14.6.08

விருட்சம் 80வது இதழ்


வணக்கம்.
இன்னும் சில தினங்களில், 80வது நவீன விருட்சம் வெளிவந்துவிடும். கிட்டத்தட்ட 100 பக்கங்கள். நவீனவிருட்சம் வெளிவந்து 20 ஆண்டுகள் கடந்துவிட்டது. ஒவ்வொரு முறையும் நவீனவிருட்சம் இதழை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கொண்டுவர நினைப்பதுண்டு. ஆனால் முடிவதில்லை. எப்படியோ ஆறு மாதங்கள் ஓடிவிடுகின்றன. ஏன் இதழ் வந்து அதை எல்லோருக்கும் அனுப்புவதற்கு ஒரு மாதம் மேல் ஆகிவிடுகிறது. யாருக்கும் சந்தா கேட்டுக்கூட கடிதம் எழுதமுடிவதில்லை. பத்திரிகை போய்ச் சேர்ந்தால் போதும். அவர்களே பார்த்து அனுப்பினால் சரி என்ற நிலைக்கு வந்துவிட்டேன். ஒருசிலரைத் தவிர பெரும்பாலோர் பத்திரிகை சந்தா அனுப்புவதில்லை. சந்தா பெரிய தொகை இல்லை. ஆனால் அதை அனுப்புவதுதான் பெரிய விஷயமாக அவர்களுக்கு இருக்கும். தபால் அலுவலகத்திற்குப் போய் மணிஆர்டர் மூலம் 40 ரூபாய் அனுப்புவது என்பது பெரிய விஷயமாக எனக்குப் படுகிறது. ஏன்என்றால் நான் நவீனவிருட்சம் பத்திரிகையை தபால் அலுவலகத்தில் கொண்டு செல்ல பாடாதபாடு படுகிறேன். சரி, யார் மூலமாவது இந்தப் பணியைச் செய்ய சொல்லலாம். ஆனால் யாரும் இதுமாதிரி பணியைச் செய்யத் தயாராய் இல்லை. ஒரு முறை என் நண்பா மூலமாக நவீனவிருட்சம் இதழை அனுப்ப ஏற்பாடு செய்தேன். அவரும் கட்டுக்கட்டாக நவீன இதழை எடுத்துக்கொண்டு கிளம்பினார். அனுப்ப வேண்டிய முகவரிப் பட்டியலைக் கொடுத்தேன். எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு கிளம்பியவர் ஒரு வாரமாக வரவில்லை. எனக்கோ பதைப்பு. அனுப்பி விட்டாரா என்பதை அறிய ஆவலாக இருந்தேன். ஆனால் நண்பரோ என்னைப் பார்க்கக் கூட வரவில்லை. பின் ஒரு நாள் வந்தார். வேறு எதோ பேசிக்கொண்டிருந்தோம். நானோ எப்படியாவது விருட்சம் பற்றி அவரிடம் கேட்டுவிடவேண்டும் என்ற எண்ணத்துடன் பேசிக்கொண்டிருந்தேன். கிட்டத்தட்ட நண்பர் பேசி முடித்துவிட்டார். வீட்டிற்குப் போக வேண்டிய தருணம் வந்து விட்டது. ஆவலை அடக்க முடியாமல் கேட்டுவிட்டேன். நண்பரோ சர்வ சாதாரணமாக, " இன்னும் இல்லை. விருட்சம் அனுப்ப எனக்குத் தெரிந்த பசங்களை ஏற்பாடு பண்ணியிருக்கிறேன்..." என்றார. அந்த இதழை அனுப்புவதற்கும் ஒரு மாதம் மேல் ஆகிவிட்டது.
இப்படி ஒரு பத்திரிகையை அடித்து அனுப்பிக்கொண்டிருந்தால், யார் பத்திரிகைக்கு சந்தா அனுப்புவார்கள், யார் பத்திரிகைக்கு படைப்புகள் அனுப்புவார்கள். இந்த இதழுக்கு அசோகமித்திரனை கேட்டுக்கொண்டதன் பேரில் கட்டுரை எழுதி அனுப்பி உள்ளார். கிட்டத்தட்ட 3 மாதங்களுக்கு மேல் ஆகியிருக்கும். நாகார்ஜுனன் எழுதி அனுப்பிய கட்டுரை 6 மாதம் மேல் ஆகியிருக்கும். யாரும் கடிதம் கூட அனுப்ப மாட்டார்கள். போன போகிறதென்று வல்லிக்கண்ணன், தி.க.சி போன்றவர்கள் அனுப்புவார்கள். இதழை அனுப்பியவுடன் கடிதம் எழுதி அனுப்பி விடுவார்கள். எனக்கோ அவர்கள் எழுதிய கடிதங்களை பத்திரமாக வைத்துக்கொண்டு அடுத்த இதழ் வரும்போது கடிதம் பகுதியில் சேர்க்க வேண்டுமென்று தோன்றும். சில சமயம் தொலைந்து கூட போய்விடும். இப்போது வல்லிக்கண்ணன் இல்லை. எனக்கு சில சமயம் என் பத்திரிகை யாருக்காவது போய்ச் சேர்ந்ததா என்பதை அறிய அவரிடம் வரும் கடிதம் மூலம் தெரியும். இனி வல்லிக்கண்ணன் இடத்தை யார் நிரப்புவார்கள்.
அழகியசிங்கர்இரவு 10.57 மணிஅளவில்

1 comment:

  1. மனதை மிகவும் உலுக்கிய பதிவு. இருபது வருடங்களாய் ஒரு சிற்றிதழை நடத்துவது என்பது சாதாரண காரியமல்ல. முக்கியமாக யாருடைய ஊக்கமும் இல்லாமல். இன்று சிற்றிதழ்களின் கொடை தான் சினிமாவிலும் ஜனரஞ்சக பத்திரிக்கைகளிலும் சற்று தகுதியான எழுத்துகளையும் எழுத்தாளர்களையும் பத்திரிக்கையாளர்களையும் உருவாக்கியிருக்கிறது. என்றாலும் இந்த நெடும் பயணத்தில் இன்று ஏளனம் தான் மொழியாக இருக்கிறது. நன்றியை யாரும் தெரிவிப்பதில்லை. எனினும் எல்லார் சார்பாக என் நன்றிகள்.

    http://www.tamilmanam.net/index.html என்கிற வலைதளத்தில் உங்கள் வலைப்பதிவை இணைத்தால் பதிவுலகத்தோரின் கவனத்தை பெறலாம்.

    ReplyDelete