம் மூலமாக எழுத்தாளர்களைப் பார்க்க முடிகிறது. நானும் விருட்சம் சார்பில் 3, 4 ஆண்டுகள் கூட்டம் நடத்தி நிறுத்திவிட்டேன். வெ நாராயணனும் தொடர முடியாமல் நிறுத்திவிட்டார். ஒவ்வொரு முறை நான் காஞ்சிபுரம் போனால் வெ நாராயணனைப் பார்க்காமல் இருக்க மாட்டேன். அவர் வீட்டிற்கெல்லாம் சென்றிருக்கிறேன். அவருடைய ஆர்வத்தை என்னால் மறக்க முடியாது. வெ நாராயணனுக்குப் பிறகு திரும்பவும் இலக்கிய வட்டத்தைத் துவங்கப் போவதாக அவருடைய நண்பர்கள் குறிப்பிட்டார்கள். புத்தகக் காட்சியின் போது அவருடைய நண்பர்கள் வெ நாராயணனிடமிருந்து பலர் புத்தகங்களை (இலக்கிய கூட்டம் நடக்குமிடத்தில் பல பதிப்பக நண்பர்களிடமிருந்து புத்தகங்களை வாங்கி விற்பனைக்கு வைக்கும் பழக்கம் அவருக்குண்டு) கடனுக்கு வாங்கிக்கொண்டு பணம் கொடுக்காமல் போனதைப் பற்றி குறிப்பிட்டார்கள். கேட்க சற்று வருத்தமாக இருந்தது.

2.2.09

பிரிவும் மரணமும்
என் நண்பர், நாகேஷ் இறந்த செய்தியைச் சொன்னபோது, நாகேஷ் பற்றிய ஞாபகத்தில் என் மனம் புகுந்து கொண்டது. பல ஆண்டுகளாக நாகேஷ் என்ற நடிகர் நடித்தப் பல படங்களைப் பார்த்து ரசித்திருக்கிறேன். ஆனால் ஒரு போதும் நான் எந்த நடிகனுக்கும் ரசிகனாக இருந்ததில்லை. ஆனால் நடிகர் நடிகைகள் பற்றிய செய்திகளையும், அவர்களைப் பற்றிய கிசுகிசுக்களையும் படித்திருக்கிறேன்.


நாமெல்லாம் ஏதோ வேலைக்குப் போய் சம்பாதிக்கிறோம். அவர்கள் நடித்து சம்பாதிக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு ஏராளமான ரசிகர்கள் வட்டம். ஏகப்பட்ட புகழ். பணம். அவர்களைப் பற்றியே செய்திகள். பல சமயங்களில் நாகேஷ் சிரித்து மகிழ்வித்திருக்கிறார். நகைச்சுவை நடிகர்களில் நாகேஷ் நடிக்காதப் படங்கள் இல்லை. அவர் படங்கள் பலவற்றை நான் ரசித்திருக்கிறேன். என் எஸ் கிருஷ்ணன், சந்திரபாபு, டணால் தங்கவேலு என்ற பல சிரிப்பு நடிகர்களை நான் ரசித்திருக்கிறேன். முகத்தைக் கோணலாக வைத்துக்கொண்டு சந்திரபாபு செய்யும் அட்டகாசம் ரசிக்கும்படியாக இருக்கும். ஆனால் சந்திரபாபு பேசும்போது என்ன பேசுகிறார் என்பதை முழுவதும் புரிந்துகொள்ள முடியாது.


செய்கை அதிகமில்லாமல் பேச்சு மூலம் நகைச்சுவை உணர்வை காட்டுபவர் என் எஸ் கிருஷ்ணன். டணால் தங்கவேலு கல்யாண பரிசு படத்தில் நடித்த நகைச்சுவை காட்சிகளை இன்னும் ரசிக்கலாம். எம்.ஆர் ராதா, டி எஸ் பாலையா முதலிய நடிகர்கள் நகைச்சுவை நடிகர்களாகவும் வில்லன் நடிகர்களாகவும் நடித்திருக்கிறார்கள்.


இந்தச் சிரிப்பு நடிகர்களிலேயே நாகேஷ் தனிரகம். 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருப்பது என்பது சாதாரண விஷயமல்ல. நாகேஷிடம் செய்கையும் உண்டு பேச்சும் உண்டு. பாடல் காட்சிகளில் நாகேஷ் ஆடிய நடனங்களும் ரசிக்கும்படியாக இருக்கும். தனிப்பட்ட வாழ்க்கையில் அவருக்கு ஏற்பட்ட பல சோதனைகளையும் பத்திரிகைகள் மூலம் அரசல்புரசலாக தெரிந்துகொண்டிருக்கிறேன். நகைச்சுவை நடிகர்களிலேயே ரொம்பவும் மரியாதைக்குரியவராகக் கருதபட்பட்டவர் என்.எஸ்.கிருஷ்ணன்தான்.


நடிப்பிலிருந்து விலகி பத்திரிகையாளராகவும், அரசியல் விமர்சகராகவும் மாறியவர் சோ ராமசாமி. நடிப்புடன் நின்றுவிட்ட நாகேஷ், அந்தப் பணியைச் சிறப்பாகவே செய்து காட்டியவர். அவர் நடித்த பல படங்களை உதாரணம் காட்டலாம். நீர்க்குமிழி போன்ற சோகமான படத்திலும் நாகேஷ் அடிக்கும் லூட்டியை ரசிக்காமல் இருக்க முடியாது. எல்லோருக்கும் வயதாகிவிட்டால் வேறுவிதமாக மாறிவிடுவார்கள். அவர்கள் தொடர்ந்து இயங்கி வந்த இயக்கத்திலிருந்து புறம் தள்ளப்படுவார்கள். அப்போதெல்லாம் அவர்கள் வாழ்க்கையை எப்படி நடத்திக்கொண்டு போக வேண்டும் என்பது முக்கியமானது.


புகழ் உச்சாணியிலிருந்து அவர்கள் புகழ் போய்விடும். மக்களுக்கும் அவர்களுக்கும் ஒரு பெரிய இடைவெளி ஏற்பட்டுவிடும். நான் மிகவும் ரசித்த ராஜகுமாரி என்ற நடிகையின் மரணம் பற்றிய செய்தி வந்தபோது, மரணம் அடைந்த போது இருந்த அவருடைய தோற்றத்தை படம் எடுத்து வெளியிட்டிருந்தார்கள். என்னால் அந்த் தோற்றத்தை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. ராஜகுமாரி என்ற நடிகையின் அழகு தோற்றத்தையே கற்பனை செய்த எனக்கு, மரணம் அடைந்த தோற்றத்தில் இருந்த ராஜகுமாரியை ஏற்றுக்கொள்ள மனம் வரவில்லை.மேலும் நடிகர் நடிகைகளுடன் நமக்குப் பழக்கம் இருந்தால், அவர்கள் சாதாரணத்திலும் சாதாரணம் என்று தெரிந்துவிடும். ஒரு முறை புத்தகம் விற்பதற்காக ஒரு யுக்தியைக் கையாண்டது ஒரு அமைப்பு. டணால் தங்கவேலுவை அழைத்து புத்தகம் விற்பதற்காக கடற்கரையில் ஏற்பாடு செய்திருந்தது. நடிப்பிலிருந்து விலகி எல்லோருடைய நினைவிலிருந்து விலகிப்போன தங்கவேலு, புத்தகம் விற்கும் இடத்திற்கு வந்து அமர்ந்தார். அவரைப் பற்றி எல்லோரும் அறிவிப்பு செய்தார்கள். நானும் விருட்சம் புத்தகம் சிலவற்றைக் கொண்டு சென்றேன். மேடையில் தங்கவேலு முன்னால் எல்லாப் புத்தகங்களையும் பார்வைக்கு வைத்திருந்தார்கள். ஆனால் ஒருவர் கூட தங்கவேலுவிடமிருந்து புத்தகம் வாங்கவில்லை. நடிப்பிலிருந்து விலகியபின் இதுதான் தங்கவேலுவிற்குக் கிடைத்த மரியாதை.


எனக்குத் தெரிந்தவரை நாகேஷிற்கு இதுமாதிரியெல்லாம் நிகழவில்லை. எல்லாப் பார்வையிலிருந்து அவர் விலக்கி வைக்கப்பட்டுவிட்டார். அவரும் விலகி விட்டார். எல்லோருமே அப்படித்தான். ஆனால் சிலர் விதிவிலக்கு. எம்.ஜி.ஆர் நடிகர் மட்டுமல்ல. மக்களைக் கவர்ந்தவர். ஓரளவு சிவாஜி. இன்று ரஜினி, கமல். இது ஒருவிதத் தோற்றம்தான். இந்தத் தோற்றமும் மறைந்துவிடும். புத்திசாலியாக இருப்பவர்களைப் பற்றி எப்போதும் எல்லோரும் பேசிக்கொண்டிருப்பார்கள்.நாகேஷ் மறைந்தாலும் அவரைப்பற்றி அலுவலகத்தில் பேசாமலில்லை. நாகேஷிற்கு குண்டுராவ் என்பது இயற்பெயராம். அந்தப் பெயர் எனக்குச் சற்றும் பிடிக்கவில்லை. அவர் சாகும் தறுவாயில் அவருக்கு mental depression என்று ஒருவர் சொன்னார். ஆனால் எனக்குத் தெர்ந்த நாகேஷ் படத்தில் மட்டும் இருக்கிறார். எல்லோரையும் மகிழ்விக்க. என்ன இருந்தாலும் ஒருவர் மறைந்துவிட்டார் என்பது மனதில் சற்று சஞ்சலம்தான். சில நேரம் இறந்தவரைப் பற்றி நினைக்கத் தோன்றாமலில்லை. எங்கள் flatல் குடியிருக்கும் ஒரு பெண்மனி வீடைக் காலிசெய்து கொண்டு போய்க்கொண்டிருப்பதை வீட்டிற்கு வந்து சொன்னார். அவர் அந்த இடத்தை விட்டுப் போகப்போகிறதா என்ற எண்ணம் சற்று மனதில் நெருட ஆரம்பித்தது. இத்தனைக்கும் அந்தப் பெண்மணி என்னுடன் ஆரம்பத்தில் சண்டைக்கு வந்தவர். பெரும்பாலும் என்னைப் பார்த்தாலும் பேச மாட்டார். போகும் போது சொல்லிக்கொண்டு போகும்போது சற்று மனதில் நிழலாடிய வருத்தத்தை என்னவென்று சொல்வது.


7