
யோசித்துப் பார்த்தால் வைரமுத்துதான் தமிழில் அதிகமாக விருதுகளைப் பெறுபவர் என்று தோன்றுகிறது. சமீபத்தில் அவருக்கு 'சாதனா சம்மான்' விருது கிடைத்துள்ளது. இச் செய்தியை வெளியிட்ட பத்திரிகை 'மேலும் ஒரு விருது' என்று குறிப்பிட்டிருந்தது. இப்படியெல்லாம் விருதுபெற அவர் பெரிய சாதனை செய்திருக்க வேண்டும். ஆரம்பத்தில் அவர் சினிமாப் பாடலாசிரியராக அறிமுகமாகிறார், பின் அவர் கவிஞராக தன்னை தெரியப்படுத்திக் கொள்கிறார். பின் நாவலாசிரியராக பவனி வருகிறார். அவர் எழுதினால் போதும் எல்லோரும் வரவேற்று பிரசுரம் செய்ய தயாராக இருக்கிறார்கள். அவருடைய நாவல் தொடர் கதையாக பெரிய பத்திரிகைகளில் வெளி வருகிறது. ஒரு பத்திரிகையில் அவர் கேள்வி பதில் எழுதுகிறார். இன்னொரு பக்கம் அவர் சினிமாவிற்கு பாடல்களை எழுதித் தள்ளுகிறார்.
அவருடைய முக ராசி அவர் எதை எழுதினாலும் அவருக்கு விருது தேடிக்கொண்டு வருகிறது. அரசாங்கம் விருது கொடுக்கிறது. தனியார் நிறுவனம் விருது கொடுக்கிறது. சிறந்த பாடலாசிரியருக்கான விருது வாங்குகிறார். சிறந்த கவிதைக்கான விருது வாங்குகிறார். சிறந்த நாவலுக்கான விருதையும் பெறுகிறார். இப்படி சகலகலா வல்லவனாக இருக்கிறார்.
அதேசமயத்தில் சம்பத் என்ற எழுத்தாளரைப் பற்றி இங்கே குறிப்பிட விரும்புகிறேன். அவர் இப்போது உயிரோடு இல்லை. அவர் எழுத்து முதன் முதலாக கணையாழியில் வெளிவந்தபோது, சுஜாதாவையும் சம்பத்தையும் இணைத்து தமிழில் முக்கியமான படைப்பாளிகள் என்று எழுதியிருந்தார்கள். ஆனால் குமுதம் மூலமாக சுஜாதாவிற்குக் கிடைத்த வெற்றி சம்பத்திற்குக் கிட்டவில்லை. எதிலும் வெற்றி சுஜாதாவிற்கு. ஆனால் அவருக்கும் முக்கியமான விருதெல்லாம் கிடைக்க வில்லை.
சம்பத்திற்கோ பெரும் பத்திரிகைகளில் படைப்பு வெளிவர வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது. ஒருமுறை ஒரு நாவல் எழுதிக்கொண்டு போய் இந்திரா பார்த்தசாரதியிடம் சம்பத் காட்ட, இந்திரா பார்த்தசாரதி அந் நாவலைப் படித்து திருப்தியாக வரவில்லை என்று கூற, சிறிது நேரத்தில் சமையல் அறையில் ஏதோ பொசுங்குவதுபோல் தோன்ற, இ.பா உடனே ஓடிப் போய்ப் பார்த்திருக்கிறார். சம்பத் படிக்கக் கொடுத்த நாவல் சாம்பலாகிக் கொண்டிருந்தது. இந்தச் சம்பவத்தை இ.பாவே என்னிடம் தெரிவித்திருக்கிறார். சம்பத்திற்கு அவர் வாழ்க்கையே பிரச்சினையாகப் போய்விட்டது. அவர் பார்த்த வேலை போய்விட்டது. சம்பாதிப்பதே பெரியபாடாகப் போய்விட்டது. அவர் எழுத்துகளை சிறுபத்திரிகைகள்தான் பிரசுரம் செய்தன. 1000 பிரதிகளைக் கூட தாண்டாத சிறுபத்திரிகையில் அவர் எழுதியதால் அவரைத் தெரிந்திருக்க வாய்ப்பு மிகக் குறைவு. சம்பத் 'பிரிவு, மரணம்' என்ற அடிப்படையில் உழன்று அவற்றுக்கு விடை தெரியாமல் போய்விட்டார். அந்த சம்பத்தின் சிறந்த நாவலான 'இடைவெளி' க்ரியா மூலம் புத்தகமாக தயார் ஆகிக்கொண்டிருக்கும்போது சம்பத் அவர் கதைகளில் எழுதியவாறே மூளையில் ரத்த நாளங்கள் வெடித்து இறந்து விட்டார்.
இதே தமிழ் சமுதாயம்தான் வைரமுத்து என்ற படைப்பாளிக்கு கேட்காமலே விருதுகளை அள்ளி அள்ளித் தருகிறது. அப்படி விருதுகளை அள்ளித் தருவதே வைரமுத்துவிற்கு வழங்கும் தண்டனையா என்பது தெரியவில்லை. அப்படி விருது மழை கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது.