30.8.08

சில குறிப்புகள் 3

எஸ் வைத்தியநாதன் என்ற என் நண்பரைப் பற்றி சொல்ல விருப்பப்படுகிறேன். எனக்கு சில இலக்கிய நண்பர்களை அறிமுகப்படுத்தியதற்கு வைத்தியநாதன் ஒரு முக்கிய காரணம். ஒரு இலக்கியச்சிந்தனைக் கூட்டத்தில்தான் வைத்தியநாதனை சந்தித்தேன். இந்தச் சந்திப்பை ஏற்படுத்தியவர் நடராஜ் என்ற நண்பர். வைத்தியநாதன் மூலம் என்ற பத்திரிகை பற்றியும், அதில் அப்போது எழுதிக் கொண்டிருக்கும் சில நண்பர்களையும் அறிமுகப்படுத்தினார். பெரும்பாலும் கவிதைகளை எழுதிக் கொண்டிருக்கும் அந்த இலக்கிய நண்பர்கள் கவிஞர்கள் என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ள விரும்ப மாட்டார்கள்.எல்லோரும் கவிதைகள் எழுதுபவர்கள். கவிதைகளைப் பற்றி பேசுபவர்கள். வைத்தியநாதன் ஒரு கவிஞர். பத்திரிகை நினைத்தபோது வரக்கூடிய பத்திரிகை. பத்திரிகை ஆசிரியர் ஆத்மாநாம் தற்கொலை செய்து கொண்டபோது, பெரிய அதிர்ச்சி அதில் ஈடுபட்ட நண்பர்களுக்கு ஏற்பட்டது. ஆத்மாநாமிற்காக நடந்த இரங்கல் கூட்டத்தில் அவருடைய நண்பர்கள் பெரிய வருத்தத்துடன் இருந்தார்கள். எனக்கு ஆத்மாநாம் அவ்வளவு நெருக்கம் கிடையாதென்றாலும், ஒன்றிரண்டு முறை சந்தித்திருக்கிறேன். அவருடைய புத்தகமான காகிதத்தில் ஒரு கோடில் அவருடைய கையெழுத்தை வாங்கியிருக்கிறேன். எளிமையான வரிகள் கொண்ட ஆத்மாநாம் கவிதைகள் கவிதை உலகத்தில் புதிய மாற்றத்தை உருவாக்கி உள்ளன. ஆத்மாநாம் போலவே ழ பத்திரிகையில் அறிமுகமானவர்கள் விதம் விதமாய் புதிய கவிதைகளை உருவாக்கியவர்கள். ஆத்மாநாம் குறித்து வைத்தியநாதன் எழுதிய கவிதையைத்தான் நான் உங்களுக்கு அறிமுகப்படுத்த விழைகிறேன். இக் கவிதை விருட்சம் தொகுதியில் வெளிவந்துள்ளது.


உறுதிமொழி 82

இன்றோடு

நழுவிய பதக்கங்கள் எவரையும்

நினைவூட்டப் போவதில்லை -

வளைந்த மீசை கொண்ட

பயணியை மீண்டும்

சந்திக்கப் போவதில்லை -

நந்தவனமெனக் கண்டதில்

பழுதில்லை

உலாவ முயன்றதில்தான் தவறு -

தொடைகள் நடுவில் புதைந்த தலையணை

இன்று உலகோடு கொள்ளும் நட்பு.


உறுதிமொழி 84

மெல்ல

தன்னையே எடுத்து நிறுத்திக் கண்டார்

மெல்ல

உள்ளதை எடுத்து நிறுத்திக் கண்டார்

மெல்ல

அற்றதை எடுத்துக் நிறுத்திக் கண்டார்.

உள்ளதும் அற்றதும் கண்டவர் மெல்லத் தன்னையே

எடுத்து நிறுத்திக் கண்டார்

உள்ளதும் அற்றதும் கண்டவர் மெல்லத் தன்னையே

எடுத்து நிறுத்திக் கொண்டார்

மெல்லத் தன்னையே எடுத்து நிறுத்திக் கொண்டார்

உறுதிமொழி 88


புதிய தேவதைகளை முத்தங்களிட வேண்டும்.

புதிய தேவதைகளை முத்தங்களிட வேண்டும்.


மேலே உள்ள உறுதி மொழி 82 கவிதை ஆத்மாநாம் நினைவாக எழுதப்பட்ட கவிதை. விருட்சம் கவிதைகள் தொகுதி 1 ல் வந்த கவிதையில் இதுவும் ஒன்று. இன்னும் சுவாரசியமான கவிதைகளை உங்களுக்கு அறிமுகப்படுத்த விரும்புகிறேன். இக் கவிதைகள் குறித்து உங்கள் கருத்துக்களையும் அறிய ஆவலாக உள்ளேன்.


No comments:

Post a Comment