30.9.08

அண்ணாவின் உருக்கம்

அண்ணாவின் உருக்கம் என்ற பெயரில் ஒரு கவிதை எழுதியிருந்தேன். 2005 ஆம் ஆண்டு. இக் கவிதை என் தொகுதியில் வெளிவந்துள்ளது. கவிதையை அண்ணாவின் நூற்றாண்டின் போது இங்கு அளிக்க விரும்புகிறேன்.


மாப்படுகை வழியாகச் செல்லும்

பாதையில் பெரும்பாலும்

அபூர்வமாகவே

வாகனங்கள் வரும் போகும்

நடமாட்டம் இரவென்றால் குறைவு

பள்ளிக்கூடங்கள் இருக்கும் நாட்களில்

சிறு சிறு மாணவ மாணவிகள்

அவர்களுக்குள்ளே தென்படுகிற

கற்பனை உலகத்தில் சஞ்சரித்துக்

கொண்டிருப்பார்கள்....

வண்டியில் செல்லும் நான்

ஜாக்கிரதையாகப் பயணிப்பேன்

ஒவ்வொருமுறையும் பார்த்துக்

கொண்டே செல்கிறேன் ஒரு அண்ணாசிலையை

கழக கண்மணிகளே உங்களுக்கு ஒரு

வேண்டுகோள்

நிச்சயமாய் அண்ணாசிலையிலிருந்து

அண்ணா உயிரோடு தோன்றினால்

சொல்லியிருக்கலாம்

கம்பீரமான அச்சிலையில்

ஆளுயுர அண்ணா கையில் புத்தகம் வைத்தபடி

நடந்து செல்வதுபோல் தோற்றம்....

சிலை வடித்தவன் அண்ணாவைப்

பார்த்திருக்கலாம்

சிலையின் பக்கத்திலேயே

கழக கண்மணிகளின் கூடாரம்

ஆனால்

சிலையோ கம்பீரத்தை இழந்து விட்டது

கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்று

அண்ணா சொன்ன மந்திரம் என்று

இவர்கள் சொல்லித்தான் தெரியும்

ஒவ்வொருமுறையும் நான் போகும்போது

சிலையை ஒருமுறையாவது பார்த்துவிட்டுச்

செல்வேன்

அண்ணா முணுமுணுப்பது காதில் விழுகிறது

நான் என்ன பாவம் செய்தேன் எனனை

இங்கே நிறுத்தி விட்டார்களே என்று

புராதான அழுக்கென்றால் அப்படியொரு

அழுக்கை நீங்கள் பார்த்திருக்க முடியாது

பறவைகளின் களிப்பூட்டும் சம்பவம்

எல்லாம் அண்ணாசிலையின் மீது

எப்பவோ கழுத்தில் இட்ட நீண்ட

மாலையொன்று

உதிர்ந்து போகாமல் தெரு தூசிகளுடன் கருத்துக்

கிடக்கும்

அண்ணா என்னசெய்வார் பாவம்

முகத்தில் திட்டுத்திட்டாய்த் தெரியும்

வெண்மை அழுக்குப் போக எத்தனை ஆண்டுகள்

இன்னும் ஆகுமோ?

தினமும் பார்ப்பதால் எனக்குத் தெரிகிறது

அண்ணா கடுகடுவென்று நிற்கிறாரென்று.

26.9.08

ஒரு கதை இரு முடிவுகள்

பூர்வாங்கம் :

சுந்தரி ஒரு முடிவிற்கு வந்து விட்டாள். அவள் ஒரு முடிவிற்கு வந்துவிட்டால், பின் மாற்றுவது என்பது இயலாத காரியமாகிவிடும். அவளைப் பொறுத்தவரை இந்த முடிவு மோசமான முடிவு. ஏன் எல்லாவற்றுக்குமான முடிவு இது? அவளுக்கு ஆசையாகக் கொடுத்த சிங்கப்பூர் புடவையைக் கையில் வைத்துக் கொண்டிருக்கிறாள். அதை உத்தரத்தில் உள்ள கொக்கியில் மாட்டிக்கொண்டாள். அவள் ஏறி நின்று மாட்டிய ஸ்டூல் மீதே அவள் உட்கார்ந்து கொண்டாள். இனி அவ்வளவுதான். வாழ்க்கையை முடித்துக்கொள்ள வேண்டியதுதான். கழுத்தில் இறுக்கி இந்த ஸ்டூலை எடுத்துவிட்டால், எல்லாம் முடிந்து விடும். ஆனால் இது மாதிரி செய்வதற்கு துணிச்சல் வேண்டும். சுந்தரிக்கு துணிச்சல் இருக்கிறது. செய்தும் விடுவாள். அவளுக்குக் கோபம் வந்துவிட்டால், நன்றாகப் பழகியவர்களிடம் கூட பேசமாட்டாள். சுந்தரிக்கு 39வயதாகிவிட்டது. இன்னும் சில மாதங்களில் 40 வயதாகிவிடும். அவள் வீட்டில் 10 பேர்கள். எட்டுப் பெண்கள். இரண்டு ஆண்கள். சுந்தரிக்கு மேல் உள்ள இரண்டு அக்காள்களுக்குத் திருமணம் ஆகவில்லை. திருமணம் செய்துகொள்ளும் வயதுகளையும் கடந்து விட்டார்கள். சுந்தரிக்கு அந்த ஆசை விடவில்லை. ஒரு நிமிடம் தன் வாழ்க்கையை நினைத்துப் பார்த்துக் கொண்டாள். அவள் சந்தோஷமாக என்றாவது இருந்திருக்கிறாளா? இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். தினமும் பலருடைய வீட்டு வேலைகளைச் செய்து அவள் கை ஒடிந்து போய்விட்டது. இன்னும் அவளுக்கான ஒரு வாழ்க்கை வரவில்லை என்றுதான் அவள் நினைத்துக்கொண்டிருப்பாள். எல்லோரும்போல் அவளும் திருமணம் செய்துகொண்டு வாழ வேண்டுமென்று நினைக்கிறாள். வறுமையான அவள் குடும்பத்தை நினைத்துப் பார்க்கும்போது, தன்னுடைய மூத்த அக்காள்கள்போல் தன் வாழ்க்கையும் போய்விடுமென்று அவளுக்குத் தோன்றியது. இச் சமயத்தில் பத்மநாபன்தான் அவள் மீது இரக்கப்பட்டு தினசரி ஒன்றில் விளம்பரம் கொடுத்திருந்தார். அந்தத் தினசரியைப் பார்த்துவிட்டு, ஒரு வரன் அவளுக்குக் கிட்டும்போல் தோன்றியது. ஆனால் ஒரு முக்கியமான விஷயத்தில் முட்டி நின்றது. அவளைப் பார்த்த பையனுக்கு பைக் வேண்டுமாம். முதலில் அவளுடைய அண்ணன் யோசனை செய்தான். பிறகு சரியென்று சொல்லிவிட்டான். எல்லாம் முடிந்துவிட்டது. எல்லாம் முடிந்துவிட்டது. ஆனால் பையன் இன்னும் கல்யாணத்திற்குச் சம்மதம் தெரிவிக்கவில்லை. ஒரு வாரம் கழித்து என் முடிவைச் சொல்கிறேன் என்று சொல்லிவிட்டான். பையன் இருப்பது திருவலங்காடு. அங்கு ரைஸ் மில் வைத்து ஓட்டிக்கொண்டிருக்கிறான். சுந்தரிக்கு ஒவ்வொரு நாளும் கடத்துவது நரகவேதனையாக இருந்தது. பத்மநாபன் அவளுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருப்பார். எப்படியாவது இந்தக் கல்யாணத்தை முடித்துவிடலாமென்று தைரியமும் சொல்லிக்கொண்டிருப்பார். எதற்கும் காலம் கணிந்து வரவேண்டுமென்பதில் அவருக்கு அலாதியான நம்பிக்கை உண்டு. ஆச்சு. பத்துநாள் ஓடிவிட்டது. பையனிடமிருந்து பதில் வரவில்லை. அதனால்தான் மேலே கூறிய தற்கொலை முடிவுக்கு சுந்தரி வந்துவிட்டாள். இந்தத் தற்கொலையை அரங்கேற்ற வசதியாக அவள் பணிபுரிகின்ற வீடொன்றை தேர்ந்தெடுத்துக்கொண்டாள். அந்த வீட்டில் உள்ளவர்கள் இவளிடம் சாவியைக் கொடுத்துவிட்டு சென்னைக்கு அவசரமாகச் சென்றுவிட்டார்கள். வர சில வாரங்கள் ஆகும். ஒரு நிமிடம் கண்ணீர் விட்டு அழ ஆரம்பித்தாள். பிறகு வீட்டுக் கதவைச் சாத்திவிட்டு, தன் உடம்பில் உள்ள துணியெல்லாம் உருவினாள். கழுத்தில் புடவையை மாட்டிக்கொள்ள வேண்டியதுதான. தன் தற்கொலையால் யாருக்கும் எந்தத் துன்பமும் ஏற்படக் கூடாது என்ற நோக்கத்துடன், ஒரு பேப்பரில், தன் தற்கொலைக்கு யாரும் காரணமில்லை என்று எழுதி எல்லோர் பார்வையிலும் படும்படி வைத்துவிட்டாள். தூக்கில் தொங்க வேண்டியதுதான். அதற்கு முன், தன் உருவத்தை ஒருமுறைப் பார்த்துக் கொண்டாள். இனி இந்த உடல் மண்ணுக்குப் போகப் போகிறது. பெருமூச்சு அவளிடமிருந்து வெளிப்பட்டது.

முடிவு ஒன்று :

சுந்தரி தன் கழுத்தில் புடவையை மாட்டிக்கொண்டாள். புடவை இறுகிக்கொண்டது. இனி அவ்வளவுதான். அவள் நின்றுகொண்டிருந்த ஸ்டூலை உதறி விட வேண்டியதுதான். உதறினால், கழுத்தில் புடவை இறுகி சில நிமிடங்களில் இறக்க நேரிடலாம். கடைசி முறையாக கண்களை மூடிக்கொண்டு, அடுத்த ஜென்மத்திலாவது நல்ல பிறவியாக எனக்குக் கொடு என்று கடவுளை வேண்டிக்கொண்டாள். இதோ சுந்தரி தூக்கில் தொங்கிவிட்டாள். உதறி எறிந்த ஸ்டூல் தொப்பென்ற சப்தத்துடன் விழுந்தது. கைக் கால்களை உதறி, கண்கள் சொருக, சொருக... தூரத்திலிருந்து யாரோ அவள் பெயரைச் சொல்லி உரத்துக் கூப்பிடுவது காதில் விழுந்.......சுந்தரி போய்விட்டாள். எல்லோரையும் விட்டு.... மேலே குறிப்பிட்ட முடிவு எனக்குப் பிடிக்கவில்லை. அதனால் முடிவை மாற்ற வேண்டுமென்று தோன்றியது. சுந்தரியை எதற்காக சாகடிக்க வேண்டும். அதனால் யாருக்கு என்ன லாபம் கிடைத்துவிடப் போகிறது. சுபமான முடிவு என்றால், படிப்பவர்களுக்கும் நிஇருக்கும். வாழ்க்கையில் சோகமான முடிவுகள்தான் அதிகம். அதனால் இன்னொரு முடிவை இங்கே எழுதி உள்ளேன்:

முடிவு இரண்டு :

சுந்தரி தான் கட்டியிருந்த உடைகளை வீசி எறிந்தாள். ஒரு நிமிடம் தன்னைக் கண்ணாடியில் போய்ப் பார்த்துக்கொண்டாள். அவள் முகத்தைப் பார்க்கும்போது, தற்கொலை செய்துகொள்ளப் போகும் உருவமாக அது தெரியவில்லை. சரி, இன்றோடு இந்த உருவத்தை யார் பார்க்கப் போகிறார்கள் என்று நினைத்துக் கொண்டாள். ஸ்டூல் மீது ஏறி நின்றுகொண்டாள். ஐயோ, நாம் இறந்துவிட்டால், இக் குடும்பத்தில் உள்ளவர்களுக்குப் போலீஸ் எதாவது தொந்தரவு செய்யப் போகிறதென்று எண்ணி, உடனே ஸ்டூலை விட்டு கீழே இறங்கி, அந்த வீட்டில் உள்ள ஒரு இடத்திலிருந்து பேப்பரையும், பேனாவையும் எடுத்து வைத்துக் கொண்டு எழுத ஆரம்பித்தாள். =என் தற்கொலைக்கு யாரும் காரணமில்லை. இந்த வீட்டில் உள்ள மனிதர்கள் நல்ல மனிதர்கள். என் சுய உணர்வோடுதான் இந்த முடிவுக்கு வந்துள்ளேன்.+ அவ்வளவுதான் சுந்தரி எழுதினாள். பின் கையெழுத்துப் போட்டாள். மறக்காமல் தேதி, நேரம் எல்லாம் குறித்துக்கொண்டாள். இதோ தற்கொலை செய்துகொள்ள வேண்டியதுதான். திரும்பவும் ஸ்டூலில் ஏறிநின்று, புடவையை கழுத்தில் இறுக்கிக் கொண்டாள். கண்களை மூடிக்கொண்டு கடவுளை வேண்டிக்கொண்டாள். அவள் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. இதோ முடித்துக்கொள்ள வேண்டியதுதான். கழுத்தில் முறுக்கியும் கொண்டாள். ஸ்டூலை தள்ள வேண்டியதுதான் பாக்கி. ஆயிற்று அதுவும் இன்னும் சில நிமிடங்களில்..ஒன்று இரண்டு மூன்று நான்கு ஐந்து......சுந்தரீ.....சுந்தரீ....யாரோ கூப்பிடுவது கேட்கிறது... ஆறு, ஏழு, எட்டு, யே...சுந்தரீ...என்ன பண்றே... ஒன்பது, ப....த்... சுந்தரீரீரீ.....ஏது அண்ணன் குரல் மாதிரி கேட்கிறதே..அண்ணாவா.... என்ன? என்றாள் சுந்தரி பதிலுக்கு... "அவர்கள் சம்மதித்துவிட்டார்கள்," என்றான் அண்ணன். சுந்தரி போக வேண்டிய உயிரைத் திரும்பவும் பாதுகாக்க வேண்டும்போல் தோன்றியது. தூக்குப் புடவையை உதறித் தள்ளிவிட்டு, கீழே குதித்தாள். அவசரம் அவசரமாக உடைகளை மாட்டிக்கொண்டாள். வாசல் கதவைத் திறந்தாள்.

அவள் அண்ணன் மகிழ்ச்சியுடன் நின்று கொண்டிருந்தான். "அவர்கள் சம்மதம் தெரிவித்துவிட்டார்கள். அடுத்த மாதம் கல்யாணம்.." என்றான் அவன்.சுந்தரி கண்களிலிருந்து பொலபொலவென்று கண்ணீர் கொட்டியது.

19.9.08

சில குறிப்புகள் - 5


ழ கவிதைகள்


மே மாதம் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த என்ற பத்திரிகைக்கும் எனக்கும் தொடர்பு உண்டு. ழ பத்திரிகையைப் பார்த்துதான் நான் நவீன விருட்சம் பத்திரிகையைத் தொடர்ந்தேன். ழ பத்திரிகை கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் தொடர்ந்து வெளிவந்தது. அப் பத்திரிகையைப் பற்றி ஞானக்கூத்தன் பேசும்போது அம்மணப் பத்திரிகை என்பார். பத்திரிகைக்கு என்று தனியாகப் பளபள அட்டை இருக்காது. நியூஸ் பிரிண்டில் 16 பக்கம்தான் இருக்கும். இந்த எளிமையெல்லாம் ஆத்மாநாம் ஆசிரியராக இருந்து கொண்டு வந்தபோது. ழ பத்திரிகையில் ஈடுபட்ட பலர் எதாவது ஒரு பணியில் இருந்துகொண்டு, ஒழிந்த நேரத்தில் இலக்கியம் பேசிக்கொண்டு பத்திரிகையை நடத்திக்கொண்டிருந்தார். கவிதைகளைப் பற்றி பேசுவது, கவிதையை இயற்றுவது என்று ஒரு சிறிய கூட்டமே இருந்தது.


ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சென்னை கடற்கரையில் உள்ள திருவள்ளூவர் சிலை பக்கத்தில் அமர்ந்து இலக்கிய உரையாடலைத் தொடர்ந்து நடத்திக்கொண்டே இருப்பார்கள். அவர்கள் பேச்சு பல விஷயங்களைக் குறித்து இருக்கும். அங்கு ஆத்மாநாமை நான் பார்க்கவில்லை. ஆத்மாநாமின் தற்கொலை அந்த எளிமையான கூட்டத்திற்குப் பெரிய அதிர்ச்சியே ஏற்படுத்தியது. ஆத்மாநாம் தற்கொலை செய்து கொண்டு விடுவார் என்பதை யாரும் எதிர்பார்க்கவில்லை.

சாத்வீகமான கவிஞர்களாக ஒவ்வொருவரும் இருந்தாலும், ழ கூட்டத்தில் இருக்கும் மற்ற கவிஞர்களுக்கு இருந்த மனத்துணிவு ஏன் ஆத்மாநாமிற்கு இல்லாமல் போய்விட்டது என்பது தெரியவில்லை. நான் ஆத்மாநாமை மூன்றுமுறை சந்தித்து இருக்கிறேன்.

ஒருமுறை ஞாநி இருந்த பீட்டர்ஸ் சாலையில் உள்ள காலனி வீட்டில் நடந்த கூட்டத்தில். அப்போது ஆத்மாநாம் கையில் ழ பத்திரிகையின் பிரதிகளை வைத்துக்கொண்டிருந்தார். ழ பத்திரிகையுடன் அவரைப் பார்க்கும்போது பரிதாபமாக இருந்தது.

இன்னொரு முறை நான், வைத்தியநாதன், ஆத்மாநாம் சந்தித்துக் கொண்டபோது. கவிஞர் ஆனந்த் வீட்டிற்கு நாங்கள் பயணம் செய்தோம். அப்போது வெளியீடாக வந்திருந்த நகுலனின் 'கோட் ஸ்டாண்ட் கவிதைகள்' ஆத்மாநாமின், 'காகிதத்தில் ஒரு கோடு' ஆனந்த் - தேவதச்சனின் 'அவரவர் கை மணல்' ஞானக்கூத்தனின், 'சூரியனுக்குப் பின்பக்கம்' என்ற புத்தகங்களை விலைக் கொடுத்து வாங்கினேன். ஆத்மாநாம் அவர் புத்தகத்தில் என் பெயரை எழுதி கையெழுத்துப் போட்டு கொடுத்தார்.

மூன்றாவது முறையாக நான் ஆத்மாநாமைச் சந்தித்தது. ஞாநியின் திருமண அறிவிப்புப் போது. ஞாநி பத்மாவுடன் சேர்ந்து வாழப்போவதாக அறிவிப்பு செய்து, நாடகம் ஒன்றை சென்னை மியூசியம் தியேட்டரில் நடத்தினார். எல்லோருக்கும் டீ வரவழைத்துக் கொடுத்தார். நான் ஆத்மாநாமைப் பார்த்து அவர் சீட் பக்கத்தில் போய் அமர்ந்தேன். நகுலனைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம். திடீரென்று விமலாதித்த மாமல்லனைப் பார்த்து ஆத்மாநாம் எழுந்து போய்விட்டார். அப்புறம் ஆத்மாநாம் வரவேயில்லை.

ஆத்மாநாமின் முடிவு சோகமானது. யாரும் எதிர்பார்க்காதது. குறைந்த வயதே வாழ்ந்தாலும், ஆத்மாநாம் தமிழ் கவிதையில் பல புதிய முயற்சிகளை உருவாக்கத் தவறவில்லை. ழ வின் முதல் இதழில் ஆத்மாநாமின் கவிதை எதுவும் பிரசுரமாகவில்லை. ஆனால் ஜூன் 1978 ஆம் ஆண்டு ஆத்மாநாமின் இரண்டு கவிதைகள் பிரசுரமாகியிருந்தன.

தூரத் தெருவிளக்குகள்

இரவில் இரும்பு மனிதர்கள் ஆகின்றன

கையில் நிழற்சுமையுடன்

இரவைக் காவல் காக்கின்றன

பகலிடமிருந்து

காலை மெல்லப் புலர்கிறது

கொஞ்சம் கொஞ்சமாய்

தெரு விளக்குகள் இறந்து விடுகின்றன

கண்ணுக்கே தெரியாத் தொலைவு சென்றுவிடுகின்றன

மீண்டும் இரவு

மெல்ல மெல்ல வருகிறது

வெளிச்சத்தை விரட்டிக்கொண்டு

மீண்டும் எங்கிருந்தோ

வந்து குதிக்கின்றன

தெரு விளக்குகள் இரவைப் பாதுகாக்க

கவிதை இரண்டு


ஒரு புளியமரம் சமீபத்தில் என் நண்பனாயிற்று

தற்செயலாய் அப்புறம் நான் சென்றபோது

நிழலிலிருந்து ஒரு குரல் என்னைத் தெரிகிறதா

திடுக்கிட்டேன் அப்புளிய மரம் கண்டு

நினைவிருக்கிறதா அன்றொரு நாள்

நீ புளியம் பழங்கள் பொறுக்க வந்தபோது

என் தமக்கையின் மடியில் அயர்ந்துபோனாய்

அப்பொழுது குளிர்ந்த காற்றை வீசினேனே

உன் முகத்தில் உடலில் எங்கும்

வா எப்படியும் என் மடிக்கு

இங்கு தொடர்ந்து ழ பத்திரிகையிலிருந்து சில கவிதைகளை உங்களுக்கு வாசிக்க அளிக்கலாம் என்று நினைக்கிறேன். ழ வந்த சமயம் கவிதைக்குப் பொற்காலம் என்று சொல்லத் தோன்றுகிறது. கவிதைக்கு மரியாதையை ஏற்படுத்தித் தந்த சமயமும் அதுதான் என்று சொல்லத் தோன்றுகிறது. இன்னும் என்னவெல்லாமோ சொல்லத் தோன்றுகிறது. ஆனால் சொல்லத் தெரியவில்லை.

14.9.08

வார்ஸாவில் ஒரு கடவுள்/1


சில மாதங்களாக நான் நாவல்கள், சிறுகதைத் தொகுதிகள் படிப்பதில்லை. எனக்கு நேரம் கிடைப்பதில்லை. காலை 7.30மணிக்குக் கிளம்பினால் வீடு வர இரவு 8 மணி ஆகிவிடுகிறது. நான் எப்போதும் மின்சார வண்டியில் பயணம் செய்யும்போதுதான் தினமணி, The Times of India பத்திரிகைகளைப் படிக்கிறேன். அதனால் நான் நாவல்கள், சிறுகதைத் தொகுதிகளை வாங்குவதை நிறுத்தியிருக்கிறேன். ஆனால் Non Fiction ஐ விரும்பிப் படிக்கிறேன். The Other side of Belief என்ற முகுந்த ராவ் எழுதிய ஆங்கிலப் புத்தகத்தை கடந்த ஒரு மாதமாகப் படித்துக்கொண்டிருக்கிறேன்.

நான் மயிலாடுதுறையில் இருந்தபோது தினமும் ஒரு சிறுகதையைப் படிக்க வேண்டுமென்று ஆரம்பித்தேன். ஒருசில நாட்கள் என் முயற்சி தொடங்கி அப்படியே நின்றுவிட்டது. சென்னைக்கு தற்காலிகமாக நான் வந்திருக்கிறேன். இங்கு எந்த முயற்சியும் என்னால் தொடங்க முடியவில்லை.

நவீன விருட்சம் (1988) ஆரம்பித்த கால கட்டத்தில் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்கு மேல் மாதா மாதம் இலக்கியக் கூட்டங்களை நடத்தியிருக்கிறேன். எல்லோரும் சந்திப்பதற்கு ஒரு இடமாகவும், பல புத்தகங்களைப் பற்றி விமர்சனக் கூட்டங்களாகவும் அவை திகழ்ந்திருக்கின்றன. மூத்த எழுத்தாளர் முதல் புதியதாக எழுத வருகிற எழுத்தாளர் வரை என் கூட்டத்தில் பலர் கலந்துகொண்டதுண்டு. ஆனால் இப்போதோ அதெல்லாம் எப்படி சாத்தியமாயிற்று என்ற ஆச்சரியம்தான் எஞ்சுகிறது.

அதெல்லாம் விட்டுவிடுவோம். என்னால் ஏன் நாவல்களைப் படிக்க முடியவில்லை. சமீபத்தில் நான் படித்த பல நாவல்கள். பாதியிலேயே நின்று விடுகின்றன. முழுதாக என்னால் நாவலைப் படிக்க முடிவதில்லை. நாவல் மட்டுமல்ல சிறுகதைகளுக்கும் இது பொருந்தும்.

படிப்பதில் குறிப்பாக நாவல் படிப்பதில் ஏன் நாட்டம் குறைந்து விடுகிறது. தமிழில் படிப்பவர்களே மிகக்குறைவு. அதில் நான் படிப்பதை நிறுத்திவிட்டால், தமிழுக்கு எவ்வளவு பெரிய நஷ்டம். என் இந்த நிலையை சமீபத்தில் வந்துள்ள 'வார்ஸாவில் ஒரு கடவுள்' என்ற தமிழவனின் நாவல் மாற்றி விட்டது.

இந் நாவலைக் குறித்து எனக்குப் பேச ஒரு வாய்ப்பு கிடைத்தது. கூட்டத்தில் பேசப்போகிறேன் என்பதால் 438 பக்கங்கள் கொண்ட இப் புத்தகத்தைப் படிக்கத் தொடங்கினேன். கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்குமுன்புதான் இப் புத்தகம் படிக்கக் கிடைத்தது. நான் படிக்கத் தொடங்கினாலும் நாவலின் பக்கங்கள் நகர மறுக்கிறது. என்ன செய்வது என்று புரியவில்லை. 14.09.2008 அன்று (அதாவது இன்று) இந்த நாவலைக் குறித்து சிறிய கூட்டம். கிட்டத்தட்ட 10 பேர்கள் கலந்துகொண்டு பல்கலைக் கழக வளாகத்தில் ஒரு சிறிய வகுப்பறையில் உரையாடல். 13ஆம் தேதி சனிக்கிழமை வரை நான் 80 பக்கங்கள்தான் படித்திருக்கிறேன். நாவலை முடிப்பதோடல்லாமல், நாவலைக் குறித்து என் கருத்துக்களையும் தெரிவிக்க வேண்டும்.

இன்று காலை 5மணிக்கே எழுந்துவிட்டேன். நாவலை விடாமல் படித்துக்கொண்டே போகிறேன். கிட்டத்தட்ட 9.30 மணிவரை படித்து நாவலை முடித்துவிட்டேன். 438 பக்கங்களை முடித்துவிட்டேன் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. இப்போது என்னுடைய அடுத்தப் பிரச்சினை இந்த நாவலைப் பற்றி பேசவேண்டும். கூட்டம் 10 மணிக்கே ஆரம்பமாகி எல்லோரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். நானோ உடனே அங்கு போக முடியவில்லை. என்னால் நாவலை அப்படியே மனதில் பதியவைத்துக் கொண்டு அப்படியே பேச முடியாது. எழுதித்தான் பேசமுடியும். அப்போதுதான் என்ன சொல்ல வருகிறேன் என்பது கோர்வையாக வரும்.

9.30க்கு நாவலைப் படித்து முடித்த நான், அது குறித்து குறிப்புகள் எதுவும் தயாரிக்கக் கூட நேரமில்லை. என் சகோதரன் காரில் அமர்ந்துகொண்டு ஒரு இடத்திற்கு அவசரமாகக் கிளம்பிக் கொண்டிருந்த நான், பேப்பரில் நாவலைக் குறித்து படிப்பதற்கு தோதாக எனக்குத் தோன்றிய கருத்துக்களை எழுதத் தொடங்கினேன். கூடவே என் சகோதரன் பேச்சுக் கொடுத்தபடி இருந்தான். என் கவனமெல்லாம் நாவலைப் பற்றி என்ன எழுதப்போகிறேன் என்று இருந்தாலும், சகோதரின் பேச்சு என் திசையைத் திருப்பிக் கொண்டிருந்தது. இது ஒரு சவாலாக எனக்குத் தோன்றியது. மேலும் 438 பக்கங்கள் கொண்ட நாவலுக்கு கொஞ்சமாவது அவகாசம் வேண்டும். அவசரம் அவசரமாக நாவலைப் பற்றி நான்கு பக்கங்கள் எழுதினாலும், 6 மணி நேரம் விடாமல் படித்த எனக்கு அதைப் பற்றி யோசிக்க இன்னும் நேரம் தேவை என்று தோன்றியது.
இருந்தாலும் எனக்குத் தோன்றிய கருத்துக்களை இங்கு தொகுத்து அளிக்க விரும்புகிறேன்.
தமிழவன் எழுதிய முந்தைய நாவல்களைப் படித்திருக்கிறேன். ஒவ்வொரு முறை அவர் நாவல் வரும்போதெல்லாம் அந் நாவலைப் படித்து இது ஆங்கிலத்தில் வந்துள்ள இந்த நாவலின் தழுவல் என்றெல்லாம் கடுமையாக விமர்சனம் செய்வார்கள். அதெற்கெல்லாம் தமிழவன் பதில் சொல்ல மாட்டார். ஆனால் ஒருமுறை சுபமங்களா என்ற பத்திரிகையில் ஒரு பேட்டியில் அவர் அப்படித்தான் தழுவித்தான் எழுதியுள்ளதாக கூறியதோடல்லாமல், நாவல் எழுதும் வழக்கத்தில், அப்படி எழுதுவதும் ஒரு முறை என்று குறிப்பிட்டுள்ளார்.

'வார்ஸாவில் ஒரு கடவுள்' என்ற இந்த நாவல் முன்னுரையில் தமிழவன் இப்படி கூறுகிறார். நாவல்களையோ நாவலையோ பாரத்து எழுதுவதுதான் ஒரு புதிய நாவல் என்பது என் பழைய கோட்பாடு என்று குறிப்பிடுகிறார்.
ஆறுமாதக் காலத்தில் எழுதப்பட்ட நாவல் என்று குறிப்பிடும் தமிழவன், அதுவரை படிக்கக் கிடைக்காத பலநாட்டு கிளாஸிக்குகள் எனக் கருதப்படும் நாவல்களை எல்லாம் படித்துக்கொண்டிருந்தேன் என்றும், அவற்றின் தாக்கம் இந்த நாவலில் இருக்கலாம் என்றும் குறிப்பிடுகிறார். இப்படி

வெளிப்படையாகக் குறிப்பிடும் அவர் நேர்மையை இங்கு பாராட்ட வேண்டும். ஆனால் இந்த நாவலை வாசிப்பவர்களுக்கு அப்படிப்பட்ட எண்ணம் எதுவும் தோன்றவில்லை. எனக்கு இந்த நாவலைப் படிக்கும்போது, எப்படி இவரால் 6 மாதக் காலத்திற்குள் இது மாதிரியான நாவலை எழுத முடிந்தது என்பது ஆச்சரியமாக இருக்கிறது.

பொதுவாக நாவல் என்றால் எதாவது ஒரு கதை என்று ஆரம்பித்து அதன் பின்னணியில் சுற்றி சுற்றி வரும். ஆனால் தமிழவனின் இந்த நாவல், நாவல் என்று ஏற்கக் கூடிய தன்மையிலிருந்து விடுப்பட்டு நாவலை எழுதியதாகத் தோன்றுகிறது.

நாவல்தான் நாம் படிக்கிறோம். ஆனால் நாவல் மூலம் ஒரு முழுக் கதையை ஆரம்பம் தொட்டு கோர்வையாகச் சொல்லப் படுவதில்லை. நாவல் என்ற களத்தை அடிப்படியாக வைத்துக்கொண்டு போலந்து நாட்டு சரித்திரம் சொல்லப்படுகிறது. அங்கங்கே நடைப்பெற்ற பல சம்பவங்களை கோர்வையாக வேறு விதமாக அடுக்கிக்கொண்டு போகிறார். நிகழ்கால அனுபவங்களிலிருந்தும், நிகழ்ந்து முடிந்த சம்பவங்களிலிருந்தும் பலவித கருத்தாக்கங்களை அடுக்கிக் கொண்டே போகிறார்.
தீயைப் பற்றி சொல்லும்போது முக்கிய கதா பாத்திரமான சந்திரன் எப்படி தீ அணைப்பு அலுவலகத்தில் சேர்ந்தான் என்பது பற்றிய விபரம் சொல்லப்படவில்லை. மாறாக தீ அணைப்பு அலுவலகத்தில் சேர்வதும்,அதன்பின் அதிலிருந்து விடுபடுவதும். கோர்வையாகச் சொல்லப்படுகிறது.

பெரும்பாலும் இந்த நாவல் முழுவதும் நீண்ட உரையாடல் பலருடன் தொடர்ந்துகொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. அதுவும் பெரும்பாலும் பெண் பாத்திரங்களுடன். பெண் பாத்திரங்களுடன் உருவாகும் உரையாடலின் தொகுப்பே இந் நாவல்.

பெண் பாத்திரங்களின் கூற்றாக நாவல் இயங்குவதாகப் படுகிறது. அன்ன, லிடியா, விஜயா, அமலா, அஷ்வினி, மாக்தா என்ற பல பெண் பாத்திரங்களுடன் உண்டாகும் உறவு முறைகளைக் கொண்டு உளவியல் ரீதியாக ஏற்படும் சிக்கல்களை அலுக்காமல் இந் நாவல் விவிரித்துக்கொண்டே போகிறது. கனவையும், நினைவையும் இந் நாவல் விவிரித்துக் கொண்டே போகிறது.
தீ யார் மீது படர்கிறது என்பது பிரக்ஞையில் வரல்ல..தீ அழகாக இருக்கிறது. தீ அழகாக இருக்கிறது. ஜ்வாலை பூ போல பரவுகிறது.... என்றெல்லாம் கவித்துவமாக வர்ணிக்கப் படுகிறது. ஓவியம், இசைப் பற்றி நாவலில் பல செய்திகள் வெளிப்படுகின்றன.

அமானுஷ்ய உணர்வுகள் சாதாரண நிகழ்வுகளாக மாறிக்கொண்டே போகின்றன.

ஏன் இந்நாவலில் வெளிப்படும் கதாபாத்திரங்கள் சாதாரணமானவர்காள். தமிழில் இது ஒரு வித்தியாசமான நாவல் என்ற கருத்தில் யாருக்கும் எந்த சந்தேகமும் வராது.
(இதன் அடுத்தப் பகுதி இன்னும் சி ல தினங்களில் வெளியாகும்)


12.9.08

க நா சு யார்?


இந்தக் கேள்வியை யாரிடம் கேட்க வேண்டுமென்று தெரியவிலல்லை. தமிழ்நாட்டில் மொத்த ஜனத்தொகையில் க நா சுவைத் தெரிந்தவர்கள் ஆயிரக்கணக்கான பேர்கள்தான் இருப்பார்கள். ஏன் நூற்றுக்கணக்கான பேர்களும் இருக்கலாம். அவர்கள் பெரும்பாலும் தீவிர இலக்கியத்தில் ஈடுபடபவர்கள் என்று நம்பலாம். ஏன் அவர்களுக்குக் கூட எது மாதிரியான க.நா.சுவைத் தெரியும் என்பது தெரியவில்லை. பல ஆண்டுகளுக்குமுன் என் தந்தையார் சொன்னது இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது. '' க.நா.சு என்ற ஒருத்தர் இருக்காரே, அவர் எழுதறதெல்லாம் படிக்க போரடிக்கும்.'' எனக்கு ஒரே ஆச்சரியம். க.நா.சுவைப் பற்றி குறிப்பிட்டது. ஏன் 'போர்' என்ற காரணத்தையும், எந்தப் புத்தகத்தைப் படித்துவிட்டு அவர் போர் என்று குறிப்பிட்டார் என்பதெல்லாம் எனக்குத் தெரியவில்லை. இன்று அவர் அன்று அப்படிச் சொன்னதை ஞாபகப்படுத்தும்போது, அவருக்கு அப்படிச் சொன்னது ஞாபகத்திற்கு வரவில்லை. எனக்கோ அவர் கநாசுவைப் பற்றி அப்படிக் குறிப்பிட்டதால்தான் இந்த நிகழ்ச்சி ஞாபகத்திற்கு வந்து கொண்டிருக்கிறது. சரி, க நா சு என்பவர் யார்? எந்தப் புத்தகம் படித்துவிட்டு அவரால் ஈர்க்கப்பட்டேன். இந்தக் கேள்வி சில மணி நேரங்களாக என்னுள் சுழன்று சுழன்று.


க நா சு எழுதியதெல்லாம் எனக்குப் பிடிக்குமென்று சொன்னால், நான் அவருடைய பரம ரசிகனாகி விடுவேன். இதை க நா சுவே விரும்ப மாட்டார். மற்ற படைப்பாளிகளின் படைப்புகளை அவர் எப்படி விமர்சிக்கிறாரோ அதேபோல் அவர் தன்னைப் பற்றியும் விமர்சித்துக் கொள்வார். தன்னால் சரியாக எழுத முடியாத படைப்புகளை இலக்கியத் தரமாகச் சொல்ல முடியாவிட்டாலும், பத்திரிகைத் தனமான முயற்சி என்று குறிப்பிட்டிருக்கிறார்.

க நா சு என்பவர் யார் என்று திரும்பவும் யோசிக்கும்போது, அவர் ஒரு சிறு கதை எழுத்தாளரா? கவிஞரா? நாவலாசிரியரா? நாடக ஆசிரியரா? விமர்சகரா? என்றெல்லாம் பார்க்கும்போது, அவருக்கு எந்தவிதமான அங்கீகாரத்தையும் தர இன்றைய இலக்கிய உலகத்தில் மறுப்பவர்கள் அதிகம். ஆனால் க நா சு வோ எல்லோரையும் மீறியவர். எனக்குத் தெரிந்த பலர், அவரை கவிஞராக அடையாளம் காட்ட விரும்ப மாட்டார்கள். ஆனால், மணிக்கொடி எழுத்தாளர்களிடையே புதுக்கவிதை என்ற சொற் பதத்தைப் புகுத்தியவர் அவர்தான். மேலும், மற்ற படைப்பாளிகள் வேறு விதமாக கவிதை எழுத முயற்சித்தபோது, க நா சு அதற்கு தனக்கே உரிய, தனித்துவமான முறையைப் புகுத்தியவர். புதுக்கவிதையை உரைநடையிலிருந்து உருவாக்கினார். கவிதைக்கு உவமானம், படிமம் எல்லாம் இருக்கக் கூடாது என்று வலியுறுத்தினார். பல அற்புதமான கவிதைகளை தமிழுக்கு அளித்திருக்கிறார். இன்றும் அவர் கவிதைகளை வாசித்துவிட்டு எழுதும் படைப்பாளிகள் பலர். ஏன் நகுலன்கூட கநாசு கவிதையால் கவரப்பெற்றவர். கநாசுவுக்கும் இசைக்கும் வெகு தூரம். அதனால் அவர் கவிதைகளில் இசையுடன் கூடிய சப்தம் ஒலிக்காது.

சரி, கநாசுவை கவிதைக்காக ஏற்றுக்கொள்ளாதவர்கள் இருக்கட்டும் அவரை ஒரு விமர்சகராக ஏற்றுக்கொள்வார்களா? நிச்சயம் மாட்டார்கள். வரிந்து கட்டிக்கொண்டு சண்டைக்கு வருவார்கள். ஏனென்றால், அவர் சிறந்த பத்துப் பேர்களுடைய படைப்புகளை இலக்கிய லிஸ்ட் மூலம் கொடுப்பார். அந்த லிஸ்டில் சிக்காதவர்கள் அவரை மோசமான விமர்சகராக தூற்றவும் செய்வார்கள். அவர் லிஸ்டில் எழுத்தாளர்கள் பெயர்கள் அடிக்கடி மாறும். முதலில் குறிப்பிட்ட பத்து பெயர்கள் பின்னால் குறிப்பிடும்போது எடுக்கப்பட்டு வேறு பெயர்கள் வெளிப்படும். வழக்கம்போல் நீக்கப்பட்ட எழுத்தாளர்கள் குறிப்பிடும் லிஸ்டில் க நா சு பெயரும் நீக்கப்பட்டிருக்கும்.
ஆனால் விமர்சனத்தைப் பொறுத்தவரை க நா சு முன் மாதிரியாகச் செயல்பட்டிருக்கிறார். அவருடைய 'இலக்கிய விசாரம்' , படித்திருக்கிறீர்களா புத்தகங்கள் புதுமாதிரியான முயற்சிகள். படித்திருக்கிறீர்களா என்ற புத்தகம் 1957 முதல் பதிப்பு வந்திருக்கிறது. தமிழில் அப்போது எழுதிக்கொண்டிருக்கிற பல படைப்பாளிகளை அறிமுகப்படுத்தியிருக்கிறார். அவர் அறிமுகப்படுத்திய படைப்பாளிகளை இங்கு உதாரணத்திற்காகக் குறிப்பிட விரும்புகிறேன். 1. புதுமைப்பித்தன் 2. தீபம் 3. ந சிதம்பர சுப்ரமணியன் 4. எஸ் வையாபுரிப்பிள்ளை 5. லா ச ராமாமிருதம் 6. எஸ். வி வி 7. வ வே ஸ÷ ஐயர் 8. யதுகிரி அம்மாள் 9. வ ரா 10. சங்கரராம் 11. ஏ கே செட்டியார் 12. தி ஜானகிராமன் 13 மு வரதராஜன் 14. தி செ சௌராஜன் 15. ஆர். ‘ண்முக சுந்தரம் 16. கு அழகிரிசாமி 17. பாரதியார் 18. கல்கி 19. பாரதி தாசன் 20. கு ப ராஜகோபாலன். உதாரணமாக அவர் இப் புத்தகத்தில் கல்கியைப் பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார்.

''நான் செவிடன், அதாவது சங்கீதத்தைப் பற்றிய வரையில் நான் செவிடன். அரைச் செவிடு, கால் செவிடு கூட இல்லை. முழுச்செவிடுதான். அப்படியிருந்தும் கல்கியின் தமிழ் இசை விவாதக் கச்சேரிகளை அதாவது அது பற்றிய கட்டுரைகளை என்னால் படித்து வெகுவாக ரஸிக்க முடிகிறது, '' என்று க நா சு குறிப்பிடுகிறார்.

க நா சு சொல்லித்தான் 'எழுத்தில்' விமர்சனத்தை சி சு செல்லப்பா துவங்கியவர். ஆனால் செல்லப்பா க நா சுவைச் சிறந்த விமர்சகராக கருதுவதில்லை. க நா சுவே தன் ரசனைக்கு ஏற்ற மாதிரி புத்தகங்களைப் படிப்பவர். அது குறித்து தனக்குத் தோன்றிய கருத்துக்களை நேர்மையாக வெளிப்படுத்துவார்.

1959 ஆம் ஆண்டு வெளிவந்த 'இலக்கிய விசாரம்' என்ற புத்தகத்தைப் படிக்கும்போது அதில் குறிப்பிட்ட பல வி‘யங்கள் எனக்கு ஆச்சிரியத்தை ஏற்படுத்தியது. கநாசு ஆங்கில, பிற மொழி சங்கேத வார்த்தைகள் வராமல் தமிழில் தனியாக விமர்சனம் வர வேண்டுமென்று குறிப்பிடுகிறார். அப் புத்தகத்தில் மணி, ராஜா என்ற இருவர் பேசுவதுபோல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பில் எழுதப்பட்ட இப் புத்தகம் 58þ59 ல் வந்துவிட்டது. 2003 ல் அப் புத்தகத்தை இப்போது எடுத்துப் படிக்கும்போது கூட ஆச்சரியமாக இருக்கிறது.கல்கியைப் பற்றி இப்படிக் குறிப்பிடுகிறார். 'கல்கி தன்னுடைய நாவல்கள் எதிலுமே எந்த இடத்திலும் நின்று இலக்கியக் கண்ணோட்டத்தில் எழுதியதில்லை. வாசகனுக்கு எது பிடிக்கும், எது பிடிக்காது, சம்பவத்தின் உச்ச நிலை எது, எங்கு கதைப்போக்கை அறுத்து வாசகனின் ஆவலைத் தூண்ட வேண்டுமென்பது அவருக்குத் தெரியும்,' என்கிறார். அதேபோல், ஆர்வி, அகிலன் நாவல்களைப் பற்றி குறிப்பிடும்போது, 'காதலை ஒரு கோட் ஸ்டாண்டாகக் கொண்டு அதிலே சம்பவங்கள் என்றும் பலதரப்பட்ட துணிகளை மாட்டி வைக்கிறார்கள்' என்று குறிப்பிடுகிறார்.

சி சு செல்லப்பாவிற்கும், க நாசுவிற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. சிசுசெ மணிக்கொடி எழுத்தாளர்கள்தான் சிறந்தவர்கள் என்று ஸ்தாபிப்பதிலே நின்று விட்டார். ஆனால் க நா சு அப்படி அல்ல. அவர் மரணம் அடையும் சமயத்தில்கூட கௌதம சித்தார்த்தன், விக்ரமாதித்யன் போன்ற படைப்பாளிகளின் படைப்புகளைப் பாராட்டி கட்டுரை எழுதியிருக்கிறார்.பிடிக்காத படைப்புகளை கடுமையாக விமர்சனம் செய்தாலும் தனக்குப் பிடித்த படைப்புகளை மனதாரப் பாராட்டாமல் அவர் இருந்ததில்லை. அதனால்தான் கநாசு யார் என்பது சிலருக்கு நிச்சயமாகத் தெரிந்திருக்கிறது. கநாசு விமர்சகராக பலருக்குத் தெரிய வந்தபிறகு பலருடைய வார்த்தைக் கணைகளையும் அவர் எதிர் கொள்ள வேண்டியிருந்தது. 'இலக்கிய விசாரம்', படித்திருக்கிறீர்களா முதலிய புத்தகங்களைப் படிக்கும்போது, இது மாதிரியான புத்தகங்களை இன்றைய சூழ்நிலையில் யாராவது தொடர வேண்டுமென்று தோன்றுகிறது. கநாசுவின் இதுமாதிரியான முயற்சியை அசோகமித்திரன் இன்றும் வேறுவிதமாகத் தொடருவதாகத் தோன்றுகிறது.

ஒரு படைப்பாளி என்ற முறையில் க நா சு ஓர் அபூர்வமான படைப்பாளியாகவும் திகழ்ந்திருக்கிறார். அசுர வேகத்தில் நாவல்கள், கவதைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்புகள், நாடகம் என்றெல்லாம் எழுதிக் குவித்திருக்கிறார். இப்படிச் செய்திருப்பவர், மற்ற படைப்பாளிகளைக் குறித்தம் நல்ல அபிப்பிராம் வைத்திருக்கிறார். புதுமைப்பித்தனையும், மௌனியையும் வெளி உலகுக்கு தெரியப் படுத்துவதில் க நாசு காட்டிய சிரத்தை அலாதியானது. இது இன்றைய தமிழ் சூழ்நிலையில் தமிழில் நடைபெறவில்லை என்பதை வருத்தத்துடன் கவினிக்க வேண்டும். இன்றைய படைப்பாளிகள் தான் மட்டும்தான் எழுதுவதாக நினைக்கிறார்கள்.

அவரை விமர்சகராக ஏற்க முடியாதவர்கள், கநாசு யார் என்று தான் கேட்பார்கள். சரி, அவரை நாவலாசிரியராக யாராவது ஏற்றுக் கொள்வார்களா?இன்று அவர் நாவல்களை யார் படிக்கிறார்கள். ஒரு சமயம் அவர் நாவல் அவரே புத்தகமாகக் கொண்டு வந்து விற்க முடியாமல், எடைக்குப் போட்டதாக கேள்விப்பட்டிருக்கிறேன். அவர் நாவல்கள் எதுவும் பத்திரிகையில் தொடராக வந்ததாகத் தெரியவில்லை.

'சர்மாவின் உயில்' என்ற நாவலை 1938 ல் ஒரு மாதத்தில் எழுதிக் காட்டுகிறேன் என்று புதுமைப்பித்தனிடம் சொல்லிவிட்டு சேலத்தில் மாடர்ன் ஹின்டு ஹோட்டலில்ஒரு அறை எடுத்துத் தங்கி எழுதியிருக்கிறார். பொதுவாக அவர் நாவலைப் பற்றி குறிப்பிடுவது 'ஒரு நாவல் என்று வந்துவிட்டால், வாசகர்கள் பற்றிய நினைப்பு வருவதில்லை' என்பது. ஒரு நாவல் இலக்கியமாக அமைவதும், அமையாமலிருப்பதும் படிப்பை வைத்து, சிந்தனைகளின் போக்கைப் பொறுத்து, மனோபாவத்தின் அளவில் அமைகிற வி‘யம் என்று குறிப்பிடுகிறார்.

பல நாவல்களை எழுதிச் சாதித்திருக்கும் க நாசுவை நாவலாசிரியராக மதிப்பிடுபவர்களும் உண்டு. அவரை நாவலாசிரியர் என்று குறிப்பிடாமலிருப்பவரும் உண்டு.

கநாசுவை இலக்கிய ராட்சசன் என்று குறிப்பிடலாமா என்றும் தோன்றுகிறது. அவர் எழுதாமல் விட்டு வைத்தது எது என்று என்னால் சொல்ல இயலவில்லை. அவர் மொழிபெயாப்பு என்ற துறையில் இறங்கி பல மாற்றுமொழிப் படைப்புகளை தமிழுக்குக் கொண்டு வந்துள்ளார். 622 பக்கம் கொண்ட கநாசு மொழிபெயர்த்த உலக இலக்கியம் என்ற பெயரில் அவர் மொழிபெயர்த்த நாவல்களைத் தொகுத்து சந்தியா பதிப்பகம் ஒரு புத்தகமாகக் கொண்டு வந்துள்ளது. பார்த்தால் நம்ப முடியவில்லை.

வேறு மொழியில் படிக்கும் ஒரு புத்தகத்தை அப்படியே உள் வாங்கிக்கொண்டு தமிழில் எழுத வேண்டுமென்பதுதான் க நாசுவின் பாணி. வழக்கம்போல் இதையும் ஏற்றுக் கொள்ளாதவர்கள் நம்மிடையே உண்டு. அவர்களுக்கெல்லாம் கநாசு யார் என்ற கேள்விதான் உருவாகும்.

இந்தக் கேள்வியை யாரிடம் கேட்க வேண்டுமென்று தெரியவிலல்லை. தமிழ்நாட்டில் மொத்த ஜனத்தொகையில் க நா சுவைத் தெரிந்தவர்கள் ஆயிரக்கணக்கான பேர்கள்தான் இருப்பார்கள். ஏன் நூற்றுக்கணக்கான பேர்களும் இருக்கலாம். அவர்கள் பெரும்பாலும் தீவிர இலக்கியத்தில் ஈடுபடபவர்கள் என்று நம்பலாம். ஏன் அவர்களுக்குக் கூட எது மாதிரியான க.நா.சுவைத் தெரியும் என்பது தெரியவில்லை. பல ஆண்டுகளுக்குமுன் என் தந்தையார் சொன்னது இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது. '' க.நா.சு என்ற ஒருத்தர் இருக்காரே, அவர் எழுதறதெல்லாம் படிக்க போரடிக்கும்.'' எனக்கு ஒரே ஆச்சரியம். க.நா.சுவைப் பற்றி குறிப்பிட்டது. ஏன் 'போர்' என்ற காரணத்தையும், எந்தப் புத்தகத்தைப் படித்துவிட்டு அவர் போர் என்று குறிப்பிட்டார் என்பதெல்லாம் எனக்குத் தெரியவில்லை. இன்று அவர் அன்று அப்படிச் சொன்னதை ஞாபகப்படுத்தும்போது, அவருக்கு அப்படிச் சொன்னது ஞாபகத்திற்கு வரவில்லை. எனக்கோ அவர் கநாசுவைப் பற்றி அப்படிக் குறிப்பிட்டதால்தான் இந்த நிகழ்ச்சி ஞாபகத்திற்கு வந்து கொண்டிருக்கிறது. சரி, க நா சு என்பவர் யார்? எந்தப் புத்தகம் படித்துவிட்டு அவரால் ஈர்க்கப்பட்டேன். இந்தக் கேள்வி சில மணி நேரங்களாக என்னுள் சுழன்று சுழன்று ஒலித்துக்கொண்டிரக்கிறது.

க நா சு எழுதியதெல்லாம் எனக்குப் பிடிக்குமென்று சொன்னால், நான் அவருடைய பரம ரசிகனாகி விடுவேன். இதை க நா சுவே விரும்ப மாட்டார். மற்ற படைப்பாளிகளின் படைப்புகளை அவர் எப்படி விமர்சிக்கிறாரோ அதேபோல் அவர் தன்னைப் பற்றியும் விமர்சித்துக் கொள்வார். தன்னால் சரியாக எழுத முடியாத படைப்புகளை இலக்கியத் தரமாகச் சொல்ல முடியாவிட்டாலும், பத்திரிகைத் தனமான முயற்சி என்று குறிப்பிட்டிருக்கிறார்.

7.9.08

சி சு செல்லப்பாவும், ராமையாவின் சிறுகதைப்பாணியும்

சில குறிப்புகள் 7


க.நா.சு இரங்கல் கூட்டமொன்றை கணையாழி என்ற பத்திரிகை திருவல்லிக்கேணியில் உள்ள தமிழ்நாடு எழுத்தாளர் சங்கக் கூட்டத்தில் நடத்தியது. அதற்கு சி சு செல்லப்பா வந்திருந்தார். அப்போதுதான் அவரை முதன் முதலாக சந்தித்தேன். தூரத்தில். அவர் க நா சுவைப் பற்றி பேசும்போது அவேசமாகப் பேசியதுபோல் தோன்றியது. கதர் சட்டையும், வேஷ்டியும் கட்டிக்கொண்டு வந்திருந்தார். அழுக்காக இருந்தது. ஏன் இவ்வளவு அழுக்காக வேஷ்டியைக் கட்டிக்கொண்டிருக்கிறார் என்று எனக்குத் தோன்றியது.


சி சு செல்லப்பாவை அதன்பின் விளக்குக் கூட்டத்தில் சந்தித்தேன். அவருக்கு விளக்குப் பரிசு கொடுத்து கவுரம் செய்திருந்தது. அந்தப் பரிசுத் தொகையை அவர் வாங்கிக்கொள்ள மறுத்துவிட்டார். அவர்கள் அந்தப் பரிசுத் தொகையில் சி சு செல்லப்பாவின் சிறுகதைப்பாணி என்ற புத்தகத்தைக் கொண்டு வந்தார்கள். அக் கூட்டத்திற்கு எல்லோரும் வந்திருந்தோம். அவர் தன்னுடைய அனுபவத்தை அங்கு குறிப்பிட்டுப் பேசினார்.


அக் கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் அக் கூட்டம் நடக்கும் இடத்திற்கு வெளியே பிரமிள் நடந்து சென்றதாக யாரோ குறிப்பிட்டார்கள்.


சி சு செல்லப்பா அதன்பின் சென்னைக்கு பிள்ளையார் கோயில் தெரு, திருவல்லிக்கேணியில் குடி வந்துவிட்டார். பங்களூரில் உள்ள அவருடைய ஒரே புதல்வனுக்கும் அவருக்கும் மனஸ்தாபம். உண்மையில் அது ஒரு காரணமா என்பது தெரியவில்லை. அவருடைய 3 பாகங்கள் கொண்ட சுதந்திர தாகம் என்ற நாவலை புத்தகமாகக் கொண்டு வந்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் வந்தாரா என்பது தெரியவில்லை.


சி சு செவின் கவனமெல்லாம் சுதந்திர தாகத்தைப் புத்தகமாகக் கொண்டு வரவேண்டுமென்ற எண்ணத்திலேயே இருந்தார். ஒரு முறை இலக்கியச் சிந்தனை ஆண்டு விழா மயிலாப்பூரில் உள்ள ஏவிஎம் கல்யாண மண்டபத்தில் நடந்தது. ஒவ்வொரு ஆண்டும் தமிழ் வருடம் துவங்கும்போது அங்குதான் நடக்கும். அக் கூட்டத்திற்கு வந்திருந்த சி சு செ. அங்குள்ள பல பதிப்பாளர்களிடம் தன்னுடைய சுதந்திர தாகம் புத்தகத்தை பிரசுரம் செய்யும்படி கேட்டுக்கொண்டிருந்தார். அவர் கெஞ்சிக் கேட்டுக்கொண்டிருப்பதைப் பார்க்கும்போது வருத்தமாக இருந்தது. ஆனால் அதைப் புத்தகமாகக் கொண்டு வருவதாக இருந்தால் லட்சக் கணக்கில் பணம் செலவாகும். மேலும் அப் புத்தகத்திற்கு என்ன விலை கொடுத்து விற்பது பிரச்சினையாக இருக்கும்.


ஒரு வழியாக பலரிடம் நன்கொடைப் பெற்றுக்கொண்டு தானே அப்புத்தகத்தை அச்சிடுவது என்ற முடிவுக்கு சி சு செ வந்தார். அந்தச் சமயத்தில் லலிதா ஜூவல்லரி சுகுமாரன் அவருக்கு உதவ முன் வந்தார். அவருக்கு எழுத்தாளர்கள் மீது தனி மரியாதை உண்டு. யாருக்கும் தெரியாமல் பல நன்கொடைகளை அவர் புத்தகம் பத்திரிகைக் கொண்டு வருவதற்கு உதவி செய்துள்ளார். சுதந்திர தாகம் முதல் பாகம் அப்படி அச்சிடப்பட்டது. மேலும் சி சு செவிற்கு 80 வயதிற்கு மேல் இருக்கும். திருவல்லிக்கேணியில் உள்ள மணி ஆப்செட்டில் அவருடைய புத்தகம் அச்சடிக்க நான் ஏற்பாடு செய்தேன். அந்தப் பிரஸிலிருந்து வந்து புரூப்பெல்லாம் சி சு செ வீட்டிற்கு வந்து வாங்கி அச்சடித்துக் கொடுத்தார்கள். முதல் பாகத்திற்குப் பிறகு இரண்டாவது பாகத்தை அவருக்கு என் சிறுகதைப் பாணி புத்தகம் விற்ற பணம் மூலம் கொண்டு வந்தார். மூன்றாவது பாகத்தை நண்பர்கள், நெருங்கிய உறவினர்கள் கொடுத்த நன்கொடை மூலம் கொண்டு வந்தார்.


அப் புத்தகத்திற்கு நல்ல விளம்பரம் கிடைத்தது. சி சு செ பத்தரிகையில் விளம்பரம் கொடுத்தார். வாசந்தி ஆசிரியராக இருந்த இந்தியா டுடே பத்திரிகையில் அப் புத்தகத்திலிருந்து ஒரு பகுதியை எடுத்துப் பிரசுரம் செய்து நல்ல விளம்பரம் கொடுத்தார்கள். அப்படியெல்லாம் கொடுத்தும்கூட அப் புத்தகம் 200 பிரதிகளுக்குமேல் விற்றிருக்குமாவென்பது சந்தேகம்.


சி சு செல்லப்பா சோர்ந்து போகாமல் சுறுசுறுப்பாக இயங்கியதுதான் என்னுடைய ஆச்சரியம். அந்த வயதிலும் அவர் அவேசமாகச் செயல்பட்டதை என்னால் மறக்க முடியாது. பின் நூல்நிலையத்தில் அப் புத்தகத்தை வாங்குவதற்கு அப் புத்தகத்தை டிடியுடன் அதற்கான விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து கொடுத்தார். ஆட்டோ வில் அதைக் கொண்டு போய் கொடுத்துவிட்டு அவர் அவஸ்தைப் பட்டது என் ஞாபகத்தில் இருக்கிறது.


80வயதுக்குமேல் என்பதால் அவருக்கு உடல்நிலை பாதிப்பு அடிக்கடி ஏற்படும். அவரும் அவருடைய மனைவியும்தான் அதிகம் வசதி இல்லாத திருவல்லிக்கேணி பிள்ளையார்கோயில் தெருவில் குடியிருந்தார்கள். சி சு செல்லப்பா பேன் போட விடமாட்டார். அவருடைய மனைவிக்கோ பேன் வேண்டும். மேலும் அவர் வீடு முழுவதும் புத்தகக் கட்டுக்கள் அடுக்கியிருக்கும். தானே புத்தகக் கட்டுப்போட்டு வைத்திருப்பார். ஒவ்வொரு முறையும் அவர் வீட்டிற்குப் போனால் எதாவது சாப்பிடக் கொடுப்பார். பேசிக்கொண்டே இருப்பார். போக விட மாட்டார். பல இலக்கிய நண்பர்கள் அவரை அடிக்கடி போய்ப் பார்த்துக்கொண்டிருப்போம்.


ஒரு முறை மருத்துவமனையிலிருந்து சி சு செ மனைவி யார் மூலமாகவோ எனக்கு போனில் செய்தியைத் தெரியப்படுத்தினார் (சி சு செ மனைவிற்கு காது சற்று கேட்காது. அதனால் நேரிடையாகப் போனில் பேச முடியாது). நான் மருத்துவமனைக்குச் சென்று சி சு செ போய்ப் பார்த்தேன். "மாமிக்கு குட்பை சொல்லிட்டேன். அடுத்த ஜன்மத்தில சந்திக்கலாமென்று,'' என்று சிரித்தபடி என்னைப் பார்த்துக் குறிப்பிட்டார்.


அந்த ஆண்டு சி சு செ வின் சுதந்திர தாகம் புத்தகத்தை லைப்பரரி எடுத்துக்கொள்ளவில்லை. சி சு செ அது பெரிய வருத்தம். காரணம் 1000 பிரதிகள் சுதந்திர தாகத்தை அவர் அச்சிட்டிருந்தார். 3 பாகங்கள் சேர்ந்து ரூபாய் 450 விலை. எப்படி விற்க முடியும்? விளம்பரம் மூலம் மிகக் குறைவான பிரதிகள் சுதந்திர தாகம் விற்ற பணத்தை சற்றும் யோசிக்காமல் இன்னொரு புத்தகமும் கொண்டு வந்து விட்டார் சி சு செல்லப்பா. அந்தப் புத்தகத்தின் பெயர்தான் 'ராமையாவின் சிறுகதைப் பாணி'. சி சு செல்லப்பாவிற்கு ராமையா குருநாதர் மாதிரி. அவர் மீது அவ்வளவு அபிமானம். இருவரும் வத்தலக்குண்டு என்ற ஊரைச் சேர்ந்தவர்கள். ராமையா 300 சிறுகதைகளுக்கு மேல் எழுதியவர். மணிக்கொடி எழுத்தாளர். அவருடைய சிறுகதைகள் புத்தகமாக வராத தருணத்தில், சி சு செ அவருடைய கதைகளுக்கான விமர்சன நூலைத் தயாரித்து ராமையாவின் சிறுகதைப் பாணி என்ற புத்தகத்தைக் கொண்டு வந்து விட்டார். அதுவும் 500 பிரதிகள் வேறு அச்சிட்டு விட்டார்.


எனக்கோ அவர் செய்த இந்தச் செயலைப் பார்த்து பெரிய திகைப்பு. ராமையாவின் சிறுகதைகளே படிக்க யாருக்கும் கிடைக்காதபோது ராமையாவின் சிறுகதைப் பாணி புத்தகத்தை யார் படிப்பார்கள்? லைப்ரரி ஆர்டர் வேறு சுதந்திர தாகம் புத்தகத்திற்குக் கிடைக்காததால் செல்லப்பா சோர்ந்து போயிருந்தார். அடிக்கடி மருத்துவமனைக்குச் செல்லும்படியாக இருந்தது. ஒருமுறை தீவரமாக சிகிச்சைப் பெற மருத்துவமனையில் இருந்தபோதுதான், கேரளாவில் தகழி சிவசங்கரன் என்ற எழுத்தாளர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்றுக்கொண்டு இருந்தார். கேரளாவில் முதலமைச்சர் முதல் கொண்டு தகழியைப் பார்த்ததோடல்லாமல், டிவியில் அவரைப் பற்றி மருத்துவ அறிக்கையை அடிக்கடி வெளியிட்டுக் கொண்டிருந்தார்.


சுதந்திரப் போராட்ட வீரரும், 'எழுத்து' என்ற இலக்கிய ஏட்டின் மூலம் தமிழ் இலக்கியத்தில் பெரிய மாற்றத்தைக் கொண்டுவர காரணமான சி சு செல்லப்பாவை இங்குள்ள டிவியோ, செய்தித்தாள்களோ கண்டுகொள்ளவில்லை. தற்போதுள்ள கலைஞர்தான் அப்போதும் முதல்வராக இருந்தார். ஏன் யாரும் கண்டுகொள்ளவில்லை என்ற வருத்தம் எனக்குண்டு. சி சு செ மரணம் அடைந்த பிறகு, அவருடைய விற்காத சுதந்திர தாகம் பிரதிகள் எல்லாம் சங்கர ராம சுப்பிரமணியம் என்ற அவருடைய உறவினர் வீட்டிற்குப் போய் சேர்ந்தன. அவருடைய உறவினருக்கும் அப் புத்தகத்தை எப்படி விற்பது என்று தெரியவில்லை.


நான் திரும்பவும் அரசாங்கத்தில் உயர் பதவி வகிக்கும் இறையன்பு அவர்களைப் பார்த்தேன். சி சு செ புத்தகம் பற்றி அவரிடம் தெரிவித்தேன். அவர் மூலம் திரும்பவும் அப் புத்தகத்தை லைப்ரரி சில நூறு பிரதிகள் வாங்கிக் கொண்டது. சி சு செல்லப்பாவிற்கு அந்த நூலிற்காக அவர் இறந்தபிறகு சாகித்திய அக்காதெமி பரிசு கிடைத்தது. சி சு செ மட்டும் உயிரோடு இருந்திருந்தால் அந்தப் பரிசை வாங்கியே இருக்கமாட்டார். அந்தப் பரிசு அறிவிப்பைத் தொடர்ந்து இன்னு சில பிரதிகள் சுதந்திர தாகம் புத்தகம் விற்றது. ஆனாலும் பன்டில் பன்டிலாக சங்கர ராம சுப்பிரமணியின் வீட்டில் சு தா 3 பாகங்கள் வீற்றிருந்தன. கூடவே யாரும் தொடாத ராமையாவின் சிறுகதைப் பாணி புத்கமும்.


புத்தகக் காட்சியின் போது நான் அவருடைய சு தாகம் புத்தகத்தை எடுத்துக்கொண்டு விற்பனைக்கு வைத்தேன். விலை 450 ரூபாய் என்றவுடன், யாரும் தொடக்கூட விரும்பவில்லை. அதனால் சங்கர ராம சுப்பிரமணியத்திடம் சொல்லி புத்தக விலையைக் குறைக்கச் சொன்னேன். ''என்ன விலைக்கு விற்கலாம்?'' என்று கேட்டார். ''ரூபாய் 100 போதும்,'' என்றேன். சரி என்றார்.


'சாகித்திய அக்காதெமி பரிசுப் பெற்ற 3 பாகங்கள் கொண்ட சுதந்திர தாகம் என்ற புத்கம் விலை ரூ100 மட்டுமே' என்று புத்தகக் காட்சியில் விளம்பரம் செய்தேன். மடமடவென்று எல்லாப் பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. பொதுவாக என் புத்தகங்களுடன் மற்ற பதிப்பாளர்களிடம் சென்று புத்தகம் வாங்கி விற்றுதான் புத்தக்க காட்சியில் ஆகும் செலவைக் குறைப்பது வழக்கம் அந்த முறை மற்ற பதிப்பாளர் என்னிடமிருந்து சுதந்திர தாகம் புத்தகத்தை வாங்கி விற்றார்கள். இனிமேல் அந்தக் கனமான சுதந்திர தாகம் புத்தகத்தைப் பிரசுரம் செய்வது என்பது அதிகம் செலவாகும். விற்பதும் சாத்தியமில்லை. சுதந்திர தாகத்திற்கு நல்ல கதி ஏற்பட்டுவிட்டது. அடுத்தப் புத்தகமான சி சு செல்லப்பாவின் 'ராமையாவின் சிறுகதைப் பாணி' புத்தகத்தை நினைத்தால் கதி கலங்குகிறது. சங்கர ராம சுப்பிரமணியன் இறந்தபிறகு ராமையாவின் சிறுகதைப் பாணி புத்தகத்தை சி சு செல்லப்பாவின் புதல்வர் விற்பதற்காக என்னிடம் அனுப்பி விட்டார்.
அப் புத்தகக் கட்டுகள் என் பாதுகாப்பில் உள்ளது. ஒரு புத்தகம் விலை 10 ரூபாய்தான் என்று விளம்பரப் படுத்தினாலும் யாரும் வாங்கி அதைத் தீர்க்க மாட்டேன்கிறார்கள்.

6.9.08

சில குறிப்புகள் - 4

நான் சில குறிப்புகள் என்ற தலைப்பில் எனக்குத் தோன்றுவதை எழுதிக்கொண்டே போகிறேன். பெரும்பாலும் கவிதைக் குறித்து என் கருத்துக்களைப் பதிவுப் செய்கிறேன். நம்மால் புரிந்துகொள்ள முடியாத விஷயம் கவிதை. ஒரு கவிதையைச் சிறந்த கவிதை என்று சொல்வது நம்மில் உள்ள பலருக்கு மனது வராது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாய் கவிதையை அணுகிறார்கள். கவிதைப் பிடிக்கவில்லை என்று சொல்வதற்கு பலர் காத்துக்கொண்டிருக்கிறார்கள். எனக்குத் தெரிந்து ஒருநண்பர் அவருடைய கவிதைத் தொகுதியை பணம் செலவழித்துக் கொண்டு வந்தார். அந்தத் தொகுதியை இன்னொரு நண்பருக்கு கொடுத்துவிட்டு அவருடைய அபிப்பிராயத்தை எதிர்பார்த்தார். புத்தகத்தை வாங்கிய நண்பரோ கவிதை எழுதிய நண்பருக்கு ஏற்ற மாதிரி எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. இதனால் ஏமாற்றமடைந்த கவிதை நண்பர் புத்தகம் கொடுத்த நண்பரைத் திட்ட ஆரம்பித்துவிட்டார். கவிதைத் தொகுதி மட்டும் வெளியிடாமல் இருந்திருந்தால், இதுமாதிரியான வசுவுகளுக்கு ஆளாகமலிருந்திருக்கலாம்.

சரி எப்படி ஒரு நல்ல கவிதையை அடையாளம் காண்பது. கவிதையைப் படித்த மாத்திரத்திலேயே பல சிந்தனைகளை மனதில் ஏற்படுத்தும். அதாவது கிணற்றில் கூழாங் கற்கள் ஒவ்வொன்றாய் விழ ஏற்படும் அதிர்ச்சி தண்ணீரில் தெரிவதுபோல். நம் ஞாபகத்தில் ஒரு சிறந்த கவிதை பலநாட்கள் தங்கிவிட வேண்டும். ஏன் வருடக் கணக்கில். அப்படித் தங்கி விடுகிற கவிதையை நாம் எப்போது வேண்டுமானாலும் எடுத்து எடுத்துப் படித்துக்கொண்டிருப்போம்.

எனக்கு இப்படித்தான் க.நா.சு வின் கவிதை ஒன்று மனதில் நிழலாடிக் கொண்டிருக்கும். 'நல்லவர்களும் வீரர்களும்' என்ற கவிதையைப் பார்ப்போம்.

கடவுளுக்குக் கண் உண்டு; அவனுக்கு

வீரர்களையும் நல்லவர்களையும் ரொம்ப

ரொம்பப் பிடிக்கும். சண்டையில் வீரர்களையும்

சமாதானத்தில் நல்லவர்களையும்

அதிகநாள் உழலவிடாமல் சீக்கிரமே

அழைத்துக் கொண்டுவிடுவான்

கடவுளுக்கு உண்மையிலேயே கண் உண்டு

நிச்சயமாக நம்பலாம்.

இந்தக் கவிதையைப் படிக்க படிக்க எனக்கு க.நா.சுவின் பெயர் எப்போதும் ஞாபகத்தில் இருந்துகொண்டேயிருக்கும். இக் கவிதையை மறக்க முடியாது என்ற எண்ணத்தில் யாருக்கும் கருத்துவேறுபாடு ஏற்படாது.

2.9.08

ரங்கநாதன் தெரு கூட்ட நெரிசலும் தீ விபத்தும்

சில குறிப்புகள் / 5


வ்வொரு முறை ரங்கநாதன் தெருவைப் பார்க்கும்போதெல்லாம் அங்கே வழிந்தோடும் கூட்ட நெரிசல் எனக்குத் திகைப்பை ஏற்படுத்தும். அந்தத் தெருவில் ஒரு முனையிலிருந்து இன்னொரு முனைக்குச் செல்ல பாடாதபாடு பட வேண்டியிருக்கும். தெரு முனையிலிருந்து வியாபாரக் கூச்சல் காதைப் பிளக்கும்படி கேட்டுக்கொண்டிருக்கும். திருவிழாக்கள் போது அந்தத் தெருவே வேண்டாமென்று தோன்றும். எனக்கு கூட்டமென்றால் ஒருவித அருவெறுப்பு, பயம். 1970 ஆண்டிலிருந்து ரங்கநாதன் தெருவைப் பார்த்துக்கொண்டு வருபவன். 70-க்களில் இருந்த ரங்கநாதன் தெருவும் 2000 ல் தென்படும் ரங்கநாதன் தெருவைப் பார்க்கும்போதும் அதன் உருவம் எப்படி மாறிப்போய்விட்டதென்ற அச்சம் இருந்துகொண்டிருக்கும்.


சரவணா, ஜெயசந்திரன், ரத்னா என்ற பெயர்களில் வியாபாரத் தளங்கள் விண்ணை முட்டும்படி கட்டப்பட்டு அங்கே கட்டுப்படுத்த முடியாத கூட்ட நெரிசலைப் பார்த்து நடுங்கியிருக்கிறேன். உள்ளே போய் ஒரு பொருளை வாங்கிக்கொண்டு வெளியே வருவதற்குள் படாதபாடு பட வேண்டியிருக்கும். தெருவில் டிவிக்களில் கடைகளில் வாசல்களில் கடையின் விளம்பரங்களை சத்தம்போட்டபடியே விளம்பரப் படுத்தியபடி இருக்கும். என் நண்பர் பதி அவர்கள் என்னிடம் லிப்கோ கடைக்குச் சென்று ரகுவம்சம் என்ற புத்தகத்தை வாங்கி அவருக்கு அனுப்பச் சொல்லி போனில் தினமும் வற்புறுத்திக்கொண்டிருப்பார். அலுவலகம் முடிந்து வீடு வரும்போது மணி ஏழுமணி மேல் ஆகிவிடும் என்பதாலும், ரங்கநாதன் தெருவிற்குள் நுழைய வேண்டுமே என்ற அலுப்பு காரணத்தாலும் என்னால் அங்கு போகவே முடிவதில்லை. ஏன்என்றால் ரங்கநாதன் தெருவில் தென்படும் சகிக்க முடியாத கூட்டம்தான் காரணம்.


சில ஆண்டுகளுக்கு முன் இங்கேதான் ஒரு கட்டிடத்தின் இடுக்கில் முன்றில் என்ற பெயரில் இலக்கிய விற்பனைக் கடை ஒன்று இருந்தது. வாசலில் நடந்து செல்லும் கூட்டத்தின் ஒரு சிறு துளி வந்திருந்தாலும், இலக்கியம் வளர்ந்திருக்கும். இலக்கியம் என்பதால், யாரும் உள்ளே கூட எட்டிப் பார்க்க மாட்டார்கள். மகாதேவன் என்ற நண்பர் அந்தக் கடையை நடத்தி படாதபாடு பட்டார்.


வாசலில் கூக்குரலிட்டபடி நடமாடிக்கொண்டிருக்கும் நடைபாதை வியாபாரிகளின் கூட்டமும் அங்கு அதிகம். ரங்கநாதன் தெருவில் நுழைந்தால் இடது பக்கத்தில் உள்ள இன்னொரு தெருவான ராமநாதன் தெரு வழியாக வெளியேறிவிடுவேன். கூட்டத்திலிருந்து தப்பிப்பதற்காக.


வாகனங்கள் எடுத்துக்கொண்டு நுழைய முடியாத இடம் ரங்கநாதன் தெரு. அப்படிப்பட்ட இடத்தில்தான் தீ விபத்து. எப்படி ஏற்பட்டது? ஏன் ஏற்பட்டது? என்ற கேள்விகளுக்கெல்லாம் விடை இல்லை. ரங்கநாதன் தெருவில் நுழையும்போதே நீண்ட உயரமான கட்டிடங்களைப் பார்க்கும்போது தீ விபத்தில் சிக்கிக் கொண்டால் எப்படி எல்லோரும் தப்பிப்பார்கள் என்ற அச்சம் இருந்துகொண்டிருக்கும்.


சரவணா ஸ்டோர்ஸில் நடந்த தீ விபத்து எல்லோரையும் சில மணிநேரங்களாவது அச்சத்திற்கு உள்ளாக்கியிருக்கும். இந்தத் தீ விபத்தால் ஆறுமுகநேரியைச் சேர்ந்த 24 வயது நிரம்பிய ராமஜெயம் என்பவரும், திருநெல்வேலி ஆலங்குளம் கீழ்பாவூரைச் சேர்ந்த 27 வயது நிரம்பிய கோட்டைச்சாமி என்பவரும் புகை மண்டலத்தில் மயங்கி தீயில் கருகி எலும்புக் கூடாகினர். இதை ஒரு செய்தியாகப் படிக்கிறோம். ஆனால் அவர்களுடைய உறவினர்கள் எந்தப் பாடுபட்டிருப்பார்கள். மரணம் பற்றிய செய்திகளை பலவிதமாகக் கேட்டு கேட்டு மனிதர்கள் மரத்துப் போய்விடுகிறார்கள் என்றே தோன்றுகிறது. ஆவி ரூபத்தில் ராமஜெயமும், கோட்டைச்சாமியும் உலாவிக்கொண்டிருப்பதாக வதந்தி பின்னாளில் வந்தாலும் வரலாம்.

இந்தச் செய்தியால், தொடர்ந்து தீ விபத்தால் ஏற்படும் ஆபத்துக்கள் பற்றிய செய்தியெல்லாம் என் மனதில் தோன்றாமலில்லை. பெரும்பாலும் தீ விபத்தால் குடிசைப்பகுதி எரிந்து சாம்பலாகிவிடும். உயிர் சேதம் இல்லாமலும் இது மாதிரி விபத்தெல்லாம் நடக்கும். இதெல்லாம் தயாரிக்கப்பட்ட தீ விபத்தாக எனக்குத் தோன்றும். தி நகர் உஸ்மான் சாலையில் அப்படி ஒரு விபத்து ஏற்பட்டு, அங்கு அரசாங்கக் கட்டிடம் ஒன்று உருவானது. ஏன் மூர்மார்க்கெட் அதுமாதிரிதான் தீ விபத்தால் எரிந்து புதிய கட்டிடம் உருவாகக் காரணமாகியது? ஆனால் எல்லா தீ விபத்துக்களும் தயாரிக்கப்பட்ட தீ விபத்தாகக் கருத முடியாது. ஏன் திருச்சியில் ஒரு கல்யாண மண்டபத்தில் ஒரு தீ விபத்து ஏற்பட்டு, பலர் கருகிப் போய்விட்டார்கள். என் அலுவலக நண்பரின் உறவினர்களும் அதில் அடக்கம். அவன் பதவி உயர்வு பெற்ற சமயத்தில் இது மாதிரியான சம்பவம் நடந்தது. எனக்கு அது நல்ல சகுனமாகத் தோன்றவில்லை. நண்பனுக்கு அதன் பின் பலவிதமான சோதனைகள். வேலையை விட்டுவிடலாம் என்ற எண்ணம் அவனுக்கு ஏற்பட்டது. மேலும் ஒரு தருணத்தில் அவனுக்கு விபத்து ஏற்பட்டு காலை ஒடித்துக்கொண்டு பல மாதங்கள் அலுவலகம் போகாமலிருந்தான்.அது தயாரிக்கப்பட்ட தீ விபத்தாக எனக்குத் தோன்றவில்லை.

எனக்குத் தெரிந்து கும்பகோணத்தில் ஒரு பள்ளிக்கூடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், பல குழந்தைகள் கருகி விட்டார்கள். அந்தத் தீ விபத்து கொடூரமானது. அந்தச் செய்தியைக் கேட்ட மாத்திரத்தில் என் அலுவலகத்தைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் கண்ணீர் விட்டு அழுதார். அந்தச் சமயத்தில் குடியரசு தலைவராக இருந்த டாக்டர் அப்தூல்கலாம் ஒரு கண்ணீர் கவிதையை தினமணியில் எழுதியிருந்தார். அதைப் படித்த எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பொதுவான விஷயத்தைக் கவிதையாக மாற்றுவது சிரமமானது. அதைத் திறன்பட அவர் எழுதியிருந்தார். அதை நவீன விருட்சத்தில் மீள் பிரசுரம் செய்தேன். ஒரு செய்தியைப் படிக்கிறோம் அல்லது கேள்விபடுகிறோம். அந்தச் செய்தி எந்த அளவிற்கு கலை ரூபம் பெறுகிறது என்பது சவாலான விஷயம். ரங்கநாதன் தெருவும் தீ விபத்தும் என்ற தலைப்பில் உடனடியாக கவிதை எழுத முடியுமா? அது எல்லோரும் ஏற்றுக்கொள்ளும்படி கலை ரூபமாக மாறுமா என்பது சந்தேகத்திற்குரிய ஒன்று.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் எழுதிய கவிதையை இங்கு தருகிறேன்.

அன்று ஏன் கதிரவன் கடும்கரும் மேகங்களை ஊடுருவவில்லை

அன்று ஏன் குடந்தைத் தென்றல் கனலாக மாறியது

அன்று ஏன் தாயுள்ளங்கள் பதறித் துடித்தன

இளஞ்சிறார்கள் அக்னித் தேவனின் சினத்தில் தத்தளித்தனர்

அன்று ஏன் அச்சிறார்களை இறைவன் அக்னிக் குஞ்சுகளாகப் பரணமித்தான்?

இறைவா இதுவோ கொடுமையிலும் கொடுமை

வளர்ந்து கல்விகற்று பணிசெய்யும் பருவத்தில்

பழுத்த வயதில் மறைந்த தாய்தந்தையரை பூமிக்குக் கொடுப்பர்

இன்றோ காண்பது கொடுமையிலும் கொடுமை

பாலர்களை ஒவ்வொன்றாய் தந்தையர் பூமியில் புதைக்கும் காட்சி

தா ய்கண்ட கனவு, தந்தை கண்ட கனவு, சிறார்கள் கண்ட கனவு

எல்லாமே அக்னியின் வேகத்தில் கரிக்குஞ்சாய் பரிணமித்தன

இறைவா குழந்தைகள் உன் படைப்பு - அவர்கள்

உன்னிடமே அடைக்கலத்தில் அடைந்தார்கள்

உன் அருளால் அக் குழந்தைகள் எங்கிருப்பினும் நன்றிருக்க

கையேந்தி பிரார்த்திக்கிறோம் கையேந்தி பிரார்த்திக்கிறோம்

இறைவா உன் அருளால் - தம் குழந்தைகளை இழந்து

தவிக்கின்ற பெற்றோருக்கு மன அமைதி பாக்கியத்தை

மறுபடியும் வாழவிலருள் - அவர்கள் எப்பொழுதும்

உனை நம்பி அமைதி வாழ்வு வாழ பிரார்திக்கிறேன்.

துயரத்தின் குரல் என்ற தலைப்பில் நானும் கும்பகோணத்து விபத்தையும், சுனாமியை வைத்தும் ஒரு கவிதை எழுதினேன்.

துயரத்தின் குரலை நீங்கள் அறிந்ததுண்டோ

தீயின் நாக்குகளின் பிடியில்

கோரவிபத்தில் பலியான

கும்பகோணத்துச் சிறார்களின்

துயரத்தின் குரல்களைப் பலவிதமாய்

உணர்ந்துகொண்டேன்.

2004 ஆம் ஆண்டின் ஜூலை மாதத்தில்

பத்திரிகைகள் விதவிதமாய்ச்

செய்திகளைப் படங்களுடன் வெளியிட்டு

அள்ளிக் குவித்தன கோரக் காட்சிகளை

டிவியோ சோக இசையின் சேர்க்கையுடன்

பதறித் துடிக்கும் காட்சிகளை ஒளிபரப்பியது

ஆண்டு முடியும் தறுவாயில்

இன்னொன்றும் கண்டேன்

விசாலமான கடற்கரைத் தெருவில்

இருசக்கர வாகன ஓட்டியா யிருந்தபோது

கடலே கடலே என்ற பரவசப்பட்டதுண்டு

துளியாய் நானிருக்கிறேன், பல துளிகளாய்

நீயிருக்கிறாய்...என்றெல்லாம் பாடிக்கொண்டு

போன காலமுமுண்டு

ஆண்டின் இறுதிக்குள்

பொங்கி எழுந்த கடலன்னை

சுனாமியின் வலைவீச்சில் வீழ்ந்து

கடலரக்கியாய் உருமாறி

தன் கோர நாக்குகளை நீட்டி

அள்ளி அழைத்துக்கொண்டாள்

ஆயிரக்கணக்கான உயிர்களை

திரும்பவும் பத்திரிகைகள் விதவிதமாய்ச்

செய்திகளைப் படங்களுடன் வெளியிட்டு

அள்ளிக் குவித்தன கோரக் காட்சிகளை

டிவியோ சோக இசையின் சேர்க்கையுடன்

பதறித் துடிக்கும் காட்சிகளை ஒளிபரப்பிய

வண்ணம் உள்ளது

பார்க்குமிடமெல்லாம் தெருவில் கருப்புநிற போஸ்டர்கள்

துக்கத்தைப் பறை சாற்றின

மரணமும் சொற்களில் தங்கிவிட்டதோ?


பொதுவாக நிகழும் நிகழ்ச்சியை எந்த அளவிற்கு செயற்கைத் தன்மை கூடாமல் கவிதையாக மாற்றுவது என்பது ஒரு சவாலான விஷயம்.