30.10.08

சில குறிப்புகள் - 6

வணக்கம்.

ஒரு வழியாக நவீன விருட்சம் 81-82 வது இதழ் முடிந்தது. இரண்டு மூன்று தினங்களில் அச்சு அடிக்கும் இடத்திலிருந்து வெளியே கிளம்பிவிடும் விருட்சம்.

ழ பத்திரிகையின் இணை ஆசிரியர் இராஜகோபாலனின் திருமணம் இப்போதுதான் நடந்த மாதிரி தோன்றியது. இன்று அவர் புதல்வரின் திருமணம். வழக்கம்போல் அவருக்கு நெருங்கிய .இலக்கிய நண்பர்களின் கூட்டம்.


ஒவ்வொரு முகத்திலும் வயது தனது பதிவை ஏற்படுத்தாமலில்லை. வயதான அசோகமித்திரன், வயதான ஞானக்கூத்தன், வயதான விட்டல்ராவ், வயதான கந்தசாமி, வயதான முத்துசாமி, வயதான ஆன்ந்த் என்று பலரை வயதான நானும் பார்த்தேன்.


ராஜகோபாலன் எளிமையான மனிதர். அவர் கவிதைகளும் அவரைப் போல எளிமையானவை.


இந்த திருமண வைபவத்திற்கு வந்திருந்த ஆனந்த் அவருடைய கவிதைத் தொகுதியான அளவில்லாத மலர் என்ற புத்தகத்தை கையெழுத்திட்டு அளித்தார். எனக்கு உடனே பல ஆண்டுகளுக்குமுன் ஆத்மாநாமுடன் அவரைப் பார்க்கச் சென்றபோது, எனக்கு கையெழுத்திட்டு அவர் அளித்த 'அவரவர் கைமணல்' என்ற புத்தகம் ஞாபகம் வந்தது.


ஆனந்த் கவிதைகள் சற்று வித்தியாசமானவை. சாதாரண மனிதத் தோற்றங்கள் சற்று குறைந்து மனத் தோற்றத்திற்கு அதிக முக்கியத்துவம் தரக்கூடியவர்.

'அளவில்லாத மலர்' என்ற கவிதைத் தொகுதியைப் புரட்டியவுடன் தோன்றிய கவிதையை உங்களுக்கு அளிக்க விரும்புகிறேன்.


மாடிப்படி


மாடிப்படியில்

ஏறிக் கொண்டும்

இறங்கிக் கொண்டும்

இருக்கிறார்கள் அனைவரும்

ஏறிக்கொண்டும்

இறங்கிக்கொண்டும்

இருக்கிறது மாடிப்படி

பிறகு

படுக்கையான பிறகு

தூக்கம் நன்றாக வருகிறது

ஜன்னலான பிறகு

நல்ல காற்றும் வெளிச்சமும்

இருக்கிறது

மரமான பிறகு

வேர்களும்

பார்க்கக் கிடைக்கிறது

மேகங்களான பிறகு

கண்கள் திறந்து

மழை

பொழிகிறேன்

இப்படி அளவில்லாத பல கவிதைகள் அளவில்லாத மலர் என்ற புத்தகத்தில் உள்ளன. காலச்சுவடு பதிப்பகமாக வந்துள்ள இப் புத்தகத்தின் விலை ரூ.65 தான்.

24.10.08

மழை 1, 2, 3.....மழை பெய்தால் சென்னை நகரம் போல் ஒரு வேதனை தரும் இடத்தைப் பார்க்க முடியாது. நான் வசிக்கும் மேற்கு மாம்பலம் இன்னும் மோசம். கடந்த 2 நாட்களாக முட்டி கால்வரை தண்ணீர். அலுவலகம் போவதற்கே அருவெறுப்பாக இருந்தது. கூடவே அங்கங்கே பாதாள சாக்கடைகளின் மூடிகள் திறந்துகொண்டு சாக்கடை மல ஜலம், மழை நீர் என்று நாசம் செய்து விட்டது. தாங்க முடியாத துர்நாற்றம். இந்த மழையால் 15 பேர்களுக்குமேல் இறந்துவிட்டார்களாம். இத் தருணத்தில் மழையைப் பற்றி எழுதிய மூன்று கவிதைகளை இங்கு வாசிக்க அளிக்கிறேன்.மழை 1மழை பெய்தது


தெரு நனைந்து மிதக்க


இரண்டு பூனைக்குட்டிகள்


இடுக்கில்


குளிருக்குப் பயந்து


தாய் மடியில் பதுங்க


தாய்ப்பூனை


குட்டிகளைப் பற்றி யோசனையில்


கீழே


அப்பா


பாட்டி


தம்பி மூவரும் டிவியில்


துருப்பிடித்த சைக்கிளை


எடுத்தேன்


மழை விட்டிருந்தது


என் குழந்தைகளைப் பார்க்க............


மழை 2


மழை பெய்யவில்லை என்று என் அப்பா சொன்னார்


மழை பெய்யவில்லை என்று என் மனைவி சொன்னாள்


மழை பெய்யவில்லை என்று என் பையன் சொன்னான்


மழை பெய்யவில்லை என்று என் பெண் சொன்னாள்


மழை பெய்யவில்லை என்று பக்கத்துவீட்டார் சொன்னார்


வெயில் கொளுத்துகிறது என்று நான் சொன்னேன்.


மழை 3மழை தூறி முடிந்தது

சம்பவங்கள் நடக்காமலில்லை


ஸ்தம்பித்துப் போன தோற்றம்


விடைபெறும் நண்பர்


எல்லோருடனும் புன்னகை செய்தார்


எப்போதும் குறைந்த வார்த்தைகளைப் பயன்படுத்துவார்


தெருவைக் கடக்கும்போது


ஈரம் சதக்கென்று காலில் ஒட்டி


வெறுப்பாய் மாறுகிறது பாவனை


விடைபெறும் நண்பர்


புதிய இடம் செல்ல ஆயத்தமாகிறார்


தனியாகப் பயணம்


பெற்றோரை விட்டுச்செல்லும் தயக்கம்


புதிய இடம்


புதிய முகங்கள்


வேறு மொழி


இங்கு ஈரம் இருந்துகொண்டுதான் இருக்கிறது


நண்பர் மனதிலும்


சதக்கென்று காலில் ஒட்டாத ஈரம்


நினைவுப் பறவைகள் மிதந்த வண்ணம்


புதிய இடம்


வரவேற்க காத்திருக்கலாம்.


18.10.08

தமிழக முதல்வருக்கு ஒரு வேண்டுகோள்நவீன விருட்சம்


அழகியசிங்கர் 17।10।2008


6/5 போஸ்டல் காலனி முதல் தெரு மேற்கு மாம்பலம் சென்னை 600 033அன்புள்ள தமிழக முதல்வர் அவர்களுக்கு,வணக்கம்।


நவீன விருட்சம் என்ற பெயரில் கடந்த 20 ஆண்டுகளாக காலாண்டு இலக்கியச் சிற்றேடு நடத்தி வருகிறேன்। கவிதைக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த இதழ் தொடர்ந்து வெளிவருகிறது.நீங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் ஆயிரம் பிரதிகள் தமிழ் புத்தகங்கள் வாங்க உத்தரவு இட்டதற்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்। பிரபலமான எழுத்தாளர்களின் புத்தகங்களைத் தவிர, இன்று தமிழ் புத்தகங்களை வாங்கிப் படிப்பவர்கள் மிக மிகக் குறைவு। மேலும் தமிழில் எழுதும் எழுத்தாளர்களின் நிலை இன்னும் மோசமானது। அவர்கள் எழுதும் எழுத்தால் சாதாரண நிலையைக் கூட அவர்களால் எட்ட முடியாது.நான் கல்லூரியில் படித்தபோது, தமிழ் ஆசிரியர்களுக்கு எந்த மதிப்பும் இல்லை என்பதோடல்லாமல், தமிழ் வகுப்புகளே கிண்டலுக்குரிய இடமாகக் காட்சி அளிக்கும்।அதுமாதிரியான தருணத்தில் தமிழில் ஆர்வம் கொண்டு எழுதுவது என்பது சிரமமானது। எழுதும் எழுத்து புத்தகமாக வருவதும், பத்திரிகைகளில் பிரசுரமாவதும் அவ்வளவு சுலபமானதில்லை.


நவீன விருட்சம் என்ற என் பத்திரிகையில் படைப்பாளிகளுக்கு முக்கியத்துவம் தரும் விதமாக கவிதைகளையே பெரும்பாலும் வெளியிட்டு வருகிறேன்। கவிதைகள் வெளியிட்டு வந்தாலும், கவிதையைப் போல கிண்டலுக்குரிய ஒன்று தமிழ் நாட்டைத் தவிர வேறு எங்காவது உண்டா என்பது தெரியவில்லை. அதேபோல் கவிதை எழுதுபவர்களிடையே பல பிரிவுகள். இப் பிரிவுகள் ஒன்றை ஒன்று சாடுவதோடல்லாம், ஒருவரை ஒருவர் வீழ்த்துவதில் பெரும்பாலான காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கின்றன.


என் பத்திரிகையை ஆயிரம் பேர்களுக்கு மேல் படிப்பதில்லை என்றே நினைக்கிறேன்। இது தமிழ் ஜனத்தொகையை எடுத்துக்கொள்ளும்போது, ஒன்றுமில்லாமல் போய்விடுகிறது.


இந்தச் சூழ்நிலையில்தான் புத்தகம் கொண்டு வர வேண்டியுள்ளது.
புத்தகம் கொண்டு வந்தாலும், விற்பது என்பது அசாதாரண விஷயமாகத் தோன்றுகிறது. அசாதாரண விஷயம் மட்டுமல்ல, விற்கவே முடியாத நிலைதான் உருவாகி உள்ளது. கவிதைப் புத்தகம் விற்க வாய்ப்பே இல்லை. என்னைப் போன்றவர்கள் நூலகத்தையே சார்ந்து இயங்க வேண்டியுள்ளது. பொதுவாக ஓராண்டில் நான் ஒன்று அல்லது இரண்டு புத்தகங்களுக்கு மேல் கொண்டு வர மாட்டேன். 2006 ஆம் ஆண்டில் மட்டும் 6 புத்தகங்களைக் கொண்டு வந்தேன். 6 புத்தகங்களில் 4 புத்தகங்கள் மட்டும் கவிதைப் புத்தகங்கள். இந்த முறை எனக்கு நூல்கள் வாங்க வந்த உத்தரவில் கவிதைப் புத்தகங்களுக்கு மட்டும் ஆதரவு கிட்டவில்லை. இது எனக்குப் பெரிய ஏமாற்றம். கவிதை எழுதுவதில் திறமைப் படைத்த முதல்வர் ஆட்சியில், கவிதைப் புத்தகங்களுக்கு நூலக ஆதரவு இல்லை. என் வருத்தம் கவிதைகள் எப்படியானாலும் விற்கவும் போவதில்லை. நூலக ஆதரவை ஒட்டியே கவிதைப் புத்தகம் வெளியிட வேண்டும். அதற்கு நூலக ஆதரவு இல்லை என்றால், புத்தகங்களைக் கட்டுக் கட்டாக வைத்துக்கொண்டிருக்க வேண்டும். விற்காமல் புத்தகங்களை வைத்துக் கொண்டிருப்பதைப் போல் வேறு எதுவும் இல்லை. நான் இப்படிப் பல புத்தகங்களை வைத்துக்கொண்டு வீட்டில் திட்டும் வாங்கிக்கொண்டு அவஸ்தைப் படுகிறவன். முழுநேரமும் எழுத்தையே நம்பி இல்லாமலிருப்பதால் தப்பித்தேன்.முதல்வர் அவர்களே, நான் பள்ளியில் படிக்கும்போது, நீங்கள் அண்ணாவைக் குறித்து எழுதிய கவிதையை உங்கள் குரலிலேயே வானொலியில் ஒலி பரப்பினார்கள். அதை நான் கேட்டிருக்கிறேன். உண்மையில் கவிதையைப் பொருத்தவரை நீங்கள் எழுதுவது வேறு விதம், நாங்கள் எழுதுவது வேறு விதம். ஆனால் எல்லோருக்கும் பொதுவான கவிதை மனம் என்ற ஒன்று இருக்கும். ஏன் தங்கள் புதல்வி கனிமொழி அவர்கள் எழுதும் கவிதைகள் நீங்கள் எழுதும் கவிதைகளைவிட முற்றிலும் வேறுவிதமானவை. கவிதையை ஆதரிக்கிற, எழுதுகிற ஒரு முதல்வர் தமிழ்நாட்டை ஆட்சி செய்வது குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். மேற்கு வங்கத்தில் ஜோதி பாசு ஆட்சி செய்யும்போது, கவிதைக்கும் அவருக்கும் வெகுதூரம் என்ற கருத்தில் ஒரு கவிதை வெளியாகியிருந்தது. சுபோத் சர்கார் எழுதிய அக் கவிதையை விருட்சத்தில் பிரசுரம் செய்திருக்கிறேன்.சிறிய கவிதையான அதை தங்களுக்கு வாசிக்க அளிக்கிறேன்.


பூதமும் கவிதைப் புத்தகம் வாங்குபவரும்


மீன் பிடிப்பவர் கவிதை வாசிப்பதில்லை


தேன் விற்பவர் கவிதை வாசிப்பதில்லை
நோயாளியான இளைஞனும்,


சகோதரனும் கவிதை வாசிப்பதில்லை


மிஸ்டர் ஜோதிபாசு கவிதை வாசிப்பதில்லை


கவிதைப் புத்தகம் வெளயிடுபவர்


கவிதை வாசிப்பதில்லை


கல்லூரி ஆசிரியர் கவிதை வாசிப்பதில்லை


பின் எந்தப் பூதம் கவிதைகளை வாசிக்கும்?


யார்தான் கவிதைப் புத்தகங்களை வாங்குவார்கள்?கவிதையின் இன்றைய அவலநிலையைக் குறித்துதான் இக் கவிதை।2006 ஆம் ஆண்டு நூலக ஆதரவு கிட்டாத 4 கவிதைத் தொகுதிகள் குறித்து சிறு விளக்கம் அளிக்க விரும்புகிறேன்।விருட்சம் கவிதைகள் தொகுதி 1 - இப் புத்தகம் 94 கவிஞர்களின் நூற்றுக்கும் மேற்பட்ட கவிதைகளைக் கொண்ட நூல். இப் புத்தகத்தில் வெளியான கவிதைகள் 1988ஆம் ஆண்டிலிருந்து முதல் ஐந்தாண்டுகளில் நவீன விருட்சம் இதழில் பிரசுரமான கவிதைகளின் தொகுதி நூல். தமிழில் இன்று எழுதிக்கொண்டிருக்கும் பல முக்கிய கவிஞர்களின் கவிதைகள் உள்ள நூல் இது. ஒரு பல்கலைக் கழகம் கூட இப்படி ஒரு தொகுதியைத் தயாரிக்க முடியாது.2. அழகியசிங்கர் கவிதைகள் : 183 கவிதைகள் கொண்ட என் தொகுதி நூல். 1975 ஆம் ஆண்டிலிருந்து கவிதைகள் எழுதி வருகிறேன். என் கவிதைகள் சில ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இதற்கு முன் இரு கவிதைத் தொகுதிகள் வெளி வந்துள்ளன. இந் நூலுக்கும் ஆதரவு கிட்டவில்லை. வல்லிக்கண்ணன், சுஜாதா, தமிழவன், வெங்கட் சாமிநாதன் முதலியவர்கள் என் கவிதை நூலிற்கு விமர்சனம் எழுதி உள்ளார்கள்.3. ரா ஸ்ரீனிவாஸன் கவிதைகள் : என் நண்பரும் கவிஞருமான ரா ஸ்ரீனிவாஸனின் தொகுப்பு இது। ஏற்கனவே 1989 ஆம் ஆண்டு இந் நூல் வெளி வந்துள்ளது. ரா ஸ்ரீனிவாஸனின் கவிதைகள் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.4. நீல பத்மநாபன் எழுதிய ஐயப்பப் பணிக்கரின் ஆளுமையும் சில படைப்பு மாதிரிகளும் என்ற புத்தகம் மலையாளப் படைப்பாளியான ஐயப்பப் பணிக்கரின் சில கவிதைகளையும் உரையாடல்களையும் வெளிப்படுத்தி உள்ளன. நீல பத்மநாபன் அவருடைய தோழரான ஐயப்பப் பணிக்கரின் சில கவிதைகள்.கட்டுரைகளை மொழிபெயர்த்துள்ளார்।।


கவிதை சம்பந்தப்பட்ட இந்த நான்கு புத்தகங்களுக்கும் நூலக ஆதரவு கிட்டவில்லை. தங்கள் பார்வைக்கு இந்த நான்கு புத்தகங்களையும் அனுப்பி உள்ளேன். உங்களுக்கு இக் கடிதத்தைப் படிக்க நேரம் இருக்குமா என்பது தெரியாது. மேலும் நான் அனுப்புகிற இப் புத்தகங்களைப் புரட்டிப் பார்க்கக்கூட உங்களுக்கு நேரம் இருக்குமா என்பதும் தெரியாது. உங்கள் பார்வைக்கு இக் கடிதம் வருமா என்பதும் தெரியாது. உங்களுக்கு அனுப்பும் இக் கடிதத்தை navinavirutcham.blogspot.comசேர்த்துள்ளேன்.அன்புடன்
அழகியசிங்கர்