8.8.08

நகுலனைப் பற்றி சில நினைவுக் குறிப்புகள்

முதன்முதலாக நகுலனைப் பற்றி எப்போது நான் தெரிந்துகொண்டேன். ஒருமுறை வைத்தியநாதனுடன் (தீவிர வாசகர், ழ, விருட்சம் இதழ்களில் கவிதைகள் அதிகம் எழுதியவர்)நான், ஆத்மாநாம், மூவரும் ஆனந்த் வீட்டிற்குச் சென்றோம். எனக்கு வைத்தியநாதனைத் தெரியும். அவருடைய கவிதைகள் சில ழ வில் அப்போது வெளிவந்து கொண்டிருந்தன. நான் அப்போது வங்கியில் பணிபுரிந்து கொண்டிருந்தேன். கதை, கவிதைகள் எழுதத் தெரிந்தவன். ஆனால் தமிழில் தீவரத்தன்மை கொண்ட படைப்புகளை ஆர்வமாய் தேடிப் போய் வாசிப்பவன். என்னை தீவிர எழுத்துக்கு அறிமுகப்படுத்தும் நோக்கமாகத்தான் வைத்தியநாதன் என்னை ஆனந்த் வீட்டிற்கு அழைத்து வந்தார். கூடவே எங்களுடன் வந்துகொண்டிருந்த ஆத்மாநாமிடம் என்னை அறிமுகப் படுத்தினார்.
ஆனந்த் வீட்டிற்கு வந்தவுடன், வைத்தியநாதன் சொல்லியபடி, ஆனந்த் நாலைந்து 'ழ' வெளியீடு புத்தகங்களைக் கொடுத்தார். நான் மகிழ்ச்சியுடன் அவற்றை விலைக் கொடுத்து வாங்கினேன். ழ புத்தகங்கள் எல்லாம் விலை குறைவாக இருந்ததோடல்லாமல் நல்ல தரத்துடன் தயாரிக்கப்பட்டிருந்தன. உயர்ந்த தாளில் அச்சிடப்பட்டிருந்தன. அதில் ஒரு புத்தகம், 'கோட் ஸ்டான்ட் கவிதைகள்'. அதை எழுதியவர் நகுலன். அப் புத்தகம் தயாரிப்பு முறையும், அதை அச்சிடப் பயன்படுத்திய தாளையும் கண்டு நான் வியந்து போனேன். 'காகிதத்தில் கோடு' என்ற ஆத்மாநாம் புத்தகத்தில் அவருடைய கையெழுத்தையும் வாங்கி வைத்துக்கொண்டேன்.
நகுலன் இந்தப் புத்தகம் மூலமாகத்தான் எனக்கு அறிமுகமாகிறார். அவருடைய கவிதைகள் படிப்பதற்கு எளிமையாக இருப்பதோடல்லாமல் ஆழமான உணர்வு அலைகளை எழுப்பாமல் இருக்காது.
இருப்பதற்கென்றுதான் வருகிறோம்
இல்லாமல் போகிறோம்
என்ற வரிகளெல்லாம், மனதில் வேறு வேறு எண்ண அலைகளை எழுப்பாமல் இருப்பதில்லை.
நான் நகுலன் பெயர்கொண்ட புத்தகங்களையெல்லாம் வாங்கத் தொடங்கினேன். 'க்ரியா' என்ற புத்தக வெளியீடு அறிமுகமானபோது, நகுலனின் 'நினைவுப் பாதை' என்ற நாவலை வாங்கினேன்.
பொதுவாக நகுலனின் எழுத்துகள் ஒரு மனதிலிருந்து இன்னொரு மனதிற்கு எழுதிகிற எழுத்துகள். என்னால் முழுதாகவும் அவற்றைப் படிக்க முடிந்ததுமில்லை. ஏனெனில் மனதை அதிகமாக ஆட்டிப் படைக்கும் தன்மை கொண்டவை அவருடைய படைப்புகள்.
அவருடைய படைப்புகள் மூலமாக அவரை நான் அறிந்துகொண்டாலும், விருட்சம் பத்திரிகை ஆரம்பித்தபோதுதான் நேரிடையாக எனக்கு அவருடைய தொடர்பு ஏற்பட்டது. அவர் படைப்புகளை அனுப்பும்போது, மறக்காமல் ஸ்டாம்பு, கவரெல்லாம் வைத்து அனுப்புவார். ஒரு குறிப்பும் எழுதி அனுப்புவார். 'படைப்புகள் உங்களுக்குத் திருப்தியாக இல்லையென்றால் திருப்பி அனுப்பி விடுங்கள்,' என்று. நான் அவர் எழுதிய படைப்புகளை திருப்பியே அனுப்ப மாட்டேன்.
ஒவ்வொரு விருட்சம் இதழையும் அவருக்கு அனுப்புவதில் அதிக ஆர்வம் காட்டுவேன். உடனுக்குடன் அவர் இதழ் குறித்து கருத்துக்களை ஒரு கார்டில் எழுதி அனுப்பி விடுவார். கார்டில் அவர் எழுத்தைப் படிப்பது என்பது பெரிய விஷயமாக இருக்கும். சிலசமயம் அவருடைய கையெழுத்து புரியும்படி நிதானமாக இருக்கும். சிலசமயம் புரியாமல் கிறுக்கப்பட்டிருக்கும். ஒரு சமயம் கார்டில் எனக்கு ஒரு கவிதை எழுதி அனுப்பினார் :
நில் போ வா
வா போ நில்
போ வா நில்
நில் போ வா?

என்பதுதான் அக் கவிதை. விருட்சம் இதழில் இந்த குறள் வழி கவிதையைப் பிரசுரம் செய்தேன். இது தரமான கவிதையா, பிரசுரம் செய்யப்பட வேண்டிய கவிதையா என்று கேட்டால், நான் பதில் சொல்ல மாட்டேன். நகுலன் எழுதியிருக்கிறார். அவர் எழுத்துக்களைப் பிரசுரம் செய்ய வேண்டியது, நான் மதிக்கும் எழுத்தாளருக்கு நான் கொடுக்கும் மரியாதை. இன்னும் சில படைப்பளாகளிடமும் நான் இதுமாதிரி நடந்து கொள்வேன்.
இக் கவிதை பிரசுரம் ஆனவுடன், இரு இடங்களிலிருந்து எதிர்ப்பு வந்தன. ஒன்று காஞ்சிபுரம் இலக்கிய நண்பர் வே நாராயணன் (காஞ்சிபுரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட இலக்கியக் கூட்டங்களை நடத்தியவர். அபாரமான ஞாபகச் சக்தி கொண்டவர். கூட்டம் முழுவதும் யார் பேசினாலும் அதை மனதில் வாங்கிக் கொண்டு திருப்பிச் சொல்லும் தன்மை கொண்டவர்). எப்படி இக் கவிதையை விருட்சத்தில் புரசுரம் செய்தீர்கள்? அக் கவிதைக்கு என்ன அர்த்தம் என்பதை உங்களால் சொல்ல முடியுமா? என்று கேட்டு எழுதியிருந்தார்.
நான் அக் கடிதத்தை நகுலனுக்கு அனுப்பியிருந்தேன். அவர் இரண்டு பக்கங்களுக்கு விளக்கம் கொடுத்து பதில் அனுப்பினார். அதையும் விருட்சத்தில் பிரசுரம் செய்தேன்.
எதிர்த்தவர்களில் இன்னொருவர் பிரமிள். நகுலனின் இந்தக் கவிதையை ஏன் பிரசுரம் செய்தீர்கள்? இது கவிதையா என்ற கேட்டார். 'விருட்சம்' இதழில் அரைப்பக்கம்தான் இக் கவிதை வந்திருக்கிறது. வந்தால் என்ன?' என்றேன். 'ஒரு சிறு பத்திரிகையின் அரைப் பக்கத்தில் பிரசுரம் விஷயம்கூட முக்கியம் உமக்கு இதெல்லாம் தெரியாதா?' என்றார் பிரமிள்.
பிரமிள் இதைச் சாதாரணமாகப் பேசிவிட்டு விட்டுவிடுவார் என்று நினைத்தேன். ஆனால் அபத்தக் கவிதைகள் என்ற பெயரில் அவர் ஏராளமான கவிதைகள் எழுதியிருந்தார்.
அதில், 'எந்துண்டி வஸ்தி?' என்ற கவிதையில்,
'நில் போ வா'
என்பதை எழுதிக் கீழே
கையெழுத்து வைத்து
அனுப்பினார் சகா
தேவனின் சகோ
தர நாமி
இதைக் கவிதை என்று
போட்டுவிட்டது தன் இலையிலே 'மரம்'
'இதையே எழுதியது யாரோ
ஏழுமலை ஆறுமுகம் என்றால்
'மர' இலையில் வருமா இது?" என்றேன்.

பதில் இல்லை இன்னும்.
இப்படி ஒரு கவிதை பிரமிள் எழுதியிருக்கிறார் என்பது அது புத்தகமாக வரும்போதுதான் தெரியும்.
நகுலன் ஒவ்வொரு முறையும் சென்னை அசோக்நகரில் உள்ள அவருடைய இளைய சகோதரர் வீட்டிற்கு வருவார். அப்படி வரும்போது மேற்கு மாம்பலத்தில் உள்ள என் வீட்டிற்குத் தகவல் தராமல் இருக்க மாட்டார். அவர் சென்னையில் இருக்கும்போதெல்லாம் அவரை அடிக்கடி சந்திப்பது என் வழக்கம். ஏன் தினமும்?
சிலசமயம் அவர் ஊரிலிருந்து வந்தபிறகு, அவர் சகோதரருடன் என் வீட்டிற்கு வருவார். அவரால் தனியாக வர முடியாது. கூடவே அவருடைய சகோதரரை அழைத்துக்கொண்டு வருவார்.
யாராவது அவருக்குத் துணை வேண்டும். அவர் வரும் சமயத்தில் நான் தட்டுப்படவில்லையென்றால், என் தந்தையாருடன் பேசிக்கொண்டு இருப்பார். ஹோமியோபதி மருந்துகளைப் பற்றி என் தந்தை சொல்வதை புதிதாகக் கேட்பதுபோல ஒருவித மரியாதையுடன் நகுலன் கேட்பார். அவர் சகோதரர் என் வீட்டில் விட்டுவிட்டுப் போய்விடுவார்.
நான் நகுலனைப் பார்த்துவிட்டால் நேரம் தெரியாமல் பேசிக்கொண்டிருப்பேன். என்னைப் பார்த்து, "நீங்கள் இவ்வளவு தூரம் எல்லாருக்கும் உதவியாக இருக்கிறீர்கள். ஆனால் உங்களைப் பற்றி யாரும் எதுவும் சொல்லாமல் இருப்பது சரியில்லை," என்பார்.
'யாருடனும் இல்லை' என்ற என் கவிதைத் தொகுதியைப் பற்றி அவர் எழுதிய கட்டுரையை என்னால் மறக்க முடியாது. பொதுவாக நகுலன் வரும்போது, நான் புதிதாக எழுதிய கவிதைகளைக் காட்டுவேன். அவர் சிரத்தையுடன் படித்துவிட்டு, அதில் உள்ள பிரச்சினைகளைக் குறிப்பிடுவார். சில கவிதைகளைப் படித்துவிட்டு, வரிகளை மாற்றினால் நன்றாக இருக்குமென்று குறிப்பிடுவார். சில கவிதைகள் நன்றாக வந்திருப்பதாகவும் குறிப்பிடுவார். வேறு விஷயங்களையும் நாங்கள் பேசுவோம்.
ஒருமுறை நான் அலுவலகத்திற்குச் செல்வதற்காக மாம்பலம் ரயில்வே ஸ்டேஷனுக்குச் சென்று கொண்டிருந்தேன். அப்போது ஐராவதத்தைப் பார்த்தேன். நகுலன் வந்திருப்பதைக் குறிப்பிட்டேன். பின் இருவரும் அலுவலகம் போகாமல் நகுலனைப் பார்க்கச் சென்று விட்டோம்.
நகுலனுடன் பேசும்போது ஒருவருடன் ஒருவர் பேசுவதுபோல்தான் இருக்கும். ரொம்ப கூச்ச சுபாவம் உள்ளவர். அவருக்கு ஆல்பர்ட் மூலம் பரிசு கிடைத்தது. அக் கூட்டத்திற்கு வந்த நகுலன், ரொம்ப கூச்சத்தோடு மேடையில் அமர்ந்திருந்தார். கூட்டத்துடன் நின்று பரிசு வாங்க எழுந்துகூட வர வெட்கப்பட்டார். ஆனால் மேடையில் தோன்றுவதையே பிரதானமாக விளம்பரப் பிரியராக ஒரு வங்கியின் தலைவர் இருந்தார். அவர்தான் அக்கூட்டத்தை நடத்த நன்கொடை கொடுத்திருக்கிறார். அவர் நகுலன் பக்கத்தில் அமர்ந்தும் அவருக்கு நகுலன் யார் என்பது தெரியாது. ஒருவரை ஒருவர் பார்த்தும் பேசாமல் பக்கத்தில் அமர்ந்திருந்தார்கள்.
நகுலனை அவர் சகோதரர் வீட்டிற்கு அழைத்துக்கொண்டு போவேன். நடந்துதான் போவோம். அவர் சகோதரர் வீட்டிற்குப் போவதற்குள், பல முறை 'இந்த வழியாகத்தானே உங்கள் வீட்டிலிருந்து வந்தோம்,' என்று கேட்காமல் இருக்க மாட்டார். 'ஆமாம்,' என்று பலமுறை நான் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். அவர் தனியாக எங்கும் போகமாட்டார்.
ஒரு சமயம் நகுலனின் திருவனந்தபுர நண்பர் காசியபன் மையிலாப்பூரில் இருந்தார். 'அவரைப் போய்ப் பார்க்கலாமா?' என்று கேட்டேன். காசியபனும் அவர் வந்ததை அறிந்து பார்க்க ஆசைப் பட்டார்.
"என் வண்டி பின்னால் அமர்ந்து கொள்ளுங்கள்," என்றேன்.
நகுலன் மறுத்து விட்டார். "பஸ்ஸில் போகலாம் வாருங்கள்," என்றேன். அதற்கும் மறுத்துவிட்டார்.
"ஆட்டோவில் போகலாம்," என்றேன்.
"அவ்வளவு பைசா செலவு செய்ய முடியாது. வேண்டுமானால் காசியபன் என்னை வந்து சந்திக்கட்டும்," என்று கூறி விட்டார்.
கடைசிவரை அவர் காசியபனை பார்க்கவே இல்லை.
மிகக் குறைந்த பக்கங்களுடன் அவருடைய புத்தகமொன்றை கொண்டுவர நினைத்தேன். 'இரு நீண்ட கவிதைகள்' என்ற புத்தகம் அப்படித்தான் உருவானது. நான் வங்கியில் இருந்தபடி பத்திரிகை நடத்துவதால், புத்தகம் போட எனக்குப் பணத் தட்டுப்பாடு இருக்கும். அதனால் நானும், நகுலனும் சேர்ந்து அந்தப் புத்தகத்தைக் கொண்டு வந்தோம். பாதி நானும், பாதி நகுலனும் செலவு செய்தோம். பொருத்தமே இல்லாமல் புத்தகத்தில் நகுலன் வரைந்த ஓவியமும் இருக்கும். புத்தகம் வந்தபிறகு வழக்கம்போல் கவிதைப் புத்தகம் விற்கவில்லை. பொதுவாக நம் தமிழ் தீவிர சூழ்நிலையில் கவிதைப் புத்தகத்திற்குக் கொடுக்கும் அலட்சியம்போல் வேறு எந்தப் பிரிவு நூலிற்கும் இருக்காது. ஆனால் நகுலன் தான் போட்ட பணத்தை உடனடியாகக் கேட்க ஆரம்பித்து விட்டார். ஏனெனில் அவர் இதற்கு முன்னால் பலரிடம் புத்தகம் போட பணம் கொடுத்து ஏமாந்திருக்கிறார். நான் அவர் பணத்தை ஒவ்வொரு மாதமும் சம்பளத்திலிருந்து கொடுத்து சரி செய்தேன்..
இன்னும் கூட விற்காத புத்தகப் பிரதிகள் என்னிடம் இருக்கிறது. விலை ரூ.12/-தான். நகுலனை திருவனந்தபுரத்தில் ஒருமுறையாவது போய்ப் பார்க்க வேண்டுமென்று நினைப்பேன். 'நான் உங்கள் ஊருக்கு வந்து உங்களைப் பார்க்க வேண்டும்,' என்று ஒருமுறை குறிப்பிட்டேன். உடனே, நகுலன்,"நீங்கள் என் வீட்டிற்கு வந்து தங்க முடியாது," என்று குறிப்பிட்டார்.
அவருக்கு ஏனோ புரியவில்லை. நான் அவரைப் பார்க்க வந்தாலும், அவர் வீட்டில் வந்து தங்க மாட்டேன் என்பது. ஏனோ திருவனந்தபுரம் போய் அவரைப் பார்க்கவே இல்லை. வழக்கமாக அவருக்குப் பத்திரிகை/புத்தகம் அனுப்பிக் கொண்டிருப்பேன். ஒருமுறை அவர் எனக்குக் கடிதமொன்று எழுதியிருந்தார்.
16.12.1996-ல் அவர் எழுதிய கடிதத்தை இங்கு குறிப்பிட்டு முடிக்கிறேன்.
நண்பருக்கு,
வணக்கம். எனக்கு இம்மாதம் 12.12.96தான் பென்ஷன் கிடைத்தது. எனவே மையம் சந்தாவை இன்றுதான் அனுப்ப முடிந்தது. நான் உடல் மனம் சோர்வுற்று மிகத் தளர்ந்த நிலையில் இருக்கிறேன். இனி எனக்கு மையமோ வேறு பத்திரிகைகளோ புஸ்தகங்களோ அனுப்ப வேண்டாம். உங்கள் யாருடனும் இல்லை என்ற புத்தகத்தை அமெரிக்காவில் இருந்து வந்த பிறகு காலமான என் சகோதரியிடம் கொடுத்துவிட்டேன். அதுவும் என் கையில் இல்லை. இனியும் எழுதவேண்டாம் என்ற நிலையில் யாராவது வந்து எழுதுங்கள் என்று துன்புறுத்திக் கொண்டே இருக்கிறார்கள். எனக்கு 75-ஆவது தொடங்கிவிட்டது. வெகு விரைவில் காலமாகிவிட்டால் என்ற நிலை. உடல்-மன உளைச்சல்கள் அவ்வாறு.
உங்களுக்கு நாய்களற்ற வீதிகள் என்ற கவிதைத் தொகுதி கிடைத்ததா?
உங்கள் தகப்பனாருக்கு என் நமஸ்காரத்தைச் சொல்லவும். என்னவோ இருந்து கொண்டிருக்கிறேன்.
அன்புடன்
"நகுலன்"

மேலே குறிப்பிட்ட கடிதத்தை நகுலன் அனுப்பிய பிறகு, நான் புத்தகங்களையோ பத்திரிகைகளையோ அனுப்புவதை நிறுத்தி விட்டேன். பிறர் மூலமாகத்தான் எனக்கு நகுலனைப் பற்றி தெரியும். நீல பத்மநாபனுடன் பேசும்போது, நகுலனைப் பற்றி விஜாரிக்காமல் இருக்க மாட்டேன். கடிதத்தில் குறிப்பிட்டபடி அவர் மரணத்தை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருந்தாரென்று நினைக்கிறேன்.

2 comments:

 1. நல்ல பதிவு. நகுலன் கவிதைகள் முழுதும் படித்ததில்லை. நண்பர் ஜ்யோவ்ராம் சுந்தர் நகுலனைப் பற்றி மிகவும் சிலாகித்து எழுதுவார். அந்த 'நில் போ வா' கவிதைக்கு நகுலனின் விளக்கம் மீள் பிரசுரம் செய்யுங்களேன்.

  கவிதைக்கு இன்று கிடைக்கும் மரியாதை நீங்கள் சொல்வது போல் தான் உள்ளது. பெரிய எழுத்தாளர்களும் கவிதை என்றால் சற்று ஏளனமாகவே பார்க்கிறார்கள். கவிதைகள் தரம் அவ்வளவு நன்றாக இல்லையோ ?

  அனுஜன்யா

  ReplyDelete
 2. அன்புடையீர்,

  வணக்கம். நகுலன் எழுதியதை மீள் பிரசுரம் செய்கிறேன். கவிதையின் தரம் நன்றாகவே உள்ளது. இன்னும் கேட்டால் கவிதை எழுதுவதுதான் சற்று சிரமமானது. உடனே எழுதி போட்டுவிடலாம்போல் தோன்றும். அது உண்மையில்லை. உரைநடை எழுதுவதற்கு உழைப்பு அதிகமாகத் தேவைப்படும். ஆழமான விஷயத்தை எளிதான சில வரிகள் மூலம் கவிதை சொல்லிவிடுகிறது. படிப்பதும் எளிது. ஒரு ரயில் பயணம் அல்லது பேரூந்து பயணத்தின்போதே கவிதையை நம் வசத்தில் கொண்டுவந்து விடலாம். ஆனால் ஒருவரே எழுதும் கவிதைகளில் சில ஆபத்துகள் உண்டு. நூல் நிலையத்தில் கவிதையை வாங்க மாட்டார்கள். இந்த முறை விருட்சம் வெளியீடாக (2006 ஆம் ஆண்டு) விருட்சம் கவிதைகள் தொகுதி 1 என்ற (100க்கும் மேற்பட்ட கவிதைகள் கொண்ட புத்தகம், 100 கவிஞர்கள் கொண்ட புத்தகம்) புத்தகத்திற்கு மேலிடத்தின் கடாட்சம் கிடைக்காமல் நூல் நிலையத்திற்குப் போகாமல் போய்விட்டது. வருத்தம்தான். என்னை உற்சாகப்படுத்த தொடர்ந்து கடிதங்கள் எழுதும் உங்களுக்கு என் நன்றி.

  ReplyDelete