17.6.09

மூன்று கவிதைகள்


கவிதை : ஒன்று


சிலருடன் பேச விரும்புகிறோம்

ஆனால்பேச முடிவதில்லை


சிலரைப் பார்க்கவே விரும்புவதில்லை


சிலரைத் தேடிப் போகிறோம்


அகப்படுவதில்லை


சிலர்முன்னால்


தேவைப்படாமல் தட்டுப் படுகிறோம்


வானத்தில் கோலம் போடுவதுபோல்


பறவைகள் பறந்து கொண்டிருக்கின்றன


தினமும் அப்படி எதிர்பார்க்க முடியுமா?


ஒருநாள் மகிழ்ச்சியாக இருக்கிறோம்


ஒருநாள் துக்கமாக இருக்கிறோம்


காரணம் புரிவதில்லை


உருண்டோடிப் போகும் காலப் பந்து


புரியாத புதிராக எட்டி


உதைக்கப் படுகிறது

கவிதை : இரண்டுஹஸ்தினாபுரத்தின் கிளை அலுவலகத்தில்


காலை வைத்ததும் ஒரே இருட்டு


ஜெனரேட்டர் இன்னும் பிக்அப் பண்ணவில்லை


பல்லைக் கடித்தபடி சீட்டில் அமர்ந்திருந்தேன்


கணினியில் எண்களைத் தடவி தடவி தட்டினேன்


விழுந்தனதப்புத் தப்பாய் எண்கள்


வாடிக்கையாளர் முன்னாள்


தலையில் அடித்துக்கொண்டேன்
வாசலில் போய்தனியாக வெயிலின்


புழுக்கத்தைப் போக்கிக்கொள்ள நின்று கொண்டிருந்தேன்


புழுக்கமில்லாத வெளி இதமாய் இருந்தது


இப்போதெல்லாம்


ஏனோ எனக்கு சிரிப்பே வருவதில்லை
கவிதை : மூன்றுகூட்டங்களில் நான்


தூங்குவது வழக்கம்


இலக்கியக் கூட்டங்களில்


நன்றாய் தூக்கம் வருகிறது


வகுப்புகளில் மாட்டிக்கொண்டால்


தூக்கம் தவிர்க்க


வகுப்பு வாசலில் நிற்பேன்


அலுவலகத்தில் நடக்கும்


கூட்டத்தில்தூங்கும்போது


யார் பேசுகிறார்கள்


என்பதை கவனமாய் கவனிப்பேன்


தூக்கத்தில் தலை ஆடுகிறதா என்றும்


ஆடும் தலையை யாராவது கவனிக்கிறார்களா என்றும்


பார்ப்பேன்


அப்படியும்


சற்று தூக்கம் என்னைக் கவர்ந்துவிடும்


தூக்கம் வரும்போது


பேசுபவர்கள் என்னை அத்திரத்தோடு
முறைத்துப் பார்ப்பதாக தோன்றுகிறது


முஷ்டியை மடக்கிக்கொண்டு முகத்தில்


ஓங்கி குத்த வேண்டுமென்று


பேசுபவருக்குத் தோன்றுகிறதோ...
ஆனால்


இரவில் குறைவாக தூங்குவது


என் வழக்கமாயிற்று


8.6.09

எதிர்பாராத மரணம்...


சனிக்கிழமை தேவிபாரதி ஒரு SMS அனுப்பியிருந்தார். ஒரு விபத்தில் ராஜமார்த்தாண்டன் மரணம் அடைந்துவிட்டதை. அறிந்தபோது வருத்தமாக இருந்தது. இந்த எழுத்தாளர்களுக்கெல்லாம் போறாத காலம் போல் தோன்றுகிறது. குறிப்பாக கவிஞர்களுக்கு..வரிசையாக சுகந்தி சுப்பிரமணியன், அப்பாஸ், சி மணி, இப்போது ராஜமார்த்தாண்டன். அவர் தினமணியில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது அடிக்கடி சந்திப்பேன். கொல்லிப்பாவையில் அவர் ஒவ்வொரு கவிஞராக எடுத்து அவர்களுடைய தொகுதியைப் படித்து அது குறித்து விமர்சனம் எழுதுவார். அதே பாணியில் நவீன விருட்சத்தில் எழுதும்படி கேட்டுக்கொண்டேன். அதன்படி உமாபதி, வைதீஸ்வரனுக்கு கட்டுரைகள் எழுதிக் கொடுத்தார். கவிதையைக் குறித்து கட்டுரைகள் எழுதுபவராகத்தான் எனக்கு அவரை முதலில் தெரியும். நவீன விருட்சத்திற்கு அவர் கவிதைகள் அனுப்பிய பிறகுதான் அவர் கவிதைகளும் எழுதுவார் என்பதைத் தெரிந்துகொண்டேன். ஆனால் மிகக் குறைவாகவே அவர் கவிதைகள் எழுதி உள்ளார்.தினமணி அலுவலகத்திற்கு அவரைப் பார்க்கச் செல்லும்போது, சிரித்த முகத்துடன் வரவேற்று பேசத் தொடங்குவார். நான் அங்குப் போனால், ராஜமார்த்தாண்டனைத்தான் தேடிப் போவேன். பின் இருவரும் அலுவலக வாசலில் வீற்றிருக்கும் டீ கடையில் டீ சாப்பிடுவோம். நவீன விருட்சம் இதழ் மீது அவருக்கு அன்பும் மரியாதையும் உண்டு. பிரமிளை சிலாகித்துப் பேசினாலும், அவர் சுந்தர ராமசாமியின் பக்கம். சு.ராவை விட்டுக்கொடுக்க மாட்டார்.பிரமிள் கரடிக்குடி என்ற இடத்தில் மரணம் அடைந்துவிட்டார் என்ற செய்தியை உடனடியாக அவரிடம் சொல்லவில்லை என்ற கோபம் என்னிடத்திலும், வெளி ரங்கராஜனிடமும் உண்டு. ஆனால் பிரமிள் நோய்வாய்ப்பட்டிருந்தபோது, பலர் அவரைப் பார்க்கவே வரவில்லை. விரும்பவும் இல்லை.விபத்தில் மரணமடைவதுபோல கொடுமை வேறு எதுவுமில்லை. பெரும்பாலும் இதுமாதிரியான விபத்துகளில் வண்டியில் செல்பவர்கள்தான் இறப்பதுண்டு. சமீபத்தில் என் அலுவலக நண்பரின் மகன் டூ வீலர் விபத்தில் மரணமடைந்த நிகழ்ச்சி அதிர்ச்சியைத் தந்தது. விபத்து ஒரு சுழற்சி மாதிரி. சுழலில் மாட்டிக்கொண்டால், பலருக்கு தொடர்ச்சியான விபத்துக்கள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். பல ஆண்டுகளுக்கு முன் கார்விபத்தில் காஞ்சிபுரம் அருகில் மாட்டிக்கொண்ட நண்பர் ஒருவரின் குடும்பத்தில் பலர் பலவிதமான பாதிப்புகளுக்கு ஆளானார்கள். நண்பருக்கு முதுகு தண்டுவடத்தில் ஏற்பட்ட எலும்பு முறிவு. இன்னும்கூட அவரால் முழுதாக திரும்ப முடியவில்லை.சில அண்டுகளுக்கு முன், என் அப்பா, நான், என் மகள் என்று மூவரும் தனித்தனியாக விபத்தில் சிக்கினோம். நினைத்துப்பார்த்தால் ஆபத்தான விபத்துக்கள்தான். ஒரு நாய் குறுக்கே வந்து நான் அடிப்பட்டு விழுந்தபோது, விபத்து எனக்குத்தான் ஏற்பட்டதா என்பதைப் புரிந்துகொள்ள சில மணி நேரம் ஆனது. விபத்து நடந்த சில தினங்கள் நான் படுக்கையிலிருந்து எழும்போது தலை சுற்றோ சுற்றென்று சுற்றும். இன்னும் கூட என் வலதுபக்கம் மூக்கு மரத்துப்போனதுபோல் தோன்றும்.இந்த ஆரியகவுடர் ரோடில் என் தந்தை (87வயது) தள்ளாடி தள்ளாடி சாயிபாபா கோயிலுக்குப் போவதை அறியும்போது எனக்கு பக் பக்கென்று அடித்துக்கொள்ளும். ராட்சத உருமலுடன் சீறிக்கொண்டு பாயும் வாகனங்களைப் பற்றி அவர் கவலைகொள்ளாமல் ரோடை கடந்துசெல்வார்.
ஒரு டூ வீலர் இடித்துத் தள்ளி ராஜமார்த்தாண்டன் மரணம் அடைந்து விட்டார் என்பதை அறியும்போது வருத்தமாக இருக்கிறது. அவரை இழந்து நிற்கும் அவர் குடும்பத்திற்கு விருட்சம் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.