29.8.08

சில குறிப்புகள் - 2

நவீன விருட்சம் என்ற இதழ் கடந்த 20 ஆண்டுகளாக வருவது இலகிய அபிமானிகளுக்குத் தெரியும் என்பது என் அபிப்பிராயம். பெரும்பாலும் கவிதைகளுக்கு முக்கியத்துவம் கொண்ட இதழ் நவீன விருட்சம். அந்த இதழில் வெளிவந்த முதல் ஐந்தாண்டுகளில் உள்ள கவிதைகளை கவிஞர்களின் பெயர்களை விடாமல் அவர்கள் எழுதிய ஒன்றுக்கும் மேற்பட்ட கவிதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து ஒரு தொகுப்பாகக் கொண்டு வந்தேன். அத் தொகுதியை விருட்சம் கவிதைகள் ஒன்று என்று பெயரிட்டு பிரசுரம் செய்துள்ளேன். 1988 ஆம் ஆண்டிலிருந்து 1992 ஆம் வரை உள்ள 94 கவிஞர்களின் 163 கவிதைகள் கொண்ட தொகுப்பு. இன்று கவிதை எழுத வேண்டுமென்று ஆசை படுபவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம் இது. ஒரு பல்கலைக் கழகத்தில் பாடத் திட்டத்தில் வைக்க வேண்டிய புத்தகம். கவிதைக்கு முக்கியத்துவம் தரக்கூடிய இப் புத்தகத்தை யாரும் கண்டுகொள்ளவில்லை. எல்லாவற்றுக்கும் சிபாரிசு வேண்டி உள்ளது. அல்லது உரிய அதிகாரமுள்ளவர்கள் தகுதியான இடத்தில் சொன்னால் எல்லாம் நடக்கும். விருட்சம் கவிதைகள் தொகுதி 1 க்கு அதுமாதிரியான கொடுப்பினை இதுவரை கிடைக்கவில்லை.


இப்போது அடுத்த 5 ஆண்டுகளுக்கான (1993/1998) வரை உள்ள கவிதைகளைத் தொகுதி விருட்சம் கவிதைகள் 2 கொண்டு வந்துள்ளேன். 93 கவிஞர்கள்கொண்ட 152 கவிதைகள். பொதுவாக விருட்சம் தொகுதியில் கவிஞர் பெயர்களைக் கட்டாயம் சேர்த்துவிடுவோம். ஒரு கவிஞர் விருட்சம் இதழில் ஒரு கவிதை எழுதினாலும் அவருடைய பெயர் விருட்சத்தில் இடம் பெறாமல் இருக்காது.


உங்களுக்கு விருட்சம் முதல் தொகுதியில் வெளிவந்த கவிதைகளை அறிமுகப்படுத்த விரும்புகிறேன். முதல் இதழில் ரா ஸ்ரீனிவாஸனின் முதல் பக்கத்தில் வெளிவந்த கவிதையைப் படிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.


சூரியனைத் தவிர


சூரியனே, நீ உதயமாகும் பொழுது

உன்னைத் தவிர

நான் வேண்டுவது

வேறு எவருமில்லை.

நான் உன்னுடன் உதிக்கிறேன்

இரவு வந்து கவிழ்கிற வரை

உன்னுடனே இருக்கின்றேன்

வீழ்கின்றபோது

நீ எழுதுகின்ற

வண்ண வண்ண ஓவியத்தை

நானும் எழுதியபடி

நீ மறைகின்றாய்

மலைகளுக்கும்

கட்டிடங்களுக்கும்

ஒவ்வொன்றிற்கும் அப்பால்

நீ எழுதிய ஓவியமும்

மெல்ல அழிகின்றது

இருள் சூழ்ந்து

பின்பு அதிகாலையினில்

நீ உதிக்கின்றாய்

உன்னுடன் நானும்

மாலைக்கான ஓர் புதிய ஓவியமெழுத

No comments:

Post a Comment