2.2.09

பிரிவும் மரணமும்
என் நண்பர், நாகேஷ் இறந்த செய்தியைச் சொன்னபோது, நாகேஷ் பற்றிய ஞாபகத்தில் என் மனம் புகுந்து கொண்டது. பல ஆண்டுகளாக நாகேஷ் என்ற நடிகர் நடித்தப் பல படங்களைப் பார்த்து ரசித்திருக்கிறேன். ஆனால் ஒரு போதும் நான் எந்த நடிகனுக்கும் ரசிகனாக இருந்ததில்லை. ஆனால் நடிகர் நடிகைகள் பற்றிய செய்திகளையும், அவர்களைப் பற்றிய கிசுகிசுக்களையும் படித்திருக்கிறேன்.


நாமெல்லாம் ஏதோ வேலைக்குப் போய் சம்பாதிக்கிறோம். அவர்கள் நடித்து சம்பாதிக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு ஏராளமான ரசிகர்கள் வட்டம். ஏகப்பட்ட புகழ். பணம். அவர்களைப் பற்றியே செய்திகள். பல சமயங்களில் நாகேஷ் சிரித்து மகிழ்வித்திருக்கிறார். நகைச்சுவை நடிகர்களில் நாகேஷ் நடிக்காதப் படங்கள் இல்லை. அவர் படங்கள் பலவற்றை நான் ரசித்திருக்கிறேன். என் எஸ் கிருஷ்ணன், சந்திரபாபு, டணால் தங்கவேலு என்ற பல சிரிப்பு நடிகர்களை நான் ரசித்திருக்கிறேன். முகத்தைக் கோணலாக வைத்துக்கொண்டு சந்திரபாபு செய்யும் அட்டகாசம் ரசிக்கும்படியாக இருக்கும். ஆனால் சந்திரபாபு பேசும்போது என்ன பேசுகிறார் என்பதை முழுவதும் புரிந்துகொள்ள முடியாது.


செய்கை அதிகமில்லாமல் பேச்சு மூலம் நகைச்சுவை உணர்வை காட்டுபவர் என் எஸ் கிருஷ்ணன். டணால் தங்கவேலு கல்யாண பரிசு படத்தில் நடித்த நகைச்சுவை காட்சிகளை இன்னும் ரசிக்கலாம். எம்.ஆர் ராதா, டி எஸ் பாலையா முதலிய நடிகர்கள் நகைச்சுவை நடிகர்களாகவும் வில்லன் நடிகர்களாகவும் நடித்திருக்கிறார்கள்.


இந்தச் சிரிப்பு நடிகர்களிலேயே நாகேஷ் தனிரகம். 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருப்பது என்பது சாதாரண விஷயமல்ல. நாகேஷிடம் செய்கையும் உண்டு பேச்சும் உண்டு. பாடல் காட்சிகளில் நாகேஷ் ஆடிய நடனங்களும் ரசிக்கும்படியாக இருக்கும். தனிப்பட்ட வாழ்க்கையில் அவருக்கு ஏற்பட்ட பல சோதனைகளையும் பத்திரிகைகள் மூலம் அரசல்புரசலாக தெரிந்துகொண்டிருக்கிறேன். நகைச்சுவை நடிகர்களிலேயே ரொம்பவும் மரியாதைக்குரியவராகக் கருதபட்பட்டவர் என்.எஸ்.கிருஷ்ணன்தான்.


நடிப்பிலிருந்து விலகி பத்திரிகையாளராகவும், அரசியல் விமர்சகராகவும் மாறியவர் சோ ராமசாமி. நடிப்புடன் நின்றுவிட்ட நாகேஷ், அந்தப் பணியைச் சிறப்பாகவே செய்து காட்டியவர். அவர் நடித்த பல படங்களை உதாரணம் காட்டலாம். நீர்க்குமிழி போன்ற சோகமான படத்திலும் நாகேஷ் அடிக்கும் லூட்டியை ரசிக்காமல் இருக்க முடியாது. எல்லோருக்கும் வயதாகிவிட்டால் வேறுவிதமாக மாறிவிடுவார்கள். அவர்கள் தொடர்ந்து இயங்கி வந்த இயக்கத்திலிருந்து புறம் தள்ளப்படுவார்கள். அப்போதெல்லாம் அவர்கள் வாழ்க்கையை எப்படி நடத்திக்கொண்டு போக வேண்டும் என்பது முக்கியமானது.


புகழ் உச்சாணியிலிருந்து அவர்கள் புகழ் போய்விடும். மக்களுக்கும் அவர்களுக்கும் ஒரு பெரிய இடைவெளி ஏற்பட்டுவிடும். நான் மிகவும் ரசித்த ராஜகுமாரி என்ற நடிகையின் மரணம் பற்றிய செய்தி வந்தபோது, மரணம் அடைந்த போது இருந்த அவருடைய தோற்றத்தை படம் எடுத்து வெளியிட்டிருந்தார்கள். என்னால் அந்த் தோற்றத்தை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. ராஜகுமாரி என்ற நடிகையின் அழகு தோற்றத்தையே கற்பனை செய்த எனக்கு, மரணம் அடைந்த தோற்றத்தில் இருந்த ராஜகுமாரியை ஏற்றுக்கொள்ள மனம் வரவில்லை.மேலும் நடிகர் நடிகைகளுடன் நமக்குப் பழக்கம் இருந்தால், அவர்கள் சாதாரணத்திலும் சாதாரணம் என்று தெரிந்துவிடும். ஒரு முறை புத்தகம் விற்பதற்காக ஒரு யுக்தியைக் கையாண்டது ஒரு அமைப்பு. டணால் தங்கவேலுவை அழைத்து புத்தகம் விற்பதற்காக கடற்கரையில் ஏற்பாடு செய்திருந்தது. நடிப்பிலிருந்து விலகி எல்லோருடைய நினைவிலிருந்து விலகிப்போன தங்கவேலு, புத்தகம் விற்கும் இடத்திற்கு வந்து அமர்ந்தார். அவரைப் பற்றி எல்லோரும் அறிவிப்பு செய்தார்கள். நானும் விருட்சம் புத்தகம் சிலவற்றைக் கொண்டு சென்றேன். மேடையில் தங்கவேலு முன்னால் எல்லாப் புத்தகங்களையும் பார்வைக்கு வைத்திருந்தார்கள். ஆனால் ஒருவர் கூட தங்கவேலுவிடமிருந்து புத்தகம் வாங்கவில்லை. நடிப்பிலிருந்து விலகியபின் இதுதான் தங்கவேலுவிற்குக் கிடைத்த மரியாதை.


எனக்குத் தெரிந்தவரை நாகேஷிற்கு இதுமாதிரியெல்லாம் நிகழவில்லை. எல்லாப் பார்வையிலிருந்து அவர் விலக்கி வைக்கப்பட்டுவிட்டார். அவரும் விலகி விட்டார். எல்லோருமே அப்படித்தான். ஆனால் சிலர் விதிவிலக்கு. எம்.ஜி.ஆர் நடிகர் மட்டுமல்ல. மக்களைக் கவர்ந்தவர். ஓரளவு சிவாஜி. இன்று ரஜினி, கமல். இது ஒருவிதத் தோற்றம்தான். இந்தத் தோற்றமும் மறைந்துவிடும். புத்திசாலியாக இருப்பவர்களைப் பற்றி எப்போதும் எல்லோரும் பேசிக்கொண்டிருப்பார்கள்.நாகேஷ் மறைந்தாலும் அவரைப்பற்றி அலுவலகத்தில் பேசாமலில்லை. நாகேஷிற்கு குண்டுராவ் என்பது இயற்பெயராம். அந்தப் பெயர் எனக்குச் சற்றும் பிடிக்கவில்லை. அவர் சாகும் தறுவாயில் அவருக்கு mental depression என்று ஒருவர் சொன்னார். ஆனால் எனக்குத் தெர்ந்த நாகேஷ் படத்தில் மட்டும் இருக்கிறார். எல்லோரையும் மகிழ்விக்க. என்ன இருந்தாலும் ஒருவர் மறைந்துவிட்டார் என்பது மனதில் சற்று சஞ்சலம்தான். சில நேரம் இறந்தவரைப் பற்றி நினைக்கத் தோன்றாமலில்லை. எங்கள் flatல் குடியிருக்கும் ஒரு பெண்மனி வீடைக் காலிசெய்து கொண்டு போய்க்கொண்டிருப்பதை வீட்டிற்கு வந்து சொன்னார். அவர் அந்த இடத்தை விட்டுப் போகப்போகிறதா என்ற எண்ணம் சற்று மனதில் நெருட ஆரம்பித்தது. இத்தனைக்கும் அந்தப் பெண்மணி என்னுடன் ஆரம்பத்தில் சண்டைக்கு வந்தவர். பெரும்பாலும் என்னைப் பார்த்தாலும் பேச மாட்டார். போகும் போது சொல்லிக்கொண்டு போகும்போது சற்று மனதில் நிழலாடிய வருத்தத்தை என்னவென்று சொல்வது.


7

3 comments:

 1. 'புத்திசாலியாக இருப்பவர்களைப் பற்றி எப்போதும் எல்லோரும் பேசிக்கொண்டிருப்பார்கள்'

  இப்படி நினைப்பவர்கள் தங்களை புத்திசாலிகள் என பிறர் கருதுகிறார்கள் என்று நம்பிக்கொண்டிருக்கிறார்கள் :)

  ReplyDelete
 2. 'எங்கள் flatல் குடியிருக்கும் ஒரு பெண்மனி வீடைக் காலிசெய்து கொண்டு போய்க்கொண்டிருப்பதை வீட்டிற்கு வந்து சொன்னார். அவர் அந்த இடத்தை விட்டுப் போகப்போகிறதா என்ற எண்ணம் சற்று மனதில் நெருட ஆரம்பித்தது. இத்தனைக்கும் அந்தப் பெண்மணி என்னுடன் ஆரம்பத்தில் சண்டைக்கு வந்தவர். பெரும்பாலும் என்னைப் பார்த்தாலும் பேச மாட்டார். போகும் போது சொல்லிக்கொண்டு போகும்போது சற்று மனதில் நிழலாடிய வருத்தத்தை என்னவென்று சொல்வது'

  இதில் ஒரு சிறுகதை ஒளிந்து கொண்டிருக்கிறது.எழுதி நவீன விருட்சத்திற்கு அனுப்பவா? :)

  ReplyDelete
 3. அன்புடையீர்,

  கதை அனுப்பவும். ரசிக்கும்படி இருந்தால் பிரசுரிக்கிறேன்.

  அழகியசிங்கர்

  ReplyDelete